Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 3
கல்கியின் சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்
16. "புலிகேசியின் புறப்பாடு!"

மறு நாள் காஞ்சி நகரில் மீண்டும் ஒரு பெரிய கொண்டாட்டம். அன்று வாதாபிச் சக்கரவர்த்தி புலிகேசி காஞ்சியிலிருந்து புறப்படுவதாக ஏற்பாடாகியிருந்தது. புறப்படுவதற்கு முன்னால் இன்னொரு தடவை காஞ்சிமா நகரை நன்றாய்ப் பார்க்க வேண்டுமென்று புலிகேசி விரும்பினார். எனவே இரு சக்கரவர்த்திகளும் பட்டத்து யானை மீது அமர்ந்து நகர்வலம் கிளம்பினார்கள். இந்த வைபவத்தை முன்னிட்டுக் காஞ்சி நகரம் அன்று மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. நகர மாந்தர்கள் - ஸ்தீரிகளும் புருஷர்களும் அழகிய ஆடை ஆபரணங்கள் பூண்டு தெரு ஓரங்களில் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே பலவகை வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. உப்பரிகை மேல் மாடங்களிலிருந்து இரு சக்கரவர்த்திகளும் அமர்ந்து சென்ற பட்டத்து யானை மீது மலர் மாரி பொழிந்து கொண்டிருந்தது.

காஞ்சிமா நகரின் அழகிய விசாலமான வீதிகளையும், மாடமாளிகைகளையும், கோயில்களையும், கோபுரங்களையும், சிற்ப சித்திர மண்டபங்களையும், நடன அரங்கங்களையும், புத்த விஹாரங்களையும் சமணர் ஆலயங்களையும் எவ்வளவுதான் பார்த்தாலும் புலிகேசிக்கு அலுப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

"பாரவியை மகா கவி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் எவ்வளவு மட்டமான கவி என்பது இப்போதுதான் தெரிகிறது..." என்றார் வாதாபிச் சக்கரவர்த்தி திடீரென்று.

"அதென்ன அப்படிச் சொல்கிறீர்கள்? பாரவியின் 'கிராதார்ஜுனீயம்' எவ்வளவு அழகான காவியம்?... தாங்கள் படித்திருக்கிறீர்கள் அல்லவா?" என்றார் மகேந்திர பல்லவர்.

"ஆ! இந்தக் கவிகள் மலையையும் காட்டையும் மழையையும் மேகத்தையும் வர்ணிக்கச் சொன்னால் வர்ணிப்பார்கள். இந்த மாதிரி ஒரு நகரத்தை வர்ணிக்கச் சொன்னால் அப்போது அவர்களுடைய சாமர்த்தியமெல்லாம் எங்கோ போய் விடுகிறது! பாரவி இந்த நகரத்தைப் பற்றி எனக்கு எழுதிய வர்ணனையெல்லாம் இதன் உண்மைச் சிறப்பில் கால் பங்குகூட வராது... பல்லவேந்திரா! நான் ஒன்று சொல்கிறேன், கேட்கிறீர்களா? நாம் இருவரும் ஒரு பரிவர்த்தனை செய்து கொள்வோம். நர்மதையிலிருந்து துங்கபத்திரை வரை பரந்து கிடக்கும் என்னுடைய சாம்ராஜ்யம் முழுவதையும் எடுத்துக் கொண்டு அதற்கு மாற்றாக இந்தக் காஞ்சி நகரை மட்டும் எனக்குக் கொடுங்கள்!" என்றார் வாதாபி அரசர்.

