Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
புலிப்பானி ஜோதிடர்

கால பைரவன்இலைக்கட்டை கொண்டுவந்து கீழே வைத்தபோது எல்லோரும் கும்பல் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். வெளியில் வெப்பம் தகித்தது. பகல் விரிவு கொள்ளத் தொடங்கியதுமே வெப்பத்தின் தாக்கம் உக்கிரமாக வெளிப்பட ஆரம்பித்து விடுகிறது. தோட்டத்தை அடைத்தபடி கொட்டார பந்தல் போடப்பட்டிருந்ததால் உள்ளே அனலின் தாக்கம் மட்டுப்பட்டிருந்தது. பெரிய பெரிய அண்டாக்களில் சாதத்தை வடித்து, கீழண்ட அறையில், வைக்கோல் மேல் பரப்பப்பட்டிருந்த காடாத்துணி மீது கொட்டி ஆறவைத்திருந்தனர். சமையல்காரர்கள் திருபுவனத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள். தாத்தாவிற்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் அவர்களே தொடர்ந்து வரவழைக்கப்பட்டார்கள். நல்ல கை பக்குவம். சுவைபடச் சமைப்பதில் திறமை கூடியவர்கள். சந்தவாசலிலிருந்து பூக்கூடைகள் வந்து சேருவது வழக்கம். பூக்கட்டுபவர்கள் வேட்ட வலத்துக்காரர்கள்.

தண்டமாலை கட்டுபவர் மட்டும் தனியாக சுவாமி மலையிலிருந்து அழைத்து வரப்படுவார். அவரவர் வேலைகள் கனகச்சிதமாக நடந்து கொண்டிருக்கும். முதல் தினமே வந்து சேரும் பூக்கூடைகளை ரோட்டிலிருந்து வீட்டிற்கு கொண்டு வருவது என்னுடைய பொறுப்பு. தீபாவளிக்கு ஊருக்கு வருபவர்கள், இருந்து சூரசம்கார விழாவைக் கண்டு களித்து விட்டுச் செல்வது வழக்கம். திருவிழா பத்து நாட்கள் வரை நீளும். நான்காவது நாள் திருவிழா தாத்தாவுடையது. வீட்டில் இந்த பத்து நாட்களும் ஒரே கூச்சல் கும்மாளம் தான். குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிப்பிடித்து விளையாடியபடியிருப்பார்கள். உறவினர்கள் தவிற, தாத்தாவிற்கு தெரிந்தவர்கள் நிறைய பேர் வருவது வழக்கம். ஒவ்வொருவரையும் உபசரிப்பதன் அவசியத்தை தாத்தாவைப் பார்த்தே நாங்கள் கற்றுக்கொண்டோம். வீடு ரெண்டுகட்டிடமாக இருக்கும். முதல் பாகம் மெத்தை கட்டிடமாகவும், அதைத் தொடர்ந்து சீமை ஓடு வேயப்பட்டதாகவும் இருக்கும். திருவிழாவிற்கு முதல் நாள் இரவு யாரும் அனேகமாக தூங்குவது கிடையாது. சிறுவர்கள் மட்டும் உறங்கியபடியிருப்பார்கள். பெரியவர்கள் கால்களை நீட்டியபடி கதைபேசிக்கொண்டு காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருப்பார்கள். ஆயா ஒரு ஓரத்தில் அமர்ந்து, வெற்றிலையை மடக்கி தன் வாயில் வைத்தபடி ஏதாவது பழங்கதையை பேசிக்கொண்டிருப்பாள். தோட்டத்துப் பந்தலில், சமையல்காரர்கள் சிறிய ஸ்டூலில் அமர்ந்து ஜாங்கிரி பிழிந்து கொண்டிருப்பார்கள். சிவன் கோயிலில் தர்மபுரம் சுவாமிநாதனோ மழையூர் சதாசிவமோ பாடிய ஒலி நாடா ஒலித்துக் கொண்டிருக்கும்.

‘‘டேய் அங்கயே ஏன் மாடு மாதிரி நிக்கிர’’ எனும் மாமாவின் குரல் என்னை பழைய நினைவுகளிலிருந்து மீளச்செய்வதாக இருந்தது. விழுப்புரத்துச் சித்திப்பையன் எதையோ தூக்கிக் கொண்டு வேகமாக தெருப்பக்கம் ஓடினான். நடுக்கூடத்தை கடந்து நான் தோட்டத்திற்கு சென்றேன். அங்கு கிழக்கில் இருந்த கிணற்றடியில் அம்மாவும் குள்ளோண்டு ஆயாவும் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் அருகில் சென்றேன். நான் வருவதைக் கண்டதும் அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு பாத்திரம் துலக்குவதில் மும்முரமானார்கள். நான் உளறுவாய் என்பதும், என்னிடம் எதை சொன்னாலும் அது தங்காது என்பதும் அம்மாவின் திடமான எண்ணம். நான் அருகில் சென்று பேச்சுக் கொடுத்தேன்.

Old man ‘‘என்னம்மா எல்லோரும் கும்ப கும்பலா நின்னு பேசிக்கிறாங்க?’’

‘‘ஒன்னுமில்லைடா’’

அதற்குள் மாமா அந்தப் பக்கமாக வர, அம்மா பாத்திரங்களை தண்ணீரில் அலசி எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள். நான் குள்ளோண்டு ஆயாவை தொடர்ந்து நச்சரிக்கத் தொடங்கினேன்.

‘‘ஆயா, நீயாவது சொல்லு’’

‘’ஒங்க தாத்தா வந்துட்டு போனாறான்டா’’ யார் கனவுல’’

‘‘போடா போக்கத்தவனே, கனவுல இல்லடா, நெஜத்துல’’

‘‘என்ன பாட்டி ஒலர்ற’’

‘‘நானா ஒலர்றன், அங்க போயிபாரு, உங்க தாத்தா காலடி அவ்ளோ துல்லியமா பதிஞ்சிருக்குது’’

‘‘எங்க’’

‘‘சமையக் கொட்டாயில’’

