Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 2
கல்கியின் சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம் : காஞ்சி முற்றுகை
24.புள்ளலூர்ச் சண்டை

கண்ணபிரான் ரதத்தை விட்டுக் குதித்துக் குதிரைகளின் தலைக்கயிறுகளைப் பிடித்துக் கொண்டே, சிவகாமியை நெருங்கி வந்து, "தங்கச்சி! இதென்ன? இங்கே எப்போது வந்தீர்கள்? இது என்ன ஊர்?" என்று துரிதமாய்க் கேட்டான்.

"சிதம்பரம் போகலாமென்று கிளம்பி வந்தோம். அண்ணா! வழியில் இங்கே தங்கினோம். இந்த ஊருக்கு அசோகபுரம் என்று பெயராம். அதோ அசோக மகாராஜாவின் ஸ்தம்பம் தெரிகிறதே; நீங்கள் பார்க்கவில்லையா?" என்றாள் சிவகாமி.

"அதையெல்லாம் பார்க்க எனக்கு இப்போது சாவகாசமில்லை. ஆமாம், நீங்கள் என்னத்திற்காக இவ்வளவு அவசரப்பட்டுக்கொண்டு யாத்திரை கிளம்பினீர்கள்!..."

"அந்தக் காட்டு வீட்டில் இந்த யுத்த காலத்திலே தனியாக இருப்பானேன் என்றுதான் கிளம்பினோம். குமார சக்கரவர்த்தியுந்தான் எங்களை அடியோடு மறந்து விட்டாரே!.."

"என்ன வார்த்தை, அம்மா சொல்கிறாய்? மாமல்லராவது, உங்களை மறப்பதாவது? போர்க்களத்துக்குப் போகும்படி சக்கரவர்த்தியிடமிருந்து அனுமதி வந்ததும், முதலில் உங்கள் வீட்டைத் தேடிக்கொண்டுதானே வந்தோம்! வீடு பூட்டிக் கிடந்ததைக் கண்டதும் மாமல்லருக்கு என்ன கோபம் வந்தது தெரியுமா?"

"எட்டு மாதம் எங்களை எட்டிப் பாராமலே இருந்தவருக்குக் கோபம் வேறேயா? போகட்டும், எங்கே இப்படி எல்லோரும் தலைதெறிக்க ஓடுகிறீர்கள்?"

"புள்ளலூர்ச் சண்டையைப்பற்றி கேள்விப்படவில்லையா?" என்று சொல்லிக் கொண்டே கண்ணன் ரதத்தில் ஏறினான்.

"ஓகோ! சண்டைக்குப் பயந்துகொண்டா இப்படி ஓடுகிறீர்கள்?" என்று சிவகாமி பரிகாசச் சிரிப்புடன் கேட்டாள்.

"இல்லை, அம்மா, இல்லை. சண்டைக்குப் பயந்து ஓடுகிறவர்களை நாங்கள் துரத்திக்கொண்டு ஓடுகிறோம். தங்கச்சி! நீ மட்டும் இங்கேயே இருந்தால், நான் திரும்பி வரும்போது இந்த ரதத்தின் சக்கரத்திலே கங்கபாடி அரசன் துர்விநீதனைக் கட்டிக் கொண்டு வருவதைப் பார்ப்பாய்!" என்றான்.

"அண்ணா! நான் கட்டாயம் இங்கேயே இருக்கிறேன். மாமல்லரிடமும் சொல்லுங்கள்!" என்று சிவகாமி கூறி, மறுபடியும் தயக்கத்துடன், "நான் ஏதாவது தவறு செய்திருந்தாலும் மன்னித்துக் கொள்ளும்படி சொல்லுங்கள்!" என்றாள்.

அதே சமயத்தில் கண்ணன் சாட்டையைச் சுளீர் என்று கொடுக்கவே, குதிரைகள் பிய்த்துக்கொண்டு கிளம்பின. கண்ணன் தலையை மட்டும் திருப்பி, 'ஆகட்டும்' என்பதற்கு அறிகுறியாகக் குனிந்து சமிக்ஞை செய்தான். மறுகணம் ரதம் மாயமாய்ப் பறந்து சென்றுவிட்டது.

அப்போது உள்ளே இருந்து வந்த ஆயனர், "சிவகாமி! யாருடன் பேசிக்கொண்டிருந்தாய்? ரதத்திலே போனது யார்?" என்று கேட்டார்.

"கண்ணபிரான், அப்பா! ரதத்துக்கு முன்னால் குதிரை மேல் மாமல்லரும் பரஞ்சோதியும் போனார்கள்!"

"அப்படியா? நாம் அவர்களை விட்டுவிட்டு வந்தாலும் அவர்கள் நம்மை விடமாட்டார்கள் போலிருக்கிறதே?"

"அவர்கள் நமக்காக வரவில்லை, அப்பா!"

"நமக்காக அவர்கள் ஏன் வரப்போகிறார்கள். சிற்பியின் வீட்டைத் தேடிச் சக்கரவர்த்திகள் வந்த காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது, சிவகாமி!"