"மன்னர் மன்னா! திவ்யமாக இந்தக் காஞ்சி நகரை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மாறாக, உங்கள் இராஜ்யம் முழுவதையும் எனக்குக் கொடுக்க வேண்டாம். அஜந்தா மலையையும் அதன் குகைகளையும் மட்டும் கொடுத்தால் போதும்! கல்லினாலும் சுண்ணாம்பினாலும் மண்ணினாலும் மரத்தினாலும் கட்டிய இந்த மாநகரின் கட்டடங்கள் எல்லாம் ஒரு காலத்தில் இடிந்து தகர்ந்து போனாலும் போகலாம்; அஜந்தா மலைக் குகைகளில் எழுதிய அழியா வர்ணச் சித்திரங்கள் நீடூழி காலம் இருக்கும். சளுக்க குல சிரேஷ்டரே! தங்களுக்கு ஒரு சமாசாரம் தெரியுமா? நேற்று நடன மாடினாளே, சிவகாமி! "வாதாபிக்குப் போகிறாயா?" என்று கேட்டதும், அவள் அவ்வளவு மனத்தாங்கலுடன் பேசினாள் அல்லவா? நீங்கள் மட்டும் அவள் தந்தை ஆயனரிடம் அஜந்தாவைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டியதுதான்; உங்களுடன் வந்தால் அஜந்தா வர்ண இரகசியத்தைத் தெரியப்படுத்துவதாகச் சொல்ல வேண்டியதுதான். உடனே உங்களுடன் புறப்பட்டு வர ஆயத்தமாகி விடுவார்!..."

"அப்படியா? ஆயனச் சிற்பிக்கு அஜந்தா வர்ண விஷயத்தில் அவ்வளவு அக்கறையா?" என்று புலிகேசி கேட்ட போது ஏதோ பழைய நினைவு வந்தவரைப் போல அவருடைய கண்களில் சிந்தனைக் குறி தோன்றியது.

"ஆமாம்; ஆமாம், அஜந்தா வர்ண இரகசியத்தைத் தெரிந்து கொண்டு வருவதற்காக ஆயனர் தூது கூட அனுப்பினாரே, அது உங்களுக்கு ஞாபகம் இல்லையா?" என்றார் பல்லவ சக்கரவர்த்தி.

பின்னர் தொடர்ந்து, "ஆகா! அந்த ஓலையைப் படிக்கக் கேட்டபோது நீங்கள் எப்படித் திகைத்தீர்கள்!" என்று கூறிவிட்டுக் கலகலவென்று நகைத்தார். விதி, விதி என்று சொல்கிறார்களே, அந்த விதியானது அப்போது மகேந்திரவர்மரின் நாவிலே வந்து உட்கார்ந்து கொண்டது. அது காரணமாக, மகாமேதாவியும், தீர்க்க திருஷ்டியுள்ளவரும், சாணக்கிய சாகஸத்தில் இணையற்றவருமான அந்தப் பல்லவ சிரேஷ்டர், நாவின் அடக்கத்தை இழந்தார்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

என்னும் பொய்யாமொழிப் புலவரின் வாக்கை நன்கறிந்தவராயினும் அச்சமயம் அதை மறந்துவிட்டார். அவருடைய இதய அந்தரங்கத்துக்குள்ளே கிடந்த ரகசியங்கள் ஒவ்வொன்றாய் வெளி வரலாயின.

மகேந்திர பல்லவரின் கடைசி வார்த்தைகள் புலிகேசியின் உடம்பில் ஏக காலத்தில் பல தேள்கள் கொட்டியது போன்ற உணர்ச்சியை உண்டாக்கியதாகத் தோன்றியது. "சத்ருமல்லா! எதைப்பற்றிச் சொல்கிறீர்கள்? உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டுவிட்டு, பாம்பு சீறுவதைப்போல் பெருமூச்சு விட்டார் புலிகேசி.