குள்ளோண்டு ஆயா கூறியதும் எனது நினைவு அடுக்குகள் மெல்ல விரிவடைய ஆரம்பித்தன. ‘புலிப்பானி ஜோதிடர் இல்லம்’ என முகப்பில் பொறிந்திருக்கும் வண்ணம் மங்கிய தாத்தாவின் வீடு எனது மனதில் அலையடித்தபடி இருந்தது. தாத்தாவைப் பற்றிய மங்கலான சித்திரம் ஒன்று என் மனதில் உருக்கூடத் தொடங்கியது. அவரின் வாழ்வை ஒட்டு மொத்தமாக யோசிப்பதென்பது மலையைச் கெல்லி எலி பிடிப்பதற்கொப்பானதாகும். அந்த அளவிற்கு நீல அகலங்களைக் கொண்டது அவரது வாழ்க்கை. நான் அறிந்த வரையில் அவர் இயல்பை மீறிய வாழ்க்கையையே வாழ்ந்ததாக தோன்றுகிறது. நான் அது குறித்து எப்போதாவது கேட்டால், பதில் ஏதும் அளிக்காமல் மென்மையான ஓர் சிரிப்பை மட்டும் உதிர்த்து விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். பாட்டியின் மூலமாகத்தான் அவரது இளம் வயது வாழ்க்கைச் சிக்கல்களை அறிய முடிந்தது. ஒரு பிச்சைக்காரனுக்கு ஒப்பானதொரு வாழ்க்கையை அவர் வாழ்ந்து பார்த்திருக்கிறாறென்றும், அவரது பெற்றோர்கள் இறந்தபிறகு ஒரு நாடோடியைப் போல் திரிந்திருக்கிறார் என்பதையும் உறவினர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பிறகு பல வீடுகளில் கூலி வேலை செய்து ஜீவனம் நடத்தி வந்ததாகவும், அப்போது கூனமுட்டு வைதேகியின் கர்ப்பத்துக்கு இவர்தான் காரணம் எனக்கூறி சிவன் கோயில் எதிரில் உள்ள கல்தூணில் கட்டிவைத்து அடித்ததாகவும் அன்று இரவே திருவிதாங்கூர் சென்றவர் மந்திரங்களைக் கற்றுக் கொண்டதாகவும் ஒரு செய்தி உலவியதாக பாட்டி கூறும்போது அவளது கண்களில் நீர் திரள்வதைப் பார்க்க ஒரு மாதிரியாக இருக்கும். அப்போது அவள் கன்னங்களில் மெல்லிய கோடுகள் ஏறி இறங்குவதைக் காணமுடியும். பாட்டி எங்களிடம் கூறுவதை கேட்டு உணர்ச்சிவசப்படும்போதெல்லாம் தாத்தா எங்களிடம் சொல்லுவார். அப்போது அவரின் காது மடல்கள் துடிப்பதையும் விழிகள் படபடப்பதையும் காணமுடியும்.

‘‘சாமி சாமின்னு இப்பதான் எழையரானுவ. சின்ன வயசுல ஒரு டம்ளர் தண்ணிக்கு நாதியத்து கிடந்தப்ப எவனும் கண்டுகினது இல்ல. வாங்க வந்து வடம்புடிச்சு குடுங்கன்னு கேக்கற இதே பாளத்தார் தான் அப்ப என்ன ஓடஓட அடிச்சு வெறட்டனாரு. செங்குறிச்சார் வீட்டு மாட்டுக் கொட்டாயில எத்தன ராத்திரி தூங்கியிருப்பேன் தெரியுமா?’’

தாத்தா இதுமாதிரி பேசும்போது பாட்டியின் கண்கள் குளமாகிவிடும். பெரியம்மா, சித்தி, அம்மா ஆகியோர் விசும்பத் தொட்ங்குவர். ஒரு இறுக்கமான சூழல் நீடித்தபடியிருக்கும். தாத்தா இடுப்பு மடிப்பில் வைத்திருக்கும் பொடி டப்பியை எடுத்து லாவகத்தோடு தட்டித் திறந்து, ஒரு சிட்டிகை பொடியை எடுத்து போட்டுக் கொண்டு தும்முவார். அவரது தும்மலை நாங்கள் எதிர்பார்த்தபடியிருப்போம். தனது தாடி மீசையை கோதிக்கொண்டு பேச எத்தனிக்கும் அவரை இடைமறித்து அம்மா பேசுவாள்.

‘‘போதும்பா, போயி படுங்க’’

‘‘நா இருக்கறப்பவே சொன்னாதான்... எனக்கு பின்னாடி எங்கதைய யார் வந்து சொல்லுவா’’

‘‘உங்க பசங்களும், பேரப்பசங்களும் கண்டிப்பா சொல்லுவாங்கப்பா’’

‘‘சாவாம மூச்சோட இருந்தா பாக்கத்தான போறன்’’

என கூறிக்கொண்டே அவர் படுக்கையை தயார் செய்யத் தொடங்கும் போது நாங்கள் தூங்க ஆரம்பித்திருப்போம். நாங்கள் தூங்கியதை உறுதி செய்த பிறகு தான் பாட்டி உறங்கச் செல்வது வழக்கம்.

பல்வேறுபட்ட தருணங்கள் மூலமாகத்தான் தாத்தாவின் வாழ்க்கையை உணரமுடிந்தது. எதேச்சையாக நிகழும் அவற்றை சற்று கவனத்தோடு இருந்தாலொழிய அணுகமுடியாது. நெருக்கடியான நேரங்களில், நீண்டபடியிருக்கும் இரவுகளில் தன்னந்தனியே மொட்டை மாடியில் அமர்ந்து அவர் மது அருந்துவதைப் பார்த்திருக்கிறேன். யாரும் அது குறித்து அவரிடம் கேட்கமுடியாமல் தவித்தபோது நான் மட்டும் விளையாட்டாக கேட்க அவர் சொன்னார்.

‘‘குடிக்கறது தப்பான பழக்கமான்னு தெரியல, செதைஞ்சு கிடக்கிற மனச அமைதி படுத்தறதா ஒரு நெனப்பு. அதாலதான் குடிக்க ஆரம்பிக்கறோம். கடைசில அதோட பிடியில சிக்க வேண்டியிருக்கு. யாரு வாழ்க்கையை முழுசா வாழ்ந்து பார்க்குறா... அவங்களுக்காக யாருமே வாழறது கெடையாது. மத்தவங்களுக்காக எவ்ளோ நாள் தான் வாழறது. ஒரே அலுப்பா இருக்குடா. எனக்கு இப்ப கெடைக்கிற மரியாதய பாத்தா ஒரு விதத்துல பயமா இருக்குது. இன்னொரு விதத்துல அத சரின்னு தான் தோணுது.’’

