Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
இழப்பு
ஜீ.முருகன்


Worried man மதிப்புக்குரிய நண்பர் அர்ஜுனன் அவர்களுக்கு, வணக்கம். உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் கேட்டிருந்த கணேசன் அவர்களின் விலாசத்தைப் பின்னால் இணைத்துள்ளேன். கடிதம் எழுதுவதற்குத் தாமதமாகிவிட்டது; மன்னிக்கவும். உங்கள் தேவையை அனாவசியப்படுத்திவிட்டதாக நீங்கள் நினைத்துக்கொள்ளக் கூடாது. யாருக்கும் அதிகமாகக் கடிதம் எழுதும் வழக்கமில்லை என்னிடம். அப்படி எழுதினாலும் விஷயத்திற்கு மேல் ஒரு வார்த்தைகூட எழுதத் தோன்றுவதில்லை. ஆனால் கணேசன் சாரைப்பற்றிச் சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொண்டால் ஆறுதலாக இருக்குமென்று படுகிறது.

மறுநாள்தான் எனக்கு தகவல் கிடைத்தது. உடனே எதையும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. கணேசன் இறந்துவிட்டார் என்பதை எப்படி நம்புவது? வெறும் வதந்தியோ, விளையாட்டோ இல்லை, உண்மையாக நடந்துவிட்டிருக்கிறது என்பதை நிதானமாகத்தான் புரிந்து கொண்டேன். மரணம் என்ற அந்த இறுதி உண்மையை யாரும் நம்பித்தானே ஆகவேண்டும்? அவருடைய வீட்டுக்குப் போய் விசாரித்துவிட்டு வந்தேன். விசாரிக்காமலேயே கூட இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. யாரும் அதை எதிர்பார்க்கவும் இல்லைதான். விஷயத்தைக் கேட்டுவிட்டு எதுவும் செய்யாமல் என்றால் எப்படி?

இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு முன்தினத்திலேயே எல்லாம் நடந்து முடிந்துவிட்டிருந்தது. ஊர்வலத்தில் சொற்பமானவர்களே இருந்ததாகத் தகவல் தெரிவித்த நண்பர் சொன்னார். வருத்தமாக இருந்தது. ஆட்களின் எண்ணிக்கை ஒரு மனிதனின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகுமா? ‘முக்கியத்துவம்’ என்ற இந்த வார்த்தை கணேசனைப் பொறுத்தவரை அர்த்தமற்றது என்றும் தோன்றுகிறது.

முன்பே உங்களுக்குக் கணேசனைத் தெரியும் இல்லையா? கணேசன் சொல்லியிருக்கிறார். பால்யகால நண்பர்கள் நீங்கள்; ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அவருடைய விலாசம்கூடத் தெரிந்திருக்காதபடி சமீபத்திலோ உங்களுக்குள் பெரிய இடைவெளி. எங்களுக்கு இடையேயான நட்பு நிச்சயம் உங்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கும் ‘எப்படி இவர்கள்’ என்று. கம்ப்யூட்டர் சம்பந்தமாகத்தான் முதன்முதலாக அவரைச் சந்தித்தேன். எங்களுக்குள் நடந்த சின்ன வியாபாரத்தின்போது வெளிப்பட்ட அவருடைய குணாம்சம் என்னைக் கவர்ந்தது. இதுதான் எங்கள் நட்பு தொடாந்ததற்கும், பலப்படுவதற்குக் காரணம் என நினைக்கிறேன்.

சாவு நிகழ்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு கணேசன் என்னுடைய மையத்திற்கு வந்து பேசிவிட்டுத்தான் போனார். இந்தக் கடைசி சந்திப்பில் மரணத்தின் சாயலை அவரிடம் கண்டேனா என்று இப்போது யோசித்துப்பார்த்துக் கொள்கிறேன். அசாதாரணமான எதையும் உணர்ந்ததாக நினைவில்லை. சாதாரண பார்வைக்குப் புலப்படாமல் எல்லாமே உள் உறைந்திருக்கும் போலத் தெரிகிறது. இவ்வளவு துரிதமாக மரணம் அவரை அணுகும் என்று என்னால் எண்ணவே முடியவில்லை. அதற்கு இடமில்லாமல் எவ்வளவு பரிமாற்றங்கள், பற்றிக் கொள்ளுதல்கள்!

