Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 2
கல்கியின் சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்
7. மகேந்திர ஜாலங்கள்

காஞ்சி மாநகரில், பிரதான மந்திராலோசனை மண்டபத்தில் சபை கூடியிருந்தது. மந்திரி மண்டலத்தாரும் அமைச்சர் குழுவினரும் பிரசன்னமாகியிருந்தார்கள். சக்கரவர்த்தியும், குமார சக்கரவர்த்தியும் சிம்மாசனங்களில் நடுநாயகமாக வீற்றிருக்க, அருகே ஒரு தனிப் பீடத்தில் சேனாதிபதி கலிப்பகையும் அமர்ந்திருந்தார். தளபதி பரஞ்சோதியை மட்டும் அவ்விடத்திலே காணவில்லை. கோட்டைப் பாதுகாப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தபடியால் அவரால் மந்திராலோசனைக்கு வரமுடியவில்லை போலும்.

சபையில் கூடியிருந்தவர்களின் முகத்திலெல்லாம் இலேசாகக் கவலைக் குறி தோன்றியது. எல்லோரையும் காட்டிலும் அதிகமான கவலை, சபையில் எழுந்து நின்ற பண்டகசாலை அமைச்சர் பராந்தக உடையார் முகத்தில் காணப்பட்டது.

"உடையாரே! முற்றுகை ஆரம்பிக்கும் சமயத்தில் நீர் உறுதியாகச் சொன்னீரல்லவா? குறைந்தது பதினைந்து மாதத்துக்கு வேண்டிய தானியங்களை நம் பண்டகசாலைகளில் பத்திரப்படுத்தியிருப்பதாக! முற்றுகை ஆரம்பித்து ஏழு மாதந்தானே ஆகிறது? இன்னும் எட்டு மாதத்துக்கு இருக்க வேண்டுமே? மூன்று மாதத்துக்குத் தான் தானியம் இருக்கும் என்று சொல்கிறீரே? அது எப்படி?" என்று சக்கரவர்த்தி கேட்டார். மகேந்திர பல்லவரின் குரல் மிகக் கடுமை பெற்றிருந்தது. அவருடைய முகத்தில் சுருக்கங்கள் அதிகமாயிருந்தன.

பராந்தக உடையார் குரலில் கலக்கத்துடனும், சொல்லில் தடுமாற்றத்துடனும் கூறினார்: "பல்லவேந்திரா! நான் எதிர்பார்த்தபடி சில காரியங்கள் நடக்கவில்லை. எதிர்பாராத காரியங்கள் சில நடந்து விட்டன. நகரை விட்டு வெளியேறிய ஜனங்கள் பலர், புள்ளலூர்ச் சண்டைக்குப் பிறகு நகருக்குத் திரும்பி வந்து விட்டார்கள். தொண்டை மண்டலத்திலுள்ள சிற்பிகள் அனைவரையும் தலைநகருக்குள்ளே கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்று தங்களுடைய ஆக்ஞை பிறந்தது. இதனால் ஐயாயிரம் பேர் அதிகமானார்கள். நமது கடிகைகள்-கல்லூரிகள் எல்லாவற்றையும் மூடி ஆசிரியர்களையும் மாணாக்கர்களையும் வெளியே அனுப்பி விடலாமென்று முதலில் யோசனை செய்திருந்தோம். கடைசி நேரத்தில் தாங்கள் அவ்விதம் செய்ய வேண்டாம் என்று கட்டளையிட்டுயிட்டீர்கள்."

"இவ்வளவுதானா? இதனாலேயே ஐந்து மாதங்களுக்குரிய உணவு குறைந்து போய்விட்டதா?" என்று சக்கரவர்த்தி கேட்டார்.

