Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
நம்பிக்கை வேண்டும் வாழ்வில்...

டி.பி.ஆர். ஜோசப்


ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..

டி.வி.யில் உணர்ச்சியோடு பாடிக்கொண்டிருந்த சிநேகாவையும் பார்வையிழந்த இசைக் கலைஞர்களையும் மெய்மறந்து, தன்னையே இழந்துபோய், பார்த்துக்கொண்டிருந்த மைதிலியின் கண்களிலிருந்து கண்ணீர் அவளையுமறியாமல் வழிந்து கன்னங்களில் இறங்கியது..

“ஏய் மைதிலி! இப்ப எதுக்குடி இந்த பாட்டை வச்சி கேட்டுக்கிட்டிருக்கே? சேனலை மாத்துடி..” சமையலறையில் வேலையாயிருந்த தன்னுடைய தாய் உரத்தகுரலில் கூறுவது காதில் விழாததுபோல் மெய்மறந்து அமர்ந்திருந்தாள் மைதிலி. கையிலிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு வெளியே வந்த கனகா -மைதிலியின் தாய் - சோபாவில் அமர்ந்திருந்த தன் மகளின் தோளில் கைவைத்து பாசத்துடன் அழுத்திவிட்டு தொலைக்காட்சி பெட்டியை அணைத்துவிட்டு அமர்ந்தாள்..

வழிந்தோடும் கண்ணீரையும் பொருட்படுத்தாமல் கண்களை மூடி சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்த மைதிலியை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் தவித்தாள். அந்த ஹாலில் நிறைந்திருந்த கனத்த மவுனத்தினூடே சுவர்க்கடிகாரத்தின் ஒலி பெரிதாய் தெரிந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்..

ஆட்டோகிராப் படத்தை மைதிலியும் அவளுடைய அம்மா மற்றும் அண்ணாவும் (பாஸ்கர்) பார்த்துவிட்டு காரில் வீடு திரும்புகையில் நடந்த அந்த விபத்து தெளிந்த நீரோடையாய் சென்றுகொண்டிருந்த அவர்களுடைய வாழ்க்கையையே தலைகீழாய் மாற்றிபோட்டது. கடைசி இரவு காட்சி முடிந்து அவர்கள் திரையரங்கத்தை விட்டு வெளியேறி சாலையை அடைந்தபோது நள்ளிரவு கடந்திருந்தது.

திரையரங்கச் சாலையில் இருந்த வாகன நெரிசல், அச்சாலையைக் கடந்து அண்ணாசாலையில் நுழைந்தபோது வெகுவாய் குறைந்து ஜெமினி சிக்னலைக் சுற்றிக் கடந்து கோடம்பாக்கம் நெடுஞ்சாலையை அடைந்தபோது சுத்தமாய் காணாமற்போய் வெறிச்சோடியிருந்தது.

Man “அண்ணா நீ சும்மாவே ராஷா ஓட்டுவே. நட்ட நடு ராத்திரியிலே வண்டிகளையே காணோம். எங்களை வீட்டுக்கு முழுசா கொண்டு சேர்ப்பியா.. இல்ல வழியிலயே..”

“ஏய் மைதிலி! உன் வாய்ல நல்ல வார்த்தையே வராதா? சும்மா பேசாம வா.. பாஸ்கர், இவ்வளவு ஸ்பீடு வேணுமா? வள்ளுவர்கோட்ட ஜங்க்ஷன் வருது. ஜாக்கிரதை. சிக்னல் இருக்காதுன்னு பெரிய வண்டிங்க காட்டுமிராண்டித்தனமா வரும். பார்த்து.. மெதுவாவே போ.. நாளைக்கு சண்டே தானே.. ஒண்ணும் அவசரமில்லே..”

ஆனால் விதி யாரை விட்டது?

பாஸ்கர் தன் தாயின் சொல்படி வேகத்தை வெகுவாய் குறைத்துச் சென்றும் வள்ளுவர்கோட்ட நாற்சந்தியில் இடதுபுறம் இருந்து கண்மூடித்தனமான வேகத்தில் வந்த டாங்கர் லாரி அவனுடைய வாகனத்தையே குறி வைத்து வருவதுபோல் தெரியவே பாஸ்கர் பிரேக்கில் தன் முழு பாரத்தையும் கொடுத்து நிறுத்த முயன்றான். அத்துடன் நில்லாமல் ஸ்டீரிங்கை முழு பலத்துடன் இடதுபுறம் ஒடித்து வாகனத்தின் திசையை மாற்றி விபத்தின் வீரியத்தைக் குறைக்க முயன்றான். ஆயினும் விபத்தை அவனால் தவிர்க்க முடியவில்லை.

பின் இருக்கையில் அமர்ந்திருந்த மைதிலியும் கனகாவும் சிறு காயங்களுடன் தப்பிக்க முடிந்தது. பாஸ்கர் தலையில் அடிபட்டு சுயநினைவு இழந்துவிட அவனை அப்படியே அடுத்த சீட்டில் சாய்த்துவிட்டு விபத்தின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாதிருந்த மைதிலி அசாதாரண துணிச்சலுடன் வாகனத்தை ஓட்டிக்கொண்டு வடபழனியிலிருந்த பிரபல மருதுவமனையை சென்றடைந்தாள்.

அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட பாஸ்கருக்கு நினைவு திரும்பவே இரண்டு, மூன்று நாட்கள் ஆனது. தலையில் ஏற்பட்ட காயம் அவனுடையை பார்வை நரம்பை (ஆப்டிகல் நெர்வ்) வெகுவாய் பாதித்திருந்ததால் பார்வை முழுமையாய் திரும்பி வர குறைந்தது இரண்டு வருடங்களாவது ஆகலாம் என மருத்துவர்கள் அறிவித்தபோது நிலைகுலைந்து போனார்கள் தாயும் மகளும்..

ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்த பாஸ்கர் முழுவதுமாய் நம்பிக்கையிழந்து தன்னுடைய படுக்கை அறையை விட்டுக்கூட வெளியே வர மனமில்லாமல் இருந்தான்.

