Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
Manmozhi WrapperManmozhi Logo
செப்டம்பர் - அக்டோபர் 2008
இதயங்களை உலுக்கி எடுக்கும் ‘தாரே ஜமீன்பர்’

பூமியின் மேல் நட்சத்திரங்கள்

பவா சமத்துவன்


குழந்தைகளை பணப்பயிர்களாக வளர்க்கும் கொடுமையை - நமது சமூகம் எப்போது கைவிடும்? இந்தியாவின் எதிர்கட்சித் தலைவர் அத்வானியையும், ஆளுங்கட்சிப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் ஒருசேர அழவைத்தப்படம் இது. கட்சித் தலைவரோ - கல்வியாளரோ எல்லோரும் மனிதர்கள்தான். உணர்வுகள் பொதுவானவை. நாம் எல்லோருமே குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்திருக்கிறோம். அதில் முக்கியமானது பள்ளிப் பருவம். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பள்ளியும் அதன் ஆசிரியர்களும் ஏற்படுத்தும் தாக்கம் மறக்க முடியாதது?.

நமது பள்ளிகளும் அதன் ஆசிரியர்களும் எப்படிச் செயல்படுகின்றனர். நமது பாடத்திட்டங்களும் கற்பிக்கும் முறைகளும் சரியானதுதானா..? நமது சமூகத்தில் ஒரு குழந்தை தனது விருப்பத்தை கல்வியாய் தேர்வு செய்து படிப்பதற்கும் பயிற்சி பெறுவதற்கும் வழி இருக்கிறதா.. ஒரு குழந்தையின் விருப்பத்துக்கு மாறான கல்வியால் நமது நாட்டில் எத்தனை குழந்தைகள் மனத்தளவில் சிதைக்கப்படுகின்றனர். ஒரு நாகரீக சமுதாயத்தில் ஆண்டாண்டு காலமாய் இந்த அநாகரீகம் தொடர்வதற்கு யார் காரணம்? நீ டாக்டராகனும் - நீ என்ஜினியராகனும், நீ கம்ப்யூட்டர் சாப்ட்வேர்ல பெரிய புரோகிராமரா வரனும்.. என தமது ஆசைகளை திணித்து, குழந்தைகளைப் பணப்பயிர்களாக வளர்க்கும் கொடுமையை நமது சமூகம் எப்போது கைவிடும்?

குழந்தைகளைக் குழந்தைகளாக வளர்க்காமல், மனப்பாடம் செய்யும் இயந்திரகளாக மாற்றுவதால், குறைந்த பட்ச மனிதத்தன்மைகள்கூட இல் லாமல் பல தலைமுறையே வளர்ந்து விட்டது. வணிக ரீதியான நிர்ப்பந்தங்கள் இருந்தாலும், ஒரு கலைப்படைப்பு என்பது ஏதேனும் ஒரு வகையில் சமூகத்திற்கு பயன்பட வேண்டும். அல்லது சமூகத்தில் பாதிப்பையோ விளைவையோ ஏற்படுத்த வேண்டும். அமிர்கான் தயாரித்து இயக்கி நடித்துமுள்ள இந்த இந்திப்படம் நமது இதயங்களை உலுக்கி எடுத்து, ஒவ்வொரு காட்சியிலும் நமது மனச்சாட்சி மீது ஆயிரம் முறை அறைகிறது. சிறந்த கதையும், சிறப்பான காட்சி அமைப்பு களும், உணர்வுமிக்க கதாபாத்திரங் களும் இதனூடே உயிர்ப்பு மிக்க ஒரு வாழ்க்கையைத் தேர்ந்த இயக்கத்துடன் சொல்லும் ஒரு திரைப்படம் பார்வை யாளனிடத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். உங்களால் உணர்ச்சி களை கட்டுப்படுத்த முடியாது.