"அடியேனும் ஒரு பெரிய தவறு செய்து விட்டேன். நகரில் உள்ள புருஷர்கள், ஸ்திரீகள், குழந்தைகளை மட்டும் கணக்கெடுத்துக் கொண்டு, பதினைந்து மாதத்துக்கு உணவு இருப்பதாகச் சொன்னேன். கறவைப் பசுக்கள், கோயில் மாடுகள், குதிரைகள் இவற்றைக் கணக்கில் சேர்க்கவில்லை. மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் வைக்கோலும் புல்லும் கிடைக்காதபடியால் தானியத்தையே தீனியாகக் கொடுக்க வேண்டியதாகி விட்டது" என்றார் அமைச்சர்.

"நல்லது, பராந்தகரே! தொண்டைமான் இளந்திரையன் வம்சத்தில் பிறந்த காஞ்சி மகேந்திர பல்லவன், வாதாபிப் புலிகேசியிடம் சரணாகதியடைய நேர்ந்தால் அந்தப் பழியைக் கோவில் மாடுகள் மீதும், தேர்க் குதிரைகள் மேலும் போட்டு விடலாமல்லவா?" என்று கூறி விட்டுச் சக்கரவர்த்தி சிரித்தார். அந்தச் சிரிப்பில் கோபம் அதிகமாய்த் தொனித்ததா, ஏளனம் அதிகமாய்த் தொனித்ததா என்று சொல்வதற்கு முடியாமல் இருந்தது.

அப்போது நரசிம்மவர்மர் துள்ளி எழுந்து, "அப்பா! என்ன வார்த்தை சொன்னீர்கள்? வாதாபிப் புலிகேசியிடம் மகேந்திர பல்லவர் சரணாகதியடைவதா? ஒரு இலட்சம் பல்லவ வீரர்கள் ஏழு மாதமாக மூன்று வேளை உண்டும், உறங்கியும் இந்தக் கோட்டைக்குள்ளே எதற்காக அடைபட்டுக் கிடக்கிறார்கள்? தந்தையே! நமது பண்டகசாலை அமைச்சரின் கணக்குப் பிழையும் ஒருவிதத்தில் நல்லதாகவே போயிற்று. இப்போதாவது கட்டளையிடுங்கள், கோட்டைக்குள்ளே ஏழு மாதம் ஒளிந்து கொண்டிருந்தது போதும். உலகமெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரித்தது போதும். அப்பா! இப்போதாவது வாதாபிப் படைகளைத் தாக்கி நிர்மூலம் செய்யும்படி அடியேனுக்குக் கட்டளையிடுங்கள்!" என்று ஆத்திரமும் அழுகையுமாய்க் கூறி விட்டு, மகேந்திர பல்லவரின் முன்னால் தரையில் விழுந்து அவருடைய பாதங்களைப் பற்றிக் கொண்டார்.

மகேந்திர பல்லவர் தமது கண்களில் துளித்த நீர்த் துளியை மறைப்பதற்காக முகத்தைப் பின்புறமாகத் திருப்பினார்.

ஒரு நொடி நேரத்தில் சக்கரவர்த்தி மீண்டும் சபையின் பக்கம் திரும்பியபோது, அவர் முகத்தில் பழையபடி கடுமையும் ஏளனப் புன்னகையும் குடிகொண்டிருந்தன. தம் பாதங்களைப் பற்றிக் கொண்டு தரையில் கிடந்த மாமல்லரை அவர் தூக்கி நிறுத்தி, "மாமல்லா! உன்னை வெகு காலம் நான் அந்தப்புரத்திலேயே விட்டு வைத்திருந்தது பிசகாய்ப் போயிற்று. மூன்று தாய்மார்களுக்கு மத்தியில் நீ ஒரே மகனாக அகப்பட்டுக் கொண்டிருந்தாயல்லவா? அதனாலேதான் பெண்களுக்குரிய குணங்களான ஆத்திரமும் படபடப்பும் உன்னிடம் அதிகமாய்க் காணப்படுகின்றன. உலகில் வீரச் செயல்கள் புரிய விரும்பும் ஆண் மகனிடம் இத்தகைய படபடப்பும் ஆத்திரமும் இருக்கக் கூடாது. நரசிம்மா! மல்யுத்தத்தில் மகா நிபுணனான உனக்கு இதை நான் சொல்ல வேண்டுமா?" என்றார்.

