நீதிபதி அரிபரந்தாமன் அவர்களுக்கு வாழ்த்து
கடந்த 31-03- 09 திங்கள் அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் பதினோரு பேர் கூடுதல் நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளனர். இந்த பதினோரு பேரோடு தொடர்பற்ற பிற எண்ணற்ற பொது மக்களுக்கு இது சாதாரண ஒரு செய்தி, தகவல் மட்டுமே. எனில், நீதிபதியாகப் பொறுப் பேற்றுள்ள இவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் நம்முடைய குடும்பத்தில், நம்முடைய உறவு வட்டாரத்தில் ஒருவர் நீதியரசராயிருக்கிறார் என்பது பெருமிதமும் பேருவகையும் அளிக்கும் ஒரு நிகழ்வு.
இந்தப் பெருமிதமும் உவகையும் வெறும் உறவு, நட்பு காரணமாகவும் எழலாம். இதைத் தாண்டி இவர்களது ஆளுமை வழக்கறிஞர்களாக இவர்கள் ஆற்றிய பணி, செய்து சேவை சமூகத்தொண்டு காரணமாகவும் எழலாம். அப்படிப்பட்ட சேவை, பணி காரணமாக நம்மைப் பெருமையடையச் செய்யும் நிகழ்வுதான்திரு. அரிபரந்தாமன் அவர்கள் நீதிபதியாகி பொறுப்பேற்றுள்ள நிகழ்வு. 1980களின் பின்பாதி ஆண்டுகளில் திண்டிவனம் வானூர் வட்டப் பகுதிகளில் கருப்பு வைரம் எனப்படும் கறுப்புக்கல் தொழில் கொடிகட்டிப் பறந்து, அத்தொழிலில் ஈடுபட்ட நிறுவனங்கள் கோடிக் கணக்கில் பொருளீட்டிய காலம். முதலாளிகளுக்கு கொள்ளை லாபம். ஆனால் கல் சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு கூலியோ மிகக் மிகக் குறைவு.
திறமை சாரா சித்தாள் என்றால் பெண்களுக்கு 5 ரூபாயும், ஆண்களுக்கு 7 ரூபாயும் கூலி. அரைகுறை திறமை சார் பணிகளுக்கு பெண்களுக்க 12 ரூபாயும்,ஆண்களுக்கு 15 ரூபாயும் கூலி. ஆண்டு முழுவதும் விவசாய வேலை வாய்ப்பற்ற சூழலில் இது நிரந்தரமான வேலையாக இருக்கிறதே கிடைத்த மட்டும் போதும் என்று ஏழை எளிய மக்கள் இந்தப் பணியைச் செய்து வந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் இவர்களை அமைப்பு வழிப்பட் டவர்களாக்கி, சங்கம் வைக்கும் முயற்சியில் ‘தென்னார்க்காடு மாவட்ட கல் தொழிலாளர்கள் சங்கம்’ என்னும் அமைப்பு தொடங்கப் பட்ட து.
சங்கம் உருவாவதைத் தடுக்க முதலாளிகளின் சதி, அவர்களுக்கு உறுதுணையாக எடுபிடியாக இருந்த காவல் துறையின் அடக்குமுறை, அதை எதிர்த்த போராட்டங்கள், எதிர்கொண்ட வழக்குகள் சிறைவாசங்கள் என சோதனைகளும், நெருக்கடிகளும், பதட்டமும் திகிலுமாகக் கழிந்த அந்த நாட்களின் அனுபவங்களைத் தனி நவீனமாகவே எழுதலாம். அப்படிப்பட்ட போராட்ட களத்தில் அதற்கு உதவியாக உறுதுணையாக நின்ற நண்பர்கள், தோழர்கள் பலர். இவர்களது துணை மட்டும் இல்லாதிருந்தால் சங்கம் இந்தப் போராட்டங்களை நடத்தியிருக்க முடியுமா, எதிர்ப்புகளைத் தாக்குப் பிடித்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
பின்னாளில் பி.பி.சி. செய்தியாளராக லண்டன் சென்ற, அப்போது பத்திரிக்கையாளயராகப் பணிபுரிந்து வந்த நண்பர் பன்னீர்செல்வம், இத்தொழிலாளிகளின் அவல நிலை குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டில் எழுதி வெளி உலகுக்கு அறியப்படுத்தினார். போராட்ட களத்தில் எதிர்கொண்ட கிரிமினல் வழக்குகளுக்கான பிணை மனுக்களை வழக்கறிஞர் திரு விசயகுமார் பார்த்துக் கொள்ள, தொழில் தகராறு சம்மந்தப்பட்ட சிக்கல்களை வழக்கறிஞர் திரு. அரி பரந்தாமன் பார்த்துக் கொள்வார்.
