Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 3
கல்கியின் சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்
43. புலிகேசியின் வாக்குறுதி

புலிகேசி சக்கரவர்த்தி முகத்தில் புன்னகையுடன், "அடிகளே! தங்களுடைய பிக்ஷு விரதத்துக்கு நாட்டியப் பெண் சிவகாமியினால் பங்கம் நேராமலிருக்கலாம். ஆனால், நம்முடைய தென்னாட்டுப் படையெடுப்புக்கு அந்தப் பெண் தெய்வத்தினால் பங்கம் நேர்ந்துவிட்டது!" என்றார்.

பிக்ஷு வியப்பும் கோபமும் கலந்த குரலில், "அது எப்படி? படையெடுப்புக்கும் சிவகாமிக்கும் என்ன சம்பந்தம்? மகேந்திர பல்லவனுடைய சூழ்ச்சித் திறமையினால் அல்லவா நமது உத்தேசம் நிறைவேறவில்லை?" என்று கேட்டார்.

"அடிகளே! மகேந்திரனுடைய சூழ்ச்சித் திறனுக்குத் தங்களுடைய சூழ்ச்சித் திறன் குறைவானதா? யுத்தரங்கத்தில் நாம் சில சமயம் தோல்வியடைந்திருக்கிறோம். ஆனால், அரசியல் தந்திரத்தில் இதற்கு முன்னால் எப்போதாவது நாம் தோல்வியடைந்ததுண்டா? சிவகாமியிடமோ, அவளை ஆட்கொண்ட கலைத் தெய்வத்திடமோ தங்களுக்கு மோகம் ஏற்பட்டிராவிட்டால், மகேந்திர பல்லவன் தங்களைச் சிறைப்பிடித்திருக்க முடியுமா? தங்களுடைய திருவுள்ளத்தைப் பரிசோதனை செய்து உண்மையைச் சொல்லுங்கள்!"

இவ்விதம் புலிகேசி கூறியபோது, பிக்ஷுவின் முகத்தில் தோன்றிய கோபக்குறி மறைந்து, வெட்கம் கலந்த பிடிவாதம் காணப்பட்டது. தரையை நோக்கித் தலையைக் குனிந்த வண்ணம், "சக்கரவர்த்தி! இந்த அறிவிழந்த பிக்ஷுவை மன்னித்து விடுங்கள்! சாம்ராஜ்யத்தின் தொண்டுக்கு நான் இனித் தகுதியில்லாதவன். இத்தனை காலமாய் நான் செய்திருக்கும் சேவையை முன்னிட்டு மன்னித்து விடுதலை கொடுங்கள்!" என்றார் பிக்ஷு.

"அண்ணா! இது என்ன விளையாட்டு?"

"இல்லை, தம்பி! விளையாட்டு இல்லை. உண்மையாகத்தான் சொல்கிறேன். எனக்கு விடை கொடு; நான் போகிறேன்."

"எங்கே போவதாக உத்தேசம்?"

"எங்கேயாவது மனிதர்களுடைய கண் காணாத இடத்துக்குப் போகிறேன். அஜந்தாவைப் போன்ற இன்னொரு மலைப் பிரதேசத்தைக் கண்டுபிடித்து அதற்குள்ளே, உள்ளே, உள்ளே யாரும் எளிதில் வர முடியாத இடத்துக்குப் போய்விடுகிறேன். அங்கே சிவகாமியை நடனம் ஆடச் சொல்லிப் பார்த்துக் கொண்டே என் மிகுதி ஆயுளைக் கழித்து விடுகிறேன்.."

"அண்ணா! அப்படித் தனியாகச் சிவகாமியை நீ கொண்டு போய் வைத்துக் கொண்டிருந்தால், அந்தப் பெண் நடனம் ஆடுவாளா?"

"கலைஞர்களின் இயல்பு உனக்குத் தெரியாது, தம்பி! பெரிய சாம்ராஜ்யத்தை ஆளும் சக்கரவர்த்தியின் அதிகாரத்தினால் சிவகாமியை ஆடச் சொல்ல முடியாது. ஆனால், நிற்க நிழலில்லாத இந்த ஏழைப் பிக்ஷுவினால் சிவகாமியை ஆடச் செய்ய முடியும்."

"ஓஹோ!"

"ஆம், தம்பி! அதனாலேதான் நான் உன்னைப்போல் வேஷம் தரித்திருக்கும் வரையில் அவளை நடனம் ஆடச் சொல்லவில்லை."

"அண்ணா! இந்தப் பைத்தியம் உனக்கு வேண்டாம். சிவகாமியைக் காஞ்சிக்கே திருப்பி அனுப்பிவிடுகிறேன். இல்லாவிட்டால், நம் தளபதிகளில் யாராவது ஒருவனுக்கு அவளைக் கல்யாணம் செய்து கொடுத்துவிடுவோம்."