மாமல்லருடைய உதடுகள் துடித்தன; தந்தையின் வார்த்தைகளுக்கு மறுமொழி சொல்ல அவருடைய உள்ளத்திலிருந்து வார்த்தைகள் பொங்கி வந்தன. ஆனால், அதிக ஆத்திரத்தினாலேயே அவரால் பேச முடியாமற் போய் விட்டது.

மகனுடைய நிலையைக் கண்ட மகேந்திர பல்லவர், "குழந்தாய்! நீண்ட காலமாகப் பொறுத்து வந்திருக்கிறாய், இன்னும் சில நாள் பொறு. நீயும் நமது பல்லவ வீரர்களும் உங்களுடைய வீர தீரத்தை எல்லாம் காட்டுவதற்குரிய சந்தர்ப்பம் சீக்கிரத்தில் வரப் போகிறது. வாதாபிப்படை, இன்னும் சில தினங்களுக்குள் கோட்டையைத் தாக்குமென்று எதிர்பார்க்கிறேன். அந்தத் தாக்குதல் வெகு கடுமையாயிருக்கும் என்றும் எண்ணுகிறேன். அதைச் சமாளிப்பதற்கு நாமும் நமது பூரண பலத்தையும் பிரயோகிக்க வேண்டியதாயிருக்கும். பல்லவர் வீரத்துக்கு மகத்தான சோதனை வரப் போகிறது. அதற்கு நாம் எல்லோரும் ஆயத்தமாக வேண்டும்!" என்றார்.

இவ்விதம் மாமல்லனைப் பார்த்துக் கூறிய பிறகு, பண்டகசாலை அமைச்சரைப் பார்த்து மகேந்திர பல்லவர், "பராந்தகரே! இன்று முதல் காஞ்சி நகரில் உள்ளவர் அனைவரும், மாடுகளும் குதிரைகளும் உட்பட சமண நெறியை மேற்கொள்வோமாக!" என்றதும், சபையில் இருந்த அனைவருக்குமே தூக்கிவாரிப் போட்டது.

"ஒரே ஒரு காரியத்தில் மட்டும்தான் சொல்கிறேன். அதாவது, இரவில் உணவு உட்கொள்வதில்லையென்ற சமண முனிவர்களின் விரதத்தை எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டும். இதுவரை நீங்கள் கொடுத்து வந்த உணவுப் படியில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்து விடுங்கள். அரண்மனைக்கும் ஆலயங்களுக்கும் உள்படச் சொல்லுகிறேன். இனிமேல் காஞ்சி நகரில் உள்ளவர்களுக்கெல்லாம் தினம் இரண்டு வேலைதான் உணவு. இதன்மூலம் கைவசமுள்ள தானியத்தை நாலரை மாதம் நீடிக்குமாறு செய்யலாமல்லவா? மந்திரிமார்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று சக்கரவர்த்தி கேட்கவும், முதன்மந்திரி சாரங்கதேவர், "பிரபு! கோட்டை முற்றுகை நாலரை மாதத்துக்கு மேல் நீடிக்காதென்று தாங்கள் அபிப்பிராயப்படுவதாகத் தெரிகிறது" என்றார்.

"இல்லை! நாலரை மாதம் கூட நீடிக்குமென்று நான் நினைக்கவில்லை. முன்ஜாக்கிரதையாக உணவை மூன்றில் ஒரு பங்கு குறைக்கலாமென்று சொன்னேன். புலிகேசி இன்னும் ஒரு வாரத்தில் கோட்டையைத் தாக்கத் தொடங்குவான் என்று எதிர்பார்க்கிறேன்..."

"பிரபு! அப்படித் தாங்கள் எதிர்பார்ப்பதற்குத் தக்க காரணங்கள் இருக்கத்தான் வேண்டும்" என்றார் சாரங்க தேவர்.