“மரணம் ஒரு பிரச்சினையா?’’ என்று ஒரு முறை கணேசன் என்னிடம் கேட்டார். “மரணத்தைப் பற்றி எத்தனை கேள்விகள், பதில்கள்! மகாமேதைகள் என்பவர்கள்கூட மரணம் பற்றிப் பேசத் தொடங்கும்போது குழந்தையாகிவிடுகிறார்கள்; உறுதியாக ஒன்றும் சொல்ல முடிவதில்லை. மரணம் என்பது என்னவென்று தெரிந்துவிட்டால் அதைக் கடந்துவிடலாம். இதுவோ பிரபஞ்ச விதிக்கு எதிரானது. பிரபஞ்சமோ என்றைக்கும் தனது விதிகளை மனிதர்களுக்காக விட்டுக்கொடுக்கப்போவதில்லை. எல்லாவற்றையும் கிடப்பில் போட்டுவிட்டு இறுதியில் அதிலேயே போய் அமிழ்ந்துபோவதுதான் நாம் செய்யக்கூடியது; ஒன்றிரண்டு நீர்க்குமிழிகளைக்கூட வெளிப்படுத்த இயலாத அமிழ்ந்து போதல். ஒவ்வொரு மனிதனின் வாழ்தலும் மரணத்திற்கான பல நிலை விளக்கங்கள்தாம் என்பதாகவும் தோன்றுகிறது. நம் பகட்டான அறிதல்களுக்கு அப்பாற்பட்ட மிக எளிதான உண்மையாகக்கூட அது இருக்கலாம்’’

“பிரபஞ்சத்தின் மிகப் பெரிய சாபம்தானே நாமெல்லாம்? மனிதனில்லாத பிரபஞ்சம் களங்கமற்றதல்லவா? ‘’ என்றுகூட ஒரு முறைக் கேட்டிருக்கிறார். தன்னுள் உறைந்திருக்கும் நோயைப்பற்றி கணேசன் என்னிடம் பேசியதாகவும் நினைவிலில்லை. முன்னறிவிப்பற்று அது திடீரென்று அவரைத் தாக்கியிருக்கிறது. ஒரு நாள் நான் உங்களது கவிதைத்தொகுப்பு ஒன்றை வைத்திருந்ததைக் கண்டு அவர் திகைத்தார். எதேச்சையாக எவ்வளவு சம்பவங்கள் நடந்துவிடுகின்றன; ஒரு புனைவு போல! அப்போதுதான் உங்களைத் தன்னுடைய நண்பர் என்று சொன்னார். சகமாணவர்களாகக் கல்லூரியில் படித்தது, இலக்கிய ஈடுபாடு குறித்தெல்லாம் சொன்னார்.

தற்கால எழுத்துக்கள் குறித்து அவருக்குக் கடுமையான விமர்சனங்கள் இருந்தன. டால்ஸ்டாயின் மேல் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த அவருக்கு இந்த நவீன எழுத்துக்கள் பக்குவமற்றதாகவும் அரைவேக்காட்டுத்தனம் கொண்டதாகவும் தோன்றியதில் வியப்பேதுமில்லை. உங்கள் கவிதைகள் குறித்துக்கூட அவருக்கு நல்ல அபிப்ராயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் நீங்கள் வருத்தப்படமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அவருடைய விமர்சனம் எப்போதும் இப்படித்தான் இருக்குமென்று உங்களுக்குத் தெரிந்ததுதானே.

சமீப காலங்களில் அவர் திருவண்ணாமலை வந்து சென்றதன் காரணம் நீங்கள் அறிந்ததா என்பது எனக்குத் தெரியவில்லை. அவருடைய ஆன்மீக ஈடுபாடு அவரை மார்க்ஸிஸ்டாக அறிந்த உங்களுக்கு அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம். திருவண்ணாமலையில் தங்குவதுதான் அவருக்கு வழக்கம். அங்கே அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள். வீட்டுக்குப் போகாமலேயே இரண்டு மூன்று வாரங்கள் அங்கே இருந்து கொள்வார். மரணம் சம்பவித்தபோது அவருடன் இருந்தது கண்ணன் என்ற நண்பர்தான். அவருடன்தான் கணேசன் தங்கியிருந்தார். நோய் கண்டவுடன் மருத்துவமனையில் சேர்த்ததும், உடனிருந்து பார்த்துக்கொண்டதும் அவர்தான். மரணம் நேர்ந்ததும் காரில் ஏற்றிக்கொண்டு போய் அவர்தான் வீட்டில் சேர்த்திருக்கிறார். அவருடன் சில நண்பர்களும் உடனிருந்து உதவியிருக்கிறார்கள். அவருடைய வீட்டுக்கத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பிறகுதான் அவருடைய மச்சினன் வந்து உடலை எடுத்துச் சென்றிருக்கிறான்.