என்னால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதையெல்லாம் உணரக்கூடிய வயதும் இல்லை. ஒரு புட்டியைத் திறந்து கண்ணாடிக் கோப்பையில் மெல்ல மதுவை ஊற்றுவார். அந்த புட்டியை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். வளைந்து நெளிந்து காணப்படும் கண்ணாடி புட்டியை அதுவரை நான் கண்டதில்லை. கோப்பையில் அளவாக தண்ணீர் கலந்து, மெல்ல எடுத்து உறிஞ்சும்போது அவரிடம் எந்தவித பதட்டத்தையும் காணமுடியாது. ஆனால் அப்பாவும் சித்தப்பாவும் இதுமாதிரி அமைதியாக குடித்து நான் கண்டதில்லை. சித்திக்கு தலைப்பிரசவம் ஆனபோது தாத்தா யாரும் அறியாதபடி மதுவை ஊற்றி சித்திக்கு கொடுத்ததை நான் மட்டும் கவனித்துக் கொண்டிருந்தேன். அதைப்பற்றி அவ்வப்போது சித்தியிடம் கிண்டலுடன் கேட்பேன்.

‘‘சித்தி நீயுந்தான் குடிச்ச’’

‘‘போடா தடியா’’

உதட்டைக்கடித்த படி சித்தி என்னை விரட்டுவாள். அதைக் கண்டு எல்லோரும் சிரிப்பார்கள். சிறுவர்கள் ஏதும் புரியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

வாரத்தில் மூன்று நாட்கள் தாத்தா ஜோதிடம் சொல்லுவது வழக்கம். திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் கூட்டம் குழுமியபடி இருக்கும். மிகச்சாதாரணமாக நான்கைந்து விலையுயர்ந்த கார்கள் வீட்டுமுன் நிறுத்தப்பட்டிருப்பதை காணமுடியும். தாத்தா ஜோதிடம் சொல்ல ஆரம்பித்தால் யாரும் அருகில் செல்லக்கூடாது. அவரது எதிரில் ஜோதிடம் பார்க்க வந்தவர்கள் மௌனமாக அமர்ந்து கொண்டிருக்க அவர், அவர்களது ஜாதகத்தை புரட்டியபடி இருப்பார். பின் அருகில் வைத்திருக்கம் பல்பத்தைக் கொண்டு சிமெண்ட தரையில் வரிவரியாக எழுதிபார்ப்பதும் அழிப்பதுமாக இருப்பார். அருகில் சென்று பார்த்தால் கோபத்தோடு முறைத்துப்பார்ப்பார். பாட்டி அவ்வப்போது குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றுவிடுவாள். சிறிது நேரம் கண்களை மூடி, எதையோ யோசித்தபடி இருக்குமவரின் தொண்டைக்குழி ஏறி இறங்குவதை காணமுடியும். பிறகு சரளமாக பேச ஆரம்பிக்கும் அவரிடம் இருந்து அட்சர சுத்தமாக வார்த்தைகள் வந்துவிழும்.

ஏதோ பாட்டை ஒப்பிப்பது போல இருக்கும் அதைப்பார்ப்பதற்கு. இடையிடையே எதிரில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்துக்கேட்பார். இரண்டொரு வார்த்தைகள்தான் காதில் கேட்கும். ரொம்பவும் கூர்ந்து கேட்டால் எதிரிலிருப்பவர்களின் பேச்சை புரிந்துகொள்ள முடியும். ஆனால் யாரும் அந்த பக்கமே வரமாட்டார்கள். ஒரு விளையாட்டைப்போல வெகு லாவகமாக அவர் ஈடுபாட்டுடன் ஜோதிடம் சொல்வதை பார்ப்பதற்கு எனக்கு ஆச்சரியமாக இருக்கும். வந்தவர்கள் திருப்தியோடு எழுந்து சென்று கொண்டிருக்கும்போது தாத்தா எழுதிய தரையை அழித்தபடியிருப்பார். இன்று அரசியலில் இருக்கும் முதுபெரும் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் அநேகமாக தாத்தாவிடம் தங்களது ஜாதகங்களை ஏதாவதொரு சந்தர்ப்பங்களில் கணித்தவர்களாகத்தான் இருப்பார்கள். அதன் மூலம் அவர் அடையும் அனுகூலங்கள் அனைத்தையும், ஏதாவது கோயில் குளம் துப்பரவு செய்ய என்று வந்து நிற்பவர்களிடம் கொடுத்துவிடுவார். அதையும் மீறி தாத்தாவிடம் செல்வம் சேர்ந்தபடியே இருந்ததை என்னால் அறியமுடிந்தது.

மாதத்தில் எப்படியும் ஒரு வாரம் பத்து நாட்கள் தாத்தா வெளியூர் சென்று விடுவார். கத்தை கத்தையாக முகவரி அட்டைகளை வைத்திருக்கும் அவர் அதிகம் படிக்காதவராக இருந்தாலும் யாரின் துணையுமில்லாமல் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கக் கூடிய திறனைப் பெற்றிருப்பதை காணும்போது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். சரியான முகவரி அட்டைகளை எப்படித்தான் அடையாளம் கண்டு கொள்கிறாரென்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு சித்திரத்தை பதிய வைத்து கொள்வதை போல முகவரி அட்டைகளை நினைவில் அடுக்கிக்கொள்கிறாரோ என்றும் எண்ண் வேண்டியிருந்தது. வெளியூர் பயணம் செல்லுமுன்பே அதற்கான ஆயத்த வேலைகள் தொடங்கிவிடும். அடுக்கம் காட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நன்கு முற்றிய சூரமுட்கள் கொண்ட குச்சிகளை கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அவற்றில் அடர்த்தியாக மஞ்சள் பூசி பின் அவற்றில் நெருக்கமான வெள்ளை நூலை சுற்ற வேண்டும். நம்முடைய இஷ்டம் போலவும் செய்து விட முடியாது. கூர்ந்து பார்த்தபடி இருக்கும் அவர் உரியமுறையில் சுற்றப்படுகிறதா என்பதையும் அடிக்கடி பரிசோதித்தபடி இருப்பார்.