"ஆம்; அவற்றை உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்! சபையோர்களே! உணவு நெருக்கடியைப் பொறுத்தவரையில் நம்மைக் காட்டிலும் புலிகேசியின் நிலைமை ஆபத்தானது. வாதாபிப் படையினர் மூன்று மாத காலமாக அரை வயிறு உணவு உண்டுதான் ஜீவித்து வருகிறார்கள். புலிகேசி வாதாபியிலிருந்து புறப்பட்ட போது ஐந்து இலட்சம் வீரர்களுடனும், பதினையாயிரம் யானைகளுடனும் புறப்பட்டான். இப்போது வாதாபிப் படையில் மூன்றரை இலட்சம் வீரர்கள்தான் இருக்கிறார்கள். பதினாயிரம் யானைகள் மட்டுமே இருக்கின்றன. சபையோர்களே! இன்னும் ஒரு மாதம் போனால் இவர்களிலும் பாதிப் பேர் பஞ்சத்திலும் நோயிலும் மடிந்து போவார்கள். யானைகளின் கதி என்ன ஆகுமோ தெரியாது. ஆகையால், புலிகேசி சீக்கிரத்தில் கோட்டையைத் தாக்கித்தான் ஆகவேண்டும். இந்தத் தாக்குதல் வெகுமூர்க்கமாய் இருக்குமென்பதிலும் சந்தேகமில்லை."

முதல் அமைச்சர் ரணதீர பல்லவராயர், "பல்லவேந்திரா! இந்த மாதிரி அதிசயத்தை இவ்வுலகம் எப்போதும் கேள்விப்பட்டதில்லை. முற்றுகைக்கு உள்ளானவர்கள் பசி, பட்டினிக்கு ஆளாகி மடிவதுண்டு. எதிரியிடம் சரண் அடைந்ததும் உண்டு. ஆனால் முற்றுகை இடுகிறவர்கள் பட்டினிக்கு ஆளானார்கள் என்று கதைகளிலே கூடக் கேட்டதில்லை!" என்றார்.

"ஆம் பல்லவராயரே! திரிபுரம் எரித்த பெருமானின் அருளினால் அம்மாதிரி அதிசயம் நடக்கிறது. தொண்டை மண்டலத்துக் கிராமங்களில் உள்ள ஜனங்கள் எதிரிகளுக்கு ஓர் ஆழாக்கு அரிசியோ, ஒரு பிடி கம்போ கொடுக்கவும் மறுத்திருக்கிறார்கள். கையிலுள்ள தானியத்தையெல்லாம் வெகு பத்திரமாகப் புதைத்து வைத்திருக்கிறார்கள். சபையோர்களே! தொண்டை மண்டலத்து ஏரிகள் கூட நமக்குப் பெரிய உதவி செய்திருக்கின்றன. சென்ற தை மாதத்தில் எக்காரணத்தினாலோ நம் நாட்டு ஏரிகள் எல்லாம் திடீர் திடீரென்று உடைத்துக் கொண்டு விட்டன. அப்படி ஏற்பட்ட உடைப்பு வெள்ளத்தினால் வாழைத் தோட்டங்கள், தென்னந்தோப்புகள் எல்லாம் பாழாயின. கோடைக் காலத்துச் சாகுபடியும் நடக்கவில்லை. இதனாலெல்லாம் புலிகேசியின் போர் வீரர்களுக்கும் போர் யானைகளுக்கும் உணவு கிடைக்கவில்லை."

சேனாபதி கலிப்பகை எழுந்து, "சபையோர்களே! தொண்டை மண்டலத்து ஏரிகள் நமது கட்சியில் சேர்ந்து உடைத்துக் கொண்டு பகைவர்களைப் பட்டினிக்குள்ளாக்கியது உண்மைதான். ஆனால், அவை தாமாக உடைத்துக் கொள்ளவில்லை. விசித்திர சித்தரான நமது மன்னரின் மகேந்திர ஜால வித்தையிலேதான் ஏரிகள் எல்லாம் உடைத்துக் கொண்டன" என்றார்.

