Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
வளர்ந்த குதிரை - 2

கிருஷ்ணகுமார்


குதிரைகளுக்குப் பதிலாக மனிதர்கள் என்று நீங்களாகக் கற்பனை பண்ணியிருந்தால் நான் பொறுப்பில்லை. நான் குதிரைகளைப் பற்றித் தான் இதுகாறும் கூறி வந்தேன்.

Horse குதிரைகள் வெறும் குளம்புகளை மண்ணில் நிறுத்தி பரவி தன் உடம்பின் பளுவை மண்ணில் இறக்கியும், பறந்துப் பறந்து அரேபியப் பாலைவனங்களிலும், கிராண்ட் கென்யான் போன்ற மலைப் பிரதேசங்களிலும் காற்றிலும் கடுகிச் சென்றன. எவ்வளவு பெரிய உடம்பின் பழு முழுவதும் சிறு குளம்புகள் தாங்குகின்றன. அதற்கு மேலே வலுவானத் தொடைகளும், இடுப்பு எலும்புகளும் தெரிந்தன. எவ்வளவு இளவரசர்கள். அவர்களுக்காக ரத்தம் சிந்தியப் போர் வீரர்கள். எவ்வளவு செவ்விந்தியர்கள்? அவர்களை வாகைச் சூடிய (கொன்றழித்த) போர்த் தளபதிகள்? அவர்களுக்காக குடும்பங்களை இழந்த குதிரை வீரர்கள்?

சேற்றில் இறங்கி வயலில் கால்களை வைத்து, நாள் முழுவதும் வயலை நன்கு உழுதுவிட்டு, சோம்பேறித்தனமாக மாலையில் கிடைக்கும் வைக்கோலுக்காக மெதுவாகக் கரையேறிச் செல்லும் மாடுகளும், காளைகளும் ஞாபகம் வந்தது. மூட்டைகளாக அடுக்கி ஒன்று முதல் நூறு வரை தன் கையினால் மண்ணில் விதைத்து, அறுவடை செய்த போகிஷங்களை எண்ணி, “அவ்வளவு தான் ஐய்யா!” என்று சொல்ல,

“டேய் யாரங்கே நம்ம சாமிக்கு ஒரு மூட்டையும், கொஞ்சம் பருப்பு, புளி (புளி மிட்டாயில்லை!) எல்லாம் கொடு!”

“நல்லா இருக்கணுமைய்யா!”

பவனி வரும் குதிரைகள் நொண்டியடித்து கீழே விழுந்தால் அதன் எஜமான் துப்பாக்கியெடுத்து நெற்றியில் வைத்துக் குறி பார்த்துச் சுடுவான். கருணையேயில்லாத மனிதர்கள் கூடக் தங்கள் குதிரையின் காலுக்கு லாடம் வைத்து இரும்புக் கவசங்கள் பூட்டுவார்கள். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் அரேபியர்களைப் பற்றி இவ்வாறு விளக்கப்பட்டிருப்பதைப் படித்திருக்கிறேன்.

வேலைக்கு வரவில்லைய்யா?“இந்தா இந்த சுக்குக் கஷாயாத்தைக் குடித்து விட்டு விழுந்து கிட. அப்படியே சரியாகிடும். இல்லையென்றால் சாராயம் குடி. இரவு தீரவில்லையென்றால், விடிந்தால் சங்கு!”. காலுக்கு சரியாகக் காலணி போடாமல் வயலில் இறங்குகிறார்களே, கூலி தான் இன்றைக்கு சுமார் ஐம்பது ரூபாய் கொடுக்கின்றேன். ஒரு செருப்பு நூறு ரூபாய்க்குப் போட்டுக்கொண்டு வந்தால் குறையா முழுகிவிடும்? “செருப்பு போட்டு நடக்கிறான்யா! என்ன திமிரு?” “தூக்கி நட!”

அரேபியர்களுக்கு ஒட்டகம், மற்றும் குதிரை என்றால் உயிர். லாரன்ஸ் ஆஃப் அரேபியாவில் இங்கிலாந்து இளவரசர் அவ்வாறு குதிரை மீது தீராக் காதல் கொண்டு மற்ற அரேபியர்களுடன் போவதை வண்ணத்திரையில் கண்டிருக்கின்றேன். ஒமார் முக்தார் என்ற படத்தில் வீரராக ஆந்தனி குவின் குதிரையில் கம்பீரமாக ஏறி உட்கார்ந்து அதன் இடுப்பில் காலால் உய்துக் குதிரையைத் தட்டிச் சென்று மின்னலெனப் போவதைப் பார்த்து பரவசப்பட்டிருக்கின்றேன். இப்படியே குதிரைகளைப் பற்றி மின்பிம்பக் கனவுகளைக் கண்டுகொண்டே என் பின்புறத்தை படுக்கையில் உட்கார்ந்து நன்றாகத் தேய்த்தேன். எங்கு நான் வளர்வதைப் பற்றி யோசிக்க முடியும்?