எனக்கும் அப்படித்தான். இடைவேளை வரை கூட என்னால் படம் பார்க்க முடியவில்லை. திரையரங்கிலிருந்து எழுந்து வந்துவிட்டேன். பல ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்து, நாம் வாழ்ந்த வாழ்க்கையை, கடந்து வந்த காலகட்டத்தை மீண்டும் நடந்து பார்ப்பதால் நேரிடும் அனுபவம் இது. வகுப்பறைக்கு வெளியே காற்றில் அரசமரம் உதிர்க்கும் இலைகளை ஆவலோடு பார்த்து நின்றதற்காய், பிஞ்சு விரல்கள் முறிந்துபோகும் அளவிற்கு பிரம்பால் அடித்த எனது துவக்க பள்ளி ஆசிரியர்.

வகுப்பின் மூலையில் கோணியில் கட்டி வைத்த செல்லரித்த புத்தகங்கள் காணாமல் போனதற்கு, தனது புலனாய்வில் விடை கிடைக்காத உயர் நிலைப்பள்ளி அய்யங்கார் வாத்தியார், நூலகப் புத்தகங்களை படிக்கும் பழக்கமுள்ள ஒரே மாணவன் நீதான், ‘திருடியதை’ ஒப்புக்கொள்ளும் வரை வெளியில் முட்டிபோட்டிரு, என ஒருநாள் முழுக்க தண்டனையளித்த நவீன மனுதர்மவாதி. இப்படி குழந்தை மனதை சிதைக்கிற ஆசிரியர்களுக்கு மத்தியில், நாம் மறக்க முடியாத உதவிகள் செய்து, தங்களது பணியை பெருமைப்படுத்திய ஆசான்களும் நம்மிடையே நிறைய உண்டு.
மேல்நிலை இறுதித்தேர்வில் வலதுகை முட்டியில் தசைபிடிப்பு உயிர்போகும் வலியில் நான் அவதியுறுவதை கண்டு, தைலம் வாங்கி வந்து அதை மணிக்கொரு தரம் தேய்த்து விட்ட பொருளியல் ஆசிரியை.

எனது குடும்பம் பொருளாதார சிரமங்களில் இருந்தபோது, பட்டப்படிப்பிற்கான கட்டணத்தையும், விடுதிக்கான முன்வைப்பு தொகையையும் கட்டிய தமிழாசிரியர் சிவப்பிரகாசம். இப்படி மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்குகிற ஆசிரியர்களும் இருக்கிறார்கள். இந்தப் படமும் இப்படியான பள்ளிகளையும் இவ்வாறான ஆசிரியர்களையும், வெவ்வேறு விதமான அனுபவங்களோடு நமக்கு அறிமுகப்படுத்துகிறது. மும்பையில் ஒரு வணிகராக வளர்ந்து வரும் அவஸ்திக்கு இரண்டு மகன்கள், மூத்த மகன் படிப்பில் படுசுட்டி. விளையாட்டிலும் அப்படித்தான். இளைய மகன்தான் பிரச்சினை. எட்டு வயது. மூன்றாம் வகுப்பு படிக்கும் இவன் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள், பள்ளிச்சிறார்களிடையே படுபிரபலம். ஆங்கிலம் 100க்கு 8. கணிதம் 100க்கு 6, அறிவியல் 100 க்கு 5.

