எதிர்வினை
ரசிகவ் ஞானியார்
ஊரோரம் புளியமரம்
உலுப்பிவிட்டா சலசலங்க
திருநெல்வெலியின் பிரபலமான தாமிரபரணிக் கல்லூரியின் விடுதிக்குள் இருந்துதான் அந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அவர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
அறையின் மூலையில் கணக்கில்லா பீடித்துண்டுகள். உருண்டோடிய பீர் பாட்டில் சிதறிக் கிடக்கும் ஊறுகாய் பொட்டலம்..
சுற்றி நின்று ஆடிக்காண்டிருந்தான் தணிகை தனது சக விடுதி நண்பர்களுடன்.நடுவில் குத்துகாலிட்டு அமர்ந்திருந்தான் சேகர்
பார்வையில் வெறுப்பா அல்லது கோபமா என்று கண்டுபிடிக்கமுடியாத நிலையில் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் இவர்கள் ஆடுவதை
பக்கத்து அறை சீனியர் மாணவர்கள் பாடல் சப்தம்கேட்டு எட்டிப்பார்த்து "டேய் அய்யோ பாவம் அவனை ஏண்டாஇந்தப் பாடு படுத்துறீங்க..."
"எல ஒன் ஜோலிய பார்த்துட்டு போல...சேகர் வயசுக்கு வந்துட்டா...நீ வரியா குடிசை கட்டறதுக்கு... "என்று தணிகை கிண்டல் செய்ய அவர்கள் அமைதியாக சென்றுவிட்டார்கள்
"என்னடா சேகர் எழுந்திருச்சு ஒரு குத்தாட்டம் போடுடா ... "என்று கிண்டலடித்தபடியே அவனிடம் "க்ஆ..க்ஆ.."என்று பெண்மையில் அனைவரும் கோரசாக சிணுங்கிக்காட்டினார்கள்
தனக்குள் பெண்மைத்தனம் ஒளிந்திருப்பதை கண்டுபிடித்த நண்பர்களின் கிண்டலில் தினமும் மனதுக்குள் கதறிக்கொண்டிருந்தான் சேகர்
"டேய் இங்க வச்சி எவ்வளவு வேணுமுன்னாலும் கிண்டல் பண்ணுங்கடா..பரவாயில்லை..ஆனா பொண்ணுங்க முன்னாடி மட்டும் சொல்லிக்காட்டாதீங்கடா..."
"நாங்க சொன்னாத்தான் அவங்களுக்கு தெரியணுமாக்கும் ..க்.ஆ... போடி.."
தனக்குள் பெண்மைத்தனம் ஒளிந்திருப்பதை அப்பா அம்மாவுக்கு கூட இன்னும தெரியாமல் வைத்திருந்தான் சேகர்.
பள்ளிப் பருவம் முழுவதும் விடுதிலையே கழித்துவிட்டான். வீட்டுல இருந்ததை விடவும் விடுதியிலதான் அதிகமாக இருந்திருக்கின்றான். 12ம் வகுப்பு படிக்கும்பொழுதுதான் முதன்முதலில் தனக்குள் வந்த பெண்மையை உணரந்தான் சேகர். அரசல்புரசலாய் சக தோழர்களுக்கு தெரிய ஆரம்பித்தாலும் பெண்கள் போல பேசுவதுபோலவும் அவர்களைப் போல நடிப்பதைப் போலவும் நடித்து தனக்குள் உள்ள பெண்மையை மறைத்துக் கொண்டிருந்தான்
ஆனால் கல்லூரியில் அப்படியல்ல. கிட்டத்தட்ட நண்பர்கள் அனைவருமே ஊர்ஜிதம் செய்துவிட்டார்கள் அவன் அரவாணி என்பதை.
"அலி வர்றான் பாரு.. அலி வர்றான் பாரு.. " என்று கிண்டலடித்தபடியே அவன் வந்தால் விலகி ஓடினார்கள். அதிலும் தணிகை தான் அதிகமாய் கிண்டலடிப்பான்..
"சார் சேகர் நாளைக்கு காலேஜ் வரமாட்டான்"
"ஏன்ப்பா"
"அவனுக்கு கூத்தாண்டவர் கோயில்ல திருவிழா இருக்கு என்று கூறி அவமானப்படுத்துவான்
அவன் மீது கல்லெறிவது. அவன் எதிரில் வந்தால் இளித்துக் காட்டுவது என்று சேகருக்குள் பெண்மையிருப்பதை கல்லூரிக்குள் டமாரமடித்ததே தணிகைதான்.
