தமிழினத் தலைவர் ஆட்சியில் தமிழ்ப் பத்திரிகைகளின் சுதந்திரம்!
இராசேந்திரசோழன்
தமிழக முதல்வர் 27-04-09 அன்று 6 மணி நேர பட்டினிப் போராட்டம் மேற்கொண்டதன் விளைவாக,
1) இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு தமிழர்கள் அங்கு சுபீட்சமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஈழத்தில் போர் நடப்பதாகவோ, தமிழர்கள் கொல்லப்படுவதாகவோ சொல்வது பொய்ச் செய்தியாகும்.
2) பட்டினியால் வாடியோ, படுகாயமுற்றோ அங்கு யாரும் சாகவில்லை. எல்லோரும் மூன்று வேளை உணவுண்டு, உரிய மருத்துவ வசதியுடன் சீரும் சிறப்போடுமே வாழ்ந்து வருகிறார்கள். இப்படியிருக்க அங்கு பட்டினியால் சாவதாகவோ, மருத்துவ வசதி கிட்டாமல் மக்கள் மடிவதாகவோ கூறுவது பொய்ச் செய்தியாகும்.
3) இலங்கையில் தாய்சேய் நல விடுதிகள் அமைத்து கருவுற்ற தாய்மார்கள் அங்கு நன்கு பராமரிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் அங்கு கருவுற்ற தாய்மார்களைக் கருக்கலைப்பு செய்வதாகவோ, வயிற்றை கிழித்து சிசுக்களை வெளியே எடுத்துக் கொல்வதாகவோ குறிப்பிடுவது பொய்ச் செய்தியாகும்.
4) இலங்கையில் குழந்தைகள் காப்பகம் அமைத்து சிறுவர் சிறுமியர்களுக்கு சிறப்பான ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் இலவச கல்வி தந்து சிறப்பாக பேணப்படுகிறார்கள். இந்நிலையில் சிறுவர் சிறுமியர்கள் கொல்லப் படுவதாகவோ, காணாமல் போவதாகவோ கதைப்பது திட்டமிட்ட பொய்ச் செய்தியாகும்.
5) இலங்கையில் தமிழ்ப் பெண்கள் கண்ணியமாகவும், நாகரிக மாகவும் நடத்தப்படுகிறார்கள். சிங்கள் இராணுவத்தினர் தமிழ்ப் பெண்களை சகோதரிகள் போல் பாசத்தோடு நேசித்து அவர்களுக்கு எந்தவித பங்கமும் நேராமல் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்ப் பெண்களை சிங்கள இராணுவம் வன் பாலுறவுக்கு உட்படுத்து வதாகவோ, வதை செய்து கொன்று போடுவதாகவோ கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.
தமிழகத்திலும் தில்லியிலும் நடைபெற்று வரும் நல்லாட்சியை விரும்பாதவர்கள், ஆட்சிக்கு எதிராக சதி செய்ய முயலுபவர்கள் ஆட்சியைக் கலைக்கும் நோக்குடன் இந்த பொய்ச் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். எனவே, இப்படிப்பட்ட பொய்ச் செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது சட்டம் பாயும், குதறும், கடித்துப் போடும். அப்புறம் பத்திரிகைகள் என்னவாகும் என்று சொல்ல முடியாது என்பது தெரிவிக்கப்படுகிறது. முன்பு தராசுக்கு நேர்ந்த கதியும் நேரலாம். ஆகவே அரசாங்கம் சொல்லும் உண்மைச் செய்திகளை மட்டுமே வெளியிடுமாறு எச்சரிக்கிறோம்.
குறிப்பு : 01-05-2009 அன்று சென்னை மாநகரெங்கும் மஞ்சள் நிறத்தில் ஒட்டப்பட்டிருந்த, அமைப்பு பெயர் குறிப்பிடாத மிகப் பெரிய சுவரொட்டிகள் ஈழத்தில் நடைபெறும் செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு மிரட்டல் விடுத்திருந்ததைப் பார்க்க அதன் விளைவாக எழுந்த சிந்தனை இது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|