நாலு வார்த்தை
தலையங்கம்
இது 27வது இதழ். இந்த இதழை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தலுக்கு ஒரு 10, 15 நாள் முன்னதாகவே கொண்டு வந்துவிட வேண்டும் என்றுதான் பணியைத் தொடங்கியது. கடந்த இதழில் எடுத்து வைத்த செய்திகளுடன் புதிதாக தேர்தல் குறித்த மண்மொழியின் நிலைபாட்டையும் விளக்கி விரைவில் கொண்டு வந்துவிடவே திட்டமிட்டது.
ஆனால் ஒவ்வொரு நாளும் மாறிவரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப இடையில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தும கருத்துக் கூற வேண்டியிருந்ததால் அதுபற்றிய கட்டுரைகளைப் புதிததாக எழுதிச் சேர்க்க சற்று தாமதம். எனவே, எதிர்பார்த்த கால அவகாசத்தோடு கொண்டு வர இயலவில்லை. எனினும் தேர்தலுக்கு முன்பாகவே கொண்டு வந்து விட்டதில் மகிழ்ச்சி.
இதில் மண்மொழியின் நிலைபாடுகள் உங்களுக்கு நியாயமாய்ப் படுவதாய் ஏற்புடையதாய் இருப்பின் இதை மற்றவர்களுக்குச் சொல்லுங்கள். துண்டறிக்கையாகப் போட்டு மக்களுக்குக் கொடுங்கள். எப்படியோ தமிழீழத் தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்கும் தொடர்ந்து துரோகம் புரிந்து வரும் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியை வீழ்த்த வேண்டும். அதற்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்கள், தமிழ்த் தேசியச் சிந்தனையாளர்களின் விருப்பம், அந்த நியாயமான விருப்பத்தை ஈடேற்ற முயலுங்கள்.
அப்புறம் மிகமிக முக்கியமான ஒரு செய்தி. மண்மொழி தொடங்கி இது 4வது ஆண்டு என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம். 3 ஆண்டுகள் உணர்வாளர்களது நன்கொடையும், ஆதரவும் எப்படியோ இதழை நின்று போகாமல் கொண்டு வரச் செய்துவிட்டன. ஆனால் இந்த மூன்றாண்டுகளில் மண்மொழிக்காக எதுவுமே செய்யாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். செய்யக் கூடாது என்பதல்ல இவர்கள் நோக்கம். நேரில் சந்திக்க வாய்த்தால் ஏதாவது உதவி செய்து விடுவார்கள். அப்படி சந்திக்காத வாய்ப்பு, இவர்களது உதவி மண்மொழிக்குக் கிட்டாமல் இருக்கிறது.
ஆகவே, இவர்கள் தயவுசெய்து நேரில் சந்திக்கும் வாய்ப்புக்குக் காத்திராமல், பணவிடை மூலமோ, காசோலை வரைவோலை மூலமோ தங்களால் இயன்ற அல்லது விரும்பும் ஒரு தொகையை மண்மொழிக்கு உடடினயாக அனுப்பி உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அஞ்சல் நிலையம் போக, வங்கி போக சுணக்கப்பட்டு ஒரு உதவியைத் தடை செய்துவிடாமல் இந்தச் சிறிய பணியை ஏற்று நிறைவேற்றி, ஒரு பெரும்பணிக்கு உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அப்புறம் வேறு என்ன? இதழ் விரிவாக்கம்தான். இதழை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். இதழைப் பற்றிய கருத்துக்களை எழுதி அனுப்புங்கள். நல்லது, பார்ப்போம்.
தோழமையுடன்
ஆசிரியர்.
மண்மொழி ஆசிரியர் குழு சார்பில் முக்கிய வேண்டுகோள்
மண்மொழி தன் பணியைத் தொடங்கி மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காம் ஆண்டில் நடை போடுகிறது. எனினும் இதுவரை மண் மொழிக்காக எந்த உதவியும் செய்யாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இது அவரவர் மனசுக்கே தெரியும். என்றாலும் இதுவரை இதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால் தற்போது மண்மொழி மிகவும் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது.
ஆகவே, அன்பு கூர்ந்து,
1) இதுவரை எந்த உதவியுமே செய்யாதவர்கள் தங்களால் இயன்ற ஒரு தொகையை மண்மொழிக்கு பண விடையாகவோ, வரை வோலையாகவோ, காசோலையாகவோ அனுப்பி உதவுங்கள்.
2) இதழ் தொடக்கத்தில் ஒருமுறை மட்டும் சந்தா செலுத்தி பிறகு அதுபற்றி கவனமில்லாமல் விட்டு விட்டவர்கள் ஏதாவது ஒரு தொகையை சந்தாவாக அனுப்பி வையுங்கள்.
3) ஆண்டுதோறும் முறையாகப் புதுப்பித்து வருபவர்கள் இந்த நான்காம் ஆண்டு தொடர்வதை நினைவில் கொண்டு இந்த ஆண்டுக்கான சந்தாவை அனுப்பி வையுங்கள்.
4) எந்தக் கணக்கிலுமே உட்படாமல் சில பேருண்டு. அவர்கள் எந்த கணக்குமே பார்க்காமல் ஏதோ மண்மொழிக்கு ஒரு உதவி என்று தயங்காமல் முடிந்த ஒரு தொகையை அனுப்பி வையுங்கள்.
5) இந்த ஆண்டு சந்தா புதுப்பித்து விட்டவர்கள் இந்த வேண்டுகோளைப் பற்றிப் பொருட்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. அப்படி எதுவுமே செலுத்தாதவர்களுக்கான வேண்டுகோள் மட்டுமே இது.
குறிப்பு : பலபேர் நேரில் பார்த்தால் சந்தா தந்து விடுகிறார்கள். ஆனால் அஞ்சல் நிலையம் போய், வங்கி போய் அனுப்பத்தான் சுணக்கம். இப்படிப்பட்டவர்கள் ஒன்றை யோசித்துப் பாருங்கள். தமிழகம் தழுவி எங்கெங்கோ இருக்கும் எல்லோரையும் நேரில் பார்க்க முடியுமா? வாய்த்தால் சிலரை சில நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொள்ளலாம். ஆனால் இது எல்லோருக்கும் வாய்க்குமா? ஆகவே நேரில் சந்திக்கும் வாய்ப்புக்கு காத்திராமல் மண்மொழி போன்ற ஒரு இதழின் பின்னால் ஒளிந்திருக்கும் உழைப்பை சற்று நினைத்துப் பார்த்து உணர்ந்து அந்த பொது உழைப்புக்கு நம்மாலான ஒரு சிறு உழைப்பையும் நல்குவோமே என்று உறுதியெடுத்து அஞ்சலகமோ, வங்கியோ சென்று இன்றே ஒரு தொகை அனுப்பப் பாருங்கள். யாருக்கும் இது குறித்து தனியே ஏதும் கடிதம் எழுதவில்லை என்பதால் இதையே தனிப்பட்ட கடிதமாகப் பாவித்து செயல்படுங்கள். நன்றி. பார்ப்போம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|