Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 2
கல்கியின் சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம் : காஞ்சி முற்றுகை
1.வடக்கு வாசல்

கார்காலத்தில் ஒரு நாள் மாலை காஞ்சி மாநகரின் கோட்டை கொத்தளங்களுக்குப் பின்னால் சூரியன் இறங்க, வடகிழக்குத் திசையில் குமுறிக்கொண்டிருந்த மேகங்களின் தங்க விளிம்புகள் வர வர ஒளி குன்றி வந்தன. செங்கதிர்த் தேவன் தன் கடைசித் தங்கக் கிரணத்தையும் சுருக்கிக் கொண்டு மறையவே, வான முகில்கள் நீல நிறத்தை அடைந்து, திருமாலின் மேனிவண்ணத்தை நினைவூட்டின.

வடகிழக்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்துக் கொண்டிருந்த வாடைக் காற்றின் சிலுசிலுப்பினால் மரங்களும் கொடிகளும் கூட நடுங்குவதாகத் தோன்றியது. காஞ்சி மாநகரத்துக் கோட்டை மதில்களிலும், கோயில் கோபுரங்களிலும், அரண்மனை விமானங்களிலும், கலை மண்டபங்களிலும் குடியேறி வாழ்ந்த பலவகைப் பறவைகள் சடசடவென்று இறக்கைகளை அடித்துக்கொண்டு தத்தம் வாசஸ்தலத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தன.

அந்த மனோரம்யமான அந்திப் பொழுதில் காஞ்சிக் கோட்டையின் விசாலமான வடக்கு வாசல் அமைதி குடி கொண்டு விளங்கிற்று. எட்டு மாதத்துக்கு முன்னால் மகேந்திர சக்கரவர்த்தி அந்தக் கோட்டை வாசல் வழியாகப் போர்க்களத்துக்குப் பிரயாணமான பின்னர், அவ்வாசலின் பெருங்கதவுகள் திறக்கப்படவில்லை. உட்புறத்தில் கனமான எஃகுச் சட்டங்களினால் அவை தாழிடப்பட்டுப் பெரிய பூட்டுகளினால் பூட்டப்பட்டிருந்தன.

வாசலின் வெளிப்புறத்தில் காவலர்கள் இருவர் கையில் வேலுடனும் இடையில் வாளுடனும் நின்று காவல் புரிந்தார்கள். ஒவ்வொருவருடைய கழுத்திலும் ஊதும் கொம்பு ஒன்று தொங்கியது. கோட்டை வாசலிலிருந்து புறப்பட்ட விசாலமான இராஜபாட்டையானது அங்கிருந்து வெகுதூரம் வரையில் வளைந்தும் நெளிந்தும் ஊர்ந்தும் பாம்பைப்போல் காணப்பட்டது. அந்தப் பாதையில் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு ஒருவரும் காணப்படவில்லையாயினும் காவலர்கள் இருவரும் சாலையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால், யாரையோ அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததுபோல் தோன்றியது.

திடீரென்று வெகு தூரத்தில் புகைப்படலம் போன்ற புழுதி எழுந்தது. குதிரைகளின் பாய்ச்சல் சத்தம் கேட்டது. காவலர்கள் இருவரும் ஜாக்கிரதையாக நின்றார்கள். கோட்டை வாசலின் மேல்மாடத்தில் எச்சரிக்கை முரசு 'திண் திண்' என்று சப்திக்கத் தொடங்கியது. புழுதிப்படலமும், குதிரைகள் வரும் சத்தமும் அதிவிரைவில் நெருங்கி வந்துவிட்டன. மங்கலான மாலை வெளிச்சத்தில் குதிரைகளும் கண்ணுக்குப் புலனாயின.

முன்னால் வந்த இரண்டு குதிரைகளின் மேலிருந்த வீரர்கள் கையில் ரிஷபக் கொடி பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அடுத்தாற்போல் தனித்து வந்த உயர்ந்த சாதிக் குதிரையின் மீது போர்க்கோலம் பூண்ட கம்பீரத் தோற்றமுடைய ஒரு யௌவன புருஷன் வீற்றிருந்தான். இன்னும் சில குதிரைகள் கொஞ்சம் தள்ளிப் பின்னால் வந்தன.

கோட்டை வாசலுக்குச் சற்று அப்பால், அகழிப் பாலத்தின் அக்கரையில் எல்லாக் குதிரைகளும் நின்றன. முன்னால் கொடி பிடித்து வந்த இருவரில் ஒருவன், "காஞ்சி மாநகர்க் கோட்டையின் வீர தளபதி பரஞ்சோதியார் வருகிறார்! கோட்டைக் கதவைத் திறவுங்கள்!" என்று கூவினான். இன்னொருவனும் அவ்வாறே திரும்பக் கூவினான்.

"தளபதி பரஞ்சோதி வாழ்க! வாழ்க! என்று பற்பல குரல்கள் சேர்ந்து கோஷித்தன.