சேகரும் தணிகையிடம் தனியாக கெஞ்சிப் பார்த்துவிட்டான்.
எங்கே கண்டுபிடிச்சிருவாங்களோன்னுதான் நான் யார் கூடயும் சரியா பேசாம இருக்கேன்.. டேய் காலேஜ் முடியுற வரைக்குமாவது இது யாருக்கும் தெரியாமல் இருக்கட்டும்டா... படிப்பை வச்சாவது ஏதாவது வேலை தேடிக்கிடுவேன்.. அதுவும் இல்லைனா எங்கள மாதிரி ஆளுங்க ரெயிலில் பிச்சை எடுக்குற மாதிரி ஆயிறும்டா...
Jurasic park, King Kong, Anaconda - மிருகங்கள் படத்தையெல்லாம் பார்த்து கைதட்டுறீங்க.. என் மனித உணர்ச்சிகளை புரிஞ்சிக்க மாட்டிருக்கீங்களடா?
"நான் இப்படி பொறந்தது என் தப்பு இல்லை..என்னைப் புரிஞ்சுக்கோங்க.. எனக்கும் உங்களமாதிரிதாண்டா எல்லா உணர்ச்சியும் இருக்கு.....கிண்டல் பண்ணாதடா"
கண்ணீர் வராமல் கதறிக் கொண்டிருந்தான் சேகர். அந்த நேரத்தில் சேகருக்காக பரிதாபப்படுபவனைப்போல் நடித்துவிட்டு, கல்லூரியில் வைத்து அவனை கிண்டலடிப்பதை அதிகப்படுத்திக்கொண்டே வந்தான் தணிகை..
ஒருநாள் தமிழ் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. தமிழ் வகுப்பில் எல்லா பிரிவு மாணவர்களும் ஒன்றாய்க் கூடுவார்கள். அந்த நேரத்தில் கடைசி பெஞ்சில் அமர்ந்து கொண்டிருந்த சேகரின் வயிற்றில் தணிகை குத்த, திடீரென்று அவன் குத்தியதால் அந்த இடத்திற்குண்டான இயல்பான உணர்ச்சியில் ஆ..என்று பெண்மை வெளிப்பட கத்தினான் சேகர்
அனைவரும் சிரிக்க ஆரம்பிக்க மறுபடியும் மறுபடியும் இதனைத் தொடர மற்றவர்களுக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது. தமிழ் ஆசிரியரோ புரிந்து கொள்ளாமல் சேகர்தான் வம்பு செய்கிறான் என நினைத்து சேகரைக் கண்டித்தார்.
சார் ஏதாவது ஒரு பாரா வாசிக்கச் சொல்லுங்க அவன் திணருவான் சார் என்று தணிகை புகார் செய்தான். அவனை வாசிக்க விட்டு அவனது பெண்மை கலந்த வாசிப்பின் நிலை மூலம் ,அனைவரும் அவன் ஒரு அரவாணி என அறிந்து கொள்வார்கள் என்று திட்டம் போட்டான் .
"எங்கே வாசி" என்று சேகரிடம் புத்தகத்தை நீட்டினார் ஆசிரியர்
கண்ணீரையும் ஆத்திரத்தையும் அடக்க முடியாமல் வாழாவெட்டியாய் திரும்புகின்ற மகளை பார்த்து பார்த்து வேதனையுறும் ஒரு தந்தையின் வலியை சுமந்து கொண்டு, முன்னால் சென்று அவன் வாசிக்க வாசிக்க அவனது பெண்மை மற்றவர்களுக்கு தெரிய ஆரம்பிக்க ஆசிரியர் உட்பட வகுப்பறையே சிரித்துக் கொண்டிருக்க முற்றிலுமாய் பிணமாகிப்போனான் சேகர்.
ஓ அவனா...நீ..சொல்லவேயில்லை
ஏடி வந்து உட்காருடி...
ஒ....ன்....ப....து...
கைகளை நெஞ்சுக்கு முன் கொண்டு வந்து உரசிக்காட்டி இப்படி ஒவ்வொரு திசையிலிருந்தும் கிண்டல்கள்.
குளிரில் நடுங்கும் நாய்களுக்கு கூட இடமளிப்பவர்கள், ஒரு மனிதன் அங்கே அவமானத்தில் நடுங்கிக் கொண்டிருப்பது தெரியாமல் போயிற்று.