தனது குடும்பத்தைப் பற்றி கணேசன் அதிகம் பேசி நான் கேட்டதில்லை. அவருக்கு மனைவியும், ஒரு பையனும் உண்டென்பதைத் தவிர வேறு எந்த தகவலையும் அவர் பேச்சிலிருந்து அறிந்ததில்லை நான். இது எனக்கு வியப்பாகவும் இல்லை. காரணம் அவர் குடும்பத்திற்கு வெளியே உள்ள நபர் என்பது போன்ற தோற்றந்தான். கம்ப்யூட்டரில் ஆழ்ந்த ஞானம் இருந்த அளவுக்கு அதைக் காசாக்கும் விஷயத்தில் அவருக்கு அதிக நாட்டம் இருந்ததில்லை. சொற்பமான ஒரு தொகையை மட்டுமே எதிர்பார்த்து அந்த வேலையைச் செய்துகொண்டிருந்தார். அவருடைய இந்தக் குணம் பலருக்குச் சாதகமாக இருந்திருக்கிறது.

கம்ப்யூட்டர் மட்டுமல்ல வேறு தொழில் நுட்பம் குறித்தும்கூட அவருக்கு மதிப்பேதுமில்லை. “எல்லாவற்றிற்கும் விடைகள் இந்த கம்ப்யூட்டரில் ஒளிந்திருப்பது போல கற்பிதம் செய்துகொண்டு, நமது நாகரீகத்தை முன்னெடுத்துச்செல்லும் பொறுப்பை இதனிடம் ஒப்படைத்திருக்கிறோம்; அறிவின் பொக்கிஷமாகக் கொண்டாடுகிறோம். நம் நாகரீகத்தைப் போலவே இதற்கும் ஆன்மா இல்லை. இது வெறும் ஜடம்; தர்க்க விளையாட்டு, தற்காலிக பவிஷு’’ என்று சொல்வார். விஞ்ஞானத்திற்கெதிரான அவருடைய இந்தப் பரிகாசம் என்னை முதலில் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இதையே தொழிலாகக்கொண்ட ஒருவர் இப்படி சொல்வது யாருக்குத்தான் முரணாகத்தோன்றாது? நோக்கங்களும், திட்டங்களும், எதிர்பார்ப்புகளுமற்ற அவருடைய வாழ்க்கை என்னைச் சில சமயம் அச்சம் கொள்ளச் செய்திருக்கிறது. அதிகம் எழுதி உங்களைச் சலிப்படையச் செய்கிறேனோ தெரியவில்லை. கணேசனைப் பற்றி உங்களுக்கு எழுதுவது மேலும் சில தெளிவுகளுக்கு இட்டுச்செல்லும் என்ற ஆர்வம்தான் இதற்குக் காரணம்.

ஒரு நாள் தாமதமாகவே சாவு நிகழ்ந்த வீட்டிற்குக் சென்றேன். அங்கே போவது அதுதான் முதல் முறை. அறிமுகமற்ற அவருடைய பந்துக்கள் அங்கே இருப்பார்கள் , அவர்களுடன் எப்படிப் பேசுவது, அவருடைய மனைவியை எப்படிக் காண்பது, என்னை எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வது என்றெல்லாம் சங்கடமாகவும், தயக்கமாகவும் இருந்தது. எங்களுக்குள் உண்டாகியிருந்த நட்பையும், அவருடைய மரணத்தினால் நான் அடைந்திருக்கும் துயரத்தையும் எப்படி அவர்களுக்கு உணர்த்துவது? அங்கு சென்று வந்ததன் நினைவு இன்னும் பனிமூட்டம் போலக் கலையாது நின்றிருக்கிறது. ஏதோ மேலும் பாரத்தைச் சுமந்துகொண்டு வந்துவிட்டதுபோல ஒரு தெளிவற்ற உணர்வு. இதுதான், இப்படித்தான் என்பதுபோல முடிவாக இல்லாமல் ஒரு கதையைப் போலத்தான் அங்கு நடந்தவைகளைச் சொல்ல முடியும் என்று தோன்றுகிறது.