மகேந்திர பல்லவர் மறுபடியும் நகைத்து, "ஆமாம்! அந்தக் காட்சியை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்புச் சிரிப்பாய் வருகிறது. வடபெண்ணை நதியை நீங்கள் நெருங்கிவிட்டீர்கள். முதலில் ஒரு தூதன் ஓலையைக் கொண்டு வந்து கொடுக்கிறான். அதிலே நீங்கள் எதிர்பாராதவிதமாய் ஏதோ எழுதியிருக்கிறது. உங்களுக்குக் கோபம் கோபமாய் வருகிறது. அந்தச் சமயத்தில் ஓர் இளம் பிள்ளையைச் சிறைப்படுத்திக் கொண்டு வருகிறார்கள், அவனிடமும் ஓர் ஓலை இருக்கிறது. அதைப் படித்தால், பூஜை வேளையில் கரடியை விடுவதுபோல், அஜந்தா வர்ண இரகசியத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறது. அப்போது உங்களுடைய முகத்தைப் பார்க்க வேண்டுமே? அதிர்ஷ்டவசத்தினால், அந்தப் பிள்ளையாண்டானை உடனே சிரச்சேதம் பண்ணச் சொல்லாமல் நாகார்ஜுன மலைக்கு அனுப்பச் செய்தீர்கள்!" என்றார்.

"விசித்திர சித்தரே! இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? கிட்ட இருந்து பார்த்தது போல் சொல்கிறீர்களே?" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டார் புலிகேசி.

"கிட்ட இருந்து பார்த்ததனால்தான் தெரிந்தது!" என்றார் மகேந்திர சக்கரவர்த்தி.

புலிகேசி மகேந்திரரின் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு "ஆ! அப்படியானால், அந்த வஜ்ரபாஹு என்கிற தூதன் தாங்கள் தானாக்கும்!" என்றார்.

"அடியேன்தான்!" என்றார் மகேந்திர பல்லவர்.

"என் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்த பல மர்மங்களில் ஒன்று வெளியாகிவிட்டது. மீதமுள்ள மர்மங்களைக் கண்டுபிடிப்பதில் இனிமேல் கஷ்டமேயிராது என்று புலிகேசி மெல்லிய குரலில் தமக்கு தாமே சொல்லிக் கொண்டார்.

பிறகு உரத்த குரலில் "அப்படியானால் வஜ்ரபாஹு கொண்டு வந்த அந்த ஓலை?.." என்று கேட்டார். "தூதனையே சிருஷ்டி செய்தவனுக்கு ஓலையைச் சிருஷ்டி செய்வதுதானா பெரிய காரியம்?"

"இல்லை, இல்லை! காஞ்சி மகேந்திர பல்லவருக்கு எதுவுமே பெரிய காரியம் இல்லை!.... ஐயா! இப்போதாவது எனக்குச் சொல்லலாமல்லவா? எது நிஜ ஓலை! எது பொய் ஓலை?"

"சத்யாச்ரயா! அந்தப் பிள்ளை முதலில் கொண்டுவந்த நிஜமான ஓலை மட்டும் உங்களிடம் அப்போது வந்திருந்தால் இன்றைக்கு நீங்களும் நானும் இந்தக் காஞ்சி நகரின் வீதிகளில் பட்டத்து யானையின் மீது அமர்ந்து ஊர்வலம் வந்து கொண்டிருக்க மாட்டோ ம். ஊர்வலம் வருவதற்கு வீதியே இராது; காஞ்சி நகரமும் இராது. வைஜயந்தி அடைந்த கதியைக் காஞ்சியும் அடைந்திருக்கும். நண்பரே! இப்போது நீங்களும் உண்மையைச் சொல்லுங்கள். இந்த அழகான நகரை, அடியோடு அழித்துவிடும் எண்ணம் அப்போது உங்கள் உள்ளத்தில் இருக்கவில்லையா?" என்று மகேந்திரர் கேட்டார்.

புலிகேசி தன் மனத்திற்குள், "அப்போது அவ்வளவாக இல்லை; இப்போதுதான் இந்த நகரை எரித்துப் பொசுக்கிச் சாம்பலாக்கி விட வேண்டுமென்று தோன்றுகிறது" என்று எண்ணிக் கொண்டார். வெளிப்படையாக, "பல்லவேந்திரா! முதல் ஓலையில் - நிஜ ஓலையில் - என்ன எழுதியிருந்தது?" என்று கேட்டார்.