பின்னர் அரகண்டநல்லூரில் இருந்து வாங்கி வந்த கருப்பு முடி கயிற்றை வெள்ளை நூல் மீது இறுக்கமாக சுற்றி, அருகிலிருக்கும் சிறுசிறுதுண்டு வெள்ளை காடாத்துணியில் தெருமண், தலைமுடி, பழைய இரும்பு ஆகியவைகளை போட்டு முடிச்சிட்டு துண்டு துண்டாக நறுக்கப்பட்டிருக்கும் குச்சில் கட்டித் தொங்கவிட்டு பின் அவற்றில் ஆங்காங்கே சிவப்பில் பொட்டிட வேண்டும். மேலும் அதில் அவர் சிறுசிறு மாற்றங்களை செய்து பழைய செய்தித்தாளில் சுருட்டி அருகிலிருக்கம் பையில் அடுக்கிக் கொள்வார். ராமேஸ்வரத்திலிருந்து மொத்தமாக வாங்கி வரப்பட்ட வலம்புரி சங்கில் சிலவற்றை எடுத்து சோதித்துப் பார்த்து தனது சூட்கேஸில் அடுக்கிக் கொண்டாரென்றால் அன்றிரவு அவர் பயணத்திற்கு தயாராகி விட்டார் என்று புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்றதன் காரணத்தால் ஜோதிடத்தை என்னால் முழுவதுமாக நம்ப முடியாமல் போனது. இத்தோடு மட்டுமல்லாமல் இரண்டு மூன்று முறைகள் நான் அவரிடம் எனக்காக கேட்டது எதுவுமே பலிக்கவில்லை. 1992-ஆம் வருஷம் உலகக்கோப்பை நடந்து கொண்டிருக்கும்போது ஆர்வ மிகுதியில் அவரிடம் கேட்டேன்.

‘‘தாத்தா இந்த வேர்ல்ட் கப்ப நாம ஜெயிப்பமா?’’

‘‘கண்டிப்பா நமக்குத்தான் கப்பு அதிலென்ன சந்தேகம்’’

ரொம்ப ஆர்வமாகத்தான் சொன்னார். ஆனால் நமக்கு வாய்ப்பில்லாமல் போனதால் எனது நண்பர்கள் மத்தியில் நான் அவமானப்பட வேண்டியிருந்தது. அடுத்து நான் பத்தாவது பரிட்சை எழுதியவுடன் அவரிடம் என்னுடைய ஜாதகத்தை கொடுத்து கேட்டேன். எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் அம்மாவின் பேச்சை தட்டமுடியவில்லை. தாத்தாவின் கணிப்பு கட்டாயம் பலிக்குமென்பது அவளின் நினைப்பு.

‘‘தாத்தா நான் எவ்ளோ மார்க் எடுப்பேன்’’?

‘‘நானூத்தி அம்பதுக்கு மேல’’

‘‘மேல்படிப்புக்கு போவனா’’

‘‘கண்டிப்பா நீ டாக்டருக்கு படிப்பே’’

இதைக் கூறும்போது அவர் கண்களில் ஓர் பிரகாசம் தோன்றி மறைவதை காணமுடிந்தது. அவரின் பதில் எனக்கு அப்போது ரொம்ப மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பிறகு தேர்வு முடிவுகள் வேறுவிதமாக அமைந்தன. நான் ஆங்கிலத்தில் தவறியிருந்தேன். குறைந்தபட்சம் என்னால் பணம் கொடுத்து ஒரு தனியார் ஐ.டி.ஐயில் தான் இடம்பிடிக்க முடிந்தது. மூன்றாவதாக அத்தை கருத்தரித்த போது அவரிடம் கேட்டேன். இந்த முறை அவரை எப்படியும் முட்டாளாக்கி விடவேண்டும் என்ற தன் முனைப்பே என்னிடம் மேலோங்கி இருந்ததை உணர முடிந்தது.

‘‘அத்தைக்கு என்ன கொழந்த பொறக்கும்’’

‘‘கண்டிப்பா பொண்ணுதான்’’

அவர் கூறியது தவறென அறிந்து கொள்ள சில மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. பரிசோதனை செய்து பார்த்ததில் அத்தையின் வயிற்றில் ஒரு பெரிய கட்டி வளர்ந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர் நிகழ்வுகளால் எனக்கு அவரின் ஜோதிடம் குறித்து ஐயம் ஏற்பட்டது. ஜோதிடம் பிறருக்குதான் பலிக்குமோ என்றும் எண்ண வேண்டியிருந்தது. தன்னுடைய கணிப்புகள் தவறாகிக்கொண்டு வருவது குறித்து அவர் எவ்வித சமாதானத்தையும் என்னிடம் கூறாதது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு நான் அவரிடம் எதுவும் கேட்பதில்லை, மேலும் தொடர்ந்து பரிசோதித்து பார்ப்பதென்பது நம்முடைய முட்டாள்தனத்தை காட்டி விடக்கூடிய வாய்ப்பும் இருக்கிறதென்பதையும் நான் உணர்ந்தேயிருந்தேன்.

ஆனாலும் அவர் மேலும் மேலும் ஜோதிடக்கலையின் உச்சம் நோக்கி நகர்ந்தபடியேயிருந்தது அவரைப்பற்றிய எதிர்மறையான சிந்தனையை என்னுள் துரிதப்படுத்தவே செய்தது. அப்போது நான் ஒரு நாள் அவரிடம் கேட்டேன்.

‘‘தாத்தா நீங்க ஜாதகம் என்ற பேர்ல பொய்தான சொல்றீங்க’’

‘‘உண்மை எது பொய் எதுன்னு உன்னால சொல்லமுடியுமா?’’

நான் மௌனமாக இருந்தேன். அவரே தொடர்ந்து பேசத்தொடங்கினார்.

‘‘உண்மைக்கும் பொய்க்கும் ரொம்ப வித்தியாசம் கெடையாது. நாமதான் ரெண்டையும் எதிரெதிர் துருவங்களா நெனச்சிகுனு இருக்கோம். கஷ்டம்னு எங்கிட்ட வராங்க. நாலு வார்த்தை ஆறுதலா சொன்னா அவங்களுக்கு ஒரு திருப்தி. இதுல யாருக்கும் எதுவும் கொறஞ்சிட போறதில்ல’’

எனக்கு அவரை மறுக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் முடியவில்லை. அதன் பிறகு தாத்தாவிடம் என்னால் உணர்வுப் பூர்வமாக நெருங்கமுடியாமல் போனது. விடுமுறைக்காலங்களில் பாட்டி வீட்டிற்கு செல்வதில் ஏற்பட்ட விருப்பம் மெல்ல குறையத் தொடங்கியது. அதன்பிறகு வெகுநாட்கள் கழித்து அவரை கடலூர் பொது மருத்துவமனையில் சென்று சந்தித்தாக நினைவு. என்னை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தவர் தின்பதற்கு உலர்ந்த ரொட்டித்துண்டுகளை எடுத்துக் கொடுத்தார். அவரது விழிகளில் இன்னும் வாழ்ந்து பார்க்காத வாழ்வின் எச்சங்கள் மிதப்பதைக் காண முடிந்தது. தாடி மீசை மழிக்கப்பட்டு, பார்ப்பதற்கு சிறு வயதுகளில் பாட்டி சொன்ன கதைகளில் வரும் சூனியக்காரனைப் போல காணப்பட்டார். அந்த நினைவுகளிலிருந்து மீள இரண்டு மூன்று நாட்கள் ஆனது. இருட்டில் உற்றுப்பார்த்தால், தாத்தா மருத்துவமனையில் படுத்தபடி என்னை பார்த்து சிரிப்பது போன்ற சித்திரம் தோன்றி மறைந்தபடியிருந்தது.