சிறுவர்களின் ஓய்வு நேர கேலி - கிண்டல்களுக்கு இதுவே போதுமானது. ஆசிரியர்களுக்கும் காரணம் புரியவில்லை. ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் எடுக்கும் மாணவனை எந்த ஆசிரியர்தான் விரும்புவார். “பையனுக்கு விளையாட்டு புத்திதான் அதிகமாயிருக்கு. எங்காவது கண்காணாத இடத்தில் ஒரு உறை விடப் பள்ளியில் சேர்த்து படிக்க வையுங்கள். உருப்படுவான்” என அனுப்பி வைக்கப்படுகிறான். தனது மகன் டாக்டர், என்ஜினியர், கலெக்டர் கனவுகளில் இருக்கும் தந்தை அவஸ்திக்கு அதுதான் சரியெனப்படுகிறது. ஒருமலையோர நகரத்தில் உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான். தாய்-தந்தை-அண்ணன் என உறவுக்கட்டுக்குள் வாழ்ந்த குழந்தை தனித்து விடப்பட்டதும் தவித்துப்போய் விடுகிறது. தரையில் விழுந்த மீனாய் துள்ளி விழுந்து வேதனைப்படுகிறது. படுக்கையிலும், குளியலறையிலும், வகுப்பறையிலும் அழுது, அழுது வீங்கிய முகத்துடன், தனக்கு இது ஏன், எதனால் நேர்ந்தது எனக் காரணம் தெரியாமல் தடுமாறுகிறது.

யாருடனும் பேசுவதில்லை. மற்ற பிள்ளைகளுடன் பழகுவதில்லை. தனக்கு விருப்பமான தூரிகையையும் ஓவியத்தையும் கூட தொடுவதில்லை. எப்போதும் மௌனம். இனம்புரியாத அமைதி. படிப்பும், பழைய கதைதான். அதிக செலவு பிடிக்கும் உறைவிடப் பள்ளியில் தனது வகுப்பில் இப்படி ஒரு மாணவன் இருந்தால் ஆசிரியர் மீதும் கேள்வி வருமே..? அதைத் தவிர்க்க ஆசிரியர்கள் தரும் அடுக்கடுக்கான தண்டனைகள். குழந்தையின் மனம் சிதைவுக்கு மேல் சிதைகிறது.

அப்போது அப்பள்ளிக்கு தற்காலிக பணியிடத்திற்கு ஓவிய ஆசிரியராக வருகிறார் அமிர்கான். அசாதரணமான இந்த சிறுவன் அவர் கவனிப்புக்கு ஆளாகிறான். அவன் பாடப் புத்தகங் ளையும் பயிற்சி நோட்டுகளையும் எடுத்து பார்த்தத்தில் அவன் டிஸ்லெக்சியா என்ற மனச்சார்பு நோய்க்கு ஆளாகியிருப்பது தெரிகிறது. மூளையின் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் தவறுகளாலும், சிலருக்கு மரபுவழியாகவும் கூட இது ஏற்படலாம்.

இவ்வகையிலான பாதிப்பு உள்ளவர்களுக்கு, புத்தகங்களில் உள்ள எழுத்து வரி வடிவங்கள் ஒழுங்கற்றுத் தெரியும். அசையும், நடனமிடும். எழுத்துக் கூட்டிப் படிக்க முடியாது. அறிவியலாளர் ஐன்ஸ்டீன், உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியானர்டோ டாவின்ஸி, எழுத்தாளர் அகதா கிறிஸ்டி தற்போதைய இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் வரை புகழ்பெற்ற மனிதர்கள் பலரும் இந்தக் குறைபாடு இருந்தவர்கள் தான். சிறுவனின் இந்தக் குறையை அவன் ஊருக்கே சென்று பெற்றோரிடம் எடுத்துக் கூறுகிறார் அமிர்கான். இது தெரியாமல் அவன் தனித்துவிடப்பட்டதால், அவனுக்குள் இயல்பாக இருந்த ஓவியத் திறமையைக் கூட அவன் கைவிட்டு விட்டான்.

இவ்வாறான நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு எந்த துறையில் விருப்பமோ, அதிலேயே அவர்களை விட்டுவிட வேண்டும் என்கிறார். தங்களது குழந்தை மனநோய் பாதிப்புள்ள அசாதாரண குழந்தை என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எல்லா குழந்தைகளையும் போல் இருக்கும் எங்கள் குழந்தை ஒரு மன நோய் பிடித்தவனாக இருக்க முடியாது என்கின்றனர். இது மனநோய் அல்ல. மனச்சார்பு வகை. ஒன்றில் இருக்கும் ஆர்வம் வேறொன்றில் இருக்காது. இவர்களுக்கு தேவை தனிக்கவனிப்பு. சிறப்பு பயிற்சி. இவையிரண்டும் சரியாக இருந்தால் இவர்கள் பெரும் சாதனையாளராக வருவார்கள். இதற்கு நானே ஒரு உதாரணம். நானும் இந்த வகை பாதிப்பில் இருந்து வந்தவன் தான் என தனது வாழ்க்கைக் கதையை முன் மாதிரியாக வைக்கிறார் அமிர்கான்.

