Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 2
கல்கியின் சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம் : காஞ்சி முற்றுகை
55. முற்றுகை தொடங்கியது

மறு நாள் சூரியோதயம் ஆகும் சமயத்தில் கமலி தன்னுடைய வீட்டுத் திண்ணையில் கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தாள். இரவெல்லாம் கண் விழித்தபடியாலும் கண்ணீர்விட்டபடியாலும் அவளுடைய கண்கள் வீங்கியிருந்தன. கண்ணபிரான் தகப்பனார் அவள் அருகில் உட்கார்ந்து ஆறுதல் மொழிகள் சொல்லிக் கொண்டிருந்தார்.

முதல் நாள் சாயங்காலம் குமார சக்கரவர்த்தி திரும்பி வந்த செய்தி கிடைத்தவுடனேயே கண்ணபிரானும் அவருடனே திரும்பி வந்திருப்பான் என்று கமலி எதிர்பார்த்தாள். புள்ளலூர்ப் போரில் வெற்றிமாலை சூடிய வீரரை வரவேற்க நகர மாந்தரெல்லாம் திரண்டு போனபோது கண்ணபிரானின் தந்தை தாம் போய்க் கண்ணனை அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டுப் போனார். இரவு வெகுநேரம் கழித்து அவர் திரும்பி வந்து, மாமல்லருடன் கண்ணன் வரவில்லை என்னும் செய்தியைத் தெரிவித்தார்.

காஞ்சி நகரில் யாருமே அன்றிரவு தூங்கவில்லையாதலால், மூன்றாம் ஜாமத்தில் சக்கரவர்த்தியும் திரும்பி வந்துவிட்ட விவரம் கிடைத்தது. நாலாம் ஜாமத்தில் வாதாபிப் படைகள் கோட்டைக்குச் சமீபத்தில் வந்துவிட்ட செய்தியும், கோட்டை வாசல்கள் அடைக்கப்பட்டுப் பாலங்கள் தகர்க்கப்படும் செய்தியும் கிடைத்தன. ஆகவே, இனிமேல் கண்ணபிரான் கோட்டைக்குள்ளே வந்து சேருவதற்கே இடமில்லையென்று ஏற்பட்டது. அதனாலேதான் கமலி துயரக் கடலில் ஆழ்ந்திருக்க, கண்ணனுடைய தந்தை அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்தச் சமயத்தில் திடீரென்று சாக்ஷாத் கண்ணனே வீட்டு வாசலில் வந்து நின்றால், அவர்களுக்கு எப்படியிருக்கும்? கமலி சட்டென்று எழுந்து, "கண்ணா!" என்று அலறிக் கொண்டு ஓடிப்போய் அவனைத் தழுவிக்கொள்ள எண்ணியவள், கண்ணனுக்குப் பின்னால் சக்கரவர்த்திப் பெருமான் குதிரையில் வருவது கண்டு நாணமும் திகைப்பும் அடைந்து நின்றாள்.

"கமலி! கண்ணனைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டேன். இனிமேல் அவனை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக்கொள்வது உன்னுடைய பொறுப்பு!" என்று சக்கரவர்த்தி புன்னகையுடன் கூறினார். பிறகு, "உன்னுடைய சௌக்கியத்தைப்பற்றிச் சிவகாமி ரொம்ப விசாரித்தாள், அம்மா! உனக்கு ஆண் குழந்தை பிறந்தால், உடனே சொல்லியனுப்பும்படி கூறினாள்" என்று சொல்லிக்கொண்டே சக்கரவர்த்தி குதிரையைச் செலுத்திக் கொண்டு போனார்.

சக்கரவர்த்தியின் பேச்சினால் வெட்கமடைந்த கமலி கண்ணபிரானைக் கடைக் கண்ணால் பார்த்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள். கண்ணபிரான் தந்தைக்கு முகமன் கூறிவிட்டுக் கமலியைத் தொடர்ந்து உள்ளே சென்றான்.