“அவரைக் கொஞ்ச நாளைக்கு அவர் போக்குலயே விட்டுருங்க. தயவு செய்து அவருக்காக பரிதாபப்படுறமாதிரியோ, அவரோட இந்த நிலமைக்கு நீங்க ரெண்டு பேரும்தான் காரணம்ங்கறா மாதிரியோ அவர் முன்னால பேசாதீங்க. இந்த விபத்துக்கு முன்னால நீங்க ரெண்டு பேரும் அவர்கிட்ட எப்படி நடந்துக்குவீங்களோ. முக்கியமா மைதிலி, நீங்க.. எப்பவும் போலவே அவரை ட்ரீட் பண்ணனும். அதுதான் முக்கியம். அவர் தினசரி செய்யவேண்டிய பயிற்சிகளை அவர் செய்யறாரான்னு பார்த்துக்கணும். மாதம் ஒருமுறை இங்க கூட்டிக்கிட்டு வந்து கண் டாக்டர் மிஸ் வசந்தியை மீட் பண்ணனும். தொடர்ந்து செய்யற ஐ எக்சர்சைஸ் மைட் ஹெல்ப் ஹிம் டு ரிக்கவர் ஹிஸ் சைட். அட்லீஸ்ட் பார்ஷியலி. ஆல் தி பெஸ்ட்.”

மருத்துவர் கூறிய அறிவுரைகள் ஒன்றையும் கடைப்பிடிக்க பிடிவாதமாய் மறுத்த பாஸ்கர் தன் படுக்கையறையிலேயே அடைந்து கிடந்தான்..

தன் தந்தை மரிக்கும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்த பாஸ்கர் படித்து முடித்த கையோடு வேலையில் சேர்ந்து இந்த ஐந்து ஆண்டுகளில் தன்னையும் படிக்கவைத்து ஒரு வேலையையும் தேடிக்கொடுத்து தனக்கும் தன் தாய்க்கும் ஆதரவாய் இருந்ததை நினைத்துப் பார்த்த மைதிலி தன் சகோதரன் மீண்டும் கண்பார்வைக் கிடைக்கப் பெறுவதே இனி தன் லட்சியம் என்று தீர்மானித்தாள்.

ஆனால் கணவனின் மரணத்திலிருந்து மீளவே வெகு காலம் எடுத்த கனகாவை பாஸ்கருக்கு நேர்ந்த விபத்தின் விளைவு முற்றிலுமாய் வீழ்த்திவிட்டது.

மருத்துவமனையிலிருந்து பாஸ்கர் வீடு திரும்பி ஒரு மாதமாகியும் தினமும் காலையிலிருந்து இரவு படுக்கைக்கு செல்லும் நேரம் வரையிலும் பூஜையறையிலேயே கண்ணீருடன் அமர்ந்திருந்த தன் தாயின் கோலத்தைக் காணச் சகியாமல் செய்வதறியாது திகைத்து நின்றாள் மைதிலி.

“அம்மா, அண்ணாவை நினைச்சி நீ அழுதுக்கிட்டிருந்தா அவன் குணமடையப் போறதில்லே. நீ தெம்பா இருந்தாத்தான் நான் வேலைக்கு மறுபடியும் போக முடியும். என்னோட வருமானம் இப்போ நமக்கு ரொம்ப தேவை. அண்ணா ஆபீஸ்லருந்து இன்னும் ஒரு மூணு மாசத்துக்கு அண்ணா கடைசியா வாங்கிட்டிருந்த சம்பளத்தையே மாசா மாசம் குடுக்கறேன்னும் இன்னும் ஒரு வருஷத்துக்கு அவரோட பேரை கம்பெனி ரோல்ல இருந்து எடுக்கறதில்லேன்னும் சொல்லியிருக்காங்க. அதனால ஒரு வருஷத்துக்குள்ள அண்ணா சரியாயிரணும். அது நம்ம ரெண்டு பேர் கையிலதான் இருக்கு. முக்கியமா உன் கையில. என்ன சொல்றம்மா..?”

பிறந்து ஐந்து வயது வரை நோய்வாய்ப்பட்டு பிழைக்குமா பிழைக்காதா என்று தன்னையும் தன் கணவரையும் தினந்தோறும் கவலைப்பட வைத்த தன் மகள் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு ஆண்மகனுக்கு நிகராக நின்று இந்த குடும்பத்தைத் தாங்கி நின்றதை நினைத்துப் பார்த்த கனகா அவள் சொல்வதிலிருந்த உண்மையை உணர்ந்தவளாய் கண்களைத் துடைத்துக்கொண்டு எதிரே இருந்த சாமி படங்களைப் பார்த்து கும்பிட்டுவிட்டு பூஜையறையை விட்டு வெளியே வந்து ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்து தன் மகளையே பார்த்தாள்.

“உன்னைப் பார்த்தா எனக்கு பெரிய மலைப்பா இருக்குடி மைதிலி. இந்த ரெண்டு மாசத்துல நம்ம சொந்தம்னு நினைச்சிக்கிட்டிருந்தவங்கல்லாம் ஒதுங்கிப் போக நீ ஒத்த மனுஷியா நின்னு பாஸ்கரோட பிரண்ட்சோட உதவியோட இத எல்லாத்தையும் பாத்துக்கிட்டியே. நீ சொல்றது சரிதாண்டி. நானுந்தான் உனக்கு எத்தனை தொல்லை குடுத்துட்டேன்! ஆஸ்பத்திரியில வச்சி சனியன், கினியன்னு எல்லார் முன்னாலயும் திட்டித் தீர்த்தது போறாதுன்னு வரவங்க போறவங்கக் கிட்டயெல்லாம் உன் நாக்குல சனி. அது, இதுன்னு சொல்லி.. என்னை மன்னிச்சிருடி மைதிலி..”

பொங்கி வந்த துக்கத்தை அடக்க முடியாமல் குலுங்கிக் குலுங்கி அழும் தாயைக் கட்டிக்கொண்டு தானும் சிறிது நேரம் அழுதுவிட்டு அவளை விட்டு ஒதுங்கி எதிரே இருந்த இருக்கையிலமர்ந்தாள் மைதிலி. சிறிது நேர அழுகைக்குப் பிறகு கண்களை துடைத்துக்கொண்டு தன்னை நிமிர்ந்து பார்த்த தன் தாயைப் பார்த்து ஆதரவாய் புன்னகைத்தாள்.