"வேறொன்றுமில்லை, பாகப் பிரிவினைத்தான் செய்திருந்தது! 'பல்லவ சாம்ராஜ்யத்தையும் காஞ்சி சுந்தரியையும் நீ எடுத்துக் கொள்; நடன கலா ராணி சிவகாமியை மட்டும் எனக்குக் கொடுத்துவிடு' என்று பிக்ஷு உங்களைக் கேட்டிருந்தார்!"

இதைக் கேட்ட வாதாபிச் சக்கரவர்த்தி சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்துவிட்டு, "காஞ்சி சுந்தரியைக் கைப்பற்றுவது அவ்வளவு சுலபமான காரியமா?" என்றார்.

"நண்பரே! அந்த ஓலையில் எழுதியிருந்தபடி நீங்கள் நேரே காஞ்சிக்கு வந்திருந்தால் அது சுலபமாகத்தான் இருந்திருக்கும். அப்போது இந்தக் காஞ்சிக் கோட்டை வாசல்களின் கதவுகள் உங்கள் யானைப் படையில் ஒரு யானையின் மோதலுக்குக் கூட ஈடு கொடுத்து நின்றிருக்க முடியாது!" என்றார் மகேந்திர பல்லவர்.

புலிகேசியின் உள்ளத்தில் பல தீ மலைகள் ஏக காலத்தில் நெருப்பைக் கக்க ஆரம்பித்தன. மகேந்திரரை ஏறிட்டு நோக்கி, "பல்லவேந்திரா! அர்த்த சாஸ்திரத்தை எழுதிய கௌடில்யர் உங்களிடம் பிச்சை வாங்க வேண்டும்!" என்றார்.

"எங்கள் தென்னாட்டிலும் ஒரு பிரபல இராஜ தந்திரி உண்டு. அவர் பெயர் திருவள்ளுவர். அந்தப் பெரியார் எழுதிய பொருளதிகார நூலை உங்களுக்குப் பரிசளிக்க வேண்டுமென்று எனக்கு விருப்பம். ஆனால், எங்கள் செந்தமிழ் மொழியை இன்னும் நீங்கள் நன்றாய்ப் பயிலவில்லையே?" என்றார் சத்துருமல்லர்.

பிறகு, "நண்பரே! போனதெல்லாம் போயிற்று, அதையெல்லாம் பூர்வ ஜன்ம அனுபவமாக நினைத்து மறந்துவிடுங்கள். இந்தப் பத்துத் தினங்களில் நீங்களும் நானும் அத்தியந்த சிநேகிதர்களாகி விட்டோ ம். உங்களை நான் அறிந்து கொண்டேன். என்னையும் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். உங்களுடைய படையெடுப்பைத் தடுப்பதற்கு நான் கையாண்ட தந்திரங்களையெல்லாம் என் மனத்திற்குள் வைத்திருப்பது சிநேகிதத் துரோகம் என்றுதான் அவற்றை உங்களுக்குச் சொன்னேன். இனிமேல் நமது நேசத்திற்கு எவ்விதத் தடங்கலும் இல்லை. நம்மிருவருடைய ஆயுளும் உள்ளவரையில் நாம் இனிமேல் சிநேகிதர்கள். என் ஆயுட் காலத்தில் தங்களுக்கு விரோதமாக இனி நான் ஒன்றும் செய்ய மாட்டேன். தாங்களும் அப்படித்தானே?" என்று மகேந்திர பல்லவர் உண்மையான உள்ள நெகிழ்ச்சியுடன் கேட்டார்.

"சத்ருமல்லா! அதைப்பற்றிக் கேட்க வேண்டுமா?" என்றார் வாதாபிச் சக்கரவர்த்தி.

