Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
அம்ருதாவின் புதிர் வட்டங்கள்
சித்தாந்தன்


அம்ருதா தன்னிடமிருந்து என்னிடம் வந்திருந்தாள். அவளது பார்வையில் ஓரிரு பறவைகள் சிறகடித்துப் பறந்தபடியே இருக்கும். எனக்கும் அவளுக்குமான விவாதங்கள் சொற்களின் உச்சத் தொனியில் நிகழத் தொடங்கினாலும் எல்லாம் பூச்சியத்தில்தான் போய் முடியும். பூச்சியத்திலிருந்து ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்து அவமானத்தால் தலைகுனிவோம் அல்லது மீளத் திரும்பாத புன்னகைகளைக் காற்றில் எறிவோம். பிறகு எதுவுமே நடக்காதது போலப் பாசாங்கு செய்யத் தொடங்கி விடுவோம்.

Circles கடலின் கரை அலைகளால் துடைத்தழிக்கப்பட்டுக் கொண்டிருந்து. யுகங்களாத் தொடரும் இந்தத் துடைத்தழிப்பை அன்றுதான் பார்ப்பவள் போல் அம்ருதா அமர்ந்திருந்தாள். அநேகம் சந்தடியில்லாத கடற்கரையையும் சனங்கள் நிரம்பி வழியும் கடற்கரையாகவே அவள் பாவனை செய்வாள். ஏதும் பேசாமல் மௌனித்திருந்தவள் தன் சுட்டுவிரலினால் மணலில் வட்டம் ஒன்றை வரைந்தாள். அந்த வட்டம் நெளிந்த கோடுகளாலான போதும் அவளது வட்டம் வட்டமாகவே இருப்பதாய் பெருமிதப்பட்டிருக்கக்கூடும். திடீரென கேட்டாள்

‘‘நீ வட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்’’ நான் அவளது கேள்வியின் உள்ளர்த்தம் பிடிபடாமல்

‘‘எந்த வட்டம்’’ என்றேன்.

‘‘பொதுவாக வட்டம்’’

‘‘பொதுவாக எல்லாத் தளவடிவங்களை விடவும் வட்டம் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்’’ என்றேன்.

‘‘அவ்வளவுதானா’’

‘‘ஆம்’’

சற்று நிலைத்த மௌனத்தின் பிறகு நிதானமாக அவள் சொன்னாள் ‘‘வட்டம் என்பது நேர்த்தியான கோடுகளோ வெறும் அழகோ அல்ல அதனது உள்ளார்ந்த அர்த்தம் பல பரிமாணங்களையுடையது. நீ எல்லாவற்றையும் நேர்ப் பொருளாய்ப் பார்த்துப் பழகியவன் உன்னிடத்தில் ஆழ்ந்த கருத்துக்கள் தோன்றாது’’

மிகவும் பெரிதான அலையொன்று எழுந்து வந்து எங்கள் கால்களைக் கழுவிக் கொண்டு வட்டத்தையும் உள்ளிழுத்துப் போனது. அவள் கடலைக் கூர்ந்து கவனித்தபடியிருந்தாள். அவளது கண்களில் ஓரிரு பறவைகள் சிறகடித்துப் பறந்தபடியிருந்தன. அவள் சொன்னாள் ‘‘நீயும் இந்தக் கடலின் அலையும் ஒன்றுதான்’’

‘‘ஏன்’’

‘‘இலகுவாக எல்லாவற்றையும் மூழ்கடித்து விடுகிறது அலை உன்னைப் போலவே. எதன் வலியையும் வேதனையையும் புரிந்து கொள்ளும் மனம் அலைகளிடமும் இல்லை உன்னிடமும் இல்லை’’.

நான் எப்போதும் என்னை அலைக்கழித்தபடியேயிருக்கும் ‘‘அலைகளைச் சொல்லிப் பிரயோசனமில்லை கடல் இருக்கிறவரை’’ என்ற நகுலனின் கவிதையைச் சொன்னேன்.

அவள் சித்தப் பாவனையில் கண்களை மூடித்திறந்தவளாய்ச் சொன்னாள் ‘‘நகுலனின் கவிதை அலைகள் பற்றியதல்ல கடல் பற்றியது. உன்னுடைய பார்வை அலைகளை நியாயப்படுத்துவது’’

‘‘இல்லை. அது அலைகளையும் பற்றியது. உன் வட்டத்தை இழுத்துப் போனது கடலின் அலைகள்தான். நீ கடலையும் அலைகளையும் வேறுபடுத்துகிறாய். கடலின் கொந்தளிப்புத்தான் அலைகள். உனது மனதின் வலியை வாதையை வார்த்தைகள் பிரதிபலிப்பது போல கடலின் சொற்கள்தான் அலைகள்’’ என்றேன்.

