Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
கைகாட்டி-8
மு.குருமூர்த்தி


அய்யனார் கோவில் பஸ் நிறுத்தம். நான் இறங்கவேண்டிய இடம். இறங்கிகொண்டேன். பேருந்து புழுதியை ஊதிவிட்டது. சற்றுநேரம் சாலையோரமாக மூக்கைப் பிடித்துக்கொண்டு நிற்க வேண்டியதாயிற்று.

ஒரு கர்ப்பிணிப்பெண்ணைப்போல அந்த பஸ் அசைந்தசைந்து சென்று கொண்டிருந்தது. சாலையின் லட்சணம் ஒற்றை நோட்டத்தில் தெரிந்து போயிற்று. மண்சாலைக்கும் தார்சாலைக்கும் இடையே பிறவியெடுத்த சாலை அது. ஒப்பந்தக்காரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று மூன்று பேரிடமும் சிக்கிச்சீரழிந்து கற்பிழந்து போயிருக்கவேண்டும்.

சாலையின் மறுபுறமிருந்த ஒற்றைக்கலச அய்யனார் கோவிலும் கூந்தப்பனை மரமும் தான் அந்த இடத்தின் அடையாளங்கள். ஏப்ரல் மாத வெய்யிலின் தாக்குதலில் சுற்றுவட்டார வயல்கள் பொட்டிழந்து பூவிழந்து போயிருந்தன. அய்யனார்கோவில் சன்னதியில் களத்துமேடு கோணல்மாணலாக நீண்டிருந்தது. அக்கம்பக்கத்து வயல்காரர்கள் ஆக்கிரமித்ததுபோக மிச்சமாயிருக்க வேண்டும். போரடித்த நெல்லை தூற்றிக் கொண்டிருந்த இரண்டு பெண்களைத்தவிர ஆள் அரவம் இல்லை. படுத்த யானையின் அளவிலான வைக்கோல்போரும், கட்டாந்தரையாகிப் போயிருந்த களத்துமேடும், தூற்றி வைத்திருந்த கால்சாக்கு கறுப்பு நெல்லும் அந்தப்பெண்களின் செல்வச் செழிப்பிற்கு போதுமான அடையாளங்கள்.

அய்யனாரைக் கும்பிட்டுவரலாம் என்ற முடிவில் சாலையைக்கடந்து களத்துமேட்டில் இறங்கினேன். வெள்ளை வேட்டியையும் சட்டையையும் பார்த்ததும் தூற்றுவதை நிறுத்திவிட்டு பெண்கள் வழிவிட்டு நின்றனர். அவர்களின் கண்களில் மிரட்சி தெரிந்தது.

சாயம் வெளுத்த சுவர்களுக்கு நடுவே, கம்பிக்கதவிற்குப் பின்னால், கைகாட்டி கிராமத்திற்குப் போகும் மண்சாலையைப் பார்த்தவாறு வெய்யில் காய்ந்துகொண்டு அய்யனார் இருந்தார். அவருடைய நேரடி பார்வையில் பூட்டு உடைக்கப்பட்ட கல் உண்டியலும், அதற்கொரு தகரக்குடையும் இருந்தது. பெரியது என்று ஆச்சரியப்பட வைக்காமலும், சிறியது என்று அலட்சியப்படுத்த முடியாத அளவிலுமான ஒரு குதிரை சிலை. ஒருகாலத்தில் வண்ணமயமாக இருந்திருக்கவேண்டும்.

கைப்பையை உண்டியலின் தகரக்குடைமேல் வைத்துவிட்டு கம்பிகேட்டிற்கு முன்னால் நின்று ஒரு முறை தொழுது கொண்டேன்.

"மனுநீதிநாள் கூட்டத்தில் எனக்கு எந்த பிரச்சினையும் வராமல் இருக்கவேண்டும்...அய்யனே.."

ஊர்மக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு கொடுக்கும் கூட்டம் அது. வழக்கமாக ஜீப்பில் போகும் அதிகாரிகள்தான் மனுநீதிநாள் கூட்டத்திற்கு போகவேண்டும். நான் சைக்கிளில் போகும் அதிகாரி. எங்களுடைய அலுவலக ஜீப் என்னுடைய சைக்கிளுக்கு போட்ட உத்தரவால் இன்று அய்யனாருடைய தரிசனம்.

இன்னும் இரண்டுகிலோமீட்டர் நடக்கவேண்டும். இப்போது நடக்க ஆரம்பித்தால் பத்து மணிக்கெல்லாம் மனுநீதிநாள் கூட்டத்திற்கு போய்விடலாம். அல்லது வழியோடு போகும் ஜீப்பில் ஓசியில் ஏறிக்கொள்ளலாம்.