"இதென்ன கமலி! நான் வந்ததில் உனக்குச் சந்தோஷம் இல்லையா! என்னைத் திரும்பிக்கூடப் பாராமல் உள்ளே வந்து விட்டாயே! ஒருவேளை கண் தெரியவில்லையா?" என்று கண்ணபிரான் கேட்க, கமலி "ஆமாம்; கண் தெரியவில்லைதான்! இரவெல்லாம் அழுது வீங்கிப்போய் விட்டது" என்றாள்.

"ஐயோ! ஏன் அழுதாய்?" என்று சொல்லிக்கொண்டு, கண்ணபிரான் அவள் அருகே நெருங்க, கமலி அவனுடைய கையை உதறி, "இந்த அருமையெல்லாம் நேற்று எங்கே போய் விட்டது? நேற்றிரவே ஏன் வரவில்லை?" என்று கேட்டாள்.

"நேற்றிரவே ஏன் வரவில்லையா? எனக்கும் உனக்கும் மத்தியில் ஒரு பெரிய அகழியும் முதலைகளும் ஒரு பெரிய மதிற்சுவரும் இருந்தபடியாலேதான்" என்றான் கண்ணன்.

"அப்படியா? நீ இரவெல்லாம் கோட்டைக்கு வெளியிலா இருந்தாய்? அகழிப் பாலங்களை எல்லாம் இரவுக்கிரவே உடைத்து விட்டார்களாமே, நீ எப்படி உள்ளே வந்தாய்? நீ புறப்பட்டது முதல் நடந்ததையெல்லாம் விவரமாகச் சொல்" என்று கமலி பரபரப்புடன் கேட்டாள்.

"கமலி! நான் என்னத்தை என்று சொல்ல! நான் பிறந்த கதையைச் சொல்லவா, வளர்ந்த கதையைச் சொல்லவா? புள்ளலூர்ப் போர்க்களத்துக்குப் போன கதையைச் சொல்லவா? வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டு திண்டாடியதைச் சொல்லவா? மாமல்லர் ஏறவேண்டிய ரதத்தில் புத்த பிக்ஷுவை ஏற்றிக்கொண்டு வந்ததைச் சொல்லவா? கோட்டைக்கு வெளியே ராத்திரி எல்லாம் அலைந்து திரிந்ததைச் சொல்லவா?" என்றான் கண்ணன்.

பிறகு தான் காஞ்சியிலிருந்து கிளம்பியது முதல் நடந்த அதிசயமான சம்பவங்களையெல்லாம் விவரமாகக் கூறினான். வராக நதிக்கரையில் புத்தபிக்ஷுவை ரதத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட பிறகு நடந்த சம்பவங்களைப்பற்றிக் கண்ணபிரான் கூறிய வரலாறு பின்வருமாறு:

குதிரைகளைக் கண்ணபிரான் எவ்வளவு வேகமாகத் துரத்திய போதிலும் புத்த பிக்ஷுவுக்குப் போதவில்லை. மேலும் மேலும் அவசரப்படுத்தினார். வழியில் இரண்டு இடத்தில் குதிரைகளை மாற்றிக்கொண்டு, அஸ்தமித்து ஒரு நாழிகைக்குப் பிறகு காஞ்சிக் கோட்டையின் தெற்கு வாசலை அடைந்தார்கள்.

பிறகு, புத்த பிக்ஷு சொன்னபடி அகழி ஓரமான சாலையின் வழியாகக் கண்ணபிரான் ரதத்தைச் செலுத்திக் கொண்டு போனான். கொஞ்ச தூரம் போனதும் பிக்ஷு ரதத்திலிருந்து இறங்கிக் காட்டுக்குள் நுழைந்து போனார். சற்று நேரத்துக்கெல்லாம் அகழியில் படகு செல்லும் சப்தம் கேட்கவே, கண்ணபிரான் அந்தத் திசையில் கூர்ந்து நோக்கினான். அப்போதுதான் கீழ் வானத்தில் சந்திரன் உதயமாகியிருந்தது. நீண்டு பரந்த மர நிழல்களுக்கு மத்தியில் ஆங்காங்கு ஊடுருவி வந்த நிலாக் கிரணங்களின் சஞ்சல ஒளியில், அகழியில் ஒரு படகு போவதும் அதில் இரண்டு பிக்ஷுக்கள் இருப்பதும் கண்ணபிரானுக்குத் தெரிந்தன. படகு அக்கரைக்குச் சென்றதும் இருவரும் இறங்கினார்கள். கோட்டை மதிலின் சுவரோரமாகச் சென்றார்கள். திடீரென்று இருவரும் மாயமாக மறைந்தார்கள்.