“அதையெல்லாம் நான் அப்பவே மறந்துட்டேம்மா.. இப்ப எதுக்கு அதெல்லாம்? நீ எழுந்து பழைய அம்மாவா இருந்தா அதுவே போதும்.. டாக்டர் சொன்னாமாதிரி நாம ரெண்டு பேரும் தைரியமா, கலகலப்பா இருந்தாத்தான் அண்ணா அவன் ரூம்லருந்து வெளியே வருவான். நீ மறுபடியும் டிவியை போட்டுக்கிட்டு சீரியலல்லாம் பார்க்கணும். கோலங்கள்ல வர்ற அபி கேரக்டரைப் பாத்துட்டுத்தாம்மா எனக்கும் தைரியம் வந்துச்சி. உனக்கும் அந்தமாதிரி தைரியம் வரணும்.. அண்ணா பழைய அண்ணாவா மாறணும். அவனோட ப்ரண்ட்ஸ் எல்லாம் உனக்கு பயந்துக்கிட்டுத்தான் இங்க வராம இருக்காங்க. அவங்க மறுபடியும் நம்ம வீட்டுக்கு வரணும். அண்ணாவோட சேர்ந்து அரட்டையடிக்கணும். அப்பத்தான் நாம நினைக்கறதுக்கு முன்னாலயே அண்ணா சரியாவான். என்ன சொல்றே?”

கனகா ஆச்சரியத்துடன் மைதிலியைப் பார்த்தாள் ‘என் மகளா இவள்? எங்கிருந்து இவளுக்கு இத்தனை தைரியமும் பேச்சு சாதுரியமும் வந்தது? பாஸ்கரின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தாலே ஓடி ஒளியும் இவளால் எப்படி அவர்களோடு அவர்களாய் சேர்ந்து ஓடியாடி இதை எல்லாவற்றையும் செய்ய முடிந்தது?’

“அது சரி, மைதிலி, பாஸ்கரோட வைத்தியத்துக்கு இதுவரை எவ்வளவு ஆச்சுடி? அந்த ஆஸ்பத்திரியில பயங்கரமா காசு புடுங்குவாங்களேன்னு சொல்லுவாங்களே..!”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேம்மா. அண்ணா அவன் பேர்ல மெடிக்ளெய்ம் பாலிசி எடுத்திருந்ததால ஆஸ்பத்திரிக்கு நாம செஞ்ச செலவுல எண்பது சதவிகிதம் வரை இன்சூரன்ஸ் கம்பெனியிலருந்து குடுத்துட்டாங்க. மீதி அண்ணா ஆபீஸ்லருந்து குடுத்தாங்க. எல்லாத்தையும் அண்ணாவோட ப்ரெண்ட்ஸ்தான் ஏற்பாடு பண்ணாங்க. அண்ணா எல்லார்கிட்டயும் கலகலப்பா பழகுறதுனால அவனுக்கு உதவறதுக்குன்னு அவனோட பாஸ்லருந்து கம்பெனி வாட்ச்மேன் வரைக்கும் ரெடியாயிருந்தாங்க. நான் சும்மா அவங்களோட சேர்ந்துக்கிட்டேன். அவ்வளவுதான். நீதான் அதைப் புரிஞ்சிக்காம அவங்களை வீட்டு பக்கம் வந்து ஏன் தொந்தரவு பண்றீங்கன்னு பேசி அனுப்பிட்டே. ஆனாலும் உங்க மேல அவங்களுக்கு துளிக்கூட கோபமில்லம்மா. அம்மா ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டாங்க நீங்க ஒர்றி பண்ணிக்காதீங்கன்னு என்கிட்ட சொன்னாங்க. நான் இன்னைக்கி அவங்கள பார்த்து வீட்டுக்கு வரச் சொல்லப்போறேன். நீ என்னம்மா சொல்றே?”

சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்த கனகா ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்து தன் மகளின் தோள்மேல் ஆதரவாய் தட்டிக் கொடுத்தாள். “நீ செஞ்சா சரியாத்தாண்டியிருக்கும். வயசுக்கு வந்த பொண்ணு இருக்கற வீட்டுல ஆம்பிள பசங்க வந்து அரட்டையடிச்சா அக்கம்பக்கத்துலருக்கறவங்க ஏதாவது சொல்லுவாங்களேன்னுதான் நினைச்சிக்கிட்டிருந்தேன். ஒரு தேவைன்னு வரும்போது இல்லாம போற அக்கம்பக்கத்துக்காரங்களுக்காக இனி நான் கவலைப்பட போறதில்லேடி. எனக்கு பாஸ்கரும் நீயும்தான் முக்கியம். பாஸ்கரோட பிரண்ட்சால அவுனுக்கு ஒரு நல்லது நடக்குதுனா நான் ஏன் குறுக்கே நிக்கணும்? அவங்கள வரச்சொல்லு. எனக்கும் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டாத்தான் மனசு ஆறும். நீ எங்கயோ போறாப்பல நிக்கறே. போயிட்டு வா. பாஸ்கர் எழுந்துக்கறதுக்குள்ள நான் சமையலை முடிக்கறேன்..”


***

அடுத்த நாள் மாலையே பாஸ்கரின் நெருங்கிய நண்பர்கள் குழு ஒன்று வீட்டுக்கு வந்தபோது கனகா புன்னகையுடன் வரவேற்றாள்.

“நான் அன்னைக்கி ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுக்குங்கப்பா. நான் உங்களையெல்லாம் புண்படுத்தணும்னு சொல்லலை. ஏதோ அன்னைக்கி இருந்த வேதனையில...” என்று ஆரம்பித்தவளை புன்னகையுடன் தடுத்து நிறுத்திவிட்டு பாஸ்கரின் அறைக்கதவைத் திறந்துக்கொண்டு நுழைந்தது அந்த வாலிபக் குழு..

என்ன செய்தார்களோ, என்ன பேசினார்களோ தெரியவில்லை. சிறிது நேரத்திற்குள் பாஸ்கரின் குரல் அறைக்கு வெளியே கேட்கத் துவங்கியது..

