Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
ஊமையாகும் கொலுசுகள்
நிந்தவூர் ஷிப்லி

Woman நித்யா ரொம்ப நிதானமாக யோசித்தாள். அடியிலிருந்து நுனி வரை நிறையவே யோசித்தும் அவளுக்கு எந்த முடிவுமே தோன்றவில்லை.உண்மையில் அவள் இப்படியெல்லாம் யோசிப்பவள் இல்லை.வீட்டில் அவளது அம்மா அவசர குடுக்கை அவசர குடுக்கை என்று திட்டி திட்டியே வளர்த்ததாலோ என்னவோ அவள் எதிலும் அவசரப்படுவதே வழக்கமாகிவிட்டிருந்தது.இன்று எப்படியும் ஒரு முடிவுக்கு வந்து விடவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை அவளே அவளுக்குள் வகுத்துவிட்டு சிந்தித்துக்கொண்டேயிருந்தாள்.

"நித்யா. நித்யா. "என்னடி உலகம் சதுரம் என்று யாராவது சொல்லி உன்னை குழப்பிவிட்டாங்க போல" என்ற அவளது அலுவலக நண்பி காயத்ரியின் கேலியின் பின்னர்தான மணியைப்பார்த்தாள். நேரம் சரியாக மாலை 3.30. அலுவலக சாப்பாட்டு மேஜையில் நீண்ட நேரம் அவள் உட்கார்ந்திருந்ததை கடிகாரம் சொல்லித்தான் அலளே புரிந்து கொண்டாள்.

என்னடி பிரச்சினை. தொடரும் காயத்ரியின் குரலை "ஒன்றுமில்லை: காயு ச்சும்மா வீட்டுல மாப்பிள்ளை பார்த்திருக்காங்க. .என்று உடைந்த குரலில் சலிப்போடு பேசத் தொடங்கினாள்.

அடப்பாவி எனக்கு கலியாண வயசாச்சுனு வீட்டுல எப்படிடா சொல்றதுனு குழம்பியிருக்கிறன். உடனே சரினு சொல்லிடுடி.என்ற காயத்ரியின் கிணடலை பொருட்படுத்தாமல் நித்யா தொடர்ந்தாள்.

"காயத்ரி. ஒரு பறவை மாதிரி சுதந்திரமா இந்த வாழ்க்கை இருக்கணும் என்று எதிர்பார்த்தன். விலங்கு பூட்டி என்னை கூண்டில அடைக்கப்பார்க்கிறாங்கடி. நமக்குனு ஆசாபாசம் சுகதுக்கம் ஏன் ஒரு மனசு இருக்கு என்கிற விசயத்தை எல்லோரும் மறந்துபோயிடறாங்க காயு"

ஏய் நிறுத்து நிறுத்து என்னடி கீதை படிக்கத்தொடங்கி எவ்வளவு நாள் ஆவுது என்று காயத்ரி மீண்டும் கேலியாய் பேச நித்யா திடீரென சொன்ன வார்த்தை காயத்ரியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"நான் கர்ப்பமாயிருக்கன் காயத்ரி. ."

"நி. . .த். .த். .த். .யா யா யா யா"

என்னடி சொல்றாய். .

உனக்கென்னடி பைத்தியம் புடிச்சுப்போச்சா. .??

நான் நம்பமாட்டேன். பொய்யையும் கொஞ்சம் பொருந்துற மாதரி சொல்லு"

என்னடி ஆச்சு உனக்கு என்று பதறிய காயத்ரியை சிறிய குற்றவுணர்வோடு பார்த்தபடி நித்யா பேசத்தொடங்கினாள். .

உனக்கு ஞாபகம் இருக்கா மூணு மாசத்துக்கு முன்னாடி நாம ஓபிஸ் டூர் போனமே. .அப்ப நம்ம பழைய எம்.டி ஒரு நாள் இராத்திரி எனக்கு போன் பண்ணி அவருக்கு ரொம்ப தலை வலிப்பதாவும் ஒரு கப் சூடா தேயிலை போட்டு தரும்படியும் கேட்டாரு. நானும் அவர்மேல இருந்த நம்பிக்கையில உங்க யாரையும் எழுப்பாம தேயிலை போட்டு அவர் ரூமுக்கு கொண்டு போனேனா. . .??????