என்னுடைய தோல்பையை எடுக்க குனிந்தபோது அந்தக் குரல் தெளிவாககேட்டது. "நானும் உன்னுடன் வருவேன். எனக்கும் அங்கே கொஞ்சம் வேலை இருக்கிறது."

குரல்வந்த திசையைப் பார்த்தேன். 'திக்'கென்றது.

வெள்ளை வேட்டி கட்டி, முண்டாசுடன் ஓர் ஆள் குதிரைமேல் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. குதிரை வண்ணமயமாக இருந்தது.

என்னுடைய பார்வையில் இருந்த குழப்பம் வெள்ளை வேட்டிக்காரனுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

"நான் தான் ... அய்யனார்...பேசுகிறேன்."

பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தேன். அந்தப் பெண்கள் மட்டும் கருக்காயை தூற்றிக் கொண்டிருந்தனர். உருவம் குதிரையிலிருந்து இறங்கி நின்றது.

"நான் தானப்பா அய்யனார். இந்தா விபூதி...பூசிக்கோ..."

நான் இரண்டு கைகளையும் நீட்ட உள்ளங்கையில் விபூதி இருந்தது.

"அய்யனே நீங்க எங்கே இப்படி...?" தடுமாறினேன்... கும்பிட்டேன்.

"எவ்வளவு நேரம்தான் கம்பிக்கதவிற்குப் பின்னால் உட்கார்ந்திருப்பது? உள்ளே புழுக்கம் வேறு. இப்போதெல்லாம் ரொம்பவும் வியர்க்கிறது. பூசாரி வேறு இரண்டு நாட்களாக வரவில்லை. சட்டிப்பானை செய்து குடும்பம் நடத்த முடியாது என்று சித்தாள் வேலைக்குப் போய்விட்டான்."

"அய்யனே... நீங்கள் சொல்வது சரிதான். காற்று மண்டலமே சூடாகிப் போனதாக செய்தியில் சொல்லுகிறார்கள்."

"அது அப்படித்தான் போகும். இன்னும் கூட சூடாகிப்போகும். நீ கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. சரி...... நான் மட்டும் குதிரையில் ஏறிப்போகிறேன்.....உனக்கு குதிரை சவாரி சரிப்படாது. மூச்சு முட்டும். பதட்டப்படாமல் நடந்து வா."

குதிரை ஓடும் சத்தம் காதில் அதிர்ந்தது. அதற்கப்புறம் ஏனோ எனக்கு வெய்யில் உறைக்கவில்லை.

கைகாட்டி பள்ளிக்கூடத்திற்கு நான் வந்து சேர்ந்தபோது மாவட்ட கலெக்டர் காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.

பள்ளிக்கூடத்திற்குப்போகும் பாதைநெடுகிலும் சுண்ணாம்புத்தூளை வாரியிறைத்திருந்தார்கள். மூத்திர நாற்றத்தை மறைப்பதற்காக இருக்கவேண்டும். வரவேற்புத் தட்டிகளும், தோரணங்களும், வண்ணக்காகிதங்களும், அரசாங்கவிழா என்பதை அடையாளப்படுத்தின.

நீளமான கூடம். மேடையில் ஒற்றை நாற்காலி. பின்புறம் காந்திமகான் சிரித்துக் கொண்டிருந்தார்.

முன்வரிசைகளில் அதிகாரிகளும் வெள்ளைச்சட்டை பொதுமக்களும் இரண்டறக் கலந்திருந்தனர். கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த அய்யனார் என்னை சைகைகாட்டி அழைத்து பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டார். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டேன். நிறைய நாற்காலிகள் காலியாக இருந்தன. நாற்காலி ஒத்துக்கொள்ளாத கூட்டம் வாசற்படிகளில் திக்கித் திணறிக் கொண்டிருந்தது.

மேடைமேல் ஓர் ஆள் இளித்துக்கொண்டே ஏறினார். குடிநீர் பாட்டிலை பயபக்தியுடன் கலெக்டருக்கு முன்னால் வைத்துவிட்டுப் போனார்.

"இந்த ஆள்தான் இந்த கிராமத்தின் நிர்வாக அலுவலர். இந்த ஊர் பள்ளிக்கூட பிள்ளைகளுக்கும் இவருக்கும் நிறைய கொடுக்கல் வாங்கல் இருக்கிறது. பண உதவி, இறப்பு, பிறப்பு, வாரிசு விவரம் எல்லாம் இவருடைய பேனா மையில் கரைந்துபோய் இருக்கிறது. "அய்யனார் சன்னமாகச் சொன்னார்.