‘‘நகுலன் எல்லாக் குற்றங்களையும் கடலின் மீதுதான் குவிக்கிறார் அலைகள் மீதில்லை’’

‘‘அம்ருதா எல்லாவற்றையும் நேர்ப் பொருளாய்ப் பார்ப்பவள் நீதான். என்னுடைய பார்வையில் நேர்த்தியும் அழகும் தொனிக்கின்றன. உனது பார்வையில் ஒன்றுமில்லை வெறும் சூனியம்’’

அவளது கண்களில் ஓரிரு பறவைகள் சிறகடித்துப் பறந்தபடியிருந்தன. மிதமான மௌனத்தினால் அலைக்கழிக்கப்பட்டவள் போலானாள். எழுந்து கடற்கரையில் பாதங்களைப் பதிக்கத் தொடங்கினாள். பிறகு வந்தமர்ந்து கொண்டு தனது பாதச் சுவடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சற்றுக்கெல்லாம் ஒரு அலைவந்து அவளது பாதச் சுவடுகளை இழுத்துச் சென்றது. அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். அவளது பார்வை தன் கருத்தை மீளவும் வலியுறுத்துவது போலிருந்தது. எழுந்து நடக்கத் தொடங்கினாள்.

இன்று அம்ருதாவிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. ஒரு வீட்டுக்குள் வாழ்பவர்கள் கடிதம் மூலம் கருத்துப் பரிமாறுவது வேடிக்கையானதுதான். கடிதத்தை அவசரமாகப் பிரித்தேன். அதில் வார்த்தைகள் காணாமற் போயிருந்தன. வெள்ளைத்தாளின் மையத்தில் பெரிதாய் புள்ளியிட்டு வரையப்பட்ட வட்டமிருந்தது. வட்டத்தின் உள்ளே ஒரு மனித உருவும் விளிம்பில் இன்னொரு மனித உருவும் வரையப்பட்டிருந்தன. உருவங்கள் இரண்டிற்கும் ஆண் பெண் பேதம் தரப்பட்டிருக்கவில்லை.

உண்மையில் அந்த வட்டமும் இரண்டு உருவங்களும் ஏதோ ஒரு புதிர்க்கணக்கை எனக்குத் தந்து விட்டு விடையை அவிழ்க்கும்படி நிர்ப்பந்திருப்பது போலிருந்தது. கடிதம் என் கரம் கிடைத்த கணத்திலிருந்து அம்ருதாவின் செய்கைகள் ஒவ்வொன்றும் விசித்திரமானவையாக இருந்தன. சூரியனுக்கு கீழே நின்று கடலை வெறிப்பவள் போல இருந்தாள். காற்றின் அனைத்துப் பரிமாணங்களையும் உள்வாங்கியவளைப் போல அறையெங்கும் சுற்றித் திரிந்தாள். யன்னல்களைச் சாத்துவதும் திறப்பதுமாயிருந்தாள். வானொலியை அதன் ஒலி எல்லைவரை கூட்டி வைத்திருந்தாள். தனக்குத் தெரிந்த பாடல் வரிகளையெல்லாம் பாடிக் கொண்டு திரிந்தாள். முக்கியமாக என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தாள். நான் திசைகளில் அலைந்தவனைப் போல களைப்புறத் தொடங்கியிருந்தேன்.

அம்ருதாவுடனான எனது வாழ்க்கையிலிருந்துதான் அவளது புதிர்க்கடிதத்தின் வாசல்களைத் திறந்து கொண்டேன். அவளது கடிதத்திற்கு இரு வேறு விளக்கங்களை என்னால் பெற முடிந்தது.

1. அம்ருதா வட்டத்தின் உள்ளே வரைந்திருப்பது தன்னை என்றால் விளிம்பில் வரைந்திருப்பது என்னை.

விளக்கம் - வட்டத்தினுள் இருக்கும் தான் தன் உறவுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வட்டத்துள் அடைபட்டவளாய் வாழ்வதாயும் வட்டத்தின் விளிம்பில் நிற்கும் நான் தன்னை வேடிக்கை பார்க்கும் அதே சமயம் என்னைச் சூழ்ந்திருக்கும் உறவுகளுடன் மகிழ்ந்திருப்பதாகவும் கருத இடந்தருகிறது.

2. அம்ருதா வட்டத்தின் உள்ளே வரைந்திருப்பது நான் என்றால் விளிம்பில் வரைந்திருப்பது தன்னை.

விளக்கம் - வட்டத்தினுள் இருக்கும் நான் என் பார்வையை வட்டத்தினுள்ளேயே சுருக்கி வைத்திருப்பதாகவும் வெளியுலகம் எதுவுமே தெரியாதவனாய் என் கருத்துக்கள் மட்டுமே சரியென முரண்டு பிடிக்கும் கினற்றுத் தவளை வாழ்க்கையை வாழ்வதாகவும் தான் விளிம்பில் நின்றுகொண்டு வட்டத்துள் இருக்கும் என்னையும் பரந்து விரிந்த உலகையும் புரிந்து கொண்டவளாக இருப்பதாகவும் கருத இடந்தருகிறது.

அம்ருதாவின் புதிருக்கான என் விடையவிழ்ப்பு எந்த வகையில் சரியானது என என்னால் உறுதியாகக் கூற முடியாத போதும் வாழ்பனுபவங்களின் அடிப்படையில் அம்ருதா கருதியது இவற்றில் ஒன்றாக இருக்கலாம் அல்லது இரண்டுமாகவும் இருக்கலாம்.