ஹாலில் அமர்ந்திருந்த மைதிலி ‘நான் சொல்லலே.. இப்ப பாத்தியா?’ என்று தன் தாயைப் பார்த்து கண்ணால் சைகை காண்பித்தாள்.. ‘”இன்னும் ஒரு வாரத்துல அண்ணா பழைய நிலமைக்கு வந்திருவான்.. நீ வேணா பாரு” என்றவாறு எழுந்து தன் தாயையும் அழைத்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றாள் வந்தவர்களுக்கு காப்பி தயாரிக்கும் எண்ணத்துடன்.

கையில் காப்பி ட்ரேயுடன் மைதிலி பாஸ்கரின் அறைக்குள் நுழைந்தபோது பாஸ்கர் தன் நண்பர்களுடன் ஏதோ மும்முரமாய் விவாதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவள் உள்ளே நுழைந்தவுடன் எல்லோரும் அமைதியானதைக் கண்ட மைதிலி தன் சகோதரனையும் அவனுடையை நண்பர்களையும் பார்த்து புன்னகைத்தாள்.

“என்னண்ணா.. சிவ பூஜையில கரடிமாதிரி நுழைஞ்சிட்டேனா, சட்டுன்னு பேச்சை நிறுத்திட்டீங்க? ஏதாவது ரகசியமா?”

பாஸ்கரின் நெருங்கிய நண்பனான சங்கர் அவசர அவசரமாக மறுத்தான், “சே, சே. அப்படியெல்லாம் இல்லை. கம்பெனி விஷயமா பேசிக்கிட்டிருந்தோம். பாஸ்கர் இல்லாத இந்த ரெண்டு மாசத்துல நடந்ததை எல்லாம் சொல்லிக்கிட்டிருந்தோம்..”

மைதிலி பாஸ்கருக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் காப்பியை வழங்கிவிட்டு ட்ரேயுடன் சிறிது நேரம் நின்றுவிட்டு, “ஓகே.. நான் போனாத்தான் பேச்சைத் தொடர்வீங்க போலிருக்கு. நான் அப்புறம் வந்து கப்செல்லாம் கலெக்ட் பண்ணிக்கறேன்..” என்றவாறு புன்னகையுடன் வெளியேறினாள்..

அவள் வெளியேறும்வரை காத்திருந்த மற்றொரு நண்பனான மாதவன் எழுந்து சென்று அறைக்கதவை மூடிவிட்டு வந்தான். பாஸ்கரின் கையிலிருந்த காப்பிக் கோப்பையை வாங்கி ட்ரேயில் வைத்துவிட்டு அவனருகில் அமர்ந்து அவன் கைகளைப் பிடித்து தன் கையில் வைத்து ஆதரவாய் அழுத்தினான். பிறகு. “லலிதா நானும் வருவேன்னு அடம் பிடிச்சா பாஸ்கர். அவளைத் தடுத்து நிறுத்துறதுக்குள்ளே ரொம்ப கஷ்டமாயிருச்சி. அவளை வேணும்னா நான் நாளைக்கு வரும்போது கூட்டிக்கிட்டு வரட்டுமா, நீ என்னடா சொல்றே?” என்றான் பாஸ்கரின் முகத்தைப் பார்த்தவாறு..

சிறிது நேரம் ஒன்றும் பேசாமலிருந்த பாஸ்கர் அறையைச் சுற்றிலும் தன் பார்வையிழந்த விழிகளை ஓடவிட்டான்..

“இப்போதைக்கு என்னால எதையும் சொல்லமுடியாதுடா. நான் ரொம்பவும் குழம்பிப் போயிருக்கேன். கிவ் மி சம் மோர் டைம். நீங்கல்லாம் இன்னும் ஒரு வாரம் வந்திருக்கலேன்னா நான் என்ன முடிவு பண்ணியிருப்பேன்னு எனக்கே தெரியாது. அவ்வளவுக்கு வாழ்க்கையில பிடிப்பு இல்லாம இருந்தேன். என்னதானிருந்தாலும் மைதிலிகிட்ட உங்ககிட்ட பேசறாமாதிரி பேச முடியலே. அப்பா இறந்தப்போ என்னைவிட அஞ்சு வயசு சின்னவளா இருந்த அவளை நான் என்னோட தங்கையா மட்டும் பாக்கலேடா. என் சொந்த மகளாவே பார்த்தேன். அவளை படிக்கவைக்கணும், கல்யாணம் பண்ணி குடுக்கணும். அப்படீன்னு என் சிந்தனைப் போய்க்கிட்டிருந்தது. அதுவரைக்கும் எனக்கு வேற எந்த வித உறவோ, பந்தமோ ஏற்படுத்திக்கக் கூடாதுங்கறதுல நான் ரொம்ப உறுதியாயிருந்தேன்னு உங்களுக்கெல்லாம் தெரியும்னு நினைக்கறேன். என்னையும் அறியாம ஏற்பட்டதுதான் லலிதாவோட நட்பு. அவளும் மைதிலியோட கல்யாணம் முடியறவரைக்கும் காத்துக்கிட்டிருக்கேன்னு சொன்னதினாலதான் நானும் அவளை ஒதுக்கித் தள்ள முடியாம ஒத்துக்கிட்டேன்..” குரல் நடுங்கி மேலே பேச முடியாமல் தடுமாறிய பாஸ்கரை அணைத்துக்கொண்டான் சங்கர்

“டேக் இட் ஈஸி பாஸ்கர். நீ இருக்கற நிலையில அனாவசியமான டென்ஷன்லாம் வேணாம்.” என்றவன் லலிதா விஷயத்தை எடுத்த தன் நண்பன் மாதவனைப் பார்த்து ‘எல்லாம் உன்னால வந்ததுதாண்டா..’ என்பதுபோல் முறைத்தான்.

“டேய் மாதவனை ஏண்டா முறைக்கறே.. அவன் சொன்னதுல ஒண்ணும் தப்பில்லையே..” என்ற பாஸ்கரை ஆச்சரியத்துடன் பார்த்தது நண்பர் குழாம்..

“என்னடா பாக்கறீங்க?” என்று அவர்களை மீண்டும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான் பாஸ்கர். “என்னடா.. இவனுக்குத்தான் கண் தெரியாதேன்னு பாக்கறீங்களா..?”

“சே, சே! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேடா.. நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காதே..” என்றது நண்பர் குழு ஒருமித்த குரலில்..