கீழே விழுந்த பாத்திரத்தின் கர்ணகொடூரமான சத்தத்தால் தாத்தாவின் பிம்பம் மெல்ல நழுவத் தொடங்கிய போது என்னை இயல்பு நிலைக்கு அழைப்பதாக இருந்தது மாமாவின் குரல். அங்கு யாரையோ அவர் அதட்டி வேலை வாங்கி கொண்டிருந்தார். நான் மெல்ல நடந்து தெருப்பக்கம் வந்தேன். வீரவாகு தேவர்கள் வேலெடுத்து வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தெருவில் நீர் தெளிக்க அம்மாவும் சித்தியும் சென்றனர். சித்தப்பாவும் அப்பாவும் கூடத்தை தடுத்திருந்த மரப்பலகையை அகற்றிக் கொண்டிருந்தனர். சாமிவந்து ஆடியபடி இருக்கும் சித்தி சித்தப்பா மற்றும் அம்மா பற்றிய கடந்த கால சித்திரம் என் மனதில் தோன்றி மறைந்தது. வீரவாகு தேவர்களின் கால்களைக் கழுவ கிணற்றிலிருந்து தண்ணீரை கொண்டு வந்துதெருவில் வைத்தேன். தொடர்ச்சியான வேலைப்பளுவின் காரணமாக என்னில் தொய்வு ஏற்படும் போதெல்லாம், ‘‘உன்னவிட்டா இவ்ளோ கச்சிதமா யாராலடா செய்யமுடியும்?’’ என்று கூறும் தாத்தாவை நினைத்த நொடியில் ஊக்கம் பெற்றவனாகி விடுவதன் அர்த்தம் இன்னும் புரிந்தபாடில்லை. என்னிடம் வேலை வாங்குவதற்கு தாத்தா கையாண்ட உத்தியாகவும் அது இருந்திருக்கக்கூடும்.

கூடத்தில் சித்தப்பா இலைகளை நறுக்கிக் கொண்டிருந்தார். மேலே மின்விசிறி சுழன்றபடியிருந்தது. கூடத்து சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை பலர் பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு புகைப்படத்தின் பின்பும் விஸ்தாரமானதொரு கதை ஒளிந்து கொண்டிருப்பதை நிச்சயம் அவர்களால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாது. ஒரு புகைப்படத்தைப் பற்றி மட்டும் பாட்டியிடம் கேட்டால், நீட்டி முழக்கி நாள் முழுக்க சொல்லுமளவுக்கு அவளிடம் விஷயமிருக்கும். அந்த அளவுக்கு தாத்தாவின் உலகம் பெரியது. இலைகளை நறுக்கிக் கொண்டிருக்கும் சித்தப்பா என்னை அழைத்தார்.

‘‘டேய் இந்த எலைகளை கட்டு கட்டி மேல கொண்டு போயி வை’’

நான் இலைகளை தரம் வாரியாக பிரித்து, அடுக்கிக்கொண்டிருந்தேன். கட்டுவதில் உதவியாக எதிர்வீட்டு மாமா இருந்தார். அவரைப் பார்த்து சித்தப்பா கேட்டார்.

‘‘வேன் எங்க வருதுன்னு தெரியுமா?’’

‘‘சந்தபேட்டை தெருவண்ட சத்தம் கேட்டிச்சி’’

‘‘அப்ப கிட்ட வந்துட்டாங்க’’

எதிர்வீட்டு மாமா ஆமாம் என்பது போல தலையசைத்தார். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் வரத்தொடங்கியிருந்தனர். சாப்பாட்டு வகைகள் மெத்தைக்கு எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன. ஷாமியானா விரிக்கப்பட்டிருந்ததால் மெத்தையில் அவ்வளவாக வெயில் தெரியவில்லை. நடுத்தெருவருகே மேளச்சத்தம் நன்கு கேட்டது. மாடியிலிருந்து கீழிறங்கி தெருவிற்கு வந்தேன். நடுத்தெருவிலிருந்து வளைந்து, ஆயா வீட்டை நோக்கி வீரவாகு தேவர்கள் வேல்களைத் தாங்கி, கந்தர் அலங்காரத்திலிருந்து ஒரு பாடலை உச்சஸ்தாயில் பாடியபடி வந்து கொண்டிருந்தனர். மேளமும், தாளமும் நுட்பமாக என்னுடம்பில் சிலிர்ப்பை ஏற்படுத்தின. மெல்ல என் உடம்பு நடுங்குவதை உணரமுடிந்தது.

வீட்டிற்கு எதிரே வந்த வீரவாகு தேவர்கள் இரண்டு வரிசையாக நின்றனர். முதலில் ஒரு குடத்து நீரால் அம்மா அவர்களின் கால்களை கழுவி சுத்தப்படுத்தினாள். தொடர்ந்து பக்கத்துவீட்டு உண்ணாமலை அக்கா, அவர்களின் கால்களில் மஞ்சளைத் தடவியபடி சென்றாள். அவளைத் தொடர்ந்து விழுப்புரத்து சித்தி மஞ்சள் தடவிய இடங்களில் சிவப்பு கொண்டு பொட்டிட்டு, அட்சதையை வைத்தபடி சென்றாள். பெரிய மாமா எல்லோரையும் அழைத்துக்கொண்டு துண்டை எடுத்து இடுப்பில் கட்டியபடி வீரவாகு தேவர்களை சுற்றி வந்தார். பின் தொடர்ந்து நாங்கள் எல்லோரும் சுற்றி வந்து அவர்களது கால்களில் விழுந்து வணங்கினோம். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். நேர் மேலே கருடன் மெல்ல வட்டிமிட்டபடி இருந்ததை கண்ட கூட்டம் ஆர்ப்பரித்தது.