அம்ருதாவை நான் ஒரு மழைக்காலத்தில் சந்தித்தேன். அப்போதவள் எண்ணற்ற வட்டங்களை வரைந்தபடியிருந்தாள். வட்டங்களுக்கென்றே ஒரு குறிப்புப் புத்தகத்தை ஒதுக்கி ஓய்வு நேரங்களிலெல்லாம் வட்டங்களை வரைந்தாள். நான் அவளுடன் உரையாடலைத் தொடங்கிய போது தூறலிட்டுக் கொண்டிருந்த மழை பெரு மழையாகக் கொட்டத் தொடங்கியது. அம்ருதா குமிழியிட்டுடையும் மழைக் குமிழிகளை கூர்ந்து பார்த்து அவற்றைத் தனது குறிப்பு புத்தகத்தில் வரைந்து கொண்டிருந்தாள். அம்ருதா........என்றேன். அவளதைப் பொருட்படுத்தவில்லை. அந்த ஒற்றைச் சொல் மழைக் குமிழி போலவே உடைந்து போனது. நான் அவளது கண்களின் புதிர் அசைவுகளில் மெல்ல மெல்ல கரையத் தொடங்கினேன். மழை இன்னும் பெருமழையாகிக் கொண்டிருந்தது.

அம்ருதா.... என்றேன் மறுபடியும்.

அவள் வட்டங்களிலிருந்து விடுபட்டு என்னிடம் வந்தாள். அவளின் கண்களில் ஓரிரு பறவைகள் சிறகடித்துப் பறந்தன. பரவசம் திளைக்கும் அந்தக் கணத்தில் ஒரு பறவையை வருடிக் கொடுக்கும் இதத்துடன் என்ன என்றாள்.

‘‘நீ ஏன் வட்டங்களையே எப்போதும் வரைந்து கொள்கிறாய்? வட்டங்கள் மீது என்ன அவ்வளவு ஈர்ப்பு?’’ என்றேன்.

அவள் தனக்கே உரித்தான சிரிப்பை சில கணம் உதிர்த்தவளாய் ‘‘வட்டங்கள் புதிர் நிரம்பியவை அதனால்த்தான் வரைகிறேன்’’ என்றாள்.

‘‘வட்டங்களில் அப்படியென்ன புதிர்கள் நிறைந்து கிடக்கின்றன?’’

அவள் சற்று மௌனமானாள். பிறகு சொன்னாள் ‘‘வட்டத்தின் மையமும் விளிம்பும் புதிர்களாலானவை’’

‘‘அப்படி என்ன புதிர் மையத்திலும் விளிம்பிலும் இருக்கிறது’’

‘‘வட்டத்தின் விளிம்பு எதில் தொடங்கி எதில் முடிகிறது என உன்னால் கூறமுடியுமா? வட்டத்தின் மையம் வட்டத்தின் விளிம்பை கண்ணுக்குப் புலப்படா வகையில் ஈர்த்து வைத்திருப்பதை உன்னால் உணர முடிகிறதா?’’

வட்டம் பற்றிய எனது பார்வையை அவளின் கேள்விகள் மீள்பரிசீலனை செய்ய வைத்தன. அவளோ மேலும் வட்டங்களை வரைந்தபடியிருந்தாள். ஓவ்வொரு வட்டமும் கண்ணுக்குப் புலப்படா மையங்களைக் கொண்டிருந்தன. அவளே பேச்சைத் தொடர்ந்தாள்.

‘‘என்ன மௌனமாக இருக்கிறாய்?’’

‘‘புரியவில்லை’’

‘‘எது புரியவில்லை’’

‘‘உனது வட்டங்கள் பற்றிய வாதங்களும் வட்டங்கள் மீதான உனது ஈர்ப்பும்’’

‘‘இதில் உனக்குப் புரிந்து கொள்ள என்ன இருக்கிறது. எனக்குப் புரிந்து கொள்கிறது நான் வரைகிறேன். உனக்குப் புரியாத போது புரியாமல் இருப்பதுதான் நல்லது. புரியும் போது புரிந்து கொள்வாய்.’’

‘‘எதைப் புரியும் போது’’

‘‘வாழ்க்கையை’’

‘‘வாழ்க்கைக்கும் வட்டத்திற்கும் என்ன தொடர்பிருக்கிறது’’

‘‘அதை வாழும் போதுதான் புரிந்து கொள்வாய்’’

‘‘அப்படியென்றால்’’

‘‘வாழ்க்கையை வாழும் போது’’

அவள் தனது குறிப்புப் புத்தகத்துடன் எழுந்து நடக்கத்தொடங்கினாள். அவளது பாதங்கள் வட்டப் பாதையில் நடந்து கொண்டிருப்பதாய் எனக்குப் பட்டது. வட்டப் பாதையின் மையத்தில் நின்றபடி வாழ்க்கை என்ற ஒற்றைச் சொல்லை சுமந்து கொண்டிருந்தேன். அதன் கனம் தோள்களில் இறங்கி பாதங்களை வலி கொள்ள வைத்தது. அவ்விடத்தின் நிலக் காட்சிகள் கரையத் தொடங்கவும் நான் நடக்கத்தொடங்கினேன். எனது பாதச் சுவடுகள் வட்டப் பாதையில் என்னைச் சுற்றியே நடந்தபடியிருப்பதான மனப்படிவு கவிந்தது. நான் நடந்தபடியேயிருந்தேன். என்னிடமிருந்து என்னிடம் வருவதற்குள் மீண்டும் நிலக் காட்சிகள் மாறத் தொடங்கின.

