Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
ஈர ஊற்றுகளாய்...
விமலன்

பார்த்த மாத்திரத்தில் பளிச்சென்று சிரித்து “என்ன சௌக்கியமா? டீ சாப்பிடுங்க” என நெரிசல் மிகுந்த நாற்சந்திப்பு சாலை ஓரம் ஒட்டுதலாய்ப் பேசி மகிழும் ஈரமனது எத்தனை பேரில் இருக்கிறது.

Cycle Shop இங்கு என்கிற புள்ளி விபரம் எப்பொழுதுமே சரியாக பிடிபடாமலேயே (ஒப்புக்குப் பேசி பற்பசை விளம்பரச் சிரிப்புச் சிரிக்கும் போலிகளை கணக்கில் சேர்க்க வேண்டாம்) அவர் ஒரு பட்டதாரி

படித்த படிப்பையும், சான்றிதழ்களையும் தனது உடம்பின் அங்கமாகவே வைத்துக் கொண்டு இருந்த அவர், வேலைவாய்ப்புச் செய்திகளை படித்தும், பல கம்பெனிகளின் இண்டர்வியூக்களுக்குப் போய் வந்தும் அலுத்துப்போன அவர்….. ரொம்பவும் காலம் கடத்தாமல் சைக்கிள் கடை வைத்து விட்டார்.

சைக்கிளுக்கு மட்டும் என கடையாக இல்லாமல் டூ வீலர் பஞ்சர், ரிப்பேர், ஜெனரேட்டர், மோட்டார் சர்வீஸ் என கலந்து கட்டி சைக்கிள் கடையை ஒட்டி பின்புறம் கிடந்த வெற்றிடத்தை சைக்கிள் ஸ்டாண்ட் என அறிவித்து விட்டார். நகரத்தை ஒட்டி நகரத்தின் பாதிப்போடு இருந்த கிராமம் அது தேசிய நெடுஞ்சாலை அந்த ஊர் வழியாகச் செல்வதால் எந்நேரமும் பிஸியாகவே அந்த ஊரின் சாலை ஓரம். அந்த சாலையை ஒட்டிய இடதுபுற மூலையில் தான் அவரின் சைக்கிள் & டூ வீலர் & சைக்கிள் ஸ்டாண்ட் என்றிருந்த “கலப்புக்கடை”.

வாஸ்து சாஸ்திரங்களின் உள்ளீடுகளுக்குள் சென்று அதை அலசி ஆராய்ந்து அதன்பின் அவர் அந்தக் கடையை வைத்திருக்கவோ, திருத்தி அமைக்கவோ இல்லை. ஆனால் கடை நன்றாக இருந்தது. கிழக்குப் பக்கமாகப் பார்த்த முன்வாசல், மேற்குப் பக்கமாக வாய் திறந்திருந்த கொல்லை வாசல். காலை வெயில் கடையைத் திறக்கும் அவரின் மேல்பட்டு அவரை நனைத்துதான் கடையினுள் நுழையும். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கிழக்குப் பக்கமும், மேற்குப் பக்கமுமாக நுழையும் வெயில் இயற்கையாகவே உடலுக்கு ஏற்றது என்கிற விஞ்ஞான ரிதியான உண்மையை உணர்ந்தவராக கைவிரல் முழுவதும் கலர்கலர் கல் மோதிரமும், பிரேஸ்லெட்டும் அணிந்திருக்கும் எந்த ஜோஸியரும், வாஸ்து சாஸ்திர நிபுணரும்(?) சொல்லாமலேயே அவர் அந்தக் கடையை கட்டியிருந்தார்.

2

இவ்வளவையும் செய்த மனிதர் சிரிப்பென்றால் என்ன விலை என்று கேட்கிறார். எப்பொழுதும் முகத்தில் ஒட்டியிருக்கும் இரண்டு நாள் தாடியும், தளர்ந்த நடையும், தொளதொள சட்டையும், லுங்கியுமே அவரது காஸ்ட்யூமும், தோற்றமுமாக இருந்தது. விட்டேத்தியான பார்வையும், எதிலும் பிடிப்பில்லாத பேச்சும் துடிப்பில்லாத உயிரற்ற சொற்களும் வார்த்தைகளுமே அவரிலிருந்து வெளிப்படுகின்றன எந்நேரமும். நாங்கள் பணிபுரியும் அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வரும் அவர் எங்களை பார்க்கும் பார்வை எதுவோ செய்யும் அந்தப் பார்வையில் தெரியும் அந்நியம் பளிச்சென பிடிபட எங்களுக்கானால் சிறிது கோபம் கூட வரும். ஏன் இப்படி இருக்கிறார் என?