மேளமும் தாளச்சத்தமும் விண் அதிர எழுந்தது. ‘‘முருகனுக்கு அரோகரா’’, கந்தனுக்கு அரோகரா’’, வேல் வேல் வெற்றிவேல்’’ என எல்லோரும் பெருங்குரலெடுத்து கூவினர். தளராத வேகத்தில் மேளக்காரர் வாசித்துக்கொண்டிருந்தார். உள்ளிருந்து, வேக வேகமாக சாமியாடியபடி சித்தப்பா வீதிக்கு வந்தார். அவரது கண்கள் ரத்தச் சிவப்பாக இருந்தன. முகம் இறுகிக் காணப்பட்டது. வீதிகளில் மக்கள் கூட்டம் சிதறிக்கிடந்தது.

மேளத்திலிருந்து பீரிட்டெழும் இசைக்கேற்ப சித்தப்பா ஆடியபடியிருந்தார். சித்தி இருந்த இடத்திலிருந்தே மெல்ல ஆடத்தொடங்கினாள். சன்னியாசி மாமா மேளக்காரர்களை வேகமாக வாசிக்கும்படி சைகை மூலம் தெரிவித்தார். மேளச்சத்தம் கூடியது. சித்தியும் சித்தப்பாவும் உக்கிரமாக ஆடிக்கொண்டிருந்தனர். எனக்கு உடல் முறுக்கேறிக் கொண்டு வந்தது. நா வறண்டு போவது போல் இருந்தது. பின் வீரவாகு தேவர்கள் அதிவேகத்துடன் உள்ளே நுழைந்தனர். தாண்டவராயன் மாமா ஆடிக்கொண்டிருக்கும் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.

பூஜை அறையில் வீரவாகு தேவர்கள் தாங்கள் கொண்டு வந்த வேல்களை இறக்கி வைத்து விட்டு, தங்களது இடைத்துணிகளை சீர்செய்து கொண்டனர். அதிகமான கூட்டத்தால் அறையில் ஒருவித நெடி பரவியது. சித்தப்பாவும் சித்தியும் இன்னும் ஆடிக்கொண்டிருந்தனர். தாண்டவராய மாமா அவர்களைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

‘‘படைக்கிற நேரமும் நெருங்கிருச்சி, வந்திகிற நீங்க யாருன்னு சொன்னா சௌகரியமாக இருக்கும்’’

‘‘மலையனூரு ஆத்தா வந்திருக்கேண்டா’’

‘‘ரொம்க ரொம்ப சந்தோஷம் தாயி, ஏதாவது குத்தம் கொறை உண்டா’’

‘‘ரெண்டு வருஷமா நான் கேட்பாரு இல்லாம கெடக்கறேன்டா’’

இதைக்கேட்டதும், அம்மா கன்னத்தில் போட்டுக்கொண்டாள். தாண்டவராயன் மாமா அப்பாவிடம் விசாரித்தார்.

‘‘ரெண்டு வருஷமா குலதெய்வத்துக்கு பொங்க வக்கிலியா?’’

இல்லை எனும் விதமாக அப்பா தலையசைத்தார். பின் தாண்டவராய மாமா ஆடிக்கொண்டிருக்கும் சித்தியிடம் பேசினார்.

‘‘இந்த வருஷம் கண்டிப்பா குடும்பத்தோட வரோம் ஆத்தா’’

‘‘நெஜந்தானடா’’

‘‘நெஜந்தான் ஆத்தா’’

தாண்டவராய மாமா இதைக் கூறியதும் சித்தி பிரசாதம் வாங்குவதைப்போல கைகளை நீட்டினாள். கற்பூரத்தை ஏற்றி அவள் கையில் வைத்ததும் அதை வாயில் போட்டுக்கொண்டு மயங்கிச் சரிந்தாள். எதிர்வீட்டு மாமா அவளை இழுத்து, சுவற்றின் ஓரமாக சாத்தினார். சித்தி குடிக்கத் தண்ணீர் வேண்டுமென மெல்லிய குரலில் கேட்டாள். சன்னியாசி மாமா கொண்டு வந்து கொடுக்க அவள் குடித்துவிட்டு அங்கேயே ஒருக்களித்து படுத்துக்கொண்டாள். பின் ஆடிக்கொண்டிருந்த சித்தப்பாவை நோக்கி மாமா பேசினார்.

‘‘நேரம் கடந்துகுனு இருக்குது, வந்திருக்கிறது யாருன்னு சொல்லலையே’’

‘‘டேய் நான் புலிப்பானி வந்திருக்கேன்டா’’

அவர் கூறிய பெயரைக் கேட்டதும் கூட்டம் உணர்ச்சி வசப்பட்டது. சத்தம் மெல்ல அடங்கி நிசப்தமானது. சித்தப்பாவின் சுவாசம் பீதியூட்டுவதாக இருந்தது. கூடத்திலிருந்து பாட்டி ஓடி வந்து மாமாவை கூப்பிட்டு ஏதோ கூறினாள். அவளது விழிகள் ஆச்சரியத்தால் விரிந்திருப்பதை கவனிக்க முடிந்தது. ஓடி வந்ததன் காரணமாக அவளது சிவப்புக்கல் அரக்குத்தோடு ஆடியபடியே இருந்தபோது மாமா, சித்தப்பாவிடம் பேசினார்.

‘‘ஏதாவது கொறையுண்டோ?’’

‘‘செத்து நாலு வருஷமாச்சி, நா மூச்சிவுட்ட எடத்த யாராவது வந்து தீட்டு கழிச்சீங்களாடா?’’

கூட்டம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டது. அம்மா, அப்பாவைப் பார்த்தார். தாத்தா இறந்த போது நடந்த நிகழ்வுகள் பின்னலிட்டபடி மெல்ல எனது மனத்திரையிலோடியது.