“டேய், டேய்.. நாமெல்லாம் பிரண்ட்ஸ்.. நமக்குள்ள ஒளிவு, மறைவு ஒண்ணும் வேணாம். எனக்கு பார்வைதான் போயிருச்சி. உணர்வுகள் அப்படியேத் தானிருக்கு.. நான் சொல்றதுக்கு நீங்க ஒவ்வொருத்தனும் எப்படி ரியாக்ட் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியும்டா. இன்னொண்ணு சொல்லட்டுமா? நீங்க ஒவ்வொருத்தரும் பேசின குரலை வச்சி யார், யார் எங்கே உக்காந்திருக்கீங்கன்னு காட்டட்டுமா..” என்றவாறு ‘அதெல்லாம் வேண்டாம்டா..’ என்று தடுத்தும் கேளாமல் ஒவ்வொருவர் பெயரையும் அவர்களிருக்கும் திசையையும் காண்பித்தான் பாஸ்கர்.

கடைசி நண்பன் இருக்கும் திசையைக் காண்பித்து முடித்தவுடன் எல்லோரும் ஒருசேர கரயோசை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை காண்பிக்க கரஒலியின் ஓசையைக் கேட்ட கனகாவும், மைதிலியும் கதவைத்தட்டி திறக்க சொல்லவே சங்கர் எழுந்து கதவைத் திறந்து.. “வாங்கம்மா, வா மைதிலி..” என்று அழைத்து நடந்ததை கூற, கண்களில் பொங்கி வந்த கண்ணீரை அடக்க முடியாமல் அவர்களை எல்லோரையும் பார்த்து கரம் கூப்பினாள் கனகா..

“என்னம்மா நீங்க. இதுக்கு போயி. இனிமே பாஸ்கரைப் பத்தி நீங்க கவலையே பட வேண்டாம். நீங்களே எதிர்பார்க்காத வேகத்துல அவன் நார்மலாயிடுவான். எங்கள்ல யாராவது ஒருத்தரோ, ரெண்டு பேரோ டெய்லி வந்து பார்த்துக்குவோம். நீங்க எதுக்கும் கவலைப் படாம இருங்க. மைதிலி, பாஸ்கர் என்னவெல்லாம் செய்யணும்னு டாக்டர் சொல்லியிருக்காரோ அத எங்க கிட்ட ஒரு லிஸ்ட் போட்டு குடுத்துருங்க, நாங்க பாத்துக்கறோம்.. நீங்க நாளையிலிருந்து உங்க ஆபீசுக்கு போக ஆரம்பிக்கலாம். என்ன சொல்றீங்க?”

“தாங்க்யூ சங்கர். நான் ஒரு லிஸ்ட் பிரிப்பேர் பண்ணி வைக்கறேன். அண்ணா ராத்திரி படுக்கப் போறதுக்கு முன்னாலயும் காலையில எழுந்தவுடனே செய்ய வேண்டியதையும் நான் பாத்துக்கறேன். ஈவ்னிங் மட்டும் நீங்க யாராச்சும் வந்தா போறும். என்னண்ணா சொல்றே?” என்ற மைதிலியின் குரல் வந்த திசையைப் பார்த்து புன்னகைத்தான் பாஸ்கர்.. “அதான் நீயே சொல்லிட்டியேம்மா. அப்படியே செஞ்சுருவோம்.. என்னடா சொல்றீங்க?” என்றான் அறையைச் சுற்றிலும் பார்த்து.

“ஓகே, டன். அப்போ வரோம்டா பாஸ்கர். வரோம்மா.. சீ யூ மைதிலி..” என்று கிளம்பிய சங்கரைத் தொடர்ந்து எல்லோரும் வெளியேற சிறிது நேரத்தில் அந்த வீடு மீண்டும் நிசப்தமானது..

எல்லோரையும் வழியனுப்பி வைத்துவிட்டுத் திரும்பிய மைதிலியும், கனகாவும் மீண்டும் பாஸ்கரின் அறைக்குள் நுழைந்து அவனருகில் சென்று அமர்ந்தனர்.

“அண்ணா..” என்றாள் மைதிலி..

“சொல்லும்மா..”

“இப்ப எப்படீனா பீல் பண்றே..?”

“உனக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலடா மைதிலி...” கண்களிலிருந்து வழிந்தோடும் கண்ணீருடன் பாஸ்கர் மைதிலி இருந்த திசையை நோக்கி தன் கரங்களை நீட்ட கனகாவும், மைதிலியும் சேர்ந்து அவன் கரங்களைப் பிடித்துக்கொண்டு சிறிது நேரம் குரல் எழுப்பாமல் கண் கலங்கினர்..

“எனக்கு தெரியக்கூடாதுன்னு சப்தமில்லாம அழறீங்கங்கறது எனக்கு தெரியுதும்மா. கவலைப்படாம சத்தம் போட்டு அழுதிடுங்க. போறும். உங்க ரெண்டுபேரையும் நா அழ வச்சது போறும். இனிமே இந்த வீட்டுல அழுகைக்கு இடமேயில்லை..” பாஸ்கரின் குரலில் தொனித்த உறுதி மைதிலியையும், கனகாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்..

“ஆமாம்மா. நான் இந்த நாற்பத்தி அஞ்சி நாளா எவ்வளவு கோழையா இருந்திருக்கேன்னு நினைச்சா எனக்கே வெக்கமாயிருக்கு. நாம கடைசியா பார்த்த படத்துல ஒரு பாட்டு வருமே. அது இப்பவும் என் உள் மனசுல ஒலிச்சிக்கிட்டேயிருக்குமா. அந்த பாட்டுல வர்ற இந்த வரிங்கதான் எனக்கு எவ்வளவு அழகா பொருந்தியிருக்கு பாரேன்..!

நம்பிக்கை நிச்சயம் வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்

சன்னமான குரலில் பாஸ்கர் இந்த வரிகளை உணர்ச்சியுடன் பாட பொங்கி வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் அறையை விட்டு வெளியே ஓடிப்போய் சோபாவில் அமர்ந்து அழுத தன் தாயையும், முகத்தில் பரவி நின்ற உறுதியுடன் தன்னை நோக்கிப் பார்த்த தன் சகோதரனையும் மாறி, மாறி பார்த்தாள் மைதிலி..

