Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
தூக்கி எறியப்பட்ட பந்து
சூர்யா

அந்த துண்டு காகிதத்தில் எண்ணெய் பிசுக்குகளுக்கு இடையே அச்சடிக்கடிக்கப்பட்டிருந்த அந்த செய்தியை படிக்கும் பொழுது சங்கநாதனின் தலைக்கு மேல் ஒரு குண்டுபல்ப் பளிச்சென்று எரிந்தது. அந்த செய்தி குத்து சண்டை வீரர் முகமது அலியைப் பற்றியது. அவர் எதிரிகளை வீழ்த்தும் விதமே தனிதான். அவர் முதல் 10 ரவுண்டுகளில் எதிரியைத் தாக்கவிட்டுத் தப்பிக் கொண்டிருப்பார். அவருடைய மிகச் சிறந்த ட்ரிக் இந்த தப்பிக்கும் கலைதான். எதிரி களைப்படைந்த பின் தான் தன் தாக்குதலைத் தொடங்குவார். இதனால் அவர் ஒரு முறை கூட தோற்காமல் தொடர்ந்து வெற்றிக் கனியை பறித்து வந்தார்.

Husband and wife ஆனால், இந்த செய்தி ரங்கநாதனின் தலையோரமாக பல்ப் எரியச் செய்ததற்கு மிகப்பெரிய பின்னணி உண்டு. அதற்கு முன் மீனாட்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். மீனாட்சி ரங்கநாதனின் மனைவி. பெண் பார்க்க கூட்டிச் சென்ற பொழுது, பெண் சினிமா நடிகை ஜோதிகா மாதிரி அழகாக இருப்பாள் என்று கூறி அழைத்துச் சென்றார்கள். மீனாட்சியும், ஜோதிகாவை போன்று அழகாகத்தான் இருந்தாள். ஆனால் திருமணம் நடந்து சில மாதங்களுக்குப் பின்தான் தெரியவந்தது. அவள் சந்திரமுகி ஜோதிகா என்று, கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான் அவளது பெரிய கண்கள் தனது இருப்பிடத்திலிருந்து ஒரு இன்ச் வெளியே வர பயங்கரமாக முறைத்து பார்க்கிறாள். அத்தோடு சும்மா விடுகிறாளா? ஆஸ்திரேலியன் பவுலர் பிரெட்லீயைப் போல் எதையாவது தூக்கி எறிகிறாள் 150 கிலோமீட்டர் வேகத்தில். ரங்கநாதனுக்கு அவ்வளவு வேகம் பத்தாது ஒதுங்கிக் கொள்வதற்கு. கங்குலியைப் போல் கண்ணை கசக்கி உருட்டி பார்ப்பதற்குள் அந்த பொருள் வந்து தாக்கிவிடுகிறது. ஆனால், அவரது கடினமான தலை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேண்டிய ஒன்று. காரணம் அதிலிருந்து இன்னும் ஒரு முறை கூட ரத்தம் வரவில்லை என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயம். இத்தனை கொடூரத் தாக்குதல்களையும் மீறி ரங்கநாதன் தன் மனைவி மீது வைத்திருந்த காதலை சற்றும் குறைத்துக் கொள்ளவில்லை.

சுவற்றை நோக்கி தூக்கி எறியப்பட்டப் பந்து திரும்ப தனது கைகளுக்கு வந்துவிடும் என்பது நன்றாகத் தெரியும் பட்சத்தில் பந்தை தூக்கி எறிவதில் பிரச்சனையோ? பயமோ இருப்பதில்லை. காதல் மனைவிகள் அனைவரும் இதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். தாலிகட்டிய கணவனை தூக்கி எறிந்து பேசுவதும், அவனது சுயகவுரவம் பாதிக்கக்கூடிய அளவிற்கு ஏசுவதும், அந்த முட்டாள் பந்து தன்னை மீறி எங்கும் சென்று விடாது என்கிற தைரியத்தில் தான்.