நான் இரவின் புதிர்களாலான பாதைகளில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அம்ருதா இரவின் அடர் வனத்திலிருந்தபடி கனவுகளின் இழைகளைப் படச் சுருள்களாக இழுத்துக் குலைத்தபடியிருக்கிறாள். இரவின் அடர்வனம் அவளது கண்களின் ஒளியில் மின்னுகின்றது. நான் புலன் ஒடுங்கி மூர்ச்சையாகிக் கிடக்கிறேன். இராட்சதப் பல்லியொன்று உரத்துச் சொல்லுகிறது. ச்...ச் சகுணம் தப்பிய ஆத்திரத்தில் அம்ருதா பல்லியைச் சபிக்கிறாள். அது வாலை அறுத்துவிட்டு இருளாகிக் கரைகிறது. இருளின் திரவம் என் மீது படர நான் விழிக்கிறேன். வானொலியின் சத்தம் காதைப் பிளக்கிறது. இன்னும் அழுத்தமான குரலில் அவள் பாடிக் கொண்டேயிருக்கிறாள்.

அம்ருதாவின் புதிர்க் கடிதத்துக்கான பதிலை நான் எழுதப் போவதில்லை. எனது எந்தப் பதிலும் அவளை திருப்தியுறச் செய்வதுமில்லை. என்னால் செய்ய முடிந்தது ஒன்று மட்டுந்தான். அறையின் யன்னல்களும் கதவுகளுமற்ற சுவர்களில் பெரிய பெரிய வட்டங்களை வரைந்தேன். வெறும் வட்டங்கள் எனினும் வீடு முழுவதும் வட்டங்களாற் சூழப்பட்டதான பிரமையிலிருந்தேன். வட்டங்களின் மையங்கள் ஒவ்வொன்றிலும் நானும் அம்ருதாவும் கைகளால் வாய்களைப் பொத்தியபடி முழங்காலில் முகம் புதைத்திருப்பதாய் நினைத்துக் கொண்டே உறங்கிப் போயிருந்தேன்.

மறுநாட் காலையில் விழித்தெழுந்து வட்டங்களைப் பார்த்தேன். ஓவ்வொரு வட்டங்களுக்குள்ளும் ஒவ்வொரு சிறு வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. அம்ருதா இரவு விழித்திருந்து அவற்றை வரைந்திருந்தாள். கோடுகள் ஒன்றின் மேல் ஒன்றாக பல தடவைகள் வரையப்பட்டிருந்தன. தவிரவும் கோடுகள் நேர்த்தியற்று வளைந்தும் இருந்தன. அவை நித்திரைக் கலக்கத்தோடு வரையப்பட்டவையாக எனக்குத் தோன்றியது.

அம்ருதா என்னை அவிழ்க்க முடியாத புதிர்களை நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கிறாள். ஒரு புதிரை இன்னொரு புதிரால் மூடுகிறாள். புதிர்களின் இராணியைப் போலவே இருக்கிறாள். அம்ருதா போடும் புதிர்களெல்லாம் வட்டங்களாலேயே போடப்படுகின்றன. அவளது புதிர்கள் பலவும் எனது மூளையை அனலாக்குபவை அல்லது மனதை ஆறுதலற்று வாழ்க்கையின் தடங்கள் முழுவதிலும் மீள நடந்து அலைக்கழிய வைப்பவை.

நான் அவளது படுக்கையறைக்குச் சென்று பார்த்தேன். அவள் குழந்தையைப் போல உறங்கிக் கொண்டிருந்தாள். அவளது கண்களில் ஓரிரு பறவைகள் உறங்கிக் கொண்டிருப்பது போலிருந்தது. அறையின் மங்கலான பசிய ஒளி அவளைப் புதிர்களின் இராணிபோலவே பிரதிபலித்தது. அவள் இடையிடையே சிரித்தபடியே உறங்கிக் கொண்டிருந்தாள்.

பூக்களும் புலரத்தொடங்காத அந்தக் காலையில் நான் நெடுஞ்சாலை வழியே நடந்து கொண்டிருந்தேன். புருவங்களுக்குள் விழியேறி பெரு வட்டமாகப் பாதைகள் வளைந்து சுழல பாதையில் விழுந்தேன். வாலறுந்த பல்லி என் உச்சந் தலையில் விழுந்து துள்ளி நின்றது. அம்ருதா இல்லாத எனது பயணத் தெருக்கள் வட்டங்களாகச் சுருங்கிவிடுகின்றன. திரும்பவும் திரும்பவும் ஒரு பாதையிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன். எண்ணிச் சொல்ல முடியாதத் தடவைகள் வாலறுந்த பல்லியையே சந்தித்துக் கொண்டுமிருக்கிறேன்.

பல்லி இரண்டு கால்களில் எழுந்து நின்ற படி இராட்சதக் கால்களால் சாலைகளை மிதித்து ஓடுகிறது. அதன் கால் பதித்த தடங்களில் கரிய நீரூற்றுச் சுரக்கிறது. அது பெருகி கறுப்பு நதியாக என்னை நோக்கி ஓடி வருகின்றது. நான் பதற்றத்துடன் எழுந்தோடுகின்றேன். அன்றைய மாலையில் பூக்கள் உதிர்ந்து சருகாகிக் கொண்டிருந்தன.

நான் வரைந்த பெரிய வட்டங்களுக்குள் அம்ருதா வரைந்த சிறிய வட்டங்கள் குறித்து என்னால் இரண்டு அபிப்பிராயங்களை முன் வைக்க முடிகின்றது.

1. நான் வரைந்த பெரிய வட்டங்கள் நான் என்றால் அம்ருதா வரைந்த சிறிய வட்டங்கள் அவள்.