கண்ணபிரான் நெடுநேரம் வரை அங்கேயே காத்திருந்தான். என்ன செய்கிறதென்று அவனுக்குப் புரியவில்லை. 'அவர்கள் எப்படி மறைந்திருப்பார்கள்?' என்று மூளையைச் செலுத்தித் தீவிரமாக யோசனை செய்தான். 'ஒருவேளை கோட்டைச் சுவரில் இரகசிய வழி இருக்குமோ' என்ற எண்ணம் தோன்றியதும் அவனுடைய உள்ளம் கலங்கியது. புத்த பிக்ஷு தன்னை அங்கேயே இருக்கச் சொல்லியிருப்பதால் எப்படியும் திரும்பி வருவாரென்றும், அப்போது இரகசியத்தைக் கண்டுபிடிக்கலாமென்றும், எண்ணிக் கோட்டைச் சுவரில் அவர்கள் மறைந்த இடத்தில் வைத்த கண்ணை வாங்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். எப்படியோ அவனையறியாமல் தூக்கம் வந்து கண்ணயர்ந்துவிட்டான். திடீரென்று அவன் கண் விழித்த போது, தூரத்தில் கடல் குமுறிப்புரண்டெழுந்து வருவது போன்ற பயங்கரமான சப்தம் கேட்டது. முன்னொரு சமயம் ஏரி உடைத்துக்கொண்டு வெள்ளம் வந்த சப்தத்தை அவன் கேட்டிருக்கிறபடியால், மிக்க பீதியடைந்தவனாய், பரபரப்புடன் ஒரு மரத்தின் மேல் ஏறிச் சப்தம் வந்த திசையை நோக்கினான். வெகுதூரத்தில் வெண்ணிலாவின் ஒளியில் யானைகளும், குதிரைகளும், குடைகளும், கொடிகளும், வேல்களும், வாள்களுமாய்த் திரண்டு வந்த சேனா சமுத்திரத்தைக் கண்டான். வாதாபி சைனியந்தான் அது என்று தெரிந்துகொண்டு, எப்படியாவது கோட்டைக்குள் புகுந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து ரதத்தை அவசரமாகச் செலுத்திக் கொண்டு, தெற்கு கோட்டை வாசலை அணுகினான். கண்ணபிரான் சத்தம் போட்டுக் கோட்டைக் காவலாளிகளை அழைத்ததில் ஒன்றும் பலன் இல்லை. சற்றுநேரம் அங்கேயே தயங்கி நின்ற பிறகு ஒரு யோசனை உதித்தது. 'புத்த பிக்ஷுக்கள் புகுந்த இரகசிய வழி ஒருவேளை தேடினால் கிடைக்கும்! அதன் வழியாய் கோட்டைக்குள் போய்விடலாம்' என்று ஆசையுடன் திரும்பவும் அதே இடத்துக்கு வந்து சேர்ந்தான். அகழியை எப்படிக் கடப்பது என்ற கேள்வி ஏற்பட்டது. நீந்திப் போகலாம் என்று நினைத்ததும், அகழியில் நூற்றுக்கணக்கான முதலைகள் இருப்பது நினைவு வந்து கதி கலங்கிற்று. இதற்குள்ளாகப் படைகள் வரும் முழக்கம் இன்னும் நெருங்கிக் கேட்கலாயிற்று.

