Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
வேடம்
பட்டுக்கோட்டை சி.வ.தங்கையன்


சாமிநாதன் தலையைச் சாய்ச்சு படுக்கையில் விழுந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு முடியப் போகிறது. படுக்கையை விட்டு எழும்ப முடியவில்லை என்றாலும் பேச்சில் எந்த தடுமாற்றமும் இதுவரை இருக்கவில்லை. மிகவும் தெளிவாகவே பேசுகிறார். கிராமத்திலுள்ள அவரது மகன்கள் செய்து வந்த வைத்தியம் பலனேதும் தந்ததாய்த் தெரியவில்லை. இந்த நிலையில்தான் நகரத்தில் குடியேறிய அவருடைய கடைசி மகன் திருமுகம், அவரை தன்னுடன் வைத்துக்கொண்டு வைத்தியம் செய்வதாய்ச் சொல்லி நகரத்துக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். திருமுகம் கிராமத்திலிருத்து நகரத்திற்கு வந்திருந்தாலும், நகரத்தில் முன்னணி வியாபாரிகளில் ஒருவர் என்று குறிப்பிடும் அளவிற்கு தனது தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'தன்னோட தகப்பனுக்கு நோவுன்னதும் திருமுகம் ஓடி வந்து கொண்டுகிட்டு டவுனுக்குப் போயித்தான் பாத்தியளா? புள்ளயே பெத்தா இது போலேயல்லவா பெக்கனும்!' என்று ஊரெல்லாம் ஒரே பேச்சு. திருமுகம் யாரையும் எளிதில் வசப்படுத்தி விடுவார். எப்பொழுதும் தன்னைச் சுற்றி துதி பாடும் கூட்டம் ஒன்றை சரிப்படுத்தி வைத்திருந்தார். அந்த கூட்டமும் திருமுகத்தின் பெற்றோர் பாசத்தைப் பெரிதும் புகழ்ந்து பாராட்டிக் கொண்டிருந்தது. இப்படியாக ஊரும் சுற்றமும் திருமுகத்தை உயர்ந்த இடத்தில் ஏற்றி வைத்திருந்தது.

சாமிநாதனுக்கு சிறுநீர்ப் பாதையில் சதை வளர்ந்திருப்பதுடன் காச நோயும் தாக்கியுள்ளதாய் நகரிலுள்ள மருத்துவர் சொல்லிவிட்டார். எண்பது வயதைத் தாண்டிய அவருடைய மெலிந்த உடம்பு அறுவைச் சிகிச்சைக்கு ஏற்றதாய் இல்லை என்றும், காச நோயை குணப்படுத்திவிட்டு அறுவை சிகிச்சை செய்வதுதான் நல்லது என்றும் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டது.

நகரத்திற்கு வந்த பின்னர் சாமிநாதனை திருமுகம் தான் தங்கி இருக்கும் வீட்டில் வைத்திருக்கவில்லை. இதற்கான காரணம் கிழவன் தன் குடும்பத்தினர் உபயோகப்படுத்தும் கழிவறைகளை பயன்படுத்துவதை விரும்பவில்லை என்பதுடன் தனக்கும், தனது பிள்ளைகளுக்கும் காச நோய்ப் பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சமும் திருமுகத்துக்கு இருந்தது என்பது எவருக்கும் தெரிவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே தனியாக ஒரு வீட்டை சொற்ப வாடகைக்குப் பிடித்து ஒரு ஆளையும் சம்பளத்திற்கு அமர்த்தினார். தனது தகப்பானாருக்கு தனது வீடு பிடிக்கவில்லை என்றும், அவரின் விருப்பப்படி தனியாக ஒரு வீடு பிடிக்கவேண்டியதாய்ப் போய்விட்டது என்றும் தன் நண்பர்களை திருமுகம் நம்ப வைத்திருந்தார்.

