Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 3
கல்கியின் சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்
48. நாற்சந்தி நடனம்

கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால், அவர் கருணாமூர்த்தி என்பதும் உண்மையானால், உலகத்தில் ஏன் இத்தனை துன்பங்களை வைத்திருக்கிறார்? மனித வர்க்கம் ஏன் இத்தனை கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது? இந்தக் கேள்விகள் ஆதிகாலந் தொட்டு கேட்கப்பட்டு வருகின்றன.

உள்ளதில் உண்மை ஒளிகொண்ட மகான்கள் மேற்படி கேள்விகளுக்கு விடையும் சொல்லி வந்திருக்கிறார்கள்.

மனிதர்கள் துன்பம் என்று நினைப்பது உண்மையில் துன்பம் அல்ல. சூரியனை மேகம் மூடுவது போல் நமது அறிவை மூடியிருக்கும் மாயை காரணமாகச் சில விஷயங்களைத் துன்பம் என்று நாம் கருதுகிறோம். உண்மையில் துன்பமும் ஒருவித இன்பமேயாகும்.

"அன்பு வடிவாகி நிற்பள் துன்பமெலாம் அவள் இழைப்பள்
ஆக்கநீக்கம் யாவும் அவள் செய்கை - அவள்
ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை!"

என்று பராசக்தியைக் குறித்து இந்தக் காலத்து மகாகவியான ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் பாடியிருக்கிறார்.

ஆனால், அன்பு வடிவான ஜகன்மாதா ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கையான அன்னை பராசக்தி ஏன் தன் மக்களுக்குத் துன்பம் இழைக்கிறாள்; ஏன் கஷ்டங்களை அளிக்கிறாள்?

துன்பம் என்றும், கஷ்டம் என்றும் நாம் எண்ணிக் கொள்கிறோமே தவிர, உண்மையில் அவை துன்பங்களுமல்ல; கஷ்டங்களுமல்ல. அறிவுத் தெளிவோடு பார்த்தால், நாம் துன்பம் என்று நினைத்ததும் இன்பந்தான்; கஷ்டம் என்று கருதியதும் சுகந்தான்.

இந்தத் தத்துவத்தை நம்புவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. "துன்பத்திலே இன்பமாவது, கஷ்டத்திலே சுகமாவது?" என்ற அவநம்பிக்கை உண்டாகத்தான் செய்யும். ஆயினும் நமது வாழ்க்கை அனுபவத்திலேயே சில விஷயங்களை ஆலோசித்துப் பார்த்தால் மேற்படி தத்துவத்தில் உண்மை உண்டு என்று அறியலாம்.

சோக ரஸமுள்ள கதைகள், காவியங்களைப் படிக்கிறோம். சோக மயமான நாடகங்களைப் பார்க்கிறோம்; சோகத்தை ஊட்டும் கீதங்களைப் பாடுகிறோம், கேட்கிறோம். இப்படியெல்லாம் துன்பத்தை நாமாகத்தானே தேடி அனுபவிக்கிறோம்? எதற்காக? அந்தத் துன்பங்களிலேயெல்லாம் உள்ளுக்குள்ளே இன்பம் பொதிந்திருப்பதனாலேதான். நமது வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கிறோம். அனுபவிக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. 'இது சகிக்க முடியாத கஷ்டம்' என்று தோன்றுகிறது. 'இந்த வாழ்க்கையே வேண்டாம்' என்று தீர்மானிக்கிறோம். எல்லாக் கஷ்டங்களையும் எப்படியோ சகித்துக் கொள்கிறோம். அப்படி நாம் அனுபவித்த சகிக்க முடியாத கஷ்டங்களைச் சில வருஷ காலம் கழித்து நினைத்துப் பார்க்கும் போது, ஒருவகை அபூர்வ இன்பம் ஏற்படுகிறது. பழைய கஷ்டங்களை நினைத்துப் பார்ப்பதிலும் அவற்றைக் குறித்துப் பேசுவதிலும் சந்தோஷமே அடைகிறோம்.

சீதாதேவி வனவாசத்தின் போது அனுபவித்த துன்பங்களுக்கு எல்லையேயில்லை. அவ்வளவு துன்பங்களைப் பெண்ணாய்ப் பிறந்த யாரும் அனுபவித்திருக்க முடியாது. ஆயினும் அயோத்தி அரண்மனையில் ஸ்ரீ ராமபிரானுடைய பட்டமகிஷியாகச் சீதை வாழ்ந்த காலத்திலும் அதிலும் கர்ப்பம் தரித்திருந்த சமயத்தில், "உனக்கு எதிலாவது ஆசை உண்டா?" என்று ராமன் கேட்ட போது, சீதை என்ன சொன்னாள்? "மறுபடியும் காட்டுக்குப் போய் அங்கே நான் கஷ்டப்பட்ட இடங்களையெல்லாம் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது!" என்றாள்.