அப்போது திடீரென காயத்ரியின் தொலைபேசி சிணுங்கியது. மணியைப்பாருடி 4.30 ஆச்சு ஓபிஸ் முடிந்து விட்டது என்று எங்கப்பா என்னை ஏற்றிப்போக வாசலில் நிற்கிறாராம். அவருதாண்டி போன்ல. நாளைக்கு ஆறுதலா பேசுவம் டி என்று காயத்ரி வெளியிறங்க அவசரமாக தயாரானாள்.

வெறுமை நிரம்பிய தனிமையை தனக்குள் ஆசுவாசப்படுத்திய நித்யா. கவலை படர்ந்த ரேகைகளுடன் வீடு புறப்படத்தயாரானாள்.

என்னம்மா. .நித்யா முகமெல்லாம் வாடிப்போயிருக்கு என்னம்மா ஆச்சு. ஓபிசுல ஏதாவது பிரச்சினையா என்று கேள்விகளால் துளைக்கத் தொடங்கின அவளது அம்மாவுக்கு

"இல்லம்மா. லேசா தலை வலிக்குது. சரியாப்போயிரும்மா விடு"

என்று பொய்யாய் ஒரு சமாதானத்தை உதிர்த்தாலும் அவளது அம்மாவுக்கு என்னமோ ஆகியிருக்கு என்பது புரிந்தது.

"என்னம்மா. நாங்க பார்த்த மாப்பிள்ளைய உனக்கு பிடிக்கலையா. போட்டோ கூட பார்க்கமாட்டேன்னு இப்படி அடம்பிடிக்கிறியேம்மா. .நல்ல வரன் நித்யா. டாக்டர் மாப்பிள்ளைய வேண்டாம்னு சொல்லுறியே என்னம்மா ஆச்சு உனக்கு. ? உங்கப்பா ரொம்ப கஷ்டப்பட்டு பார்த்த மாப்பிள்ளை. தங்கமானவன்னு எல்லோரும் செல்றாங்க.ஒரு தரம் போட்டோவ பார்த்துட்டு அப்புறம் உன் முடிவை சொல்லு. "என்று ஆரம்பித்த அம்மாவை வெறித்துப் பார்த்தபடி

"தலைவலின்னு சொல்றேன் நீ வேற. .விடும்மா"

"ஏண்டி ஏதாவது காதல் அப்படி இப்படினு பண்ணத்தொலைக்கிறியாடி. "?என்று அவளது அம்மா அலறத் தொடங்க

"அப்படில்லாம் ஒரு மண்ணும் இல்ல" கொஞ்சம் தனியா இருக்க விடும்மா என்று அவளது அறைக்குள் நுழைந்தாள்.

அவளது மனசு பாரமாயிருப்பதை அவளது நிலைக்கண்ணாடியில் தெரிந்த அவளது முகம் தெளிவாகச் சொல்லியது. கண்ணாடியைப் பார்த்தபடி அவளோடு அவளே கொஞ:ச நேரம் பேசலானாள். "

அவளது ஆத்திரம் அழுகையாகி அறைக்கதவை பூட்டிவிட்டு குலுங்கிக் குலுங்கி அழலானாள்.

அந்த டூர் போனது தப்பு. அந்த இரவில் அவள் அந்த போனை எடுத்தது தப்பு. யாரையும் உதவிக்கு அழைக்காமல் பழைய எம்.டி ரூமுக்கு போனது தப்பு. தப்பு தப்பு எல்லாமே தப்பு. அவள் மீது அவளுக்கே வெறுப்பு வந்தது. இன்னும் கொஞ்சம் அதிகமாக அழுவதற்குள் அவளது தொலைபேசி சிணுங்கத்தொடங்கியது.