திருமுகத்தின் கடைகளில் வேலை பார்க்கும் ஆட்களை இரவில் தனது தந்தையுடன் தங்க வைத்தார். தனது மனைவி மக்களுக்கு காசநோய் தாக்கக் கூடும் என்று அஞ்சி தனி வீடு பார்த்த திருமுகம், கடை ஆட்களுக்கு மட்டும் காசநோய் தாக்காது என்று நினைத்தாரா அல்லது அப்படித் தாக்கினாலும் தனக்கு ஏதும் சேதாராமில்லை என்று எண்ணினாரா என்பது தெரியவில்லை.

காச நோய்க்காக வெறும் வயிற்றில் சாப்பிடச் சொல்லும் மாத்திரைகள் சாமிநாதனுக்கு ஒத்து வரவில்லை. வயிற்றைக் குழப்புவதுடன் தலை சுற்றலும் வருவதாய்ச் சொல்லி அவைகளை தவிர்க்க காரணங்களை கண்டுபிடித்து சொல்லிக் கொண்டிருந்தார். இதோடு மட்டுமல்லாமல் அவரைப் பார்க்கப் போகிறவர்களை மடக்கிக் கொண்டு மணிக் கணக்கில் எதையேனும் பேசிக்கொண்டிருபார். எனவே அவரை பார்க்க போகிறவர்கள் கூட ஏதேனும் காரணம் சொல்லிவிட்டு சீக்கிரம் கிளம்பி விடுவார்கள்.

ஆரம்பத்தில் அடிக்கடி தகப்பனாரைப் பார்க்கச் சென்று வந்த திருமுகம் கொஞ்ச மாதங்களுக்குப் பின்னர் உடன் தங்கியுள்ள கடை ஆட்களை விசாரிப்பதுடன் நிறுத்திக் கொண்டார். இது நண்பர்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக நான்கைந்து நாட்களுக்கு ஒரு முறை வேண்டா வெறுப்பாய் தனது தகப்பனாரை சென்று பார்த்து வந்தார். அப்படி இவர் செல்கிறபோது சில நண்பர்கள் உடன் இருக்குமாறு திருமுகம் ஏற்பாடு செய்து கொள்வார்.

தீபாவளி நெருங்கிவிட்டதால் நகரம் கலை கட்டியிருந்த நேரம் திருமுகம் தன் தந்தை இருந்த வீட்டுக்குச் சென்றார்.

"யாரு!... திருமுகமா?" படுத்திருந்த சாமிநாதன் கேட்டார்.

"ஆமாப்பா"

"தீபாவளி என்னைக்கிப்பா?"

"நாளைகுத்தாப்பா."

"திருமுகம் நாளைக்கு என்னை நீ இருக்கிற வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போனியன்னா தேவலே. பேரப் பிள்ளைகளோட இருக்க ஆசையா இருக்கு. அடுத்த வருஷம் தீபாவளிக்கி இந்த பாக்கியம் கிடக்குமாங்கிறது சொல்ல முடியாது" என்று கெஞ்சும் குரலில் கேட்டார் சாமிநாதன்.

"சரிப்பா" நண்பர்களும் உடன் இருந்ததால் திருமுகத்திற்கு சால்சாப்பு சொல்லுவது சாத்தியமில்லாமல் போய்விட்டது. வேறு வழியில்லாது ஒத்துக்கொண்டார்.

அதிகாலையில் தீபாவளிக்கு எண்ணைய் தேய்த்து குளிப்பதற்கு அடம் பிடிக்கும் மகனை திருமுகம் அதட்டிக் கொண்டிருக்கையில் சாமிநாதன் அங்கு அழைத்து வரப்பட்டார். பேரன் செய்யும் அடம் அவருக்குப் பிடித்திருந்தது. சின்னவயசில் தான் செய்ததுபோலவே பேரன் செய்வதாய் நினைத்துக் கொண்டார்.

"ரம்யா எங்கே காணலே?" என்று பேத்தியை விசாரித்தார் சாமிநாதன்.

"அடுப்படியிலே பலகாரம் சுடும் ஒன்னோட மருமவளோட இருக்குது." திருமுகம் சொன்னார்.