"நான் செய்தது ஒன்றுமில்லை. சத்ருக்னனுடைய தலைமையில் நமது ஒற்றர் படை வெகு நன்றாய் வேலை செய்திருக்கிறது. தொண்டை மண்டலத்திலுள்ள கோட்டத் தலைவர்களும் வெகு திறமையுடன் காரியம் செய்திருக்கிறார்கள். நாட்டில் பஞ்சம் வந்தாலும் வரட்டும் என்று ஏரிகள், அணைக்கட்டுகள் எல்லாவற்றையும் அவர்கள் வெட்டி விட்டிருக்கிறார்கள். சபையோர்களே! தொண்டை மண்டலத்துப் பிரஜைகள் இந்த யுத்தத்தில் செய்திருக்கும் உதவிக்கு நூறு ஜன்மம் எடுத்து நான் அவர்களுக்குத் தொண்டு செய்தாலும் ஈடாகாது" என்று சக்கரவர்த்தி கூறிய போது அவருடைய குரல் உணர்ச்சியினால் தழுதழுத்தது.

சற்று நேரம் சபையில் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு முதல் மந்திரி சாரங்கதேவர், "பல்லவேந்திரா! புலிகேசி, பாண்டியனைச் சந்திக்கக் கொள்ளிடக் கரைக்குச் சென்றிருப்பதாகத் தெரிகிறதே! பாண்டியன் ஒருவேளை வாதாபிப் படைக்கு வேண்டிய உணவுப் பொருள் கொடுக்கலாம் அல்லவா?" என்றார்.

"ஆம் மந்திரி! பாண்டியனிடம் உணவுப் பொருள் உதவி கோருவதற்காகத் தான் புலிகேசி தெற்கே போயிருக்கிறான். ஆனால் அந்த உதவி அவனுக்குக் கிடைக்கும் என்று நான் கருதவில்லை. தவிரவும், புலிகேசி சீக்கிரத்தில் வாதாபிக்குத் திரும்ப வேண்டிய காரணங்களும் ஏற்பட்டிருக்கின்றன. சபையோர்களே! ஒவ்வொரு நிமிஷமும் தெற்கேயிருந்து முக்கியமான செய்தியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டே மகேந்திர பல்லவர் மண்டபத்தின் வாசற் பக்கம் பார்த்தார். பார்த்த உடனே "ஆ இதோ செய்தி வருகிறது!" என்றார்.

காவலன் ஒருவன் உள்ளே வந்து, சக்கரவர்த்திக்கு அடி வணங்கி, அவருடைய காதோடு ஏதோ இரகசியமாகச் சொன்னான். சாதாரணமாக எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆச்சரியமான அறிகுறியைக் காட்டாத மகேந்திர பல்லவரின் முகம், மேற்படி காவலன் கூறியதைக் கேட்டதும் எல்லையற்ற வியப்பைக் காட்டியது.

"சபையோர்களே! நீங்களாவது நானாவது சற்றும் எதிர்பாராத அதிசயமான செய்தி வந்திருக்கிறது. என்னாலேயே நம்ப முடியவில்லை. விசாரித்து உண்மை தெரிந்து கொள்ளப் போகிறேன். இப்போது சபை கலையட்டும், இன்றிரவு மறுபடியும் சபை கூட வேண்டும். அப்போது எல்லாம் விவரமாகச் சொல்கிறேன். மாமல்லா! நீயும் அரண்மனைக்குப் போய் உன் தாய்மாரைப் பார்த்து விட்டு வா!" என்று கூறிக் கொண்டே மகேந்திர பல்லவர் எழுந்து சபா மண்டபத்தின் வாசலை அடைந்து, அங்கு ஆயத்தமாய் நின்ற குதிரையின் மீது தாவி ஏறினார்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com