"அப்படிச் சொல்லாதீர்கள், அப்பா! கோட்டையை விட்டுக் கிளம்ப அனுமதி கிடைத்தவுடனே மாமல்லர் நம்முடைய வீட்டைத் தேடிக்கொண்டுதான் வந்தாராம்."

"அப்படியானால் குண்டோ தரன் சொன்னது உண்மைதானா?"

"ஆமாம், நாம் வீட்டில் இல்லாமற் போனதில் மாமல்லருக்குக் கோபம் என்பதும் உண்மைதான்."

"அதனால்தான் நான் சொன்னேன், இருக்கும் இடத்திலேயே இருப்போம் என்று. நீ பிடிவாதம் பிடித்து, தேச யாத்திரை கிளம்ப வேண்டுமென்று ஒற்றைக் காலால் நின்றாய்! அதன் பலனைப் பார்!"

ஆயனருக்கும் மனம் கசந்து போயிருந்தபடியால், இப்படியெல்லாம் பிறர்மேல் குறை சொல்வது கொஞ்ச நாளாக வழக்கமாய்ப் போயிருந்தது. எனினும், இப்போது அவர் கூறியது உண்மையானபடியால், சிவகாமிக்குப் பெரிதும் வேதனை உண்டாயிற்று.

"போனதைப்பற்றிச் சொல்லி என்ன பயன், அப்பா?"

"ஒன்றுமில்லைதான். இருந்தாலும், இந்த வழியாய்ப் போனவர்கள் சற்று நின்று நம்மைப் பார்த்துவிட்டுப் போகக்கூடாதா? ஒரு காலத்தில் மாமல்லர் நம்மிடம் எவ்வளவு பிரியமாயிருந்தார்?"

"பிரியத்துக்கு இப்போதுதான் என்ன குறைவு வந்தது? இது யுத்த காலமல்லவா? அதனால் எல்லாருக்கும் அவசரமாயிருக்கிறது. திரும்பி வரும்போது மாமல்லர் இங்கே வந்து நம்மைப் பார்ப்பார் என்று கண்ணபிரான் சொன்னான், அப்பா!"

"அந்தமட்டில் சந்தோஷம் ஆனால், எதற்காக இப்படி எல்லாரும் ஓடுகிறார்களாம்?"

"புள்ளலூர் என்னுமிடத்தில் பெரிய யுத்தம் நடந்ததாம்!.."

"ஓகோ! யுத்தக்களத்திலிருந்துதான் இப்படி ஓடுகிறார்களாக்கும்! ஆஹா! காலம் எப்படி மாறிவிட்டது! முன் காலத்தில் போருக்குப் புறப்படுகிறவர்கள் வெற்றி அல்லது வீரசொர்க்கம் என்று உறுதியுடன் கிளம்புவார்கள். போர்க்களத்தில் முதுகு காட்டி ஓடுவதைப்போல் கேவலம் வேறொன்றுமில்லை என்று நினைப்பார்கள்..."

"அப்பா! இந்த யுத்தத்தில் போர்க்களத்திலிருந்து ஓடியவர்கள் எதிரிகள்தான். அது உங்களுக்குத் திருப்திதானே?"

"அதிலே என்ன திருப்தி? சுத்த வீரர்களை வென்று ஜயக்கொடி நாட்டினால் புகழும் பெருமையும் உண்டு. புறமுதுகிட்டி ஓடுகிறவர்களைத் துரத்தி ஜயிப்பதில் என்ன கௌரவம் இருக்கிறது?"

எந்த வழியிலும் ஆயனரைத் திருப்தி செய்யமுடியாது என்பதைக் கண்ட சிவகாமி அவருடன் பேசுவதில் பயனில்லையென்று தீர்மானித்து மௌனம் பூண்டாள். இருவருடைய உள்ளங்களும் வெவ்வேறு சிந்தனையில் ஆழ்ந்தன.

அன்று சூரியன் அஸ்தமிக்க ஒரு நாழிகை இருக்கும்போது குண்டோ தரன் திடும்பிரவேசமாக வந்து சேர்ந்தான். அவன் எங்கே போயிருந்தான், புத்த பிக்ஷுவைக் கண்டுபிடித்தானா, குதிரை திரும்பக் கிடைத்ததா என்னும் விஷயங்களைப் பற்றி ஆயனரும் சிவகாமியும் ஆவலுடன் அவனை விசாரித்தார்கள்.

"அதை ஏன் கேட்கிறீர்கள், போங்கள்! உங்களுடைய சொல்லைத் தட்டிவிட்டு, புத்த பிக்ஷுவைப் பிடிப்பதற்காக ஓடினாலும் ஓடினேன், நேரே யுத்த களத்திலேயே போய் மாட்டிக் கொண்டேன். அப்பப்பா! இந்த மாதிரி பயங்கர யுத்தத்தை நான் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை!" என்றான் குண்டோ தரன்.

சிவகாமி, "என்ன சண்டை? எங்கே நடந்தது? சண்டை முடிவு என்ன ஆயிற்று?" என்று கேட்டாள்.