விளக்கம் - என்னைப் பெருவட்டமாகக் காணுமவள் நான் தன் இருப்பை மறுப்பதாகவும் என் ஆளுமையின் கீழ் தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும் தன் சுயத்தை தனக்கான அடையாளத்தையிழந்து எனது ஆட்படுகையிலிருந்து வெளியேற முடியாதிருப்பவளாய் உணர்வதாகவும் எத்திசை நோக்கி நடந்தாலும் என் வட்ட விளிம்புகளில் மோதி ஒரு பந்தைப் போல தான் அலைக்கழிக்கப்படுவதாகவும் அவள் கருத இடந்தருகிறது.

2. நான் வரைந்த பெரிய வட்டங்கள் அம்ருதா என்றாள் அவள் வரைந்த சிறிய வட்டங்கள் நான்.

விளக்கம் - தன்னை பெரு வட்டமாகக் காணுமவள் தன்னைத் திமிர் மிக்க பெண்ணாகவும் எனது எல்லாச் செயற்பாடுகளையும் தானே வடிவமைப்பவளாகவும் குறிப்பாக என்னை எனது உறக்கங்களிலிருந்து துரத்துபவளாகவும் என் கனவுகளைக் குலைப்பவளாகவும் எப்போதும் எனக்குக் கட்டளைகளைப் பிறப்பிப்பவளாகவும் நான் தனக்குச் சேவகம் செய்ய வேண்டியவனாக் இருப்பதாகவும் கருத இடந்தருகிறது.

எனது இந்த அபிப்பிராயங்களும் அம்ருதா கருதியவற்றிற்கு ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம்.

கோடையின் அனல் தெருக்களில் படிந்திருந்த மதியத்தில் அம்ருதாவின் அறைக்குச் சென்றிருந்தேன். சாத்தப்பட்டிருந்த கதவை தட்டிக்கொண்டிருந்தேன். அவள் பதற்றத்துடன் கதவைத் திறந்து என்னை ஏறிட்டாள். அவளது உதடுகளில் மலர்ச்சி வழியவில்லை. கண்களில் இரண்டு பறவைகள் குறுகிக்கிடந்தன. உள்ளே வரும்படி சைகை செய்தவளாய்

‘‘என்ன இந்த நேரத்தில்’’ என்றாள்.

சட்டைப் பையிலிருந்த காகிதத்தை எடுத்து அவளிடம் நீட்டினேன்.

‘‘என்ன இது’’

‘‘நான் வரைந்த வட்டங்கள்’’

அவளதைப் பிரித்துப் பார்த்தாள். மறுகணம் என் கைகளில் அதை அழுத்தித் திணித்துவிட்டு ‘‘என்ன பைத்தியக்காரத்தனம்’’ என்றாள்

‘‘எது பைத்தியக்காரத்தனம்?’’

‘‘ஏன் சதுரத்துக்குள்ளும் சதுரத்தின் உச்சிகளைத் தொடுமாறும் வட்டங்களை வரைந்திருக்கிறாய்’’

‘‘இவை உள்வட்டங்களும் வெளிவட்டங்களும்’’

‘‘வட்டத்தில் என்ன உள்வட்டம் வெளிவட்டம் வட்டம் வட்டந்தான்’’

‘‘வட்டத்தின் விளிம்பு சதுரத்தின் விளிம்புகளைத் தொடுமாறு வரைவது உள்வட்டம். சதுரத்தின் உச்சிகளைத் தொடுமாறு வரைவது வெளிவட்டம்’’.

அவள் கண்களைச் சில தடவைகள் இமைத்தாள். இரண்டு பறவைகள் சிறகடித்தபடியிருந்தன.

‘‘நீ வட்டத்தின் முழுமையைச் சிதைக்கிறாய் அதை சதுரத்தினுள் அடைத்து அதன் பரிமாணங்களை மூடுகிறாய்’’ என்றாள்.

‘‘நான் வட்டங்களை வரைந்திருக்கிறேனே தவிர பரிமாணங்களை வரையவில்லை. பரிமாணம் என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது’’

‘‘அப்படியில்லை வட்டங்களை வரையும் போது பரிமாணங்களையும் நீ முன் வகுக்க வேண்டும்.’’

‘‘வட்டத்தின் பரிமாணம் வட்டத்திற்குரியது. எனது பரிமாண வகுப்பை வட்டத்தின் மீது திணிக்க முடியாது.’’

‘‘அப்படியென்றால் வட்டம் வரையும் நீ யார்?’’

‘‘நான் கருத்தா’’

‘‘கருத்தாவுக்குரிய கடமை வட்டங்களை வரைவது தானா?’’

‘‘ஆம்’’

‘‘நீ கருத்தாவல்ல வெறும் ஜடம். ஜடத்திடமிருந்து கருத்துக்கள் பிறப்பதில்லை.’’

அம்ருதா வார்த்தைகளால் வெடிக்கத் தொடங்கிளாள். அவளது சொற்கள் மின்னலாய்த் தெறித்தன.

வார்த்தைச்சுழல் வட்டம் புயலாகக் கிளம்பி அந்தப் பொழுதை இழுத்தடித்த வண்ணமிருந்தது.

‘‘அம்ருதா உன் வார்த்தைகளில் நிதானம் உலரத் தொடங்கிவிட்டது’’ என்றேன்.