“ஆமா மைதிலி.. நான் இனியும் என்னையே ஏமாத்திக்கிட்டு வாழப் போறதில்லை. என்னால மறுபடியும் ஒரு முழு மனுஷனா வாழ முடியும்கற நம்பிக்கை வந்திருச்சி. உங்க ரெண்டு பேரோட உதவியோட என்னால மறுபடியும் பழைய பாஸ்கரா மாற முடியும். பார்வை வருதோ இல்லையோ அதப்பத்தி நான் கவலைப்பட போறதில்லை. அது வரட்டும். வராமயே போகட்டும். பார்வை இனி எனக்கு பிரச்சினையே இல்லை. என்ன சொல்றே மைதிலி?”

கலங்கி நின்ற கண்களையும் முகத்தையும் சேலைத்தலைப்பால் அழுந்தத் துடைத்துக்கொண்ட மைதிலி தன் சகோதரனின் கரங்களைப் பற்றிக்கொண்டு புன்னகைத்தாள்..

“உனக்கு மறுபடியும் உன் மேலேயே நம்பிக்கை வந்திருச்சில்லே. அது போறும்ணா. பார்வை தன்னால வரும். நீ பார்த்துக்கிடே இரு. யூ வில் பி ஆல் ரைட் இன் நோ டைம்..”

சோபாவில் அமர்ந்திருந்த கனகா கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து மீண்டும் அறைக்குள் நுழைந்து தன் மகனை நோக்கிச் சென்று அவனுடைய கரங்களைப் பிடித்து தன் கைகளில் பொதிந்துக்கொண்டாள்.

“டேய் பாஸ்கர்! உனக்கு ஒன்னுமில்லேடா. எல்லாம் நல்லாயிடும். எனக்கு நம்பிக்கையிருக்கு..”

பாஸ்கர் தன் தாயையும், தன் தங்கையையும் பார்த்து புன்னகைத்தான்.. “எனக்கும் நம்பிக்கையிருக்குமா. மைதிலி எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும்..”

“சொல்லுண்ணா..”

“பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியில போயி கண்பார்வையிழந்தோரைப் பத்தி என்னல்லாம் புக்ஸ் இருக்கோ அதையெல்லாம் கொண்டு வந்து எனக்கு படிச்சி காண்பிக்கணும். செய்வியா?..”

மைதிலி கலக்கத்துடன் தன் தாயைப் பார்த்தாள்..

“உனக்கெதுக்குண்ணா அதெல்லாம்? டாக்டர்தான் உனக்கு கொஞ்சம் கொஞ்சமா சரியாயிரும்னு சொன்னாரே! நாளைக்கு வேணா டாக்டரை வசந்தியைப் பார்த்து பேசுவோமே. அதுக்குள்ள நீயே ஏன் இந்த மாதிரி முடிவுக்கு வர்றே?”

‘இல்லை’ என்றவாறு தலையை அசைத்த பாஸ்கர்.. “இல்லடா.. நா அதுக்கு சொல்லலே. கண் பார்வை வர்றபோது வரட்டும். டாக்டர் சொன்ன எல்லா பயிற்சியையும் செய்வோம். பட் ஐ ஷ¤ட் நோ வாட் ஐ ஷ¤ட் டூ. ஐ நீட் யுவர் ஹெல்ப்.. என்னடா.. நான் கேட்டதை செய்வியா? அம்மாவை பார்க்காத. அம்மா வேணாம்னுதான் சொல்வா..”

தான் தன் தாயைப் பார்ப்பதை உணர்வால் புரிந்துக்கொண்ட தன் சகோதரனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் மைதிலி. “ஓகேண்ணா.. நாளைக்கே போறேன்.. ‘ஹவ் டு ரீகெய்ன் யுவர் ஐசைட் பை விஷன் தெரப்பி’ அப்படீன்னு ஒரு புக் புக் ஷாப்ல இருக்கும் அத வாங்கி பாஸ்கருக்கு படிச்சி காண்பிங்கன்னு டாக்டர் வசந்தி போனதடவை மீட் பண்ணப்ப சொன்னாங்க. அதையும் வாங்கிட்டு வரேன். என்ன சரியா..?”

தன் தங்கையின் சமயோசித பதிலைக் கேட்டு வாய் விட்டு சிரித்தான் பாஸ்கர். கனகாவும் மைதிலியும் ஒருவரையொருவர் வியப்புடன் பார்த்தவாறு அவனுடைய சிரிப்பில் கலந்துக்கொள்ள கடந்த இரண்டு மாதங்களாய் அந்த வீட்டில் கவிழ்ந்திருந்த சோகம் கரைந்து போனது.

***

“அவ்வளவு தைரியமா அன்னைக்கி நம்மக்கிட்ட பேசினவன் நாலு நாள் முடியறதுக்குள்ள இப்பிடி ஒரு குண்டை தூக்கிப் போட்டுட்டு போவான்னு நான் எதிர்பார்க்கவேயில்லையேடி..”

பாஸ்கரின் நினைவுகளில் மூழ்கிப்போயிருந்த மைதிலி கனகாவின் குரலைக் கேட்டு திடுக்கிட்டு விழித்து அருகில் அமர்ந்து அழுதுக்கொண்டிருந்த தன் தாயை இறுக அணைத்துக்கொண்டு சிறிது நேரம் தானும் அழுதாள்..

அண்ணா ஏன் அப்படி செய்தான்...?

இன்று வரை அது புரியாத புதிராகவே இருந்தது மைதிலிக்கும், அவனுடைய நெருங்கிய நண்பர்களுக்கும்...

அந்த துயரச் சம்பவம் நடந்து முடிந்து ஒரு வாரமிருக்கும். இனிமேலும் வீட்டில் அடைந்து கிடந்தால் துக்கம்தான் பெருகும் என்று நினைத்த மைதிலி அலுவலகம் திரும்பிச் சென்ற முதல்நாள் அது.

“மேடம் உங்கள பாக்க ஒருத்தர் வந்து விசிட்டிங் ரூம்ல காத்துக்கிட்டிருக்கார்..” என்று அலுவலக பியூன் வந்து சொல்ல ‘யாராயிருக்கும்?’ என்ற குழப்பத்துடன் விசிட்டர்ஸ் அறைக்கு விரைந்தாள் மைதிலி.