நகர்வலம் எல்லாம் முடிந்து பட்டத்து யானை காஞ்சியின் வடக்குக் கோட்டை வாசல் அண்டை வந்து நின்றது. இரு சக்கரவர்த்திகளும் பிரியவேண்டிய சமயம் வந்தது. யானையின் மீதிருந்தவர்கள் பூமியில் இறங்கினார்கள். ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொண்டார்கள்.

"பல்லவேந்திரா! உங்கள் நகருக்கு விருந்தினனாக வந்ததில் எனக்கு எவ்வளவோ சந்தோஷம். அபூர்வமான காட்சிகளைக் கண்டேன்; அபூர்வமான விஷயங்களைக் கேட்டேன். ஆனால், தங்கள் வீரப் புதல்வன் மாமல்லனைப் பார்க்காமல் திரும்பிப் போவதிலேதான் கொஞ்சம் வருத்தம்!" என்றார் புலிகேசி.

"ஆம்; மாமல்லனையும் பார்க்கவில்லை. உங்களுக்கு முதலில் ஓலை கொண்டு வந்த வாலிபனையும் நீங்கள் பார்க்கவில்லை. நாகநந்தி பல்லவ ராஜ்யத்துக்குப் பெரியதொரு உபகாரம் செய்தார். சிறந்த வீரத் தளபதி ஒருவனை அளித்தார்...."

புலிகேசி குறுக்கிட்டு, "ஆமாம்; தளபதி பரஞ்சோதியைப் பாராததிலும் எனக்கு ஏமாற்றந்தான். அவர்களிருவரும் எங்கே என்பதை இன்னும் தாங்கள் சொல்லவில்லையே?" என்றார்.

"பாண்டிய மன்னனை வழி அனுப்ப அவர்கள் போயிருக்கிறார்கள்! இன்றைக்குக் காலையிலேதான் செய்தி வந்தது. பாண்டியனைக் கீழைச் சோழ நாட்டின் எல்லை வரையில் கொண்டு போய்விட்டு விட்டார்களாம்!"

"ஆஹா! நினைத்தேன்; ஏதோ பாண்டியனுக்கு நீங்கள் சம்பந்தியாகப் போவதாக ஒரு வதந்தி இருந்ததே!"

"சம்பந்தி உபசாரம் செய்வதற்குத்தான் மாமல்லனும் பரஞ்சோதியும் போனார்கள்!" என்று கூறி மகேந்திர பல்லவர் நகைத்தார்.

"விசித்திர சித்தரே! போய் வருகிறேன்; போவதற்கு முன்னால் கடைசியாக ஒரு வார்த்தை கேட்கிறேன். நாகநந்தி பிக்ஷு யார் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று புலிகேசி கேட்க மகேந்திர பல்லவர், "உத்தேசமாகத் தெரியும்!" என்று கூறி வாதாபிச் சக்கரவர்த்தியின் காதோடு ஏதோ கூறினார்.

"ஆ! உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமேயில்லை. அப்படித் தெரிந்திருக்கும் போது, அவரை நீங்கள் விடுதலை செய்து என்னுடன் அனுப்பப் போவதில்லையா?" என்று புலிகேசி ஆங்காரமான குரலில் கேட்டார்.

"சக்கரவர்த்தி கோரினால் அவ்விதமே செய்யத் தடையில்லை!" என்றார் மகேந்திர பல்லவர்.

"வாதாபி சளுக்க குலத்தார் யாரிடமும் எந்தக் கோரிக்கையும் செய்து கொள்வதில்லை!" என்று புலிகேசி கம்பீரமாய்க் கூறினார்.

"காஞ்சிப் பல்லவ குலத்தினர் யாருக்கும் கோராத வரத்தைக் கொடுப்பதில்லை" என்றார் மகேந்திர பல்லவர்.

"பல்லவேந்திரா! போய் வருகிறேன்" என்றார் புலிகேசி.

"சத்யாச்ரயா! ஞாபகம் இருக்கட்டும்" என்றார் மகேந்திரர்.

"ஒரு நாளும் மறக்க மாட்டேன்" என்றார் வாதாபி மன்னர்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com