பெருமாள் கோவில் ஊர்வலக் குதிரையில் உட்கார்ந்திருந்தேன். காலையிலிருந்து சாப்பிடவில்லை. மத்தளங்கள் அடிக்க கம்பு கொடுத்திருந்தார்கள். பெருமாள் நான்கு வீதிகளிலும் பவனி வந்த பிறகு, கோவிலருகே மணி மண்டபத்தில் எழுந்தருப்பட்ட பின்பு, நைவேத்தியங்கள் முடிந்த பின், பட்டர் வீட்டிற்க்கு பொங்கல் போய் சேர்ந்த பின் தான் மதிய உணவு கிடைக்கும். அதற்குள் கொஞ்சம் பீடி குடித்து விட்டால் பசி தாங்க முடியும். என் பிள்ளையாவது என்னைப் போல “சொங்கி குதிரைகள்” கூட சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். பெருமாள் புகழ்பட ஏதாவது செய்ய வேண்டும். என்னை போல மத்தள விநாயகராகப் போகக்கூடாது என்று முடிவு செய்தேன்.

“என் கண்ணன் குதிரையென்றால் துள்ளிக் குதிப்பதை நிறுத்த மாட்டான்” என்று அம்மா பெருமையாகச் சொல்வாள். “சாட்டையின் ராணி” “ரிவால்வர் ரீட்டா” “பெண்ணின் சவால்” “ஜாக்பாட் ஜாங்கோ” என்று தெலுங்கு டப்பிங் குதிரைகளைப் பார்த்துக் கனைத்து என்னைக் குதிரையாக நினைத்துக் குதிப்பதைப் பார்த்து தான் அம்மா அப்படி சொன்னாள். குதிரையுடன் வாஞ்சனையும் வளர்ந்தேன்.

குதிரை, ஆடு, மாடு, கோழிகளுடன் கொட்டிலில் மழை பெய்யும் பனி இரவில் வைக்கோல் நனைய ஒரு வித வாசனையுடன் “கத கதவென்று” படுத்திருப்பேன். என்னைப் பற்றியும் என் குதிரைகளைப் பற்றிப் பஞ்சனையில் படுப்பவர்களுக்கு என்ன தெரியும் என்று இளக்காரமாக மனதில் எள்ளி நகையாடினேன். ஏதாவது ராஜா, குதிரை, சினிமா, என்று கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இந்த மாதிரி சனியன்கள் வாலைச் சுழற்றி மூத்திரம் போவதற்கருகே வாழ மாட்டார்கள். கொசுக்கள் வேறு நாசிகளில் மூத்திரத்தைச் சுமந்து வந்து வாசனையுடன் துளைத்தெடுத்தன.

நாளைக் கோடம்பாக்கத்தில் யாரோ “தேவராமே! குதிரை வைத்து படமெடுக்கிறாராம்! அவரிடம் இந்தச் சனியன்களை வைத்து நாலு காசு பார்க்கலாம்!...

குதிரைகளைப் பற்றி பஞ்சனையில் படுத்தவாறு கீழ்கண்டவாறு யோசிக்கலானேன்.

வளர்ந்த பின் ஜெமினி கணேஷ் காதல் பார்வையுடன், வைஜயந்திமாலாவுடன் குதிரையில் மெதுவாக வருவது எனக்கு மிகச் சோம்பலாகப் பட்டது. அதுவும் ஏ.எம். ராஜா இன்னிசையில், மெதுவாக, கனிந்து, குழைந்து பாடி வருவது ஒரு மாதிரி இருந்தது. வீரமாகக் குதிரையில் வருவதைப் போலில்லாமல் ஏனோ தானோ என்று இருந்தது. ஜான்சி ராணி குதிரையில் குழந்தையை முதுகில் கட்டிக் கொண்டு போனாளாமே?