கணேசன் சாருடன் பழகிய காலங்களில் ஒருமுறைகூட அவருடைய வீட்டுக்கு நான் சென்று பார்த்ததில்லை. அநேக நாட்களை அவர் வெளியிலேயே கழித்தார் என்பதால் அதற்கு அவசியமே நேரவில்லை. வ.உ.சி. சாலை என்பது அந்த பகுதியிலிருக்கும் பிரதான சாலை. அதில் வலது பக்கம் நகராட்சிக்குச் சொந்தமான ஒரு பள்ளியை ஒட்டிக் கிளைவுறும் தெருவில் சென்றால் இடது பக்கமாக மூன்றாவது தெரு சர்ச் தெரு. அதே இடது வரிசையில்தான் அவருடைய வீடு. ஒரு வேளை நீங்கள் அங்கே செல்வதாக இருந்தால் இக்குறிப்புகள் உதவும் என்று நினைக்கிறேன்.

அந்த வழியாகப் போகும்போது, கையில் சூட்கேஸுடன் கணேசன் சார் எதிர்வருவாரோ என்ற பிரமை இருந்துகொண்டே இருந்தது. தேநீர் பிரியரான அவர் அங்கிருந்த தேநீர் விடுதி ஒன்றில் உட்கார்ந்திருக்கப்போவதாக ஒரு எதிர்பார்ப்பு.

அந்த காம்பவுண்டுக்குள் நான்கைந்து வீடுகள். கணேசன் சாரின் வீடு எதுவென்று தயங்கி நி¢ன்றுவிட்டேன். சாவு நிகழ்ந்ததற்கான அடையாளம் எதுவும் அங்கே தென்படவில்லை. வதங்கிய பூக்கள் சிலதைத் தெருவில் காண நேர்ந்ததுபோல இங்கே எதுவும் இல்லை; எல்லாவற்றையும் துடைத்து எறிந்து விட்டிருக்கிறார்கள். கையில் பால் பாக்கட்டுடன் என்னைக் கடந்து போன ஒரு பெண்ணை அவசரமான என் கேள்வியால் நிறுத்தினேன்.

“கணேசன் சார் வீடு...?’’ நின்று திரும்பியவள் என்னை வியப்புடனும், அக்கறையுடனும் கவனித்து நோக்கினாள்.

“வாங்க.’’

அழைத்துவிட்டு முன்னால் நடந்தாள். அடுத்தடுத்திருந்த கதவுகளை விடுத்து கடைசியை நோக்கிப் போனாள். கணேசனுக்கு உறவுக்காரப் பெண்ணாக இருக்கலாம். மரணத்தின் துயரம் அவள் மேல் படர்ந்திருந்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை பக்கத்து வீட்டுப் பெண்ணாக இருக்கலாம்போல் பட்டது. கடைசி கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போய் மறைந்தாள் அவள். நான் வெளியே நின்றேன். ஏன் என்னை உள்ளே அழைக்காமல் இப்படி விட்டுச்சென்றாள் என்ற குழப்பம். உள்ளே சட்டென்று ஒரு அமைதி. சிலர் பேசிக்கொண்டிருந்திருக்க வேண்டும். குழந்தைகளின் பேச்சுக்கள், கேரம் காய்களின் சப்தம் எல்லாம் நின்று போனது மாதிரி ஒரு கவனம்.

“யாராம்?’’ ஒரு வயதான பெண்ணின் குரல் கேட்டது. அந்தப் பெண் திரும்பவும் வெளியே வந்து, “உள்ள வாங்க" என்றாள். உள்ளே ஒரு வரவேற்பறை. அதை ஒட்டி இரண்டு அறைகள். பெண்கள் சிலர் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். இரண்டு மூன்று சிறுவர்கள். ஆண்கள் யாரும் இல்லை. நடுங்கும் குரல் கொண்ட அந்த வயதான பெண் மட்டும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். இடுப்பில் மட்டும் ஒரு துணி உடுத்தி மேல் பக்கம் திறந்திருந்த அவள் உடல் முதுமையின் குழந்தை தன்மையில் சரிந்துகொண்டிருந்தது. அவள் அழத்தொடங்கினாள். அவள் கணேசன் சாரின் தாயாராக இருக்க வேண்டும். வேறு இருக்கைகள் எதுவும் அங்கே காணப்படவில்லை. என்னை அழைத்துச்சென்றவள் உள்ளேயிருந்து ஒரு ஸ்டீல் நாற்காலியைக் கொண்டுவந்து போட்டாள். நான் உட்கார்ந்தேன். அந்த பெண்ணிடம் கேட்டேன்,

“அவரோட மனைவி?’’