‘‘என் வார்த்தைகளில் நிதானமும் அர்த்தமும் இருக்கின்றன.’’

‘‘நீ பாசாங்கு காட்டுகிறாய் அர்த்தமற்ற சொற்களை நோக்கி என்னை இழுக்கிறாய்.’’

‘‘நான் அர்த்தமற்ற சொற்களை நோக்கி இழுக்கவில்லை வாழ்க்கையின் பரிமாணங்களை நோக்கி உன்னைத் திருப்புகிறேன்.’’

‘‘வாழ்க்கையின் பரிமாணங்களை நீ எனக்குப் புரிய வைக்கத் தேவையில்லை’’

அம்ருதாவின் அறையிலிருந்து வெளியேறினேன். கொழுத்தும் கோடையின் அனல் முகத்தில் எரிந்து கொண்டிருந்தது. முடிவற்ற தெருக்களில் அலைந்து திரிந்தேன். மாலையானதும் வெறுப்புணர்வு படிந்த மனத்துடன் என் அறையை அடைந்தேன். அறைக் கதவில் செதுக்கப்பட்டிருந்த வட்டங்கள் கதவிலிருந்து இறங்கி தரையெங்கும் பரந்து கிடந்தன. அவற்றைப் பொறுக்கி மீண்டும் பொருத்தத் தொடங்கினேன். வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி பறக்கத் தொடங்கின. அவை வண்ணத்துப்பூச்சிகளின் சாயலிலும் கருங்குழவியின் சாயலிலுமாகப் பறந்தபடியிருந்தன.

வாலறுந்த பல்லி அறைச்சுவர்களில் குதித்துக் குதித்து ஓடித்திரிகிறது. முன்பு அதற்கு வாலிருந்ததிற்கான தடையமும் அற்றிருந்தது. அதன் ரேகைகள் சுவர் முழுதும் படிந்திருந்தன. அழுத்தமான அதன் ரேகைகளில் கனவுகளின் கரிய குரல் முனங்கிக் கொண்டிருந்தது. குரல்களின் அதிர்வில் சுவர் மெல்ல மெல்ல வர்ணமிழக்கத் தொடங்கியிருந்தது. சுவரின் வர்ணங்கள் உதிர்ந்து புழுதியாச் சுழல ஆரம்பித்தன. புழுதி அறைகளைத்தாண்டி வீடு முழுமையுமாகப்படர்ந்து அடங்குகையில் கரியதான புழுதி கடலாகியது. கடலில் நானும் அம்ருதாவும் மிதந்தபடியிருக்கிறோம். வாலறுந்த பல்லி அகாலத்திலிருந்து குரலெழுப்பத் தொடங்கியது. ச்.....ச்... பல்லியின் குரலால் சகுணந்தப்பியதாய் கோபத்தில் அம்ருதா சபிக்கத் தொடங்கினாள். பல்லி கரிய கடலில் குதித்தெழுந்தது. அதன் உடல் முழுதும் வட்ட வட்டமாகச் செதில்கள் முளைத்திருந்தன. செதில்கள் சேர்ந்து இறக்கைகளாக பல்லி பறக்கத் தொடங்கியது. கடல் வற்றிய கருஞ் சேற்றில் புதைந்து கிடந்தோம் நானும் அம்ருதாவும்.

வெள்ளிக் கிழமைகளில் வீடடின் முற்றத்தில் கோலம் போடுவதை அம்ருதா வழக்கமாகவே கொண்டிருக்கிறாள். அவளது கோலங்கள் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகவே இருக்கும். அவளுக்கும் எனக்கும் எவ்வளவோ முரண்பாடுகள் இருந்த போதும் அவளைப் பாராட்டுவதான வார்த்தைகளைப் போகிற போக்கில் காற்றில் மிதக்கவிடுவேன். ஆனால் அவளிடமிருந்து எந்தப் பதிலும் வெளிவராது. நானும் எதிர்பார்ப்பதுமில்லை. கோலத்தின் கோடுகளின் நேர்த்தியும் வளைவுகளும் முற்றத்தை புத்தெழிலுடன் மினுங்க வைக்கும். வீட்டுக்கு வருவோர்கள் கோலத்தை மிதித்தழித்து விடாதிருக்க கடும் வர்ணங்களால் கோலத்தைப் போடுவாள். கண்களை ஆக்கிரமிக்கும் அந்த வர்ணங்கள் வருவோரை நிதானப்படுத்தும்.

அம்ருதாவின் கோலத்தை வீட்டுக்கு வரும் எவரும் பாராட்டாமல் விட்டதில்லை. அவளைக் கோலக் கலையின் நிபுணியாகவே எல்லோரும் கூறினார்கள்.

இம்முறை அம்ருதா வரைந்த கோலம் விசித்திரமாக இருந்தது. வழமையாக எந்தக் கோலத்திலும் வட்டங்களை அவள் பயன்படுத்துவதில்லை இன்றைய கோலம் அவள் தனது விதியை மீறிவிட்டதாகவே எனக்குத் தோன்றியது. கோலத்திலும் தனது புதிர் விளையாட்டைத் தொடங்கியிருந்தாள்.

