Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
நவம்பர் - டிசம்பர் 2008
சட்டக்கல்லூரி மாணவர் மோதல்

சட்டக் கல்லூரி வளாகத்திலும், முகப்பு வாயிலிலும் நடந்த கொடுமை, காட்சி மற்றும் எழுத்து ஊடகங்கள் வழி அனைவரையும் அதிர வைத்தவை. இப்படியும் மாணவர்கள் தாக்கிக் கொள்வார்களா, இப்படியும் காவல்துறை காட்சிப் பொம்மைகளாக நிற்குமா என்று கேள்விகள் எழுப்புபவை. பிரச்சினைக்குக் காரணம் இரு சமூக மாணவர்களுக்கிடையே நிலவும் சாதியப் பகைமை என்பது வெளிப்படை. இது ஏதோ இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பல ஆண்டுகளாய் கல்லூரிகளிலும், விடுதிகளிலும் புகைந்து வரும், அவ்வப்போது மோதி அடங்கும் பகை இது. மாணவர்கள் படிப்பார்கள், மாறுவார்கள், புதிய மாணவர்கள் வருவார்கள். ஆனால் பகை மாறாதது. அது நிரந்தரமாகப் புகைந்து அவ்வப்போது வெடித்துக் கொண்டிருப்பது.

இது ஆட்சியாளர்களுக்கு, காவல்துறைக்கு எதிர்க் கட்சிக் காரர்களுக்கு எல்லாம் நன்கறிந்த செய்தி. ஆனால் எவரும் இந்தப் பகையைக் களைய முயலாமல், ஏதாவது ஒரு பக்கம் சேர்ந்து, இந்தப் பகையைத் தூபம் போட்டு வளர்த்து தன்னல நோக்கில் ஆதாயம் தேட முயன்று கொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள் அமைப்பு வாதிகள். அதனுடைய விளைவுதான் தற்போதைய மோதல். நடைபெறும் நிகழ்வுகள் மேல், தரப்படும் புகார்கள் மேல் காவல் துறை உடனுக்குடன் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால், பிரச்சினை இந்த அளவு முற்றியிருக்காது. பெரும் பாலான பிரச்சினைகள் முற்றி பெருமளவிலான மோதலாக நிகழ்வதற்கு காவல் துறை உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளாத மெத்தனப் போக்கே காரணமாகிறது. அதுவேதான் இங்கும் நேர்ந்துள்ளது.

காவல் துறையில் யாராவது சில நேர்மையான அதிகாரிகள் இருந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முயன்றாலும், அவர்களை நியாயமாக செயல்பட விடாத அரசியல் தலையீடும் இதற்கு அடுத்த காரணமாக அமைகிறது. இத்துடன், அரசியல்வாதிகள் பிரச்சினையின் நியாய அநியாயங்களை மதிப்பீடு செய்து, தவறு செய்தவர்களைத் தண்டித்து, பகையுணர்வைத் தணித்து மாணவர்களுக்குள்ளே இணக்கத்தை ஏற்படுத்த முயல்வதற்கு மாறாக, இதையே தங்கள் தன்னலவாத நாற்காலி அரசியலுக்கு, சாதி அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள முனைவதும் நிகழ்கிறது. எனவே, இவையனைத்தையும் கவனத்தில் கொண்டு இனி எந்த நாளிலும், எந்தக் கல்விக் கூடத்திலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நேராமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நோக்கில் நமக்குத் தோன்றுவது, நடந்து முடிந்த சம்பவங்களின் மீது நீதி விசாரணை, தவறு செய்தவர்களைத் தண்டித்தல் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அது தற்போதைய நிகழ்வோடு சரி. ஆனால், இனி எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்களே நிகழாமல் தடுக்க, அரசும் நிர்வாகமும் செய்ய வேண்டுவன.

1. கல்லூரி, விடுதி வளாகத்திற்குள் மாணவர்கள் சாதிய ரீதியில் அமைப்பாகச் செயல்படுவதை, தலைவர்களுக்கு விழா எடுப்பதை தடை செய்ய வேண்டும்.
2. கல்லூரிகளில் முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் அடங்கிய நெறிமுறைக் குழுக்கள் உருவாக்கப்பட்டு கல்லூரி விடுதி வளாகத்திற்குள் நடைபெறும் பொது நிகழ்ச்சிகள், விழாக்கள் அனைத்தும் இக்குழுவின் வழி காட்டுதலில் நடத்தப் பெற வேண்டும்.
3. கல்லூரி, விடுதி வளாகத்திற்குள் மாணவர்கள் பெற்றோர், உறவினர் அல்லாத அயலவர்களை, பிற சமூக விரோத சக்திகளின் நடமாட்டத்தைத் தடை செய்யவேண்டும். அல்லது கண்காணிப்புக்குள் வைக்க வேண்டும்.
4. கல்லூரி, விடுதி வளாகத்திற்குள் எந்த சம்பவமும், சச்சரவும் இந்நெறிமுறைக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு, விசாரித்து தீர்ப்பளிக்க வகை செய்ய வேண்டும். தீராத பட்சத்தில் இது காவல் துறைக்கு புகாராக அனுப்பப்படவேண்டும்.
5. வரும் புகார்களின் மேல் காவல்துறை உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது.
6. இத்துடன் கல்லூரி விடுதி வளாகத்திற்குள் அடிக்கடி சாதி நல்லிணக்க, பண்பாட்டு நிகழ்ச்சிகள் மாதந்தோறும் நடத்தி மாணவர்களின் ஆற்றலை நெறிப்படுத்த வேண்டும்.
எவ்வளவுதான் முயன்றாலும் எல்லாமும் நிலவும் சமூகம் சார்ந்ததே என்பதால், சமூக விழிப்புணர்வு இயக்கங்கள், சமூக மாற்றங்கள் மூலமே இதை சாதிக்க முடியும். என்றாலும், நிலவும் சமூக அமைப்பிலேயே இச்சிக்கலுக்குத் தீர்வு காண நம்மாலியன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com