Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
ஆதலால் நான் சோம்பேறி
சூர்யா


அதிகாலை 5 மணிக்கு எனக்கு விழிப்பு வருகிறதென்றால் (நான் விரும்பாவிட்டாலும்) அதற்கு காரணம் அந்த சென்ட்வாசனைதான். நாசிக்குள் சென்று அடைத்துக் கொள்ளும், மூச்சு விட முடியாமல் விழித்துப் பார்த்தால். என் நண்பன் தனது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை இரண்டாவது முறையாக (சென்டில்) குளித்துக் கொண்டிருப்பான். காரணம் அவனது வேலை நேரம் காலை 6 - 3 சிப்ட். பி.பி.ஓ. பெரோட் சிஸ்டம், அம்பத்தூர்.

lazy என்னைப்பற்றி கூறுவதானால், சூரியன் கிழக்கே உதிக்கும் என இரண்டாம் வகுப்பு பழத்துக் கொண்டிருக்கும் பொழுது. கைகளை கட்டிக்கொண்டு உரக்க பாடம் படித்தது மட்டுமே நியாபகம் உள்ளது. அது ஏனோ தெரியவில்லை ஒரு முறை கூட நான் அதை பரீட்சித்துப் பார்த்தது இல்லை. எது எப்படி இருந்தாலும் சரி டீச்சர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இன்றும் நான் காலையில் எழும் நேரம் 10:30 மணிக்கு மேல்தான். நான் பள்ளியில் படிக்கும் பொழுது 8 மணிக்கு எழுந்ததாக நியாபகம். மாலை நேரக் கல்லூhயில் சேர்ந்தபின் அது 11 மணியானது. நான் இன்று வருத்தப்படுகிறேன். என் தாய் தந்தையரின் வாய்களை வலிக்கச் செய்ததற்காக. பாவம் அவர்களும் எத்தனை முறைதான் என்னை திட்டுவார்கள். நானாக இருந்தால் அப்படி ஒரு தருதலையை கொன்றிருப்பேனோ என்னவோ? தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது குளித்த அனுபவம் எத்தனை பேருக்குக் கிடைக்கும். நான் படுக்கையிலேயே பலமுறை குளித்திருக்கிறேன் தெரியுமா? என் அம்மாவின் தோல்வியடைந்த முயற்சிகள், குடம் நிறைய தண்ணீரை எடுத்து (பாவம் அம்மா) தூங்கிக் கொண்டிருக்கும் என் முகத்தில் ஊற்றுவது. எத்தனை நாளைக்குத் தான் இப்படியே செய்வார்கள், ம் , ஒரு குடம் தண்ணீர் என்ன அவ்வளவு சுலுவா? தென்னை மரத்துக்கு ஊற்றியிருந்தால் தேங்காயாவது கிடைத்திருக்கும் (இது அம்மாவின் புலம்பல்).

ஆனாலும் என் தந்தையின் நகைச்சுவைக்கு ஒரு அளவே இல்லை. அதிகாலை டி.வி. யை சத்தமாக வைத்துவிட்டால் நாங்கள் எழுந்துவிடுவோமா என்ன? என்னவொரு தன்னம்பிக்கை அவருக்கு, ஆனால் நான் தோற்றது என்னவோ. என் நண்பனிடம்தான்.

சென்னையில பேச்சுலர் வாழ்க்கையில். இருவர் மட்டுமே தங்கியிருக்கும் குட்டி அறையில் வேறு என்னதான் செய்யமுடியும். காலை 5 மணிக்கு அந்த புஷ்ஷ்ஷ் ........ சத்தம், நான் பாம்பின் புஷ் சத்தத்திற்குக் கூட இவ்வளவு பயந்ததில்லை. அந்த வாசனை என் நாசிக்குள் சென்று வேதியியல் ரசாயன மாற்றங்களையெல்லாம் நிகழ்த்தும். ஒரு வேளை என் தந்தையின் சாபமாக இருக்கலாம். என் நண்பனை கண்டிருந்தால் கட்டிப்பிடித்து பாராட்டியிருப்பார். இருப்பினும் காலை 5 மணி என்பது ரொம்பவே கொடூரம். நியூட்டனின் 3 ஆம் விதி தத்துவமா?. அறிவியலா தத்துவ ரீதியாகவும் சரியாக பொருந்துகிறதே. என் எதிர்வினை என்னை இப்படி பழி வாங்கும் என்று முன்பே தெரிந்திருந்தால். நான் அன்றே அரை மணி நேரம் முன்னதாக எழுந்திருந்திருப்பேன். நான் என் நண்பனிடம் கூறுவது இதைத்தான். ‘டேய் என்னை ஒரு அரை மணி நேரம் நிம்மதியா தூங்கவிடுடா”