இந்த முட்டாள் பந்துகள் ஏன் அவ்வாறு ஆக்கப்பட்டுவிடுகின்றன என்பதற்கு மிக ஆழமான உளவியல் காரணங்கள் உண்டு. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ரங்கநாதனுக்கு இந்த உளவியல் விஷயங்கள் அவ்வளவு முக்கியமில்லை. நிலைமை அவ்வளவு முற்றிவிட்டது. அவர் அறிந்துகொள்ள விரும்பியதெல்லாம் ஒரு நல்ல தற்காப்புக் கலையைத்தான். முகமதுஅலி அவரை கவர்ந்ததில் எந்தவித் ஆச்சரியமும் இல்லை.

தூக்கி வீசப்பட்ட ஒரு பொருள் (அது, பூரிக்கட்டை, குக்கர் மூடி அல்லது ஒரு தோசைக் கல், சில சமயங்களில் சோற்றுப்பானை) சரியாக இலக்கை தாக்கி, தாக்கப்பட்ட இடத்தில் ஏற்பட்ட காயத்தைப் பார்க்கும் பொழுது, மனமானது ஒரு மனைவிக்கு சற்று ஆறுதல் அடைகிறதென்றால், அத்தகைய வெறுப்பிற்குரிய கணவன் (அதாவது ரங்கநாதன்) அப்படி என்ன விதமான அன்புத் தொல்லைகளை அடுக்கடுக்காக கொடுத்திருப்பார் என்பதை ஒரு சிறிது யூகிக்க முடியும், இருப்பினும் சிறிது விளக்குவது என் கடமை.

ரங்கநாதன் இப்பொழுதெல்லாம் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகனத்தில்தான் (பேருந்து) அலுவலகம் செல்கிறார் என்றாலும் ஒரு காலத்தில் பந்தாவாக ஸ்கூட்டரில் சென்றவர்தான். ஆனால் அந்த ஸ்கூட்டரின் தற்போதைய நிலைமை பரிதாபகரமானது. ஏதோ தேர்தல் கலவரத்தில் வெறி கொண்ட கட்சித் தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட அரசு பேருந்தைப்போல் வீட்டுப் புறக்கடையில் கிடந்தது அந்த ஸ்கூட்டர். யாரிடமாவது அந்த குவியலைக் காட்டி இது முற்காலத்தில் என்னவாக இருந்தது என் யூகித்துக் கூறுங்கள் எனக் கேட்பீர்களானால், சிறிது நேரம் மண்டையை சொறிந்துவிட்டு நெல் அரைக்கும் எந்திரம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த ஸ்கூட்டரின் மேல் யாருடைய கோபப்பார்வை விழுந்திருக்கும் என்று சொல்ல வேண்டிய அவசியம் தேவைப்படாது என்று நினைக்கிறேன்.

மீனாட்சி - ரங்கநாதன் திருமணத்தின் போது, ராமமூர்த்திக்கு (மீனாட்சியின் தந்தை) முதல் முறையாக ஹார்ட் அட்டாக் வந்தது. காரணம். அந்த ஸ்கூட்டர். அது இல்லாமல் திருமணம் நின்றுவிடக்கூடிய அளவிற்கு பிரச்சனை வெடித்துவிட்டது. இறந்த பின் தடபுடலாக காரியங்களை செய்யும் தமிழ் நாட்டில், வித்தயாசமாக ஒரு நண்பர், ராமமூர்த்தியை சாகவிடாமல் காப்பாற்றி, கடன் கொடுத்து, திருமணத்தை நடத்தி முடித்து வைத்தார். அப்பொழுது மீனாட்சிக்கு ஏற்பட்ட கோபம் ஐந்து சதவீதம் தான். அதை பெருமூச்செறிந்து. சற்று கண்ணீர் விட்டு அடக்கிக் கொண்டாள்.

மற்றொரு நாள் பெட்ரோல் இல்லாமல் நின்று போன வண்டியை நடுரோட்டில் நிறுத்தி வைத்துக் கொண்டு ரங்கநாதன், மீனாட்சியிடம் சில கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்.

1. உங்கப்பன் ஸ்கூட்டர்ன்னு சொல்லி இதை வாங்கிக் கொடுத்திருக்கானே, உண்மைய சொல்லுடி இதுக்குப் பேர் என்ன?
2. இது ஸ்டார்ட் ஆகனும்னா, இன்னும் நான் எத்தனை தடவ உதைக்கனும்?
3. (சற்று கடினமான கேள்வி) இந்த ஸ்கூட்டருக்கு பதிலா உன்ன ஒதச்சா ஸ்டார்ட் ஆகும்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற இத பத்தி?