அன்று பகல் பன்னிரண்டு மணியிருக்கும். நான் பணிபுரியும் நிறுவனத்திற்கு, தாத்தா மரணப்படுக்கையில் இருப்பதாக தகவல் வந்தது. எனக்கு தலை சுற்றியது. மெல்ல ஆசுவாசப் படுத்திக் கொண்டு புறப்பட்டேன். வழிநெடுக தாத்தாவின் பிம்பம் என் நினைவுகளில் ஓணான் கொடியைப் போல சுருண்டபடியிருந்தது. தாத்தா படுக்கையில் சிறு துரும்பைப் போல கிடந்தார். கண்கள் உள்ளிழுத்துக் கிடந்தன. நெஞ்சுக்கூடு மேலெழுந்து காணப்பட்டது. கடைவாயில் நீர் ஒழுகியபடி இருந்தது. மேல்மூச்சு கீழ்மூச்சு விடத் தொடங்கியிருந்தார். அருகில் வைத்திருந்த தம்ளரிலிருந்த பாலை எடுத்து அவரது வாயில் ஊற்றினேன். விழிகளில் இருந்த கருப்பு மணிகள் மெல்ல அசைந்தன. கண்களைத் திறக்க முயன்றவர் இயலாமல் மீண்டும் மூடிக்கொண்டார். பாட்டி தரையில் சிறிதளவு நீரை தெளித்து கைகளால் தரையை இழைத்து திரண்டு வரும் அந்தச் சாந்தை எடுத்து அவர் வாயில் வைத்தாள். தொண்டைக்குழியில் மெல்லிய அசைவு தோன்றி மறைந்தது. பிறகு நான் உள்ளே சென்று ஆடைகளை களைந்து விட்டு, சாப்பிடுவதற்கு அமர்ந்தேன். கூடத்திலிருந்து ‘‘அப்பா போயிட்டீங்களா’’ எனும் அம்மாவின் அழுகை சத்தம் கேட்க கூடத்திற்கு வந்து பார்த்தேன். எல்லோரும் மாரில் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தனர். தாத்தாவின் முகம் எந்தச் சலனமுமற்று தெளிந்த நீரைப் போல இருந்தது.

ஓயாத தாளச்சப்தம் எனது நினைவிழைகளை மெல்ல அறுத்தெறிந்த போது பூஜை அறை சப்தத்தால் நிரம்பி வழிந்தது. வீரவாகு தேவர்கள் கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு சுவற்றில் சாத்தப்பட்டிருந்த வேல்களை பார்த்தபடி நின்றிருந்தனர். படையல் தயாராக இருந்தது. உக்கிரத்தோடு ஆடிக்கொண்டிருந்த சித்தப்பாவிடம் மீண்டும் மாமா பேசினார்.

‘‘சரி சாமி கண்டிப்பா தீட்ட கழிச்சிடறோம்’’

‘‘ஒவ்வொரு வருஷமும் சொல்றதோட சரி, அப்புறம் யாரும்கிட்ட வர்றது கிடையாது.’’

‘‘தப்புதான் சாமி. இனிமே அப்படி நடக்காது.’’

‘‘ம்’’

‘‘கடைசியா ஒன்னு கேக்கலாமா?’’

சித்தப்பா விழிகளை உருட்டியபடி தலையாட்டினார். பின் மாமா கேட்டார்.

‘‘காலையில சமையக்கூடத்துக்கு வந்தது நீங்க தானா சாமி?’’

‘‘அதல என்னடா சந்தேகம்?’’

மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி சித்தப்பா கூறியதும் கூட்டத்தில் சலசலப்பு பெருகியது. அம்மா வேகமாக ஓடிவந்து, சித்தப்பாவை பார்த்துக் கேட்டாள்.

‘‘சாமி இந்த வருஷமாவது என் சின்ன புள்ளைக்கு வேல வந்துருமா?’’

இல்லை எனும்விதமாக அவர் கைகளை ஆட்டியது அம்மாவை மௌனத்தில்ஆழத்தியது. பின் வேப்பிலையை நறநறவென மென்றபடியே பேசினார்.

‘‘அப்ப நான் மலையேறட்டுமா?’’

தாண்டவராய மாமா கற்பூரத்தை கொளுத்தி சித்தப்பாவின் கைகளில் வைத்தார். அவர் அதை வாயில் போட்டு கண்களை மூடியபடி தளர்ந்து சரிந்தார். கூட்டம் பலவிதமாக பேசிக்கொண்டது. தென்னண்ட வீட்டு ராமசாமி மாமா, எல்லோருக்கும் கேட்கும் படியாகவே சொன்னார்.

‘‘ஓடா உழைச்ச மனுஷனை கொஞ்சத்துல மறந்திட்டீங்களேடா பசங்களா’’

வீரவாகு தேவர்கள் சாமிக்கு படைத்து விட்டு, விரதம் செய்ய மாடிக்குச் சென்றனர். சிறுவர்கள் அனைவரும் மாடிக்குச் சென்று விட்டிருந்தனர். வீட்டில் இன்னும் இயல்புநிலை திரும்பியிருக்கவில்லை. நாங்கள் மட்டுமே பூஜை அறையில் இருந்தோம். சித்தப்பா மெல்ல கண் விழித்துப் பார்த்தார். பாட்டி அவருக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தாள். குடித்தபின் மெல்ல எழுந்த அவர், பாட்டியிடம் கேட்டார்.

‘‘யாரு வந்தது’’?

‘‘உங்க மாமா தான் வந்தாரு’’

‘‘இன்னா சொன்னாரு’’

‘‘அவர மறந்துட்டமாம். மூச்சுவிட்ட எடம் இன்னும் தீட்டு கழிக்காம கெடக்காம்’’

‘‘அப்புறம் ஏதாவது சொன்னாரா?’’

‘‘காலம்பற வந்தது கூட அவருதானாம்.’’

‘‘நாந்தான் அப்பவே சொன்னனே’’

இருவருக்குமான உரையாடல் முடிந்த போது பாட்டியின் கண்களில் நீர் கோர்த்தபடியிருந்ததை காணமுடிந்தது. அம்மா அவளைத்தேற்றினாள். சித்தி மிகவும் களைப்படைந்தவளாக காணப்பட்டாள். சித்தப்பாவின் கண்கள் இன்னும் ரத்தச் சிவப்பாகவே காணப்பட்டன. பாட்டி புலம்பியபடி கூடத்துக்கு வந்தாள். மின்விசிறிக்கு கீழே சித்தியும், சித்தப்பாவும் அமர்ந்து கொண்டனர். தோட்டத்திலிருந்து விழுப்புரத்து சித்திப் பையன் கையில் அப்பளத்தைத் தூக்கிக்கொண்டு தெருவைப் பார்த்து ஓடினான். மேலே பந்தி பரிமாறும் சப்தம் கேட்டது. எப்போதுமே பந்தியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அப்பாவினுடையதாக இருந்தது. மிகவும் கச்சிதமாக முடித்து விடுவார். இலைகளில் அதிகம் எதுவும் மீந்து விடாதபடிக்கு ஆட்களை வேலை வாங்குவார். ஒவவொருவரிடமும் உணவு குறித்து விசாரித்து அதன் நிறை குறைகளை அறிந்து கொள்வதில் சமர்த்தர்.