அதன் பேரில் குண்டோ தரன் புள்ளலூர் சண்டையைப் பற்றி விவரமாகக் கூறினான். பழந்தமிழ் நாட்டின் சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற அந்தப் புள்ளலூர்ச் சண்டையைப்பற்றி இப்போது வாசகர்களும் தெரிந்து கொள்வது அவசியமாகும்!

வாதாபிப் புலிகேசியின் சைன்யம் பல்லவ சாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்து வந்த சில நாளைக்கெல்லாம் கங்கநாட்டு அரசன் துர்விநீதனுடைய சைன்யம் திரண்டு பல்லவ இராஜ்யத்தின் மேற்கு எல்லையில் வந்து நின்றது. வாதாபி சைன்யத்தினால் பல்லவர் படை முறியடிக்கப்பட்டது என்ற செய்தி வந்ததும் பல்லவ இராஜ்யத்துக்குள் பிரவேசிக்க ஆயத்தமாக அந்தச் சைனியம் காத்துக்கொண்டிருந்தது. ஆனால், திடீரென்று துர்விநீதனுக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ, தெரியவில்லை. ஒரு நாள் கங்கநாட்டுச் சைனியம் பல்லவ இராஜ்யத்துக்குள் நுழைந்துவிட்டதென்றும் காஞ்சியை நோக்கி முன்னேறி வருகிறதென்றும் தெரிந்தது. இதையறிந்த மகேந்திர பல்லவர் வடக்குப் போர் முனையிலிருந்து குமார சக்கரவர்த்திக்குக் கட்டளை அனுப்பினார். திருக்கழுக்குன்றத்திலுள்ள பாதுகாப்புப் படையுடன் சென்று கங்கநாட்டுச் சைனியம் காஞ்சியை அணுகுவதற்கு முன் அதை எதிர்க்கும்படியாகச் சொல்லி அனுப்பினார். இத்தகைய கட்டளைக்காக எட்டுமாத காலமாகத் துடிதுடித்துக் கொண்டிருந்த மாமல்ல நரசிம்மர் தளபதி பரஞ்சோதியுடன் உடனே கிளம்பிச் சென்று திருக்கழுக்குன்றத்திலிருந்த படைக்குத் தலைமை வகித்து நடத்திச் சென்றார். காஞ்சி நகருக்குத் தென் மேற்கே இரண்டு காத தூரத்தில் புள்ளலூர்க் கிராமத்து எல்லையிலே இரண்டு சைன்யங்களும் சந்தித்தன.

மாமல்லர் தலைமை வகித்த பல்லவ சைனியத்தைக் காட்டிலும் கங்கநாட்டுச் சைனியம் மூன்று மடங்கு பெரியது. ஆனாலும், மாமல்லரின் வீரப்படை கங்கநாட்டுச் சைன்யத்தின் மேல் எதிர்பாராத சமயத்தில் இடி விழுவதுபோல் விழுந்தது. மாமல்லரும் பரஞ்சோதியும் கையாண்ட யுத்த தந்திரங்களும், போர்க்களத்தில் முன்னணியில் நின்று நிகழ்த்திய வீரச் செயல்களும், பல்லவ வீரர்களுக்கு இணையில்லாத உற்சாகத்தையும் துணிச்சலையும் அளித்தன.

போர் உச்ச நிலை அடைந்தபோது கங்க சைனியத்தை மற்றொரு பக்கத்தில் இன்னொரு புதிய படை தாக்குவதாக வதந்தி உண்டாயிற்று. அவ்வளவுதான்! அத்தனை நேரமும் ஒருவாறு தைரியமாகப் போரிட்டு வந்த கங்க சைனியத்தின் வீரர்களைப் பீதி பிடித்தது. உயிர் பிழைத்தாற் போதும் என்று கங்க வீரர்கள் சிதறி ஓட ஆரம்பித்தார்கள்.

கங்க நாட்டரசன் துர்விநீதன் பட்டத்து யானை மேல் ஏறிக் கொண்டு தெற்குத் திக்கை நோக்கி ஓடிக் கொண்டிருந்ததாகச் செய்தி வந்தது. அவனை எப்படியாவது சிறைப்படுத்த வேண்டுமென்று தீர்மானித்து மாமல்லரும் பரஞ்சோதியும் பல்லவ சைனியத்தைச் சிறு சிறு படைகளாகப் பிரித்துத் தெற்கு நோக்கிப் பல வழிகளிலும் போகச் சொல்லிவிட்டுத் தாங்களும் அதே திசையில் அதிவேகமாகச் சென்றார்கள்.

போர்க்களத்தில் தறிகெட்டு ஓடிய ஒரு குதிரையைக் கைப்பற்றி அதன் மேல் ஏறிக்கொண்டு குண்டோ தரனும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தான். துரதிருஷ்ட்டவசமாக வழியில் அவன் ஏறிவந்த குதிரை காலை ஒடித்துக்கொண்டது. அதனால் அவன் பின்னால் தங்கிவிடும்படி நேர்ந்தது. குதிரையை அப்படியே விட்டு விட்டுக் கால்நடையாக நடந்து அசோகபுரம் வந்து சேர்ந்ததாகக் கூறிக் குண்டோ தரன் அவனுடைய வரலாற்றை முடித்தான்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com