அறையில் பாஸ்கரின் நண்பன் சங்கரும், அவனுடன் ஒரு இளம் பெண்ணும்..

“வீட்டுக்கு போனோம் மைதிலி. அம்மாதான் நீங்க ஆபீஸ்ல இருக்கறதா சொன்னாங்க.. எப்படி இருக்கீங்க மைதிலி? உங்க கிட்ட பேசணும்னு லலிதா ரொமப பிடிவாதமா சொன்னாங்க. என்ன விஷயம்னு என்கிட்ட சொல்லலை. அதான் கூட்டிக்கிட்டு வந்தேன். இவங்களும் எங்க கம்பெனியிலதான். உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்.. ஹவ் டு யூ பீல், கேன் வி டாக் டு யூ நவ்?”

“பரவாயில்லை.. சொல்லுங்க..” என்றவாறு சங்கரையும் லலிதாவையும் இருக்கச் சொல்லி சைகைக் காண்பித்த மைதிலி தானும் அமர்ந்துக்கொண்டாள்.

லலிதா தயக்கத்துடன் சங்கரைப் பார்த்தாள் ‘கொஞ்சம் எழுந்து போயேன்..’ என்ற முகபாவனையுடன்.

சங்கர் புரிந்துக்கொண்டு எழுந்து நின்றான்.. “நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டிருங்க.. நான் கொஞ்சம் ஸ்மோக் பண்ணிட்டு வரேன்..” என்றவாறு அறையை விட்டு வெளியேறி வராந்தாவில் நின்றுக்கொண்டு வெறுமனே சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான்..

“மைதிலி.. உங்கண்ணாவோட இந்த முடிவுக்கு நான்தான் காரணம்னு என் மனசாட்சி என்னை ரொம்ப சித்தரவதைப் படுத்துதுங்க ...” என்று நடுங்கும் குரலில் ஆரம்பித்த லலிதாவை வியப்புடன் பார்த்தாள் மைதிலி.. ‘யார் இவள்? இவளுக்கும் தன் அண்ணனின் மறைவுக்கும் என்ன சம்மந்தம்?’

“என்ன சொல்றீங்க? கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க..” என்றாள் ஒருவித எரிச்சலுடன்..

சிறிது நேரம் அறைக்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த சங்கரையே பார்த்துக்கொண்டிருந்த லலிதா தலையைக் குனிந்துக்கொண்டு மெல்லிய குரலில் சொல்ல ஆரம்பித்தாள்..

“நானும் உங்கண்ணாவும் போன ஒரு வருஷமா நெருங்கி பழகிக்கிட்டிருக்கோம் மைதிலி. அதைக் காதல்னு சொல்ல வரலை. ஒரு நெருக்கமான நட்புன்னு சொல்லலாம். பாஸ்கருக்கு விபத்து ஏற்பட்டு ரெண்டு மாசமா பார்க்கக்கூட முடியாம இருந்தப்போதான் எனக்கு புரிஞ்சது இது வெறும் நட்பு இல்லன்னு. அவரை ஒரு நாள் கூட பார்க்கமுடியாம நான் போன ரெண்டு மாசமா ரொம்பவும் துடிச்சிப் போயிட்டேன். உங்கண்ணா வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் நான் வந்து பாக்கட்டுமான்னு அவரோட நண்பர்கள் வழியா கேட்டு அனுப்புனேன். ஆனா உங்கண்ணா முடியாதுன்னு மறுத்துட்டார். அதுக்கு அடுத்த நாள் என் மனசுல இருக்கறதயெல்லாம் ஒரு லெட்டர்ல எழுதி உங்க வீட்டுக்கு வந்த மாதவன் வழியா குடுத்தனுப்பினேன். உங்கண்ணா என்ன மறந்துட்டு உனக்கு ஏத்த ஒரு பையனைப் பார்த்து உன் வாழ்க்கையை அமைச்சிக்கோ. இந்த குருடனை நம்பிக்கிட்டிருக்காதே’ன்னு அதே லெட்டர்ல எழுதி திருப்பி அனுப்பிச்சிட்டாரு...”

மேலே தொடரமுடியாமல் குரல் உடைந்து மெளனமாய் முகத்தைக் கைகளில் புதைத்துக்கொண்டு அழுதவளைத் தேற்ற மனமில்லாமல் அமர்ந்திருந்தாள் மைதிலி.. ‘முட்டாள் பெண். தன் வாழ்க்கையை நம்பிக்கையுடன் பார்க்கத் துவங்கிய அண்ணாவின் முடிவைக் குட்டிச்சுவராக்கிவிட்டாளே. இப்ப அண்ணா எங்க, எப்படி கஷ்டப்படறானோன்னு தெரியலையே’ ... என்ற நினைப்போடு ஆத்திரம் பொங்கிவந்தது அவள் மனதில்..

“அந்த லெட்டர் விஷயம் சங்கருக்கும் உங்கண்ணாவோட மத்த ப்ரெண்ட்சுக்கும் தெரிய வந்து ஒரு வாரத்துக்குள்ள பாஸ்கர் யார்கிட்டயும் சொல்லிக்காம கிளம்பிப் போனதுலருந்து என்னோட பேசறதுக்கோ, பழகறதுக்கோ யாருமே தயாராயில்ல. உங்க கிட்ட இந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு தெரியாம நாங்க எல்லாரும் குழம்பிக்கிட்டிருந்த நேரத்துல உங்கண்ணாகிட்டருந்து எனக்கு இன்னைக்கி காலையில ஒரு ஈமெய்ல் வந்துது..”

“என்னது ஈமெய்லா.. என்னன்னு?” பதற்றத்துடன் எழுந்து நின்ற மைதிலியின் கரங்களைப் பிடித்து ஈமெய்லின் நகலைக் கொடுத்தாள் லலிதா.

‘அன்புள்ள லலிதா..

என் திடீர் மறைவுக்கு நீதான் காரணம் என்று நீ நினைத்துக்கொண்டிருப்பாய். ஒருவேளை சங்கரிடமும், மற்ற நம் நண்பர்களிடமும் கூறியிருக்கும் சூழ்நிலையில் நீ எல்லோருடைய கோபத்துக்கும், நிந்தனைக்கும் ஆளாயிருப்பாய் என்று நினைக்கிறேன்..