என் நண்பன் சலிப்பதாக இல்லை

எனது அலுவலக நேரம் காலை 11.30. எனக்கு குளித்துவிட்டு கிளம்ப அரைமணி நேரம் போதும். ஆகையால் நான் எழுந்திருக்கும் நேரம் 11.30-11.00 ஸ்ரீ 11.00 இப்படித்தான் என் மணம் கணக்கு போடும். அலுவலகத்திற்கு 12 மணிக்கு சென்றால் போதும். எத்தனை பொய்கள் இருக்கிறது. சார் டிராபிக் ஜாம். சார் தொவைச்சுட்டு வர லேட்டாயிடுச்சு, சார் நைட்டெல்லாம் ஒரே பீவர். சார் காலைல ஒரே வாமிட். பாவம். எத்தனை முறைதான் அவர்களும் காரணம் கேட்பார்கள் சலிப்பு என்கிற விஷயம் அவர்களையும் ஆக்கிரமிக்கத்தானே செய்யும்.

இந்த சென்ட் விஷயத்தில் என்றாவது ஒரு நாள் சண்டை போட்டுவிடலாம் என்று தோன்றும், ஆனால் எப்படி சண்டை போடுவது. அவன் என் உயிர் நண்பனல்லவா? அவன் மனம் நோகும் படி எப்படி நான் பேசுவேன், என்கிற காரணம் எல்லாம் ஒன்றும் கிடையாது. காலை 5 மணிக்கு நானாவது சண்டை போடுவதாவது. உங்களுக்கே புரிந்திருக்க வேண்டாம். அது நடக்காத காரியம். நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. எனக்கு கோபம் வரும் பொழுதுதான் என்னால் சண்டை போட முடியும். சும்மானாச்சுக்கெல்லாம் என்னால் சண்டை போட முடியாது. நான் ஒரு நிகழ்கால வாதி.

இவ்வளவு நேரம் என்னைப்பற்றி கூறியதை கேட்டுவிட்டு எந்த ஒரு முடிவுக்கும் வர வேண்டாம். என்னை பற்றி இன்னும் சில குறிப்புகளையும் தர விரும்புகிறேன். அவை ஆச்சரியமானவை. நான் பள்ளியில் படிக்கும் பொழுது எப்பொழுதும் முதல் ரேங்தான். 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது ( நான் வயதிற்கு வந்திருந்தேனோ என்னவோ) ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருந்தேன். அவளும் வழக்கம் போல் கைகளை இட வலமாக(டாட்டா) ஆட்டிக் காண்பித்துவிட்டு சென்றுவிட்டாள். எனக்கும் யாராவது சொல்லியிருந்தால்தானே தெரியும். இந்த வயது காதலை பற்றி ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு சில குலவழக்கங்கள் இருப்பதை யார் சொல்லித்தருகிறார்கள். பெண் என்றால் அப்படித்தான் செய்வாள். செய்ய வேண்டும். நீதான் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும், என்று எனக்கு நானே புத்திமதி சொல்லிக் கொண்டாலும், மனம் பொறுக்காமல் 18 தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டேன்.

வாய்க்குள் ட்யூப்பை விட்டு உறிஞ்சி எடுப்பார்கள் என்று தெரிந்திருந்தால். நான் விழுங்கியிருக்கவே மாட்டேன். அதிலும் என் அம்மா, ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிச் செல்வதற்கு முன், முன்முயற்சியாக அரைக்கிலோ உப்பை தண்ணீரில் கரைத்து மண்ணெண்ணெய் ஊற்றும் குழல் வழியாக என் வயிற்றுக்குள் இறக்கிய பொழுது. நான் என்ன நினைத்தேன் தெரியுமா? நம்நாட்டு தீவிரவாதிகளைத்தான் நினைத்தேன். அவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க என்ன ஒரு சிறப்பான வழிமுறை இது. ஆனால் என் சிந்தனை சட்டென்று கலைந்தது ஏன் தெரியுமா? ஒருவன் சாணிக் கரைசலோடு ஓடிவந்தான். அதை என் வாயிற்குள் ஊற்றி பின் நான் வாந்தி எடுத்துதான் பிழைக்க வேண்டுமானால் அப்படி ஒரு உயிரே எனக்குத் தேiவியல்லை. தற்கொலை முயற்சி செய்தவன் எழுந்து ஓடியதை நீங்கள் எங்குமே பார்த்திருக்க முடியாது. அன்று நான் ஓடினேன். யாரும் பிடிக்க முடியாத வேகத்தில் ஹாஸ்பிட்டலை நோக்கி.