ஒரு வேளை தனது படிப்பிற்கு குறைவாகப் படித்தவர்களிடம் கூட தான் போய் நிற்க வேண்டி வருகிறதே என நினைக்கிறாரோ அல்லது இங்கு வேலை பார்ப்பவர்களை விடவும் தான் எந்த விதத்தில் குறைவாக படித்திருக்கிறேன்? எந்த விதத்தில் தகுதி குறைந்திருக்கிறேன்? ஏன் எனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை? என்கிற கேள்விகளை அவரது மனம் முழுக்க அடுக்கி வைத்திருப்பாரோ? அதிலும் அவர் எங்களது அலுவலக கடைநிலை ஊழியரை பார்க்கும் பார்வை இருக்கிறதே... அடேயப்பா.

ரொம்பவும் தான் இளப்பமாகவும், தரக்குறைவாகவும் பேசிப் பார்த்தபோது சொன்னார், தான் படித்த படிப்பு அதற்காக செலவழித்த காலம், உழைப்பு, பணம், தனது பெற்றோர்களின் கஷ்டம்… என இத்தியாதி இத்தியாதிகளைச் சொல்லி தனது படிப்பிற்கும், தான் வாங்கிய பட்டத்திற்கும் வேலை தராத அரசு, மதிப்பு தராத சமூகம், இவைகளிடம் நான் எப்படி நடந்து கொள்ள முடியும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது உங்களது எதிர்பார்ப்பு? என்கிறதொரு கேள்வியும், கோபமும், பெருமூச்சுமாய் நிறுத்துகிறார்.

படிப்பு தவிர இதரவைகளான விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, பாட்டு, டான்ஸ், நாடகம் இப்படியான எல்லாவற்றிலுமே சிறந்து விளங்கினோமே? எங்களால் நாங்கள் படித்த பள்ளி, கல்லூரிக்கும், பள்ளிக் கல்லூரிகளால் எங்களுக்கும் பெருமை கிடைத்ததே! அங்கு படித்த படிப்பும், பெற்ற பட்டமும் பயன் இல்லாமல் பெட்டிக்குள் வைத்து பூட்டப்பட்ட பழம் பேப்பராக ஆகிப் போன மாயமும், மர்மமும் எங்கு நிகழ்கிறது?

3

பள்ளிக் கல்லூரி நாட்களில் எங்களில் புதைந்திருந்த படிப்புத் திறனும், இதரத் திறனும், கண்டெடுத்து ஊக்குவிக்கப்பட்டு வார்க்கப்பட்ட எங்களின் நிலை வெளியில் வந்ததும் முற்றிலுமாக சிதைந்து போகிறதே ஏன்? ஒரு ஆணின் திறமையும், தகுதியும் அரசுப்பணிக்கு அல்லது தனியார் வேலைக்குச் சென்று சம்பாதிப்பது மட்டுமேதான் என்பது இந்த சமூகத்தில் எழுதப்படாத சாசனமாக உள்ளதே அது ஏன்?

சம்பாதிப்பவன் எவ்வளவு குடி கேடியாக, ஒழுக்கக்கேடு உள்ளவனாக உள்ளபோதும் கூட இந்த சமூகம் அவனை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும். அந்த நேரத்தில், எங்களை மிகவும் கவனமாக புறந்தள்ள மறப்பதில்லையே? என்கிற துணைக் கேள்வியை நீ...ண்ட பேச்சாக கோபமாகவும், பெருமூச்சுடனும் பேசி முடித்த அவரின் இதயத் துடிப்பு கண்களில் தெரிகிறது.

இப்படி கண்களிலும், இதயத்திலும் கனல் வளர்த்துத் திரியும் இவர்களைப் பார்த்த மாத்திரம் தோள் தட்டி, அன்பாய், ஆதரவாய்ப் பேசி அவர்களின் மன ரணங்களை ஆற்றும் ஈர மனது கொண்டவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் தான். அவர்கள் உள்ளவரை நாற்சந்திப்பு சாலை ஓரம் என்ன பாலைவனத்தில் கூட ஈரம் சுரக்கும் பேச்சு வரும்.

- விமலன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com