திருமணமான புதிதில் கணவனை எதிர்த்து பேச முடியாத ஒரு மனைவியால் வேறு என்னதான் செய்யமுடியும் அழுவதைத் தவிர. கடைசியில் ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒருவர். வண்டியில் பெட்ரோல் இல்லாததை கண்டுபிடித்து சொன்ன பின்னரும் கூட அந்த முகத்தில் அசடு வழியவில்லை. இது போல் ஒவ்வொரு முறையும் அந்த வண்டி கோளாறடைந்தால், கூடவே இணைந்து ராமமூர்த்தியும் பழுதடைவார்.

எரிமலைகள் என்றாவது ஒருநாள் வெடித்துத் தானே ஆக வேண்டும். மீனாட்சி கொந்தளித்தெழுந்த அந்த நாள்...... அது அவ்வளவு முக்கியமில்லை. அன்று அந்த ஸ்கூட்டர் ஒருரோடு ரோலருக்கு அடியில் மாட்டிக் கொணட கரப்பான் பூச்சியைப் போல.... அதுவும் அவ்வளவு ஸ்வாரஸ்யம் இல்லை. மல்லிகைப் பூவையும், அல்வாவையும் வாங்கிக் கொண்டு அன்றிரவு ரங்கநாதன் கெஞ்சிய கெஞ்சல் இருக்கிறதே அய்யோ....... அதுதான்..... அதுதான்..... சிவப்பெழுத்துக்களால் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம். ரங்கநாதன் வெறும் திரும்பி வரும் பந்தாகிப் போன நாள்.

வாழ்க்கையின் பல விஷயங்களை நிர்ணயிப்பவையெல்லாம் ஆழமான தேவைகள் மட்டும்தான். மான அவமானம், ரோஷம், வெட்கம், கோபம் அனைத்தையும் நிர்யணிப்பவை இந்த ஆழமான தேவைகள் தான். எந்த நேரத்தில் என்னவிதமாக தாக்குதல் நடைபெறும் என்பது தெரியாத சூழ்நிலையிலும், ஒரு தற்காப்புக் கலையைக் கற்றேனும் தனது ஆழமான தேவையை பூர்த்தி செய்து கொள்ள ரங்கநாதன் சற்றும் தயங்கவில்லை. தான் வாங்கும் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு இன்னொரு பெண்..... சற்று அதிகம்.

மீனாட்சியும் சும்மா இல்லை. ஒரு அடிமையை அருகில் வைத்தேனும் வாழ்க்கையை நடத்திவிட துணிந்தவள். தன்னலமற்ற, மேன்மை மிகுந்த, கனிவான, நற்குணம் கொண்ட இன்னொரு ஆடவனைத் தேடிச் செல்ல அவள் என்ன அமெரிக்காவிலா பிறந்திருக்கிறாள். அசிங்கமான, அடிமைப்புத்தி கொண்ட, கனிவில்லாத, சுயநலமிக்க கணவனாய் இருந்தாலும், ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உயரிய குணத்தை கடைபிடிக்கும் கண்ணகி பிறந்த தேசத்தில் பிறந்து விட்டு எப்படி இன்னொரு ஆடவனை................ஓ கடவுளே........ அதை மட்டும் நினைத்து கூட பார்க்க முடியாது. ஏதோ இந்தியாவின் பாரம்பரியத்தை காப்பாற்றும் நல்ல நோக்கத்தோடு, ரங்கநாதனுடன் வாழ்க்கை நடத்தி வருகிறாள்.

இப்பொழுதெல்லாம் ரங்கநாதனின் செயல் வித்தியாசமாய் போய் விட்டது. அதிகாலை நேரத்தில் மீனாட்சி காபி கொடுக்க வரும் பொழுது செய்தித்தாளை எடுத்து தனது முகத்தை மறைத்துக் கொள்கிறார். அப்படியொன்றும் செய்தித்தாளில் முக்கியமான விஷயங்களை படித்துக் கொண்டிருக்கவில்லை அவர். சற்று உற்று பாருங்கள் அவர் செய்தித்தாளை தலைகீழாக பிடித்திருப்பது தெரியும்.

- சூர்யா([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com