"துன்பம் என்பது உண்மையில் துன்பம் அல்ல. அவ்விதம் நினைக்கச் செய்வது மாயையின் காரியம். துன்பத்திற்குள்ளேயும் இன்பந்தான் இருக்கிறது!" என்று சொல்லும் வேதாந்த உண்மையை மேற்படி சீதையின் கோரிக்கை நன்கு நிரூபித்திருக்கிறதல்லவா?

சிவகாமியை நாற்சந்தியில் நெருக்கடியான தருணத்தில் நிறுத்தி விட்டு மேற்கண்டவாறு நாம் வேதாந்தம் பேசிக் கொண்டிருப்பது பற்றி வாசகர்களின் மன்னிப்பைக் கோருகிறோம். மேலே சிவகாமியின் காரியத்தை நாம் அறிந்து கொள்வதற்கு மேற்கண்ட பூர்வ பீடிகை அவசியமாயிருக்கிறது.

தமிழகத்து ஸ்திரீ புருஷர்களை சாட்டையடித் துன்பத்திலிருந்து பாதுகாப்பதற்காகத் தளபதி விரூபாக்ஷன் அவளை நாற்சந்தியில் நடனமாடச் சொன்னான். அவ்விதம் செய்வது தெய்வீகமான, பரதநாட்டியக் கலையையே அவமதிப்பதாகும் என்று எண்ணி முதலில் சிவகாமி, "முடியாது!" என்றாள்.

ஆனால், விரூபாக்ஷனின் கட்டளையின் பேரில், 'சுளீர்' என்ற சாட்டையடிச் சப்தம் கேட்டதும் சிவகாமியின் மனஉறுதி பறந்து போய் விட்டது. மறுகணம் வாதாபி நகரின் நாற்சந்தியில் சிவகாமி தேவி நடனம் ஆடத் தொடங்கினாள், அற்புதமாக ஆடினாள். துன்பத்திலே இன்பம் உண்டு என்னும் வாழ்க்கைத் தத்துவம் நன்கு விளங்கும்படி ஆனந்தமயமாக ஆடினாள். சகிக்க முடியாத கஷ்டத்திலிருந்து எல்லையற்ற ஆனந்தம் பிறக்கும் என்னும் உண்மை நிதரிசனம் ஆகும்படி ஆடினாள். தன்னை மறந்து, வெளி உலகத்தை மறந்து, காலதேச வர்த்தமானங்களை மறந்து ஆடினாள். அந்தக் காட்சியானது அழகுத் தெய்வம் ஆனந்த வெறிகொண்டு ஆடுவது போலிருந்தது.

வாதாபியின் வீதியில் சிவகாமி நடனம் ஆடிய போது வானமும் பூமியும் அசைவற்று நிற்பது போல் தோன்றியது. வீதியிலே போய்க் கொண்டிருந்த வாதாபி நகர மாந்தர்கள் அப்படி அப்படியே நின்று அந்த விந்தையைப் பார்த்தார்கள். பந்தமுற்ற தமிழகத்து ஸ்திரீ புருஷர்கள் அசைவற்று நின்றார்கள். கையில் சாட்டை பிடித்த கிங்கரர்களும் சும்மா நின்றார்கள். அவர்களுடைய தலைவன் விரூபாக்ஷனும் அசையாமல் நின்றான். அனைவரும் பார்த்த கண்கள் பார்த்த வண்ணம், சிற்ப வடிவங்களைப் போல் நின்றார்கள். காலம் போவதே தெரியாமல் மெய்மறந்து உலகத்தை மறந்து நின்றார்கள்.

சூரியன் மலைவாயிலில் விழுந்தது. கோட்டைக் கதவுகள் சாத்துவதற்குரிய அஸ்தமன பேரிகை முழக்கம் கேட்டது. சிவகாமியின் நடன பரவசத்துக்கு அதனால் பங்கம் ஏற்பட்டது. ஆட்டம் ஆடுவதை நிறுத்திச் சிவகாமி நின்றாள். அத்தனை நேரமும் ஏதோ ஓர் அதிசய ஆனந்த உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவள் திடீரென்று பூவுலகத்துக்கு வந்தவளாய்ச் சுற்று முற்றும் பார்த்தாள். தான் நின்றிருந்த இடத்தையும் இத்தனை நேரம் செய்த காரியத்தையும் நினைவுக்குக் கொண்டு வந்தாள்.

அவள் உள்ளத்தில் சகிக்க முடியாத வெட்கத்துக்கும் துன்பத்துக்கும் மத்தியில் இன்பமும் பெருமையும் உதித்தன. கட்டுப்பட்டு நின்ற பல்லவ நாட்டு ஸ்திரீ புருஷர்களைச் சிவகாமி நோக்கினாள். அவர்களுடைய கண்களிலே ததும்பிய நன்றியறிதலைக் கவனித்தாள்.

யாருடனும் ஒரு வார்த்தையும் பேசாமல் பல்லக்கில் போய் ஏறிக் கொண்டாள். பல்லக்கு மாளிகையை அடைந்தது.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com