பேரனை ஒரு வழியாய் குளிக்கச் செய்தாகிவிட்டது. பேத்தியும் குளித்துவிட்டு வந்தாள். எல்லோரும் புது ஆடைகளை அணிந்து கொண்டார்கள். சாமிநாதனுக்கும் புது ஆடை கொடுக்கப்பட்டது.

"அப்பாவுக்கு பலகாரம் கொண்டுகிட்டு வா" திருமுகம் கட்டளையிட்டார். ஒரு தட்டில் பலகாரங்கள் வந்து சேர்ந்தது.

"தட்டு நிறைய பலகாரம் இருக்கே. இவ்வளவையும் என்னாலே திங்க முடியாது. எல்லாத்தையும் எடுத்துபுட்டு ஒண்ணு ரெண்டைப் போட்டுத் தந்தால் போதும்." என்றார் சாமிநாதன்.

தட்டிலிருந்த பலகாரம் குறைக்கப்பட்டது.

"பேரனையும் பேத்தியையும் என் பக்கத்திலே வந்து உக்காந்து சாப்பிடச் சொல்லு" என்றார் திருமுகத்தைப் பார்த்து சமிநாதன்.

"என்னத்துக்கப்பா. அதுக அப்பறமா சாப்புடும். நீங்க சாப்புடுங்க."

"இந்த பேறு எனக்கு பிற்பாடு கிடைக்கும் என்பது நிச்சயமில்லை திருமுகம். அதுனாலே புள்ளைங்களே கூப்பிட்டு என்னோட பக்கத்துலே உக்கார வச்சு பலகாரத்தை கொண்டாந்து வைக்கச் சொல்லூ."

"நீங்க சாப்புடுங்கப்பா. அதுக அப்பறம் சப்பிடும்" என்று திருமுகம் சொல்லிக் கொண்டிருக்கையில்,

"நான் தாத்தாவோட சாப்புடப் போறேன்." என்று பேரன் வந்து தாத்தாவின் பக்கம் அமர்ந்து கொண்டான்.

"நானுந்தான் சாப்பிடப் போறேன்." பேத்தியும் தாத்தாவின் மறு பக்கத்தில் அமர்ந்து கொண்டது.

"தாத்தாவை தொந்தரவு பன்னக்கூடாது. நீங்க அப்பறம் சப்புடலாம் நீங்கள்ளாம் எழுந்திரிங்க." என்றார் திருமுகம்.

"புள்ளைகளே ஒண்ணும் சொல்லாதே. அதுக ஏங்கூடத்தான் சாப்பிடனும்." என்று சொல்லிக் கொண்டே இரண்டு கைகளையும் விரித்து பக்கங்களில் இருந்த பிள்ளைகளின் தோள்களில் போட்டுக் கொண்டார்.

அசூசை கலந்த முக மாற்றத்தை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் திருமுகம் கவனமாய் இருந்தார். வேறு வழியில்லாததால் பிள்ளைகள் தாத்தாவோடு உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப் பட்டனர்.

சாமிநாதனுக்கு எந்த பலகாரத்தையும் சாப்பிடப் பிடிக்கவில்லை. ஒரே ஒரு பலகாரத்தை எடுத்து வாயில் வைத்துப் பார்த்தார். சின்ன துண்டு பலகாரமென்றாலும் அதை அவர் கொஞ்ச நேரம் மென்று கொண்டிருந்தார். முழுங்க முயற்சித்துப் பார்த்தார். மிகவும் சிரமமாய் இருந்தது. அருகிலிருந்த தண்ணீர்க் குவளையை எடுத்து கொஞ்சம் தண்ணீரைக் குடித்தார். பின் குவளையை கீழே வைத்தார். பேரக்குழந்தைகள் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடுவதை ஆர்வமாய்ப் பார்த்தார். தேவாமிர்தத்தைச் சாப்பிட்ட திருப்தி வந்ததாய் அவருக்குப் பட்டது. சாப்பிட்டுக் கொண்டிருந்த பேரன் தாத்தா குடித்துவிட்டு வைத்திருந்த குவளையை எடுத்து தண்ணீர் குடிப்பதைப் பார்த்த திருமுகம்,

"டேய்...டேய்...ஏன்டா அந்த தண்ணியே குடிக்கிறே?" என்ற திருமுகம் குவளையை பிடுங்கிவிட முயன்று, என்ன நினைத்தாரோ நிறுத்திக் கொண்டார்.