இரண்டு வட்டங்களை ஒன்றுடன் ஒன்று பொருந்தும்படி வரைந்திருந்தாள். ஒரு வட்டத்தின் விளிம்பை மற்றைய வட்டத்தின் விளிம்பு தொடுவது போலவும் தொடாதது போலவும் கருதுமாறு வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. உள்வட்டத்தை வெளிவட்டம் சிறைப்பிடித்து வைத்திருப்பது போல அவளது கோலம் அமைந்திருந்தது.

இந்தக் கோலம் முற்றத்தின் அழகு முழுமைiயும் தின்றுவிட்டிருந்தது. முற்றம் ஒரு பாலைவனமாகியிருப்பதான பிரமையைத் தோற்றுவித்தது. வீட்டுக்கு இம்முறை எவரும் வரவில்லை. அது அம்ருதாவின் விம்பத்தை உடைய விடாமல் காத்துக்கொண்டிருந்தது. அவளும் யாரையும் எதிர்பார்க்கவுமில்லை. வழமைக்கு மாறாக வீடு அமைதியில் ஊறிக்கிடந்தது.

இந்த வட்ட அடுக்குக் கோலம் பற்றி நான் பலவாறும் பல வழிகளில் பல தடவையும் யோசித்தேன். கோலத்தின் மூலம் அவள் எனக்கு உரைக்கும் செய்திகள் எவை? அவற்றின் பரிமாணங்கள் எத்தனை? எண்ண இழைகளில் இழுபட்டபடியே அலைந்தேன்.

சர்வசாதாரணமாக வாலறுந்த பல்லி வீட்டின் வரவேற்புக்கூடத்தில் அமர்ந்திருந்தது. அதன் கருத்து முழுமையிலும் எது நிறைந்திருந்ததோ தெரியவில்லை. திடீரென எழுந்து கூத்தாடத் தொடங்கியது. பிரபஞ்சம் புரண்டசையும் கூத்து. ஆட்டத்தின் வேகத்தில் அதனது கால் விரல்களில் நகங்கள் முளையிடுகின்றன. வேகம் கூடக்கூட நகங்கள் நீண்டு வளர்ந்தபடியேயிருக்கின்றன. கூத்து தாண்டவமாக உருமாறுகிறது. நரம்புகள் விம்மிப்புடைந்து வெடிக்கின்றன. அது ஆடுகிறது. அதனது கரிய இரத்தம் வரவேற்புக்கூடம் எங்கும் பெருகியோடுகிறது. அதனது ஆட்டத்தின் தொடக்கப்புள்ளி எதில் தொடங்கியது என்றே அது மறந்திருக்க வேண்டும். நிறுத்தும் வழி தெரியாமல் ஆடிக்கொண்டேயிருக்கிறது. எல்லையற்ற ஆட்டத்தின் உச்சத்தில் சுழன்று கீழே விழுந்தது. வரவேற்புக் கூடத்தின் நிறம் மாறத் தொடங்கிவிட்டது. பல்லி புள்ளியாகச் சிறுத்துக் காணாமல் போனது. அதன் கரிய திரவம் மட்டும் சாம்பற் புழுதியாய்ச் சுழன்றடித்தது.

அம்ருதா தனது வட்ட அடுக்குக் கோலம் பற்றி ஒரு குறிப்பை எழுதி வரவேற்புக் கூடத்தில் ஒட்டியிருந்தாள். என்னால் அப்புதிரை அவிழ்க்க முடியாதிருப்பதாய் அவள் நினைத்திருக்கக்கூடும். அவள் கோலம் போட்ட நாளிலிருந்து அநேக இரவுகளை விழித்திருந்தபடியே கழித்துக் கொண்டிருந்தேன். மின்சார விளக்குகளின் ஒளி ஏதோ என் இரகசியங்களை அரித்துத் தின்று கொள்வது போலிருந்ததால் அதனையும் அணைத்துவிட்டிருந்தேன். ஓளியற்ற பொழுதுகள் எனக்கு நெருக்கமான உணர்வுகளைத் தந்தன. இருளின் மீது மிதந்துகொண்டிருப்பவனாய் இருந்தேன்.

அம்ருதாவின் குறிப்பை நான் வாசிக்கத் தொடங்கினேன். எல்லா எழுத்துக்களும் சர்ப்பங்களாக வளைந்து வளைந்து ஊர்ந்தன. முதலாவது எழுத்தை வாசிப்பதற்குள் இறுதி எழுத்து முன் நகர்ந்து அதன் அர்த்தங்களைக் குழப்பிக் கொண்டேயிருந்தது. நீண்ட நேரமும் அதீத சிரமங்களுடனும் அதை வாசித்தேன்.
அவளின் குறிப்பு

‘‘நான் போட்டிருக்கும் இந்த வட்டக் கோலம் உன் புரிதலுக்கு ஏற்ற ஒன்றல்ல. உனது நேரடியான கருத்துக் கொள்ளலுக்கு முற்றிலும் மாறுபட்டது. நீ சிந்தனை மாற்றங்களுக்கு உள்ளாகும் போதுமட்டுந்தான் கோலத்தின் அர்த்தம் பிடிபடும். நீயோ உனது சிந்தனைகளைக் குறுக்கி வைத்திருக்கிறாய். உனது அறையின் கனதி போலவே உனது சிந்தனையும்.