உறைவிடப்பள்ளியில் அச்சிறுவன் மீது தனிக்கவனமும் சிறப்பு பயிற்சியும் தருகிறார். சிறுது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அச்சிறுவன் அப்பள்ளியில் நடைபெறும் ஓவியப் போட்டியில், மிகச்சிறந்த படைப்பு ஒன்றைத் தீட்டி முதல் பரிசு பெற்று, அப்பள்ளியே கொண்டாடி மகிழும் மாணவனாகிறான். குழந்தைகளின் உளவியல் சிக்கல்களை, நமது கல்வி முறையில் உள்ள பல முரண்பாடுகளை அதி அற்புதமாக சித்தரிக்கிறது இந்தப்படம். சிறுவன் இஸான் ஆனந்த், நந்த கிஷோராக நடித்த சிறுவனின் நடிப்பு பல காலம் மறையாமல் உங்கள் அகத்திரையில் நிழலாடும். இயலாமை - ஏமாற்றம் - எரிச்சல் - வேதனை என யாவற்றையும் கண நேரத்தில் வெளிப்படுத்தி, உலகில் உள்ள தேர்ந்த நடிகர் எவரையும் சவாலுக்கு இழுக்கிறான் இந்தச் சிறுவன்.

இந்தியா முழுக்க மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இலட்சக்கணக்கில் உள்ளனர். இவ்வாறான குழந்தைகள் பற்றிய முறையான கணக்கெடுப்பு மத்திய மாநில அரசுகளிடம் இதுவரை இல்லை. இவர்களுக்கான சிறப்பு பள்ளிகள் - சிறப்பு மருத்துவமனைகள் ஏதும் பரவலாக செயல்படுத்தப்படவில்லை. பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்த கோரிக்கை இன்றும் பலரால் வலியுறுத்தப்படுகிறது. அரசு இனியேனும் செவிசாய்க்குமா..?

ஐடிஏசி உறுப்பினர்களால் தொகுக்கப்படும், தமிழில் அப்பண சாமி மொழி பெயர்ப்பில் வந்துள்ள நூல் அபாய பள்ளிகள் இந்தப் படத்தையொட்டிய சிந்தனையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. “கல்வி நிலையங்கள், மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தி, உயர்நிலையடையச் செய்கின்ற பட்டறைகளாகவே பொதுவாகக் கருதப்படுகின்றன என்றும் தவறான அணுகுமுறைகளும், இளம் உள்ளங்களில் வலிந்து திணிக்கப்படும் அதீதமான பாடச்சுமைகளும், இன்றைய உலகமயமாக்கல் சூழலில் போட்டியில் முதலிடங்கள் குறித்த நெருக்குதலும் சேர்ந்து குழந்தைகள் பள்ளிகளையே வெறுக்கின்ற நிலைக்கு இட்டுச் செல்கின்றன. இவை எல்லாமுமாய் சேர்ந்து குழந்தைகளிடம் நரம்புத் தளர்ச்சியை உருவாக்குகிறது. உள் உறுப்புகளை செயலிழக்கச் செய்கிறது. அவர்களை நிரந்தரப் பதட்டத்தில் வைத்திருக்கிறது. பறவையும் விலங்கும் அவற்றுக்குரிய வாழ்க்கையை வாழும் போது, மனிதர்கள் மட்டும் ஏன் மனிதர்களாக இருக்க முடியவில்லை?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com