நான் எடுத்த இந்த திடீர் முடிவுக்கு நீயும் ஒரு காரணம்தான். நான் அருகில் இருக்கும் வரை நீ என்னை மறந்துவிட்டு உனக்கொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமாட்டாய் என்று நான் நினைத்ததன் விளைவே இந்த பிரிவு.

என்னுடைய இப்போதைய முதன்மை (Priority) என் தாயும், என் தங்கை மைதிலியும்தான். மைதிலிக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அந்த ஒரு எண்ணம்தான் என் வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த நம்பிக்கை இப்போதும் என்னிடம் இருக்கிறது.

அதே சமயம் உன் மனசில் நான் ஏற்படுத்திய சலனம் உன் லெட்டரைப் படித்த நாள் முதலாய் என்னைத் துன்புறுத்திக்கொண்டேயிருந்தது. இதற்கு ஒரே வழி சிறிது காலம் யாருக்கும் தெரியாத இடத்தில் நான் இருக்க வேண்டும் என்ற முடிவில்தான் நான் வீட்டைவிட்டு வெளியேறினேன்..

என் பள்ளிப்பருவ நண்பன் ஒருவன் துணையுடன்தான் நான் இந்த முடிவை நிறைவேற்றியிருக்கிறேன். அவனைப் பற்றி மைதிலிக்குக் கூட தெரியாது. அம்மா அருகிலிருந்த கடைக்குப் போய் அரைமணியில் திரும்பி வருகிறேன் என்று போனவுடன் அவனைத் தொலைப்பேசியில் அழைக்க அவனும் என்ன, ஏது என்று எந்த கேள்வியும் கேட்காமல் என்னை வந்து அழைத்துக்கொண்டு போய்விட்டான். இப்போது அவனுடன் தான் இருக்கிறேன்.

மை டியர் மைதிலி..

இந்த ஈமெய்ல் உன் கையை வந்தடையும் என்று எனக்கு நன்றாய் தெரியும். கவலைப்படாதே.. லலிதா உன்னை வந்து பார்க்கும் பட்சத்தில் அவளுக்கு புத்திமதி சொல்லி என் நிலையைப் புரிந்துக்கொள்ளச் செய். அண்ணா கண்டிப்பாய் திரும்பி வருவேன். அது எப்போது என்பது லலிதாவின் கையிலிருக்கிறது. அம்மாவுக்கு இந்த விஷயம் இப்போதைக்குத் தெரிய வேண்டாம்.

அன்புடன்
பாஸ்கர்..

படித்து முடித்துவிட்டு நிமிர்ந்த மைதிலி கடிதத்தை மடித்து கண்களில் சோகத்துடன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த லலிதாவை நோக்கி நீட்டினாள் ஒன்றும் பேசாமல்.

“என்னை மன்னிச்சிருங்க மைதிலி.. என்னாலதான்..”

அவளைப் பேசவிடாமல் சைகைக் காண்பித்த மைதிலி.. “இங்க பாருங்க லலிதா. அண்ணா எங்களுக்கு திரும்ப வேணும். அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும். அது உங்க கையிலதான் இருக்கு. உங்கள நினைச்சு கவலைப் படற நிலமையில நானோ, எங்கம்மாவோ இல்லை. அண்ணா போனத்¢லேயிருந்து அவங்க நிம்மதியா சாப்பிட்டு, தூங்கி நான் பார்க்கலை. இப்படியே போனா அவங்க உடம்புக்கு ஏன் உயிருக்கே ஏதாவது ஆயிருமோன்னு பயமாயிருக்கு.. சோ... அண்ணா உங்ககிட்டயிருந்து எதிர்பார்க்கறது ஒண்ணுதான். அது உங்களுக்கே என்னன்னு தெரியும்னு நினைக்கறேன். இவ்வளவு நாள் பழகிய நட்புக்கு பிரதியுபகாரமா நினைச்சிக்குங்க. இதுக்கும் மேல ஒண்ணும் சொல்றதுக்கில்ல. அண்ணா சீக்கிரம் திரும்பி வரணும்னு மட்டும்தான் நான் ஆசைப்படறேன்..”

வராந்தாவில் நின்றிருந்த சங்கர் தன்னையும் கண்டுக்கொள்ளாமல் அறையைவிட்டு வெளியேறிய மைதிலியை பார்த்தவாறே கலங்கிய கண்களுடன் நின்றிருந்த லலிதாவை நெருங்கி “ஹேய் என்ன நடக்குது இங்க? மைதிலி ஏன் அப்படி கோபத்துடன் போறாங்க..?” என்றான்.

“நத்திங்.. சங்கர்.. வாங்க, நாம போலாம்..” என்றவாறு தன்னுடைய பதிலுக்கு காத்திராமல் வாயிலை நோக்கி விரைந்த லலிதாவின் பின்னே ஓடினான் சங்கர்.

***

அடுத்த நாள் பிற்பகல்..

கைத்தொலைப்பேசி சிணுங்க எடுத்துப் பேசிய மைதிலி எதிர் முனையில் பதற்றத்துடன் ஒலித்த சங்கரின் குரலைக் கேட்டாள்.

“நேற்று என்ன நடந்துது மைதிலி? இன்னைக்கி லலிதா அவங்க வேலையை ரிசைன் பண்ணிட்டு ஊருக்கு கிளம்பிப் போயிட்டதா ஆபீஸ்ல பேசிக்கறாங்க. வாட் ஹேப்பண்ட்..?”

“எனக்குத் தெரியலை சங்கர். எனிவே தாங்க் யூ பார் திஸ் இன்பர்மேஷன்.”

சங்கரை மேலே பேசவிடாமல் தொலைப்பேசி இணைப்பைத் துண்டித்த மைதிலி நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

லலிதாவின் இந்த முடிவு எப்படியும் அண்ணாவுக்குத் தெரியவரும்.

அண்ணா திரும்பி வந்துவிடுவான்..

இன்று அல்லது நாளை...

உற்சாகம் உள்ளத்தில் பொங்கி வர இருக்கையிலமர்ந்து தன் வேலையைப் பார்க்க துவங்கினாள் மைதிலி.

- டி.பி.ஆர். ஜோசப் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com