எந்தப் பிரச்சினையிலும் தார்மீக நியாயத்தின் பக்கம் நிற்றல், அநீதியைக் கண்டவிடத்து இயல்பாக ஆவேசமடைதல், அதைக் கண்டித்துக் குரல் எழுப்புதல் முதலான பண்புகளுடன், சோராமல், சளைக்காமல் எப்போதும் சுறுசுறுப்போடு இயங்கும் அவர் வேகம் நம்மை அசத்தும். தொழிற்சங்க வழக்குகள் தொடர்பாக அவரை அவ்வப்போது சந்திக்க நேர்ந்து அவரோடு இணைந்து இயங்கிய நாள்கள் மிகுந்த அனுபவம் மிக்கவை, பயனுள்ளவை . தொழில் தகராறு சட்டம் குறித்து எனக்கு எழும் சந்தேகங்கள், விளக்கங்கள் அனைத்திற்கும் அவர்அது தொடர்பான நுhல்களை எடுத்துத் தந்து நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் எனப் பயிற்றுவிப்பார். தம்புசெட்டித்தெரு அலுவலக அறையிலிருந்து அவர் மேலங்கியை மாட்டிக் கொண்டு உயர்நீதி மன்றம் நோக்கிச் செல்லும் நடையின் வேகமே தனி. அதுவே அவர் ஆற்றும் பணியில் அவருக்குள்ள ஈடுபாட்டைப் புலப்படுத்தும் . இப்படி இது போன்று இன்றும் பசுமையாக நினைவில் நிழலாடும் நிகழ்வுகளை விவரிப்பின்நீளும்
சுருக்கமாகச் சொல்வதானால் துறைசார் வல்லுநர்கள் பலர் மனிதாபிமானப் பண்புகளோடு இருப்பதில்லை. மனிதாபிமானப் பண்புகளோடு உள்ளவர்கள் பலர் துறை சார்ந்து வல்லுநர்களாக இருப்பதில்லை. இரண்டும் சேர்ந்த ஆளுமையோடு விளங்குபவர்கள் மிகச் சிலரே. அப்படிப்பட்ட மிகச் சிலரில் ஒருவராகத் திகழ்பவர் திரு. அரி பரந்தாமன். ஒரு முறை நேர்ப்பேச்சில் கணிதவியல் பட்டதாரியான அவர் சட்டத்துறைக்கு வந்தது பற்றி குறிப்பிட்டபோது, கணிதத்தின் தர்க்க ஞானம் சட்டத் துறைக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருப்பதாகத் தெரிவித்தார்.
சாதாரண சிற்றூர்புறத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாகி தன்னுடைய உழைப்பால், திறமையால், ஆற்றிய பணியால் இன்று நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள அவரது வாழ்வு, சாதாரண கடைநிலை மக்களுக்கும் முன்னுதாரணமாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் திகழக்கூடியது. நீதிபதியாகப் பொறுப்பேற்ற ஒவ்வொருவரும் தங்கள் பதவியேற்பு உறுதி மொழிக்குப் பின், ஏற்புரை நிகழ்த்தினார்கள். அந்த ஏற்புரை என்பது சமூகம் சார்ந்து ஒவ்வொருவரின் கருத்தியலையும் ஆத்துமாவையும் வெளிப்படுத்துவதாகவே இருந்தது. அந்த வகையில் நீதியரசர் அரிபரந்தாமன் அவர்களது ஏற்புரை எல்லோரது உணர்வு பூர்வமான ஒன்றிப்புடன் ஒருமித்த நிலையில் பலத்த கரவொலியுடன் அனைவரது ஏகோபித்த பாராட்டுதல்களையும் பெற்றது.
நீதியரசர் அரிபரந்தாமன் அவர்களது பணியேற்புக்கும் அன்னாரது பணி சிறக்கவும் மண்மொழி நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் மனம் கனிந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரது பணியேற்பு உரையின் வடிவம் அடுத்த இதழில் இடம் பெறும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|