சரபோஜி மகாராஜா சப்பணங் கட்டிக் கொண்டு வாழையிலையில் 64 பதார்த்தங்களை சாப்பிட்டு உட்கார்ந்த நிலையில் அரண்மனைத் தோட்டத்தில் குதிரைகள் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. எதிர்கள் அதிகமாகிப் பெருகிவிட்டதால், மகாராஜா அடுத்த மாதம் போர் தொடுக்கச் சொல்லியிருந்தார். அதற்காக கொன்று போடும் போர்க் குதிரைகளை சீவிக் கொண்டிருந்தனர். வேற்கள், விற்கள், வாட்கள் எனக் கூர்மை தீட்டப் பட்டு, ஊர் எல்லையில் காவேரிக் கரையினில் குதிரைகள் போர்ப் பயிற்சிகள் மேற்கொண்டிருந்தனர்.

மியூல் என்ற கோவேறுக் கழுதை குதிரைக்கும், கழுதைக்கும் பிறந்து பொதி சுமக்கப் பிறந்த குதிரைகளாய் இருந்து வந்தன. சலவைக்காரர்கள் உபயோகிக்கும் கழுதைகளைப் போன்று பொதிகளைச் சுமந்து காடு, மேடு பள்ளங்கள் தாண்டி மெக்சிக்கோ பார்டர் வழியாக மக்களைச் சுமந்து கலிபோர்னியா மாகாணத்தில் நுழைந்து வந்தன. வேறு இடத்தில் பணி புரிய, பிழைக்க வரும் அநாதைகள் “காதல் பாட்டு” பாடவா முடியும்.? காதலைப் பற்றி யோசிக்க நேரம் ஏது? நேரம் கிடைத்தால் குதிரையிலிருந்து இறங்கி மரத்தடியினிலேயே எல்லாம் முடித்து...

தாங்கும் இடுப்பும், முதுகும் கற்களிலே குத்தினால் என்ன? நம் பெண்கள் அல்லவா கவலைப்பட வேண்டும்? அவர்கள் தாங்குவார்கள் நம்மை என்று போய்க் கொண்டே இருக்க வேண்டும்... பொதிகள் சுமக்கக் குதிரைகள் வேண்டும் தானே?

அக்குதிரைகள் போன்றே சேட் கல்யாணத்தில் அலங்கரித்த குதிரைகள் முகத்தில் திரைச்சீலைகள் போட்டு மற்ற பெண் குதிரைகளைக் கட்டி அடிமையாள்வதற்கு மெதுவே பயங்கரமாக நடந்து செல்வதாய்க் கண்டேன்.

சேட் கல்யாணமே இப்படி இருந்தால், கடந்த காலத்தில் ராஜஸ்தானில் எப்படி இருந்திருக்கும்? குளம்படிகள் கொண்ட குதிரைகள், ஒட்டகங்கள் நிறைய அங்கு இருக்குமாமே? அஜித் ஆட பின்னால் சிம்ரன் ராஜஸ்தான் மங்கையாக நடனமாட என் மனது ஓடியது. ரொம்ப ஓடியதால், நாக்கு வறண்டு போகவே...அங்கு பொதிக் குதிரையாக எட்டுக் குடங்களைச் சுமந்து வந்த மாதுவிடம், “அம்மா கொஞ்சம் தண்ணீர் தருகிறீர்களா?” எனக் கேட்டேன்.

“தண்ணீரா? எடுத்து வர சுமார் ஐந்து மைல்கள் போக வேண்டும். நண்பிகளுடன் பேசிக் கொண்டே போனால், சுமார் இந்தத் தலையிலிருக்கும் எட்டு குடங்களுக்கும் மண்ணைத் தேண்டி வடிகட்டிக் கிடைக்கும் நீரைக் கொண்டு வரலாம். சுமார் 4 மணி நேரம் ஆகும். பிறகு அடுப்பு பற்ற வைக்கச் சுள்ளிகளைப் பொறுக்கி எடுத்து வர வேண்டும். வெயில் 115 இருக்கும். 102 ஆக இருந்தால் சற்று தேவலை. இந்த சமயத்தில் “கொஞ்சம் தண்ணீர்” வேண்டுகின்றானே.

சரி! “தாகம் என்று வரும் ஆண் அதிதியை மனம் நோகாமல் காப்பாறவேண்டும் என்று ஆகமம் சொன்னபடியே கொஞ்சம் தண்ணீரை எட்டாவது குடத்திலிருந்து தாரை வார்த்தாள்.