வானத்தில் பறவைகள் வட்டமிட்டு கொண்டிருப்பதை கூடத்து ஜன்னல் வழியாக காணமுடிந்தது. தோட்டத்து முருங்கை மரத்திலிருந்த காகம் கத்தியபடியிருந்தது. வீரவாகு தேவர்கள் சாப்பிட்டு விட்டு, படுக்க மடத்திற்கு சென்ற பிறகு நாங்கள் சாப்பிடுவதற்கு மாடிக்குச் சென்றோம். பந்தி தயாராக இருந்தது. என்தம்பி பக்கத்தில், ரிஷிவந்தியத்து அத்தை அமர்ந்து கொண்டாள். தொனதொனவென்று பேசும் அவள் அவனிடம் பேச்சு கொடுத்தாள்.

‘‘உங்க அம்மாவுக்கு ஏன்டா சாமி வரல’’

‘‘அம்மாவுக்கு குடும்பகட்டுப்பாடு ஆப்ரேஷன் செஞ்சிருக்குது’’

‘‘அதுக்கு என்னடா’’

‘‘சாமி வந்து ஆடுனா தைலு பிரிஞ்சுடும், ஆட கூடாதுன்னு அப்பா சொல்லிட்டாரு’’

அவன் சொன்னதை கேட்டதும் கூட்டம் கொள்ளென சிரித்தது. அம்மா அவனைப் பார்த்து நாக்கை கடித்தாள். அப்பா கீழே பார்த்தபடி சிரித்துக் கொண்டிருந்தார். நான் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது சித்தியின் அய்ந்து வயது மகன் வந்து கேட்டான்.

‘‘அம்மா காலையில் வந்தது யாரும்மா?’’

‘‘உனக்கு எப்படிடா தெரியும்?’’

அந்த கேள்விக்கு அவன் பதில் சொல்லாமல் மீண்டும் கேட்டான்.

‘‘யாரும்மா வந்தது’’

‘‘உங்க தாத்தாடா’’

‘‘நீங்க பாத்தீங்களா’’

இந்த கேள்வியை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். சூழல் அமைதியானது. சித்தி அவனுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை. எல்லோரும் இறுக்கத்தில் இருந்தனர். அவர்களால் எதையும் உறுதியாக கூறமுடியாது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். ஏனெனில் தாத்தா வந்ததாக சொல்லப்படும் போது நான்தான் அந்த அறையில் இருந்தேன். ஒரு எருமை மாட்டைத்தவிர வேறு எதுவும் அங்கு வரவேயில்லை என்பதை எப்படி சொல்லி அவர்களுக்கு விளங்கவைப்பதென எனக்கு புரியவில்லை. எருமையின் சேற்றுக்குளம்புகள் பதிந்த இடத்தை எனக்கு பிறகு பார்த்த தாண்டவராய மாமாதான், மனிதனின் காலடித்தடம் போன்று அவைகள் இருப்பதாக என்னிடம் கூறினார். உண்மையில் யோசித்து பார்த்தால் எல்லா கதைகளுமே இவ்வாறாகத்தான் முதலில் ஆரம்பிக்கின்றன.

பின்குறிப்புகள்:

1. சுப்பு எனும் தாத்தாவின் நிஜப்பெயர் முற்றிலுமாக மறைந்து விட்டிருந்தது. தாத்தாவிற்கு புலிப்பானி எனும் பெயர் ஏன் ஏற்பட்டது எனத் தெரியவில்லை. பல அகராதிகள், நிகண்டுகள் ஆகியவற்றை பரிசீலித்து பார்த்தும் ஒப்பிட்டும் எந்தமுடிவுக்கும் வரமுடியவில்லை. அவருடைய வயதொத்தவர்களை விசாரித்ததில் எந்த பயனும் ஏற்படவில்லை. அந்த பெயர் எப்போது வந்தது என்பதை உறவினர்கள் யாராலும் உறுதிசெய்ய முடியவில்லை. ஆனால் தாத்தாவின் லட்டர்பேடில் மட்டும் கொட்டை எழுத்தில் ‘ஜோதிட சூறாவளி, புலிப்பானி ஜோதிடர்’ என அச்சிட்டிருப்பதை பார்க்கும் போதெல்லாம் இயலாமை என்னை பிடுங்கித் தின்றபடியிருக்கும். அதே சிந்தனையில் உழன்று கொண்டிருந்த போதுதான் தற்செயலாக கணக்குப்பிள்ளை ஆசிரியரை சந்திக்க நேர்ந்தது. சில காலங்கள் தாத்தாவுடன் அவரும் பல்வேறு இடங்களுக்கு பயணித்தவர் என்ற முறையிலும் நெருக்கடிகளில் கூட இருந்தவர் என்றமுறையிலும் பெயர் குறித்த ரகசியத்தை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்வதென தீர்மானித்தேன்.

‘‘தாத்தாவுக்கு புலிப்பானின்னு ஏன் பேர் வந்துச்சு?’’

‘‘சின்ன வயசுல உம்பாட்டன் எல்லாவீட்லிருந்தும் புலிச்ச பான தண்ணிய எடுத்துட்டு வந்து கோயில் பக்கத்திலிருந்த மாட்டுப்பட்டியில இருந்த தொட்டியில ஊத்துவான். அதனால அவன எல்லாம் புலிச்சபானன்னு கூப்பிடுவாங்க. அது மெல்ல மாறி இப்படி ஆயிருக்கும்’’

2. தாத்தாவிற்கு எண்ணற்ற பெண்களிடம் தொடர்பு உண்டெனவும் வேங்கிக்காலிலும், மதுரை அருகே ஆரப்பாளையத்திலும் இரு மனைவியும் பிள்ளைகளும் இன்னும் இருக்கிறார்கள் என்பதும் அவரது மறைவிற்கு பின்பு தெரியவந்தது, என்னைத்தவிர மற்ற அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. மேலும் தாத்தா இருமுறை விபச்சார ரெய்டில் சிக்கி கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது என்னைத்தவிர வீட்டில் வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என நான் நினைத்துக் கொண்டிருந்ததை கடைசியில் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது.

3. நான் சிறுவனாக இருந்த காலத்தில் தாத்தா என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி அவரது வலது தொடையைக் காட்டி, ‘‘ இதுல தாண்டா பச்சிலையை வச்சிருக்கிறேன், அதாலதான் என் வாக்கு பலிக்குது. இந்த தொடையில யாராவது கை வைக்கிறப்ப கட்டாயம் நான் இறந்திருப்பேன்’’ என கூறியவரின் வலதுகாலை முற்றிலுமாக சர்க்கரை நோயின் கடுமை காரணமாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை விஜயா மருத்துவமனையில் அகற்ற வேண்டி வந்தது. அதன் பிறகும் அவர் நன்றாகத்தான் இருந்தார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com