கோட்டைக் காவலர் இருவரும் விரைவாக நடந்து முன்னால் வந்தார்கள். தனித்து நின்ற உயர்சாதிக் குதிரை மீதிருந்த வீரனை அவர்கள் அணுகி வணக்கத்துடன் நின்றார்கள்.

ஆம்; அந்தக் கம்பீரமான கறுத்த குதிரை மீது வீற்றிருந்த வீரன் நம் பழைய நண்பனான பரஞ்சோதிதான்! எட்டு மாத காலத்திற்குள்ளே அவனிடம் காணப்பட்ட மாறுதலானது மிக்க அதிசயமாயிருந்தது. காஞ்சியில் பிரவேசிக்கும்போது அவன் உலகமறியாத பாலகனாயிருந்தான். அவனுடைய முகமானது பால்வடியும் குழந்தை முகமாயிருந்தது. இப்போதோ அந்த முகத்தில் எத்தனையோ போர் முனைகளில் முன்னணியில் நின்று போரிட்டதன் அடையாளங்களான பல காயங்களுடன், உலக அனுபவத்தினால் ஏற்படும் முதிர்ச்சியும் காணப்பட்டது. எனவே நாமும் தளபதி பரஞ்சோதிக்குரிய கௌரவத்தை அளித்து அவரை மரியாதையுடன் குறிப்பிட வேண்டியவர்களாகிறோம்.

கோட்டைக் காவலர்கள் தளபதியை அணுகிப் பயபக்தியுடன் நின்றபோது அவர் மிக்க பெருமிதத்துடனே கையில் ஆயத்தமாய் வைத்திருந்த சிங்க இலச்சினையை எடுத்துக் காட்டினார். அதைப் பார்த்த வீரர்கள் மறுபடியும் தளபதி பரஞ்சோதிக்கு வணக்கம் செலுத்திவிட்டுத் திரும்பிச் சென்று, அகழியின் பாலத்தை நெருங்கியதும், தங்கள் தோளில் தொங்கிய கொம்பு எடுத்து, 'பூம்' 'பூம்' என்று ஊதினார்கள். உடனே, கோட்டைக் கதவிற்குள் அமைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய துவாரக் கதவு திறந்தது. உள்ளிருந்த ஒரு முகம் எட்டிப் பார்த்தது. வாயிற் காவலர்களை அந்த முகத்துக்குடையவன் ஏதோ கேட்க, அவர்கள் மறுமொழி சொன்னார்கள். அடுத்த கணம் உட்புறத்தில் இரும்புத் தாள்களும் பூட்டுகளும் திறக்கப்படும் சத்தம் கேட்டது. பின்னர் அந்த பிரம்மாண்டமான கோட்டைக் கதவுகள், கடகடவென்றும் மடமடவென்றும் சத்தம் செய்துகொண்டு திறந்து, வந்தவர்களுக்கு வழிவிட்டன.

கொடி பிடித்த இரு வீரர்களையும் பின்னால் விட்டு விட்டு, தளபதி பரஞ்சோதி அகழியின் பாலத்தைக் கடந்து கோட்டை வாசலுக்குள் முன்னதாகப் பிரவேசித்தார். முன் கோட்டை வாசலுக்கு ஏறக்குறைய இருநூறு அடி தூரத்துக்கப்பால், இரண்டாவது சிறுவாசல் ஒன்று காணப்பட்டது. இரண்டு வாசல்களுக்கும் நடுவில் கீழே கருங்கல் தள வரிசை அமைந்திருந்த வட்டவடிவமான முற்றத்தில் வேல் பிடித்த வீரர்கள் பலர் அணிவகுத்து நின்றார்கள். இடையிடையே சில வீரர்கள் சுடர் விட்டெரிந்த தீவர்த்திகளைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நடுவில், இரட்டைக் குதிரை பூட்டிய அலங்கார ரதம் ஒன்று காணப்பட்டது. ரதத்திற்குச் சமீபமாகப் பல வீரர்கள் சேர்ந்து பிடித்துக்கொண்டு நின்ற ரிஷபக் கொடியானது வானளாவிப் பறந்தது. திறந்த கோட்டை வாசல் வழியாகக் குபுகுபுவென்று புகுந்து அடித்த வாடைக் காற்றில் அந்தக் கொடி சடசடவென்று சப்தித்துக் கொண்டு ஆடியதானது. புதிய கோட்டைத் தளபதிக்கு உற்சாகமாக வரவேற்புக் கூறுவது போலிருந்தது.

ரதத்தில் குமார சக்கரவர்த்தி மாமல்ல நரசிம்மர் வீற்றிருந்தார். ரதசாரதி கண்ணபிரான் குதிரைகளின் கடிவாளங்களை இழுத்துப் பிடித்துக்கொண்டு கீழே பூமியில் நின்றான்.