பின்னர் சாமிநாதன் அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டார். சாப்பிட முடியாவிட்டாலும் சாப்பிட்ட திருப்தியோடு சென்றாலும், இந்நேரம் கிராமத்திலுள்ள தனது மற்ற மகன்கள் எப்படி பண்டிகையைக் கொண்டாடுகிறார்களோ என்ற ஆதங்கம் அவருக்கு இல்லாமல் இல்லை.

சாப்பிட்டு முடித்த பின்னர் பிள்ளைகள் பட்டாசுடன் வெளியே சென்றார்கள். அதன் பின் திருமுகம் தன் மனைவியை அழைத்து கடுமையாக கண்டித்துக் கொண்டிருந்தார்.

"ஏன்டீ..., ஒனக்கு கொஞ்சங் கூட அறிவு இல்லையா?"

"எதுக்குங்க நல்ல நாளும் பெரிய நாளுமா இப்புடி நீங்க சத்தம் போடுறீங்க?"

"கெழவன் குடிச்சுபுட்டு வச்ச தண்ணியே எடுத்து நம்ம கடங்கார பய!... அதுதான் ஒன்னோட மகன் குடிச்சதை நீ பாத்தியா இல்லையா?"

"அதுக்கு என்னாங்க?"

"கெழவனுக்கு டி.பி இருக்கிறது ஒனக்கு தெரியுமில்லே. அது ஒட்டுவார் ஒட்டி என்பது தெரியாதா?"

"தெரியும். கொஞ்சுனூன்டு தண்ணீயிலேத்தான் இப்ப ஒட்டிகிட்டு வந்துடுதாக்கும்."

"அறிவு கெட்டவளே. கெழவன் இருக்கிற வீட்டுப் பக்கம் நான் போறத்துக்கே யோசனை பண்ணுறேன். அங்கே ஊருலே இருக்கிறவனுகளெல்லாம் இங்கே கொண்டாந்து தள்ளிபுட்டு நிம்மதியா இருக்குறானுக. வளர்ற புள்ளைக இருக்கிற எடமுன்னு கொஞ்சமும் நெனைக்க மாட்டேனுட்டானுங்க. ஒனக்கும் இது புரிய மாட்டேங்குது."

"ஏங்க...சொந்த அப்பாங்க உங்களுக்கு. என்னென்னவெல்லாமோ பேசுறீங்களே இது அடுக்குமாங்க."

"எனக்கு நீ போதிக்க வந்திருக்குறியா? நாயே பொத்திக்கனும் தெரியுமில்லே." திருமுகம் சீறினார்.

திருமுகத்தின் மனைவி வாயைப் பொத்திக் கொண்டாள். நீருக்குள் அமுக்கி வைத்திருக்கும் பந்தின் மீது செலுத்தப்படும் முயற்சி எதிர்பாராமல் தளர்த்தப்படும்போது, நீரின் மட்டத்திற்கு அது குதித்து வருவதைப் போல, அடி மனதில் அமுக்கப்பட்டிருக்கும் சங்கதி, சில தருணங்களில் முட்டிக்கொண்டு வெளி வரத்தான் செய்யும்! அடுத்தவர் தன்னைப் புகழவேண்டும் என்ற ஆசை முளை விடும்போதே பாசங்கள் கூட வேஷங்களாய் வேடந்தரித்து விடுகிறதே!

திருமுகத்தின் மறுமுகத்தைத் தெரியாத அவருடைய உறவினர்களும், நண்பர்களும், ஊரார்களும் திருமுகத்தின் பெற்றோர் பாசத்தை வியந்து பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.

- பட்டுக்கோட்டை சி.வ.தங்கையன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com