இடையில் தணிகை எழுந்து சேகரின் பெண்மை கலந்த நடையைப் போல நடந்து காட்டி மராப்பை விலக்கி இழுத்து விடுவதைப்போல நடித்துக் காட்டினான். பின் வகுப்பு தோழி பார்வதியிடமிருந்து மல்லிகைப்பூவை வாங்கி சேகரிடம் கொடுத்து வைக்கச் சொன்னான் தணிகை.
ஓட்டுமொத்த மாணவர்களும் மாணவிகளும் அங்கு இருந்த ஆசிரியரும் அந்த வகுப்பறையைக் கடந்து சென்ற அறிவியல் டீச்சர் மல்லிகாவும் பக்கத்து வகுப்பறை சுப்ரமணி வாத்தியாரும் இதனை வேடிக்கைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டிருக்க
தனது வகுப்பறைச் சிரிப்பொலி அதிகப்பட்டதால் போலியாய் அதட்டி கூட்டத்தை கலைத்து அனுப்பினார் தமிழ் வாத்தியார்.
அவமானம் தாங்கமுடியாமல் குறுகிப்போய் அழுதுகொண்டிருந்த சேகரின் அழுகையிலும் பெண்மையைக் கண்டுபிடித்து சிரித்துக் கொண்டிருந்தன சில மிருகங்கள்.
=====================
மறுநாள் விடுதியில் பரபரப்பு. இரண்டாம் மாடியை நோக்கி மாணவர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்;...
அறை எண் 305 ல் இரண்டாவது முறையாய் பிணமாய்த் தொங்கிக் கொண்டிருந்தான் சேகர். சுற்றியுள்ளவர்கள் ஆச்சர்யமாய் பார்த்தாhர்களே தவிர அழுகை வரவில்லை. தணிகை தூரத்திலிருந்து எட்டிப்பார்த்துவிட்டு தனது பிகர் பார்வதி வரும் நேரம் என்பதால் சென்றுவிட்டான்.
கயிறு இறுக்கினால் நானும் மனிதனைப்போல்தான் செத்துப்போவேன் புரிந்துகொள்ளுங்கள்
இப்படிக்கு
சேகர் என்கிற மனிதஜென்மம் என்று கடிதம் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது
===================
என்னங்க இன்னிக்கு சாயங்காலம் ஷாப்பிங் போகலாமா......கையில் காபியுடன் சமையலறையிலிருந்து வந்து கொண்டிருந்தாள் தணிகையின் மனைவி பார்வதி
இல்லைப்பா ஒரு முக்கியமான US ப்ராஜக்ட் இருக்கு க்ளைண்டு சாட்டிங்கல வர்றாரு நைட்
உங்க குடும்பம் இந்தியாலதான் இருக்கு மறக்காதீங்க...நாளைக்கு நம்ம பாஸ்கருக்கு 12 வது பிறந்தநாள்..
அட மறந்துட்டேன் சாரிப்பா..சரி சாயங்காலம் ரெடியாயிரு போவோம்...பாஸ்கரையும் டியுசன் முடிஞ்சி சீக்கிரமா வீட்டுக்கு வரச்சொல்
மாலை போத்தீஸின் வாயிற்படி தேவதைகள் வரவேற்க உள்ளே நுழைந்தார்கள்
பாஸ்கர் விரும்பி அணியும் ஜீன்ஸ் சட்டை பகுதியில் துழாவிக்கொண்டிருந்தார்கள் தணிகையும் பார்வதியும்.
பார்வதி! அங்க பாரேன் பாஸ்கரை, சுடிதாரை ரசிச்சிக்கிட்டு இருக்கான்...பாஸ்கரை ரசித்தபடி பார்வதியிடம் சொல்லிக்கொண்டே அப்பொழுது ஒலித்த அலைபேசியை எடுத்தான் தணிகை
என்னடா அதிசயமா இருக்கு திடீர்னு போன் பண்ற..
இல்லைடா காலேஜ் ஞாபகம் வந்திச்சு அதான் உனக்கு பண்ணினேன்.. சேகர் இறந்து இன்னியோட 15 வருசம் ஆகுதுடா நண்பன் ப்ரேம் சொல்லிக் கொண்டிருக்க
அதிர்ச்சியில் மறுபடியும் பாஸ்கரைப் பார்த்தான் தணிகை. இன்னமும் சுடிதாரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் பாஸ்கர்
- ரசிகவ் ஞானியார் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|