“இவங்கதான்.’’

சுவரோரம் உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணைச் சுட்டிக் காட்டினாள். அவள் அழத் தொடங்கியிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் நின்றிருந்த ஒரு சிறுவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன்தான் கணேசனின் மகனாக இருக்க வேண்டும். அவருடைய சாயல் எதுவும் அவனிடம் காணப்படவில்லை. அவனுக்கு அருகில் கேரம் போர்டு ஒன்று சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. கீழே தரையில் காய்கள் இறைந்து கிடந்தன. கிழவியின் அழுகை தணிந்திருந்தது. நான் அந்தப் பெண்ணைப் பார்த்துச் சொன்னேன்,

“நான் திருவண்ணாமலை பக்கமிருந்து வருகிறேன். இன்று காலையில்தான் எனக்கு விஷயம் தெரியும்...இரண்டு நாட்களுக்கு முன்புதான் என்னைப் பார்க்க வந்திருந்தார்...நம்பவே முடியவில்லை... நன்றாகத்தான் இருந்தார்... இதற்கு முன்னே இப்படி எதுவும் வந்திருக்கிறதா...?’’ பதில் எதுவும் சொல்லவில்லை. என்னையே வெறித்துப்பார்த்துவிட்டு கீழே குனிந்துகொண்டாள் அவர் மனைவி. இதை அவள் கேள்வியாகக் கருதவில்லைபோல் பட்டது. எனக்கே சொல்லிக்கொள்வதுபோலச் சொன்னேன், “முதல் அட்டாக்கிலேயே இப்படி ஆகுமென்று யாரும் எதிர்பார்க்கவேயில்லை. ஆஸ்பத்திரியில்கூட நன்றாகக் கவனித்துக் கொண்டதாகத்தான் சொன்னார்கள்.’’

எனக்குச் சமீபமாக உட்கார்ந்திருந்த ஒரு பெண் எழுந்து சமையலறை பக்கம் போனாள். இன்னொரு பெண் வெளியே வந்து என்னைக் கவனித்தாள். காஃபியின் மணம் வீடு முழுக்கப் பரவிக்கொண்டிருந்தது. “எனக்கு இது பெரும் இழப்பு, அவர் இல்லாதது ஏதோ இருள் சூழ்ந்ததுபோல இருக்கிறது.’’ ஏன் இதைச் சொன்னேன் என்றுத் தெரியவில்லை. ஏதோ ஒரு நாவலின் வரிபோல அசட்டுத்தனமாகக்கூடப் பட்டது. என் கண்கள் கலங்கியது; கட்டுப்படுத்த முடியாது துக்கம் வெளிப்பட்டது. அந்தச் சிறுவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். கீழே தரையில் உட்கார்ந்திருந்த ஒரு சிறுமி கேரம் காய்களை விரல்களால் சுண்டிக்கொண்டிருந்தாள். கர்ச்சிப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டேன்.

சுவரில் ஒரு வயதானவரின் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. அதையே கவனமற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது கணேசன் சாரின் தந்தையாக இருக்க வேண்டும். சாருடைய புகைப்படம் எதுவும் அங்கே காணவில்லை. இதற்குமேல்தான் ஏதோ ஒரு படத்தைப் பெரிதாக்கி அங்கே மாட்டிவைப்பார்கள். மாலை அணிவிப்பார்கள். இனி பேசுவதற்கு ஏதுவுமில்லை எனத் தோன்றியது. அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அவர்களும் ஏதோ ஒரு முடிவிற்குக் காத்திருந்ததுபோலத் தெரிந்தது. அந்தச் சிறுவன் அமைதியற்று காணப்பட்டான். அவ்வளவுதான்; புறப்பட வேண்டிய கட்டம் வந்துவிட்டதை உணர்ந்தேன்.