மீண்டும் குடங்களை எடுத்துக் குடிசைக்குப் போன பெண், குடியில் புரண்டு படுத்த ஆண்மகனுக்கு சிரமம் பார்க்காமல் சேலை நீக்கி, குடிசையில் மண் தரையில் பரவி படுத்து அரவணைத்தாள். பிறகு கலவி முடிந்தவுடன், சிரமம் பாராமல், குமுட்டிய மூட்டி ஆண் மகனுக்கு சமைக்கு ஊது குழல் கொண்டு “உப் உப்” என்று கண்கள் கசிய புகையெரிச்சலோடு ஊதி சமைக்க முனைந்தாள். குதிரைகள் 11-12 மாதம் சினை சுமக்குமாம். இந்த வயிற்றில் ஒன்றூ வளர்ந்தால், இன்னும் பத்து மாதங்கள் சுமக்கணும் என்று நொந்து போன ஒரு ராஜஸ்தான் பெண் பேசுவது கேக்க முடியாமல் பாலைவனத்தில் ஆடும் சிம்ரன் பற்றி யோசித்தவாறே இனிய நினைவுகளில் ஆழ்ந்து போனேன்...

ராஜஸ்தான் மன்னர்களுக்கும் அங்கே வாழ்ந்த வீரர்களுக்கும் குதிரைகள் என்றால் உயிராம். குதிரைகளின் ராஜ நடையில் உலகத்தில் போராடலாம் என்று எப்போதும்மொகலாயர்களைச் சமர் புரிந்தவர்கள் அவர்கள்.

ஒரு வாள், ஒரு மனைவி, ஒரு குதிரை என்று வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ராஜஸ்தான் வீரர்கள். (நன்றி! சாண்டில்யன் கொடுத்த அறிவு).

மூன்று கைகளுடன் ஒரு கைக்கொன்று என்று ஒரு வாள், ஒரு மனைவி, ஒரு குதிரையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடக்கலானேன்...

“இந்தப் பாழாப் போன ராஜாவிற்கு மாரடித்து என்ன சுகம் கண்டோம்? பிரிட்டிஷ் ஆர்மியில் (பட்டாளத்தில்) நன்கு துணி கொடுத்து, சீமைச் சரக்கு கொடுப்பார்களாமே? குதிரைகூட நன்றாகப் புல்லு சாப்பிட்டு எப்படி இருக்குது பார்த்தே இல்லை? நம்ம குதிரயெல்லாம் சோனாங்கிக் குதிரைகள். வெள்ளைக்காரன் குதிரை எப்டி இருக்குது பார்த்தியா? ஓட்டினால் அதை ஓட்டணும்!”

குதிரைகளில் ஏறிப் போய் “ஹாய் ஹூய் “ என்று பானட் கத்திகளுடன் சரேலென்று பாய்ந்து புழுதிக் கிளம்ப எதிரிகளை வெட்டியெறிய போர்க்களத்தில் போராடித் தோற்று, வென்று வந்த வீரர்கள் இதற்குப் பதிலாக நின்ற இடத்திலிருந்து ஈயக் குண்டுகளை பீரங்கிகள் வைத்துச் சுலபமாக மண்கோட்டைகளை, கோட்டைகளைக் , கொத்தளங்களைத் தகர்க்கலாமே! என்று கண்டு கொண்டனர். குதிரைகள் நின்றன. அவற்றீல் கம்பீரமாக ஜெனரல்கள் நிற்க, அவர்கள் கையை உயர்த்த “ஹாய் ஹூய்” என்று கூச்சலில்லாமல், மெதுவாக துணிப்பந்தில் எண்ணெய் விட்டுப் பற்ற வைக்க அந்தத் தீப்பந்தத்தினை எடுத்துப் பீரங்கிக் குழாயில் விட்டு, வெடி மருந்தினைக் கிளப்ப “தூம்” என்று ஈயக்குண்டுகள் இரண்டு மைலுக்கப்பால் வெடித்துச் சிதறியது. வீரர்கள் துண்டாகி விழுந்தனர். குதிரைகள் பின் தெறிக்கத் தாறுமாறுமாய் ஒடின ...

இக்குதிரைகள் முன்னால் இப்பீரங்கிகள் எம்மாற்றம் என்று ஊமைத்துரை முழங்க, எனக்குத் தெரிந்த கட்டபொம்மன் (சிவாஜி சார் தான்!), குதிரைகளுடன் மண் கோட்டைகளைக் காப்பாற்ற பீரங்கிகள் முன்னே குதிக்க, குண்டுகள் துளைக்க மண்கோட்டைகள் சரிந்தது. பானர்மேன் வென்றார். ஜார்ஜ் கோட்டையில் கொடிகள் கம்பீரமாகப் பறந்தது. கடற்கரைச் சாலைகள் பழுது பார்க்கப் பட்டு, பானர்மேன் குதிரையில் ஒய்யாரமாகப் பவனி வந்தார்...

(மேலும் குதிரைகள் ஓடும் . . . )

- கிருஷ்ணகுமார்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com