Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
சேமியா ஐஸ்

நிலா ரசிகன்

இன்னும் சற்று வேகமாக ஓட வேண்டும். அடுத்த தெருவிலிருந்து கேட்கிறது மணிச்சத்தம். கையில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் செருப்பு வியர்வையில் நனைந்துவிட்டது. கைநழுவி விழுந்துவிட்டால் அவ்வளவுதான் என்கிற எண்ணம் எழுந்தவுடன் இறுக்கமாக பிடித்துக்கொண்டு ஓடினேன்.

வெற்றுக்காலுடன் ஓடியதில் முள்ளொன்று குத்தி வலி உயிர்போனது. குனிந்து முள்ளை எடுக்க நேரமில்லை. நொண்டிக்கொண்டே அடுத்த தெருவிற்குள் நுழைந்து மூச்சு வாங்க நின்று பார்த்தேன்.

தூரத்தில் நின்றிருந்தார் முருகேசு அண்ணன். கைகாட்டிக்கொண்டே நொண்டி நொண்டி அவரிடம் சென்றேன். பிளாஸ்டிக் செருப்பைஅவரிடம் கொடுத்தேன். வாங்கி பார்த்துவிட்டு சைக்கிள் ஹேண்ட்பாரில் தொங்கிய கோணிப்பைக்குள் போட்டுக்கொண்டார்.

"ஒரு சேமியா ஐஸ் குடுங்கண்ணா" மூச்சுவாங்கிக்கொண்டே சொன்னேன்.

என் கையில் ஐஸ்ஸை தந்துவிட்டு ஐஸ்வண்டியை தள்ளிக்கொண்டு போய்விட்டார்.

கையில் வாங்கியவுடன், போன வருட கோவில் திருவிழாவில் சேமியா ஐஸ் வாங்க தேவையான ஒரு ரூபாயை சேர்க்க நான் பட்டபாடு நினைவுக்கு வந்தது.

இரண்டு மைல் தூரம் நடந்து சென்று ஊருக்கு வெளியே இருக்கும் கந்தசாமி அண்ணாச்சி தோட்டத்தின் வேலியோரம் விழுந்துகிடக்கும் நெல்லிக்காய்களை பொறுக்கி, வரும் வழியில் வாய்க்காலில் கழுவியெடுத்து, கோவில் வாசலருகே பழைய பேப்பர் விரித்து நெல்லிக்காய்களை விற்று ஒரு ரூபாய் சேர்த்துதான் சேமியா ஐஸ்வாங்கினேன். ரூபாய் இல்லாவிட்டால் கண்ணாடி பாட்டில்,பிளாஸ்டிக் செருப்பு,உடைந்த பிளாஸ்டிக் சாமான்கள் ஏதேனும் கொடுத்தால் ஐஸ் வாங்கலாம்.

உள்ளங்காலில் முள் உறுத்தியது. கையில் வழிகின்ற சேமியா ஐஸ்ஸை விறுவிறுவென்று தின்றுமுடித்து அருகிலிருந்த தெருவிளக்கு கம்பத்தில் சாய்ந்துகொண்டு உடைந்த முள்ளை விரல் நகத்தால் எடுத்தபோது "பளார்" என்று என் முதுகில் ஒரு அறை விழுந்தது.

வலியுடன் திரும்பி பார்த்தால், கண்கள் கோபத்தில் மின்ன,பத்தரகாளி போல் நின்றிருந்தாள் சின்னம்மா.எனக்குத் தெரியும் சின்னம்மாவிடம் சிக்குவேனென்று. ஆனால் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை.

ஆடுகளுக்கு புல் அறுக்க மட்டும்தான் சின்னம்மா வீட்டை விட்டு வாய்க்கால் ஓர தோட்டத்திற்கு வருவாள். மற்றபடி எப்பொழுதும் அடுப்பங்கரையிலும் ஆட்டுக்காடியிலும்தான் இருப்பாள்.

அவளுக்கு எதற்கு பிளாஸ்டிக் செருப்பு? சந்தைக்கு அப்பாவுடன் போகும்போதுகூட வெற்றுக்காலுடன் போவதுதான் சின்னம்மாவிற்கு பிடிக்கும். எதற்கும் உபயோகமில்லாத செருப்பால் இன்று ஒரு சேமியா ஐஸ் என் வயிற்றுக்குள் இருக்கிறது. கூடவே முதுகில் விழுந்த அடியின் வலியும்.