“நான் கிளம்பறேன்’’ என்றேன் அந்த பெண்ணிடம். அவள் ‘சரி’ என்பது போல நின்றாள். கீழே குனிந்தவாறிருந்த அவர் மனைவியோ அவ்வண்ணமே இருந்தாள். நான் எழுந்து வெளியே வந்தேன்; இருள் கவியத் தொடங்கியிருந்தது. தெருவில் இறங்கி நின்றேன். எப்பக்கமிருந்து வந்தேன் என்று ஒரு திகைப்பு. அங்கிருந்து வந்ததிலிருந்தே மனம் சோர்வு கண்டதுபோல இருக்கிறது. இந்தச் சம்பவத்தை ஒட்டிய எது என்னை இப்படி ஆக்கியது என்பதுதான் விளங்கவில்லை. அவரை இழந்து விட்டோம் என்பதற்கு அப்பாற்பட்டு நான் எதிர்கொள்ள நேர்ந்த வேறு விஷயங்களாக இருக்கலாம். கணேசன் சாரைப் பற்றி உங்களை நேரிலும் பார்த்து பேசவேண்டும் என்ற விருப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது வருகிறேன். அவசியம் கடிதம் எழுதுங்கள்.

நட்புடன்,
பா. சீனுவாசன்


நண்பர் சீனுவாசன் அவர்களுக்கு,

உங்கள் கடிதம் கிடைத்தது. கணேசனைக் குறித்த உங்கள் அக்கறை உண்மையிலேயே என்னை வியப்படையச் செய்கிறது. உங்கள் நட்பை மதிக்கிறேன். இறந்து போகும் ஒவ்வொரு மனிதனும் வாழ்வு குறித்தான பல கேள்விகளை விட்டே செல்கிறான். இவைகள்தான் வாழ்பவர்களுக்கு விளங்கிக்கொள்ள முடியாத புதிர்களாக மிஞ்சுகின்றன. இந்தப்புதிர்களுக்குள்தான் நீங்களும் சிக்கிக்கொன்டிருப்பதுபோலவும் தோன்றுகிறது. கணேசனைப் பற்றிய உங்கள் நம்பிக்கைகள் பாசாங்கற்றவை என்பது புரிகிறது. இதுதான் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான சங்கடத்தையும் உருவாக்குகிறது. இறந்துபோன ஒரு மனிதனைக் குற்றம் சாட்டுவதை நம் மனம் எப்போதும் ஒப்புக்கொள்வதில்லை. மரணம் அவனுடைய எல்லாக் குற்றங்களையும் மன்னித்து விடுகிறது.

நாம் சிந்திக்கிறோம் என்பதாலேயே சராசரி உணர்வு நிலைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்துவிட முடிவதில்லை. மனிதனின் மேன்மைகளோ, கீழ்மைகளோ எப்போதும் ஒப்பிடப்படுவது கடவுள் தன்மையோடுதான். கடவுள் தன்மையோ நிர்ணயித்துக் கூற முடியாத அடிப்படைகளால் ஆனது. கணேசன் ஒரு காலத்தில் மார்க்சிஸ்டாக இருந்தது எனக்குத் தெரிந்ததுதான் என்று எழுதியிருந்தீர்கள். மார்க்சியப் புத்தகங்களை அவன் ஆர்வமுடன் படித்தான் என்பது எனக்குத் தெரியும். மார்க்சிஸ்டாக இருந்தானா என்பதில்தான் பிரச்சினை இருக்கிறது. நானும் ஒரு கட்டத்தில் அவற்றைப் படித்துக்கொண்டிருந்தேன் என்றாலும் என்னை என்றைக்கும் மார்க்சிஸ்டாகக் கருதிக்கொண்டதில்லை; என்னால் இருக்கவும் முடிந்ததில்லை.

கணேசனை குடும்பத்திற்கு வெளியே உள்ள நபர் என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அவனுடைய குடும்பத்தைப் பற்றி எனக்கு ஓரளவு அறிமுகம் உண்டு. பெண்களைவிட ஆண்கள் மேல் ஈர்ப்பு கொண்ட அவனுக்குக் குடும்பம் நிறைவைத் தராதது ஆச்சர்யம் ஒன்றுமில்லை. இந்த உண்மை உங்களுக்கு அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். எங்களுக்கிடையிலான நட்பு பிளவுபட்டதற்கு அவனுடைய இத்தகைய போக்குதான் காரணம். என்னிடமே அவன் காட்டிய அத்துமீறல் இன்றைக்கும் எனக்கு அச்சமூட்டுகிறது. அவனுடைய எதிர்பார்ப்புக்கு உரியவனாக நான் இல்லை. அப்போதிருந்தே என்னை அவன் காணவருவதில்லை. என்னைப்பற்றியும், என் கவிதைகளைப் பற்றியும் அவன் அவதூறுகளைப் பரப்பிவருவதும் இதனால்தான்.