எனது கோலம் கொண்டிருக்கும் இரண்டு வட்டங்களில் எதை வேண்டுமானாலும் நீ உன்னைப் பாவனை செய்யலாம். இரண்டு வட்டங்களும் விளிம்புகளால் அண்மித்திருப்பவை. ஒரு வட்டம் இன்னொரு வட்டத்திலிருந்து பிரிந்து செல்லவோ விலகியிருக்கவோ முடியாது. ஒரு வட்டத்திலிருந்து மற்றைய வட்டத்தை பிரித்தெடுப்பதும் சாத்தியமில்லை. வெளிவட்டத்துக்குள் உள்வட்டம் சுருங்கிக் கிடப்பதாகவும் நீ கருதலாம் அல்லது உள் வட்டம் வெளிவட்டத்தை நகர முடியாமல் இழுத்து வைத்திருப்பதாகவும் நீ கருதலாம்.

நீ உனது சிந்தனைக் கருதுகோள்களின்படி எதை வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும் ஆனால் வட்டங்களைப் பிரித்தெடுக்க முடியாது. நிஜத்தில் கோலத்தின் வட்டங்கள் கோடுகளின் நேர்த்தியின்படி அழகாகவே எனக்குப் படுகின்றது. நீ முகம் சுழித்தபடி பார்த்ததை நான் கவனித்தேன். தவிரவும் வட்டங்களின் பச்சை சிவப்பு நிறங்களைக் கண்டு நீ மண்டையை உடைக்கத் தேவையில்லை.அவற்றிற்கு எந்த அர்த்தமும் இல்லை. வட்டங்கள்தான் முக்கியமானவை. வட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் அல்லது வட்டங்களாகவே நீயும் நானும் இருக்கிறோம்.’’

இந்தக் குறிப்பை வாசித்த பிறகுதான் என் மூளை முன்னரிலும் வேகமாகச் சூடேறிக் கொண்டிருந்தது. பெரும்பான்மையும் அவளின் முன்னைய வட்டப்புதிர்களுடன் எனது கருதுகோள்களும் பொருந்தியேயுள்ளன. அம்ருதாவின் மூளை புதிர் நரம்புகளால் வடிவமைக்கப்பட்டதாயிருக்க வேண்டும். அவளால் நுன்மையாக்க கருத்தமைக்கப்படும் வட்டங்கள் எல்லாவற்றிலும் மையங்களில் குவிபவனாகவோ கோடுகளில் வளைபவனாகவோ நானிருக்கிறேன். அவளும் அவ்வாறுதானிருக்கிறாள். ஒரே குவியத்தில் மாறுபட்ட மனமுடையவர்களை எப்படி அவளால் வரையமுடிகின்றது.

எனது சிந்தனைகளும் கேள்விகளும் எனக்குப் புதிர்களாயின. என்னைச்சுற்றி நானே புதிர்க்கோடுகளை வரையலானேன் எவற்றிலும் நேர்த்தியில்லை.

வாலறுந்த பல்லி தனது கண்களை உருட்டியபடி அகாலத்திலிருந்து ஊர்ந்துவருகின்றது. நீண்டு நெளியும் அதனது வயிறு பெருத்திருக்கிறது. அது இரைதேடத் தொடங்கிவிட்டது. அதன் வாய் அகல விரிந்திருக்க சுவரிலிருந்து இறங்குகிறது. அதன் பார்வை வட்டமாய்ச் சுழன்று மையமாகிக் கிடக்கும் என்னில் நிலைக்கவும் என்னருகில் வந்து என் இரகசியங்களை ஊர்ந்து ஊர்ந்து கடக்கின்றது.

திடீரென பல்லி இரண்டு கால்களில் எழுந்து நிற்கின்றது. அம்ருதா என் அறையின் திரைச்சீலையில் நிழலாக அசைகிறாள். அவளது நிழலிலிருந்து எண்ணற்ற வட்டங்கள் என் அறையில் குவிகின்றன. ஒன்றோடு ஒன்று சங்கிலியாகப் பிணைகின்றன. பல்லி எழுந்து சங்கிலியின் முனையைத் தேடியெடுத்து வாயினுள் வைத்து உள்ளுறுஞ்சுகிறது. வட்ட சங்கிலி அதன் வயிற்றை நிறைக்கிறது. அம்ருதாவின் மிரண்ட முகமாய்த் திரைச்சீலை அசைகிறது. பல்லி அறைக்கதவைத் திறந்து வரவேற்புக் கூடம் வழியே வெளியேறுகின்றது. அதன் காற்தடங்களில் கரிய திரவம் சுரந்து கடலாகிறது. வீடு முழுமையும் கரிய திரவக் கடலில் நிறைகிறது. பல்லி தடயமற்று வெளியேறி விட்டது.

வரவேற்புக் கூடத்தில் அமர்ந்து அம்ருதா புத்தகம் படித்தபடியிருக்கிறாள். வட்டப் புதிர்கள் பற்றிய புத்தகம். அதன் அட்டைப்படம் வட்டங்களால் நிறைந்து தெரிகிறது. அவள் தீவிரமான வாசகியாகப் படித்தபடியிருக்கிறாள். அவளின் முன்னால் ஒரு வெள்ளைத் தாளும் வாணப்பெட்டியும் பென்சிலும் இருக்கின்றன. அவள் இரவாவதற்குள் இன்னோரு புதிரை வரைந்து விடுவாள். நான் வரவேற்புக் கூடத்தில் நிலைகொள்ள முடியாதவனாய்ப் படுக்கை அறையை நோக்கிச் செல்கிறேன்.

- சித்தாந்தன்([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com