பிக்ஷுவின் கண்களில் கோபக் கனல் பறந்தது. "தம்பி! சிவகாமியைப் பெண்டாளும் எண்ணத்துடன் அவள் அருகில் நெருங்குகிறவன் யமனுலகம் போக ஆயத்தமாயிருக்க வேண்டும்" என்றார்.

"அண்ணா! மாமல்லன் யமனுலகம் போய்விட்டானா?" என்று புலிகேசி பரிகாசக் குரலில் கேட்டார்.

"இல்லை; அந்த நிர்மூடன் அதைக் காட்டிலும் கொடிய தண்டனையை இந்த உலகிலேயே அனுபவிக்கப் போகிறான். கேள், தம்பி! மாமல்லனை இந்தக் கையினாலேயே கொன்று விடத் தீர்மானித்திருந்தேன். இரண்டு மூன்று தடவை சந்தர்ப்பங்களும் வாய்த்தன. ஆனால், கடைசி நேரத்தில் என் மனத்தை மாற்றிக் கொண்டேன்."

"ஆகா! நீ மட்டும் உன் மனத்தை மாற்றிக் கொள்ளாமல் மாமல்லனைக் கொன்றிருந்தால், பல்லவ இராஜ்யத்தில் இப்போது வராகக் கொடி பறந்து கொண்டிருக்கும். மகேந்திர பல்லவனும் மதுரைப் பாண்டியனும் நம் காலின் கீழ் கிடப்பார்கள்."

"ஒருவேளை அப்படி ஆகியிருக்கலாம், ஆனால் சிவகாமியைத் தன்னுடைய சுகபோகப் பொருளாக்கிக் கொள்ள நினைத்த மாமல்லனுக்கு அது தக்க தண்டனையாகியிராது."

"இப்போது என்ன தண்டனை?"

"அவனுடைய ஆருயிர்க் காதலியைச் சளுக்கர் கொண்டு போன செய்தி வாழ்நாளெல்லாம் அவனுக்கு நரக வேதனை அளிக்கும். இரவு பகல் அவன் மனத்தை அரித்துக் கொண்டிருக்கும். இதைக் காட்டிலும் அவனுக்குத் தண்டனை வேறு கிடையாது."

"நல்லது, அண்ணா! இப்போது என்ன சொல்கிறாய்?"

"இராஜரீக விவகாரங்களிலிருந்து அடியோடு விலகிக் கொள்வதாகச் சொல்கிறேன். இருபத்தைந்து வருஷம் உனக்காகவும் சாம்ராஜ்யத்துக்காகவும் உழைத்தேன். இனிமேல் சிலகாலம் எனக்காக வாழ்கிறேன். தம்பி! எனக்கு விடைகொடு! எங்கேனும் ஏகாந்தமான பிரதேசத்தைத் தேடிச் செல்கிறேன்."

"அண்ணா! இராஜ்ய விவகாரங்களிலிருந்து விலகிக் கொள். அதற்காகக் காடு மலை தேடிப்போக வேண்டாம். வாதாபியிலேயே ஒரு நல்ல மாளிகையைப் பார்த்து எடுத்துக் கொள். வேண்டுமானால் அதில் ஒரு நடன மண்டபமும் கட்டிக்கொள். சிவகாமி அதில் ஆனந்தமாய் நடனமாடட்டும்; நீ பார்த்துக் கொண்டே இரு."

"தம்பி! மெய்யாகச் சொல்கிறாயா? இதெல்லாம் எனக்காக நீ செய்து தரப்போகிறாயா?"

"நிச்சயமாகச் செய்து தருகிறேன்; ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது."

"நிபந்தனையா? என்னிடமா கேட்கிறாய், தம்பி!"

"நிபந்தனைதான்; ஆனால், உன்னிடம் நான் பிரார்த்தித்துக் கேட்டுக் கொள்ளும் நிபந்தனை; உன்னைத் தவிர யாரும் செய்ய முடியாத காரியம். எனக்கு இந்தக் கடைசி உதவியை நீ செய்து கொடு. அப்புறம் உன்னை நான் ஒன்றும் கேட்பதில்லை."

"அது என்ன?"

"சற்று முன் சொன்னேனே, அதுதான். வேங்கியில் விஷ்ணுவர்த்தனன் படுகாயப்பட்டுக் கிடப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. நாடெல்லாம் கலகமும் குழப்பமுமாய் இருக்கிறதாம். நீ அங்கு உடனே போய் அவனைக் காப்பாற்ற வேண்டும். என்னைப் போல் விஷ்ணுவும் உன் உடன்பிறந்த சகோதரன்தானே?"

"உடன் பிறந்த சகோதரன்தான். ஆனால், அவனுக்கு என்னைக் கண்டால் பிடிப்பதே இல்லை! அவனிடமிருந்து நான் பாரவியைப் பிரித்து விரட்டிய குற்றத்தை அவன் மன்னிக்கவே இல்லை...."

"அண்ணா! பாரவி கவியை ஏன் விஷ்ணுவிடமிருந்து நீ பிரித்தாய்? அதனால் எப்பேர்ப்பட்ட விபத்துக்கள் நேர்ந்தன!"