நான் உயிர் பிழைத்ததும் முதலில் செய்த வேலை சாணிக்கரைசலோடு என்னை துரத்திய அந்த நாட்டு வைத்தியனை நையப்புடைத்ததுதான். எப்படித்தான் அவர்களுக்கு இது மாதிரியெல்லாம் தோன்றுகிறதோ?

பின் எனது 12 ஆம் வகுப்பு பரிட்சை முடிவுகள் வந்தன. 756 மொத்த மதிப்பெண். எந்த கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை. ஒதுங்க இடம் கிடைத்தது மாலை நேரக்கல்லூரிதான். காதல் தோல்விக்கு பின் எந்த ஒரு விஷயத்திலும் எனக்கு அசட்டைதான். வாழ்க்கை அதன் இஷ்டத்திற்கு சென்று கொண்டிருந்தது. எனக்கு சில விஷயங்கள் தெளிவாக புரிந்துவிட்டது. நான் சில விஷயங்களை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ள விரும்புகிறேன். பெண்கள் ஆண்களைவிட மனோ தைரியம் படைத்தவர்கள். அவர்களின் இதயம் வலிமையானது. அவர்கள் எதையும் கடந்து செல்லக் கூடிய துணிவு படைத்தவர்கள் சந்தியா நீ எவ்வளவு துணிவானவள். உன்னைப் போல டாட்டா காட்ட வேண்டுமென்றால் நான் இன்னொரு ஜென்மம் எடுத்து வரவேண்டும்.

என் காதல் தோல்விக்குபின் நான் தாடி வளர்த்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் எனக்கு அப்பொழுது அவ்வளவாக தாடி வளரவில்லை. எனக்கு குடிப்பழக்கமும் கிடையாது. அதற்கும் காரணமுண்டு. நான் 10 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் பொழுது ஓல்டு மங்க் என்னும் சரக்கை ( அது குதிரை குடிப்பது, விலை மலிவு) ராவாக குடித்துவிட்டு (பெட்கட்டி) எடுத்த வாந்தி இருக்கிறதே, அந்த சூழ்நிலையிலும் நான் அதை எண்ணினேன். 12 முறை. ஒருவனால் 12 முறை தொடர்ச்சியாக வாந்தி எடுக்க முடியுமா? இது நடக்காத காரியம் என்று யாராவது பேசினால். நீங்கள் அடித்து கூறலாம், முடியும் என்று. நீங்கள் என்னை முழுமையாக நம்பலாம். எனக்கு அது நிகழ்ந்திருக்கிறது. என் படிப்புமேல் சத்தியமாக (எனக்கு நிஜமாகவே படிப்பின் மேல் அப்பொழுதெல்லாம் மரியாதை இருந்தது.) நல்லமாட்டுக்கு ஒரு சூடு. நான் நல்லமாடு. சாரி நல்ல மனிதன். அன்றிலிருந்து நான் குடித்ததேயில்லை.

பின் என்னதான் செய்வது, காதல் தோல்வி என்னை வதைக்கிறதே, என்னை மறந்து தூங்கிய நேரங்களில் அது என்னை ஒன்றும் செய்வதில்லை. நான் தூங்க விரும்பினேன். நான் மறந்திருக்க விரும்பினேன். இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள். வந்தால் தான் தெரியும் காய்ச்சலும். தலைவலியும். அதுவரை நியாயம் பேசிக் கொண்டுதான் இருப்பீர்கள்.

இன்று நான் ஒரு வேலையிலமர்ந்து பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். தினமும் எட்டு மணிநேரம். என் கனவிலும் நினைத்துப் பார்க்காத விஷயம், இன்று சற்று வலி குறைந்திருக்கிறது. வேலையிலும், தூக்கத்திலும் என்னை மறக்க கற்றுக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் காலை 5.30 மணிக்கு என்னை எழுப்பிவிடும் படுபாதக செயலை நான் மன்னிக்க மாட்டேன். யாராவது என் நண்பனை சந்தித்தால் அவனிடம் என் நிலையை எடுத்துக் கூறுங்கள். ஏனெனில் நான் கதை சொல்கிற பாணியில் ஆரம்பித்தால் அவன் உசைன் போல்ட் ஐ போல் ஓடிவிடுவான்.

- சூர்யா([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com