அவளது செல்போனில் அழைப்பவர் யாரெனப்பார்த்தாள். அந்த திரையில் அவளது பழைய எம்.டி தியாகுவின் பெயர் தெரிந்தது. இவளுடன் தப்பா நடந்த பிறகு அவன் வேறு கிளை அலுவலகம் மாறிவிட்டான். அடிkகடி போன் பண்ணி கருத்தரிச்சிருந்தா கலைச்சிடு என்று இவளை தொல்லை செய்வான். பல முறை அவள் அவனது தொலைபேசி அழைப்பை துண்டித்திருக்கிறாள். ஆனால் வேறு வேறு இலக்கங்களில் இருந்து அவன் அழைத்து தொலைபேசியை எடுக்காவிட்டால் நடந்ததை வெளியில் சொல்லி அசிங்கப்படுத்தப்போவதா மிரட்டத் தொடங்கிவிட்டான்.

பாவம் நித்யா. என்ன செய்வதென்று தெரியாமல் ரொம்பவே நொந்து போன நிலையில் மீண்டும் அவனது அழைப்பைக் கண்டு ஒரு வித பயத்துடனும் ஆத்திரத்துடனும் தொலைபேசி அழைப்பை ஓன் செய்தாள்.

"நித்யா நான் தியாகு பேசுறன். கருத்தரிச்சிருந்தா கலைச்சிடு. ஒரு முறை என்னோடு செக்-அப் வந்தால் எல்லாம் சரியாகிவிடும். இல்லாவிட்டால் உனக்குத்தான் அசிங்கம். புரியும் என்று நினைக்கிறேன். நடந்ததை எல்லாம் மறந்து விட்டு கருவையும் கலைத்து விட்டு வேறொரு சந்தோசமான வாழ்க்கையை ஆரம்பி. வாழ்க்கை என்றால் ஆயிரம் நடக்கும் வரும் போகும். அனுசரிச்சு வாழப்பாரு. மற்றது உன் புரோமோசன் சம்பந்தமா நான் மேலே பேசியிருக்கன். அடுத்த மாசம் சரியாயிடும். புரியுதா. "

என்ற அவனது கேவலமான வார்த்தைகளை கேட்டு அவள் மனசாடசிக்குள் மட்டும் கத்திப்பேசினாள். எப்படிடா நாயே. நடந்ததை மறந்து இன்னொரு வாழ்க்கையை நிம்மதியாய் வாழ்வது? உன்னை மாதிரி கேவலமான ஒருத்தனிடம் நான் வாழ்க்கைப்பிச்சை போடு என்று எப்படிடா கெஞ்சுவது. காதலிக்கிறேன். மணக்க ஆசைப்படுறேன் என்றாவது நீ சொல்லியிருந்தால் எப்படியோ சம்மதிச்சிருப்பன். பரதேசி. கேவலமான கழிசடை. "

தொடர்ந்த அவள் மனத் திட்டலை கேட்க முடியாத தியாகு சொன்னான்

"வர்ற வியாழக்கிழமை பின்னேரம் நந்தனம் ஆஸ்பிட்டலுக்கு ஓபிஸ் முடிஞ்சதும் வந்துடு. டாக்டர் எனக்குத் தெரிஞ்சவர்தான். 30 நிமிஷத்தில் எல்லாம் சரியாப்போயிரும். . யூ டோன்ட் வொர்றி. .என்று அவசரமாக சொல்லிவிட்டு நீ மட்டும் வராமல் விட்டால் உனக்குத்தான் அசிங்கம். புரியும் என்று நினைக்கிறேன். டேக் கெயார பாய்" என்று அழைப்பை துண்டித்தான்.

"எப்படிடா உங்களுக்கெல்லாம் மனசு வருது. மனசே இல்லாத உங்களுக்கெல்லாம் எதற்குடா வாழ்க்கை. 30 நிமிஷத்தில் என் கற்பை தர உன்னால முடியுமாடா?" என்று தனக்குள்ளே மீண்டும் பொருமத் துவங்கினாள்.