ஒரு வரியைக்கூட எழுதிப்பார்க்காத சிலர் இப்படி மேதாவித்தனமாக உளறிக்கொண்டிருப்பது சகஜமான விஷயம்தான். ‘பிரபஞ்சத்தின் சாபம் மனிதன்’ என்ற அவனுடைய பிரகடனம் ஆர்ப்பாட்டமானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? மனிதனின் உடல், அறிவு, அட்டூழியங்கள் எல்லாமே பிரபஞ்சத்தை உள்ளடக்கியதுதான். வேறொரு பிரபஞ்சத்திலிருந்து வந்தக் கலகக்காரர்கள் அல்ல மனிதர்கள். காலம்காலமான மனிதர்களின் தேடலும், உழைப்பும், கண்டுபிடிப்புகளும், வியர்த்தமானது என்றால்; மனிதனையே மறுக்கும் கூற்றல்லவா இது! மனித அறிவை நெறிப்படுத்த முடியாமல் போய்விட்டதுதான் பெரிய துரதிர்ஷ்டம்.

நீங்கள் மதிக்கும் அவனுடைய ஆன்மீக ஈடுபாடு நம்பகமானதுதானா என்று எனக்குத் தெரியவில்லை. கடைசிக் காலத்தில் கடவுள் பற்றி அவன் என்ன சொல்லிக்கொண்டிருந்தான்? ஒரு காலகட்டத்தில் கணேசனைப் போல் பகுத்தறிவுக்காரர்களாகவும், மார்க்சிஸ்டுகளாகவும் தங்களைப் பறைசாற்றிக்கொண்டவர்கள் ஒன்றும் செய்ய இயலாத துன்பம் வரும்போது மீண்டும் இந்த நிலைகளுக்குள் போய் சிக்கிக் கொள்வது நடந்துகொண்டிருக்கக் கூடியதுதான்.

கணேசனைப்பற்றிய இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஏதோ பகை உணர்வில் எழுந்ததல்ல. இந்தப் பகையைப் பாராட்டும் நோக்கமும் எனக்கில்லை. மனிதர்களின் முரண்பட்ட தன்மைகளை, புதிரான இந்தச் செயல்பாடுகளை உங்களுக்குத் தெளிவுபடுத்தவே இவற்றைச் சொல்ல நேர்ந்தது. மேலும் நட்பு என்பது தூய்மையான குணங்களால் மட்டும் கட்டமைக்கப்படுவதல்ல என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளத்தான்.

கணேசனின் வீட்டிற்குச் சென்றுவந்ததைப்பற்றி எழுதியிருந்தீர்கள். உங்களைக் கண்டதும் அழுது ஆர்ப்பாட்டத்துடன் தங்களின் துக்கத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள் இல்லையா? அவனுடைய மரணம் குறித்து அவர்கள் காட்டிய மௌனம் உங்களை அதிர்ச்சியுறச் செய்திருக்கிறது. சில பொழுது குடும்பம் இயல்பாகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டுவிடுகிறது. அந்தக் குடும்பத்திற்கு கணேசனால் ஆனது என்ன என்பது உங்களுக்குத் தெரியாததாலேதான் இந்தக் குழப்பம். ஒரு கட்டத்தில் அவனிடம் இல்லாத பழக்கங்களே இல்லை.

வாழ்வின் உச்சபட்ச சுகித்தல் என்னவென்று அவன் தேடிக்கொண்டிருந்தான். இதிலிருந்து அவன் மீண்டு வெளிவந்தபோது குடும்பம் அவனைவிட்டு விலகிப் போயிருந்தது. தான் தனிமைப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த பிறகுதான் கடவுளைத் தேடி அவன் திருவண்ணாமலைக்கு வந்தது எல்லாம். மேலும் இதுபற்றி நாம் சந்திப்பது, பேசுவதெல்லாம் அவ்வளவு முக்கியமென்றும் எனக்குத் தோன்றவில்லை. இதற்காக நீங்கள் பெரிய முயற்சி எதையும் மேற்கொள்ளத் தேவையில்லை என்றும் படுகிறது. அவசியமானால் கடிதம் எழுதுங்கள்.

அன்புடன்
அர்ஜுனன்

- ஜீ.முருகன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com