விழா தொடங்கிவிட்டதற்கு அடையாளமாக முன்னாள் எம்.எல்.ஏ. ஆரவாரமாக வரவேற்புரை சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல இனத்து மக்களையும் அடக்கி ஆண்ட வீரர்களின் பூமி இது என்று ஊர்ப்பெருமையும் குலப்பெருமையும் பேசினார். அவருடைய வீரகுலத்தில் பிறந்த மாவட்டக் கலெக்டருடன் உறவாடிக் கொண்டார். உறவினர்களின் ஊருக்கே அதிகாரியாக வந்திருப்பதில் பெருமைப்பட்டுக் கொண்டார். உட்கார்ந்திருந்த கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது. அதிகாரிகள் வாயெல்லாம் பல்லாக கைதட்டி மகிழ்ந்தனர். கைதட்ட மனமில்லாதவர்கள் சிலர் குனிந்து கொண்டனர், சிலர் கொட்டாவி விட்ட்னர். வாசற்படிகளில் திக்கித்திணறி நின்றிருந்த இளைத்த கூட்டம் மட்டும் காரணம் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தது.

மேடையில் உட்கார்ந்திருந்த கலெக்டர் கலர் முண்டாசு கட்டிய டவாலியை பக்கத்தில் அழைத்து கிசுகிசுத்தார். கலெக்டருக்குப் பக்கத்தில் இன்னொரு நாற்காலி போடப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. மேடையில் ஏறி உட்கார்ந்ததும் மீண்டும் கைத்தட்டல்.

அய்யனார் என்னுடைய காதில் கிசுகிசுத்தார். " இவனோட பத்தாவது தாத்தா சுந்தரபாண்டியனுடன் சண்டைக்குப் போய் செத்துப் போனான்். அப்போதே இவன் குலம் மாறிப்போனான். அந்தக் கதையெல்லாம் இவனுக்குத் தெரியாது. அதற்குப்பிறகு எத்தனையோ சண்டைகள். அந்தக் கதையெல்லாம் எனக்குத்தான் தெரியும்."

நான் பக்தியுடன் தலையாட்டிக் கொண்டேன்.

பஞ்சாயத்துத் தலைவர் கிராம மக்களின் கோரிக்கைகளை படிக்கத் தொடங்கியதும் நான் கவனமானேன்.

"கைகாட்டி கிராமத்தில் படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பக்கத்து நகரத்தில் ஜெராக்ஸ் கடை வைக்கவும், பெட்டிக்கடை, சைக்கிள்கடை வைக்கவும் குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்க வேண்டும்."

"ஆதிதிராவிடர் காலனியில் இருக்கும் ஏழைமக்களுக்கு தாரை தப்பட்டை இலவசமாக கொடுக்க வேண்டும். வண்ணார்களுக்கும், பரியாரிகளுக்கும் தொழில் கருவிகள் இனாமாகக் கொடுக்கவேண்டும்."

'நல்ல கோரிக்கை. நியாயம்தான்,' நான் எண்ணிக் கொண்டேன்.

அய்யனார் என்னைப்பார்த்து சிரித்தார். கொஞ்சநேரம் கழித்து கிசுகிசுத்தார். "நீ உன்னோட அப்பாவுடன் வளையல் விற்கப் போயிருக்கலாம். அதிகாரி வேஷம் உனக்குப் பொருத்தமில்லை."

எனக்கு 'சுருக்'கென்றது. ஊர் ஊராய் தோளில் வளையல் மூட்டை சுமந்து அப்பா என்னை படிக்கவைத்தது நினைவுக்கு வந்தது.

பஞ்சாயத்துத் தலைவரின் கோரிக்கைப் பட்டியல் நீண்டுகொண்டிருந்தது.

"கருங்குழி ஏரியின் கதவணை பலகையின் உயரத்தை ஒரு அடிக்கு குறைக்கவேண்டும்,"

அய்யனார் என்னைக் கிள்ளினார். "கருங்குழி ஏரியை ஆக்கிரமித்து இவன் நான்கு ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருக்கிறான். கரும்புப் பயிர் தண்ணீரில் மூழ்காமல் இருக்க இவனுடைய சொந்தக் கோரிக்கை இது."