"எல்லாம் அவனுடைய நன்மைக்காகத்தான் செய்தேன். அவன் ஓயாமல் கவிதை படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் வீண்பொழுது போக்கிக் கொண்டிருந்தான்...."

புலிகேசி புன்னகை புரிந்தார். மனத்திற்குள் "என் உடன் பிறந்தவர்களில் இரண்டு பேரில் ஒருவனுக்குக் கவிதைப் பைத்தியம். இன்னொருவனுக்குக் கலைப் பைத்தியம். புத்தி மாறாட்டம் இல்லாதவன் நான் ஒருவன்தான். அன்று விஷ்ணுவைக் காப்பாற்றியதுபோல் இன்று பிக்ஷுவை நான் காப்பாற்றியாக வேண்டும்" என்று எண்ணிக்கொண்டார்.

பின்னர் கூறினார், "ஆம் அண்ணா! அவனுடைய நன்மைக்காகவே செய்தாய். உன்னுடைய விருப்பத்தின்படி நான்தான் பாரவியை நாட்டை விட்டுப் போகச் சொன்னேன். ஆனால், அதன் பலன் என்ன ஆயிற்று? பாரவி கங்க நாட்டுக்குப் போனான். அங்கிருந்து துர்விநீதனுடைய மகளைப்பற்றி வர்ணித்து விஷ்ணுவுக்குக் கலியாணம் செய்து வைத்தான். பிறகு காஞ்சி நகருக்குப் போனான், அங்கிருந்து காஞ்சி நகரைப் பற்றி வர்ணனைகள் அனுப்பிக் கொண்டிருந்தான். அதனால் காஞ்சி சுந்தரியின் மேல் எனக்கு மோகம் உண்டாயிற்று."

"அந்தப் பழைய கதைகளையெல்லாம் எதற்காகச் சொல்கிறாய்?"

"உனக்குப் பிடிக்காவிட்டால் சொல்லவில்லை. ஆனால் இந்தக் கடைசி உதவியை நீ எனக்குச் செய்துவிடு, அண்ணா! நாம்தான் காஞ்சியைக் கைப்பற்ற முடியாமல் திரும்புகிறோம். வேங்கியிலிருந்து விஷ்ணுவர்த்தனனும் தோல்வியடைந்து திரும்பினால் அதைக்காட்டிலும் நம்முடைய குலத்துக்கு அவமானம் வேண்டியதில்லை. இந்த ஒரே ஓர் உதவிமட்டும் செய்துவிடு. உன்னுடன் நமது பாதிப் படையை அழைத்துக் கொண்டு போ!"

புத்த பிக்ஷு சற்று யோசித்துவிட்டு, "ஆகட்டும் தம்பி; ஆனால், எனக்கு ஒரு வாக்குறுதி தரவேண்டும்!" என்றார்.

"சிவகாமியைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்பதுதானே? அப்படியே வாக்குறுதி தருகிறேன். இத்தனை காலமும் நீ எனக்குச் செய்திருக்கும் உதவிகளுக்கு இதுகூட நான் செய்ய வேண்டாமா? வாதாபியின் அழகான அரண்மனை ஒன்றில் அவளைப் பத்திரமாய் வைத்து நீ, வரும் வரையில் பாதுகாத்து ஒப்புவிக்கிறேன்."

"தம்பி! சிவகாமி கலைத் தெய்வம். அவளிடம் துராசையுடன் நெருங்குகிறவன் அதோகதி அடைவான்."

"அதை நான் மறக்கமாட்டேன். ஆனால், நடனக் கலையைப் பற்றி நீ சொல்லச் சொல்ல எனக்கே அதில் ஆசை உண்டாகிவிட்டது. சிவகாமியை நடனம் ஆடச் சொல்லி நான் பார்க்கலாமா?"

"அவள் ஆடமாட்டாள்."

"அவளாக இஷ்டப்பட்டு ஆடினால்..."

"எனக்கு ஆட்சேபமில்லை."

"மிகவும் சந்தோஷம்."

"தம்பி! நம்முடைய பாட்டனாருக்குச் சத்யாச்ரயர் என்று பட்டம் கொடுத்தார்கள். அதே பட்டப் பெயர் உனக்கும் கிடைத்திருக்கிறது. ஒரு விஷயத்திலாவது உன் பட்டப் பெயருக்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும்."

"சத்தியமாகச் சிவகாமியைப் பத்திரமாய்ப் பாதுகாத்து உன்னிடம் ஒப்புவிக்கிறேன்."

இவ்விதம் புலிகேசிச் சக்கரவர்த்திக்கும், புத்த பிக்ஷுவுக்கும் நடந்த நீண்ட சம்பாஷணை முடிவடைந்தது.

அன்றிரவு இரண்டாவது ஜாமத்திலே தான் இருவரும் சிவகாமி அரைத் தூக்கமாய்ப் படுத்திருந்த இடத்துக்குச் சென்று நிலா, வெளிச்சத்தில் நின்று, அவளைப் பார்த்தார்கள்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com