கதவு திறந்து தளபதி பரஞ்சோதி உள்ளே பிரவேசித்தாரோ இல்லையோ, மாமல்ல நரசிம்மர் ரதத்திலிருந்து கீழே குதித்தார். அவர் கையினால் சமிக்ஞை செய்யவும், அருகில் நின்ற வீரர்களில் ஒருவன், இடி முழக்கம்போன்ற குரலில், "சளுக்கப்புலிகேசியின் அரக்கர் படைகளைக் கதிகலங்க அடித்த அசகாயசூரர் வீராதிவீரர் தளபதி பரஞ்சோதி வருக! வருக!" என்று கூவினான்.

அவனுடைய குரலின் பிரதித்வனியேபோல், "தளபதி பரஞ்சோதி வருக! வருக!" என்று நூற்றுக்கணக்கான வீரர்களின் குரல்கள் கோஷித்த சத்தம் வானை அளாவிற்று.

அந்தக் கோஷத்துடன் கலந்து, சங்குகளும் கொம்புகளும் தாரைகளும் தப்பட்டைகளும் முரசங்களும் பேரிகைகளும் ஏக காலத்தில் முழங்க, அந்தப் பெருமுழக்கமானது கோட்டை வாசலிலே எதிரொலியை உண்டாக்க இந்தப் பலவகைச் சத்தங்களும் சேர்ந்து அங்கே நின்ற வீரர்களுக்கு உற்சாக வெறியை உண்டாக்கின.

இத்தகைய வரவேற்பைப் பரஞ்சோதி சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவருடைய முகபாவத்திலிருந்து நன்கு தெரிந்தது. சட்டென்று குதிரை மீதிருந்து அவர் தரையில் குதித்து, ரதத்தின் அருகில் குமார சக்கரவர்த்தி நின்ற இடத்தை அணுகினார். தரையிலே விழுந்து நமஸ்கரித்துக் குமார சக்கரவர்த்திக்கு வணக்கம் செலுத்த விரும்பிய பரஞ்சோதியை மாமல்ல நரசிம்மர் தடுத்து இருகரங்களாலும் அணைத்துக் கொண்டார்.

சற்று நேரம் வரையில் இருவராலும் ஒன்றுமே பேச முடியவில்லை. முதலில் குமார சக்கரவர்த்திதான் பேசினார்.

"தளபதி! நாளெல்லாம் நிற்காமல் பிரயாணம் செய்து வந்தீர் போலும்! களைப்புக் காரணமாக உம்மால் பேசவே முடியவில்லை!"

"பிரபு! நான் பேச முடியாமலிருப்பதற்குக் காரணம் களைப்பு அல்ல. தங்களுடைய அளவில்லா அன்புதான் காரணம்! கோட்டை வாசலுக்கு வந்து என்னை எதிர்கொள்வீர்களென்று நினைக்கவில்லை....!"

"மகா வீரரே! கோட்டைக்கு வெளியிலே கிளம்பக் கூடாதென்று மட்டும் சக்கரவர்த்தி எனக்குக் கட்டளையிடாமலிருந்திருந்தால் ஒரு காத தூரம் உம்மை எதிர்கொள்வதற்கு வந்திருப்பேன்? சென்ற எட்டு மாத காலமாக உம்மைப் பார்க்க வேணுமென்ற ஆவல் என் உள்ளத்திலே எப்படிப் பொங்கிக் கொண்டிருந்தது என்பது உமக்கு எவ்விதம் தெரியும்?" என்று குமார சக்கரவர்த்தி கூறி, முதலில் தாம் ரதத்தில் உட்கார வைத்துக்கொண்டார். சாரதி கண்ணபிரானும் முன் தட்டில் ஏறி உட்கார்ந்தான்.

"தளபதி! நேரே அரண்மனைக்குப் போகலாமா? உமது விருப்பம் என்ன?" என்று மாமல்லர் கேட்க, பரஞ்சோதி, "பிரபு! போகும்போதே காஞ்சி நகரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு போக விரும்புகிறேன். கொஞ்சம்கூடக் காலத்தை வீண்போக்குவதற்கில்லை. இந்த வீரர்களையெல்லாம் முன்னதாக அனுப்பிவிடலாம்" என்றார்.

குமார சக்கரவர்த்தி கட்டளையிட்டதன் பேரில் அங்கிருந்த வீரர்கள் பரஞ்சோதியுடன் வந்தவர்களையும் அழைத்துக் கொண்டு முன்னால் விரைந்து சென்றார்கள். சாரதி கண்ணபிரான் குதிரைகளின் தலைக் கயிற்றை லாகவமாக ஒரு குலுக்குக் குலுக்கியதும், ரதமும் அங்கிருந்து நகர்ந்தது. கோட்டை வாசலின் கதவுகள் மீண்டும் சாத்தப்பட்டன.

சிறிது நேரம் ஒரே கலகலப்பாயிருந்த வடக்குக் கோட்டை வாசலில் பழையபடி நிசப்தம் குடிகொண்டது.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியயாம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com