அடுத்த கோரிக்கை அய்யனாரின் கோரிக்கையாயிருந்தது. "அய்யனார் கோயில் பஸ்நிறுத்தத்தில் ஒரு நிழற்குடை கட்டித்தர வேண்டும்."

இதற்கு பின்னால் உள்ள பிரச்சினை அய்யனாருக்கு நன்றாகத்தெரியும். நிழற்குடை கட்டியதாக பொய் ரிக்கார்டு தயார் செய்து பணம் வாங்கிப் பல வருடமாகி விட்டது. வாங்கியது மேடையில் உட்கார்ந்திருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மைத்துனன். அதுவும் எதிர்க்கட்சிக்காரன். எதிர்க்கட்சிக்காரன் என்பதெல்லாம் பகல்நேரத்தில் தான்.

அய்யனார் இதைச் சொன்னதும் எனக்கு 'சுருக்'கென்றது. அந்த இடத்தைவிட்டு எழுந்து போய்விடலாமா என்று தோன்றியது. அய்யனாரின் மேல் உள்ள மரியாதையால் மனதை மாற்றிக்கொண்டேன். பஞ்சாயத்துத் தலைவர் அதற்கப்புறம் படித்ததெல்லாம் என் கவனத்தில் இல்லை.

கொஞ்ச நேரத்தில் மாலைகள், சால்வைகள் எல்லாம் கலெக்டருக்கு போடப்பட்டன. சமபந்தி விருந்து ஏற்பாடாகி இருப்பதாகவும் எல்லோரும் இருந்து சாப்பிட்டுவிட்டுப் போக வேண்டுமென்றும் தாசில்தார் 'மைக்'கில் கேட்டுக்கொண்டார்.

பூசாரி இரண்டு நாட்களாக வராத விஷயம் நினைவிற்கு வந்தது. பட்டினியாக இருக்கும் அய்யனார் சம்பந்தி விருந்தில் உட்காருவாரா? உப்பு போட்ட சாப்பாடு அவருக்கு ஒத்துக் கொள்ளுமா? என்றெல்லாம் என்னுடைய மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

அப்போதுதான் கையில் ஒரு ரோஜாப்பூமாலையுடன் அந்த மெலிந்த இளைஞன் மேடையேறி மைக்கைப்பிடித்தான்.

"இவன் தான் நாகு. ஆதிதிராவிடர் காலனியிலிருந்து முதன்முதலாக கல்லூரிக்குப்போய் படித்தவன்" அய்யனார் காதோடு சொன்னார்.

நாகு அழுத்தமான தெளிவான குரலில் பேசினார்.

"ஆதிதிராவிடர் காலனி சார்பாகவும், எங்களுடைய மக்களின் சார்பாகவும் இந்த மனுநீதிநாள் கூட்டத்தில் பல கோரிக்கைகள் கொடுத்திருந்தோம். மாவட்டக் கலெக்டர் எந்தக் கோரிக்கையைப் பற்றியும் முடிவு எடுக்கவில்லை. இருந்தாலும், கலெக்டரைப் பாராட்டி இந்த மலர் மாலையை ஆதிதிராவிடர் காலனி மக்கள் சார்பாக அணிவிக்கிறேன்."

கூட்டத்தில் அப்புறம், அப்புறம் அமைதி. நாகு மாலையைப்போட முயன்றபோது கலெக்டர் புன்னகையுடன் அதைத் தடுத்தார். "இருக்கட்டும் தம்பி...இந்த மாலை இப்போது வேண்டாம். உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகு நான் இந்த மாலையை வாங்கிக் கொள்கிறேன்."

கலெக்டர் அமர்ந்து கொண்டார். முகத்தைத் துடைத்துக் கொண்டார். பக்கத்தில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. அவரிடம் ஏதோ சமாதானமாக சொல்ல முயன்றார். அப்போது நாகு செய்த காரியத்தில் கூட்டம் மீண்டும் சலசலத்தது.

"...கலெக்டர் சொல்வது ரொம்பவும் சரி. அதுவரையில் இந்தப் பூமாலை இவரிடம் இருக்கட்டும்." மேடையின் பின்புறமிருந்த காந்தி மகான் படத்திற்கு பூமாலையை அணிவித்துவிட்டு நாகு இறங்கிச் சென்று கொண்டிருந்தார்.

திகைப்பில் இருந்த நான் பக்கத்தில் இருந்த அய்யனாரைப் பார்த்தேன். அய்யனாரைக் காணவில்லை. குதிரை ஓடும் சத்தம் காதில் அதிர்ந்தது.

- மு.குருமூர்த்தி ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com