எது எப்படியிருந்தாலும் கருவை கலைக்கவேண்டும் என்பதே அவளது நிர்ப்பந்தமானபடியால் வியாழக்கிழமை அலுவலகம் முடிந்து வைத்தியசாலை செல்ல முடிவு எடுத்தவளை அம்மாவின் குரல் உசுப்பியது. நித்யா புதன்கிழமை உன்னை பெண் பார்க்க மாப்பிள்ளைக்காரங்க வரப்போறாங்களாம். கதவை திறடி. உள்ள என்ன பண்றே. கதவை திறடி. " என்று கதவை அம்மா தட்டியபோது திங்கள் கிழமை மாலை 7.30 ஐ நெருங்கிக்கொண்டிருந்தது.

அவள் விடியக்கூடாது என்று எதிர்பார்த்த அந்தப் புதன்கிழமை வழமைபோலவே எந்தச் சலனமும் இல்லாமல் விடிந்தது. அவளது அம்மாவின் கட்டளைப்படி ஓபிஸிற்கு லீவு போட்டு விட்டு பெண் பார்க்கும் சடங்குக்கு தன்னை தயார்படுத்தலானாள்.

இன்னும் சில நாட்களில் அவளை திருமதி நித்யா ராஜசேகர் என்று மாற்றும் ஆரம்பப் பணிகளில் அவளது அம்மாவும் அப்பாவும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை வரவேற்க மும்முரமாயிருந்தார்கள். நித்யா மட்டும் சோகம் கலைந்த முகத்தை அவளது சகோதரியின் ஒப்பனைகள் வழியாக மறைக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள். திடீரென அவளது அம்மா சத்தம் போட்டபடி ஓடிவந்தாள்.

நித்யா நித்யா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்கம்மா. சீக்கிரம் ரெடியாகிடு என்று பதற்றம் தணியாத குரலில் எச்சரத்து விட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை சந்திக்க விரைந்தாள். இருண்டு போன மனசுடனும் ஆண்கள் மீதான வெறுப்புடனும் வாழ்க்கையே வீண் என்ற மனநிலையுடனும் நித்யா என்ற மகாலட்சுமி மாப்பிள்ளை வீட்டார் அமர்ந்திருந்த மண்டபம் நோக்கி மெல்ல மெல்ல நடந்து வந்தாள்.

"இவதாங்க எங்க மூத்த பொண்ணு" என்று அவளை அறிமுகம் செய்த அவளது அம்மாவின் குரல் அவளுக்குள் இயல்பாகவே வெட்கத்தை தோற்றுவித்தது. மாப்பிள்ளையின் அவசரப்பார்வை அவளது அழகை வட்டமிட்டது.

"நித்யா மாப்பிள்ளையை பாரும்மா." என்று அவளது அப்பாவின் சொல்லினால் எந்தப்பயனும் நிகழவில்லை.

தற்போது மாப்பிள்ளையின் தந்தை மாப்பிள்ளையிடம் "எங்களுக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்குடா. உன் சம்மதத்தை சொன்னால் நாம நிச்சயதார்த்தத்துக்கும் கல்யாணத்துக்கும் இப்பவே நாள் குறிச்சிடுவோம்" என்று சொல்ல மாப்பிள்ளை எல்லோருக்கும் கேட்கும்படி சத்தமாகச் சொன்னார்.

"எனக்கும் பொண்ண புடிச்சிருக்கு"

அவளது சம்மதம் ஒரு சதம் கூட அலசப்படாத அந்த இடத்தில் அவள் கண்முன்னே வரும் ஆவனி 11இல் நிச்சயதார்த்தத்தையும் அதற்கு அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணத்தையும் வெச்சுக்கலாம் என்ற பெரியோர்களின் தீர்மானத்துக்கு எப்படியோ தலையசைத்து டாக்டர் ராஜசேகருடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தனது மனசை அவள் திடப்படுத்திக் கொண்டாள்.

வெளியே வெயில் கொஞ்சம் கொஞ்சமாக தணிய ஆரம்பித்தது.

- நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com