'முதலைகளுக்கு இரையானாலும் ஆகலாம்; எதிரிகளிடம் சிக்கக் கூடாது' என்று எண்ணிக் கண்ணபிரான் அகழியில் இறங்கத் தீர்மானித்தபோது திடீரென்று கோட்டை மதிலின் எதிரே ஒரு கதவு திறந்து துவாரம் காணப்பட்டது. அதற்குள்ளிருந்து இளம் புத்த பிக்ஷு ஓடி வருவது தெரிந்தது. கண்ணபிரான் சட்டென்று மரத்தின் பின்னால் மறைந்து கொண்டான். இளம் பிக்ஷு படகில் ஏறுவதையும், இக்கரைக்கு அதைச் செலுத்தி வருவதையும் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது கண்ணபிரானுடைய மூளை தீவிரமாக வேலை செய்தது. இளம் பிக்ஷு கரையில் இறங்கியவுடனே படகைத் தண்ணீரில் கவிழ்க்கப் போவதைப் பார்த்ததும் கண்ணன் பாய்ந்து வந்து அதைத் தடுத்து, இளம் பிக்ஷுவையும் தூக்கிப் படகில் போட்டுக் கொண்டு, தானும் ஏறினான். மெதுவாகப் படகை அக்கரைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தான்.

சுவரில் திறக்கப்பட்ட துவாரம் அப்படியே இருந்தது. இளம் பிக்ஷுவை அந்தத் துவாரத்திற்குள் தள்ளிவிட்டு, தானும் உள்ளே புகுந்தான். அகழிக்கு அப்பால் அவன் நிறுத்திவிட்டு வந்த ரதத்தின் ஞாபகம் வந்தது. அந்த நினைவினால் அவன் திரும்பி வெளியே வரப் பார்த்தபோது மிகவும் உறுதி வாய்ந்த வஜ்ரக்கையொன்று தன்னைப் பிடித்து உள்ளே தள்ளுவதை உணர்ந்தான். அந்தக் கை மகேந்திர பல்லவருடைய வைரம் பாய்ந்த கைதான் என்பதை உணர்ந்ததும் கண்ணனுடைய ஆச்சரியம் அளவுகடந்ததாயிற்று. அப்போது சக்கரவர்த்தி, "கண்ணா! இந்தக் கள்ள பிக்ஷு பல்லவ இராஜ்யத்தில் இருந்த வாதாபியின் கடைசி ஒற்றன். இவன் தப்பிப் போகாதபடி தடுத்ததால், பல்லவ சாம்ராஜ்யத்துக்கு ஒரு மகத்தான சேவை செய்திருக்கிறாய் வா, போகலாம் கமலி உனக்காகக் கவலையுடன் காத்திருக்கிறாள்" என்று சொல்லிக்கொண்டே அந்த இரகசிய வாசலுக்குள்ளே தாமும் நுழைந்து இரகசியக் கதவை உள்ளிருந்தபடியே சாத்தினார். அவர்கள் புகுந்த இடம் காஞ்சி மாநகரின் பிரசித்தமான இராஜவிஹாரம் என்று விரைவில் கண்ணனுக்குத் தெரிந்தது.

மேற்கண்ட வரலாற்றை எல்லாம் கூறிவிட்டு, கண்ணபிரான் "கமலி! ஏதோ உன்னுடைய மாங்கல்ய பலத்தினாலேதான் நேற்றிரவு நான் பகைவர்களிடம் சிக்காமலும், முதலைகளுக்கு இரையாகாமலும் பிழைத்து வந்தேன். நான் பிழைத்து வந்தது உண்மைதானா என்று இன்னமும் எனக்குச் சந்தேகமாய்த்தான் இருக்கிறது. உன்னுடைய இரண்டு தளிர் போன்ற கைகளினாலும் என்னை கட்டிக்கொண்டு பார்த்து, நான் உண்மையில் உயிரோடுதானிருக்கிறேனா என்று சொல்லு" என்றான்.

"முடியாது, கண்ணா முடியாது! உன்னை நான் கட்டிக் கொண்டால் சின்னக் கண்ணனுக்குத் தொந்தரவாயிருக்கும்!" என்று கூறிவிட்டுப் பொருள் பொதிந்த புன்னகை புரிந்தாள் கமலி.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com