சின்னம்மா கையில் சிக்கினால் வேப்ப மரத்தில் கட்டிவைத்து மிளகாய் பொடியால் அபிசேகம் பண்ணிவிடுவாள்.போன மாதம் கபடி விளையாடிவிட்டு விளக்குவைத்த பிறகு வீட்டிற்கு வந்ததற்கு இரவு இரண்டுமணிவரை வேப்பமரத்துடன் நின்றது நினைவுக்கு வந்தது. செத்தாலும் சின்னம்மாவிடம் சிக்கக்கூடாது என்று ஓட ஆரம்பித்தேன். கொஞ்சதூரம் விரட்டிக்கொண்டு வந்தாள், பின் முடியாமல் இடுப்பில் கைவைத்து நின்று ஏதேதோ கெட்டவார்த்தையால் திட்டிவிட்டு திரும்பி போய்விட்டாள்.

இருட்ட ஆரம்பித்துவிட்டது. பள்ளிக்கூட மைதானத்தில் அமர்ந்திருந்தேன். பசி தாங்கமுடியாமல் வயிறு வலிக்க ஆரம்பித்தது. வீட்டிற்கு போனாலும் சோறு கிடைக்காது. மிளகாய் தூள் மட்டும் இனிப்பாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? பசியுடன் உறங்ககூடாது என்று பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது. சரி வருவது வரட்டும் வீட்டிற்கு போய்விடலாம் என்று முடிவெடுத்தேன்.

வீட்டை நெருங்க நெருங்க இதயம் துடிக்கும் சத்தம் காதுகளில் கேட்டது. வாசற்கதவை மெதுவாய் திறந்து உள்ளே சென்றேன். தோள்துண்டை சுருட்டி தலைக்கு வைத்து திண்ணையில் படுத்திருந்தார் அப்பா. நல்ல உறக்கத்தில் இருக்கிறார் என்பதை உரத்த குறட்டை சத்தம் சொல்லிற்று.

அடுப்பங்கரையின் ஓரத்தில் பாய்விரித்து படுத்திருந்தாள் சின்னம்மா. பக்கத்தில் தங்கச்சி பாப்பா வாயில் கைவைத்தபடியே உறங்கிக்கொண்டிருந்தது. சின்னம்மாவின் தலைக்குமாட்டிலிருந்த சோற்றுப்பானை என்னை கூப்பிடுவதுபோல் இருந்தது.

பூனைபோல் அடிமேல் அடியெடுத்து வைத்து சோற்றுப்பானையில் கைவைத்தேன்.

பானையை மூடியிருந்த அலுமினியத் தட்டு தவறி சின்னம்மாவின் கையில் விழுந்துவிட்டது. சட்டென்று எழுந்தவள் என்ன செய்தாள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இரண்டு மணிவரை வேப்பமரத்துடன் இருப்பவன் இன்று ஐந்துமணிவரை வேப்பமரத்தில் ஒண்டியிருந்தேன். பிள்ளையார் கோவில் பாட்டுச்சத்தத்தில் எழுந்துவிட்டேன். அசதியில் நின்றுகொண்டே உறங்குவது பழக்கமான ஒன்றுதான். ஆனாலும் கால்வலி விண் விண் என்றது.

ஐந்துமணிக்கு சின்னம்மாவின் கெட்டவார்த்தைகளை வாங்கிக்கொண்டபின்னரே என் கட்டுகளை அவிழ்த்துவிட்டார் அப்பா. என்னவோ அறிவுரையெல்லாம் சொல்லியவாறே சோற்றை பிசைந்து ஊட்டினார். அரைப்பானை சோற்றை விழுங்கிவிட்டு திண்ணையில் படுத்துறங்கிவிட்டேன்.

திண்ணை சூடாக ஆரம்பித்த மதிய வேளையில் முழித்து சுவற்றில் பதிந்திருக்கும் கண்ணாடியில் என் முகம் பார்த்தேன். சின்னம்மா அடித்த அடியால் கன்னம் இரண்டும் தக்காளிபோல் சிவந்து வீங்கியிருந்தது.

தூரத்தில் எங்கோ ஐஸ்வண்டிக்காரரின் மணிச்சத்தம் கேட்டதில் மனதில் சேமியா ஐஸின் பிம்பம் பெரியதாய் தோன்ற வீட்டிற்கு வெளியே கிடந்த சின்னம்மாவின் புதுச்செருப்பைக் கண்டு சிரிக்க ஆரம்பித்தேன்.

-நிலாரசிகன் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com