Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
வைத்தியனின் கடைசி எருமை
எழில் வரதன்

ஆங்கார ரூபத்துடன் ஓங்காரமாய் விழி உருட்டி ஓங்காளியம்மன் ஒரு சின்ன கண்ணாடிச் சட்டத்திற்குள் அழகாய் நின்றாள். அந்த ஓங்காளியம்மன் முன் மண்டியிட்டு வேண்டிய கறுத்த நிறத்துக்காரனின் பெயர் ஓங்காளியப்பன். அவனுடைய பாட்டி பெயரும் ஓங்காளியம்மா தான். குலதெய்வத்தின் பெயரை வழிவழியாய் வைத்துக்கொண்டு பரம்பரையின் கொடித் தடமாய் வேரோடிய ஓங்காளியப்பனுக்கு ஓங்காளியம்மாவின் மேல் (பாட்டி ஓங்காளியம்மா இல்லை, சாமி ஓங்காளியம்மா) அப்படி ஒரு நம்பிக்கை!

ஓங்காளியப்பன் மண்டியிட்டு, “மகமாயி... உனக்கு இந்த நோம்பிக்கு ஒத்த எருமைக்கிடாய ஒத்த வெட்டுல பலிபோட்டுத் தாரேன். உன் எல்லைய விட்டு போறேன்னு சொல்லுற எம்மகன தடுத்து நிறுத்து தாயீ... அவன் அடிபட்டு நொண்டிகிட்டே வந்தாலும் சரிதான். அவன் போற ரெயிலு பொட்டிங்கள நெருப்புப் பொட்டியாட்டம் உருட்டி விடு.” என்று வேண்டிக்கொண்டான்.

மகன் நொண்டியடிக்கட்டும் என்று வேண்டி மண்டியைக் கலைத்துக்கொண்டு எழுந்து நின்ற ஓங்காளியப்பன் குள்ளமாக இருந்தான். வாய்க்கு கீழ் நான்கு விரக்கடை அளவு தாடி இருந்தது. புகையிலை எச்சில் சிங்கப் பல்லின் துவாரம் வழியாக சிந்தியது. அதை தன் இடுப்பு சோமத்தால் துடைத்து தன் தலைக்குக் கட்டிக்கொண்டான். ஓங்காளியம்மா எப்படியும் ரெயில் பொட்டிகளை கவுத்துடுவா என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டு எருமை மந்தைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டு போனான்.

திம்மன் என்று பேர் கொண்ட அந்த மகன் சொத்தை சொல்லை இல்லாமல் நல்ல மகன்தான். என்ன, சொல் பேச்சை கேட்கமாட்டான். அடங்காத அறிவாளியாட்டம் பேசுவான். வில்லங்கமில்லாம இருந்த அவனுக்கு வைத்தியன் படிப்பின் மேல் ஆசை வந்ததில் இருந்து இந்த சொல் பேச்சுக் கேட்காத கிறுக்கு பிடித்துக்கொண்டது. படிக்க போவேன் போவேன் என்று அடம் பிடிக்கிறான்.

பன்றியைப் போல பல பெற்றிருந்தாலும் பரவாயில்லை, ‘நாலு பிள்ளையில் எனக்கொன்று பசித்த நாயே உனக்கொன்று’ என்று விட்டிருக்கலாம். பெற்ற பிள்ளையே ஒன்று. அதுவும் அநியாயத்திற்கு கஷ்டப்பட்டு வேர்வை சிந்திப் பெற்றது. அந்த வேர்வை சிந்திய விலாவரியை நினைத்ததும் வெட்கம் வந்து, தலையைக் குனிந்து இரண்டு கையாலும் உச்சந்தலை மயிற்றை வருக் வருக் என்று சொறிந்து கொண்டே சிரித்தான் ஓங்காளி. கூச்சப்படும்போது தலை சொறிந்து கொள்வது ஓங்காளி பழக்கம்.

ஓங்காளியப்பனுக்கு நாற்பது வயதுவரை தெரிந்ததெல்லாம் எருமைகள்தான். தெரிந்த தொழில் எருமை மேய்ப்பது. தெரிந்த பாஷை எருமை பாஷை. தெரிந்த சொந்தம் எருமைச் சொந்தம். இது என்ன மாசம் என்று கேட்டால் ‘எருமை வாசம்’ என்பான். இப்படி எருமையே வாழ்க்கையான ஓங்காளியப்பனுக்கு அளவுக்கு அதிகமான பால், சீம்பால், தயிர், மோர், வெண்ணை, நெய், கிடைத்ததுடன் உபரியாக புல், சாணி, வராட்டி, கோமியமும் கிடைத்தது. ஆனால் சொந்த பந்தம் என்று சொல்லிக்கொள்ளத்தான் யாரும் கிடைக்கவில்லை.

காலையில் எருமைகளை மேய்ச்சலுக்கு பக்கத்திலிருக்கும் மலையடிவார புல்தரைக்கு ஓட்டிக்கொண்டு போய் அதுகளை திரும்ப பட்டியில் அடைக்கும்வரை ஒரே எருமை மயம்தான். ஓங்காளியப்பனின் உலகம், ஆகாயம், நட்சத்திரம் எல்லாமே எருமையின் கால், வால், கொம்பு என்று ஆகிப்போனது. எருமையின் நடமாட்டங்களும், சத்தங்களுமே ஓங்காளிக்கு சந்திர, சூரிய, ஆகாச, அண்ட பகிரண்டமாகி விரிந்து இருந்தது.

எருமைகள் விருத்தியடைந்து விருத்தியடைந்து பெருகுவதைப் பார்த்துக்கொண்டேதான் இருந்தான் என்றாலும் நாற்பது வயசுக்குப் பிறகுதான் மனுசர்கள் கல்யாணமெல்லாம் செய்துகொண்டு குழந்தையெல்லாம் பெற்றுக்கொள்வார்கள் என்ற விசயமே ஓங்காளிக்குத் தெரியவந்தது. அக்கம்பக்கத்து தன் வயசு ஆம்பிளைகள் பெற்று அதை பெரியதாக்கிக் கொண்டிருந்த பிறகுதான் விவரம் புரிந்த ஓங்காளி பெண் தேட ஆரம்பித்தான்.

மலட்டு எருமைகளையும், சுழி செத்த குருட்டு எருமைகளையும் ஒன்றிரண்டு வைத்திருந்தவனெல்லாம் கல்யாணம் கட்டி சந்தோசமாய் இருக்க நூறு எருமை வைத்திந்தவனுக்கு பெண் கிடைப்பது என்பது ரெட்டை வால் எருமையின் கருப்புத் தந்தம் கிடைப்பது போல கஷ்டமாய் இருந்தது. ஒவ்வொரு வீட்டுக்குப் பெண் கேட்டுப் போகும்போதும் பெண்ணைப் பெற்றவர்கள் “கண்ணு, இந்த தாத்தாவுக்கு தண்ணி கொண்டாந்து குடு...” என்று பெண்ணிடம் சொல்லி அவமானப்படுத்தினார்கள், அரைக்கிழவன் ஓங்காளி என்னதான் செய்வான்.

இப்படி இருக்க, ஒருநாள் தடமே போன ஒரு கிழவி ஓங்காளியப்பனைப் பார்த்து, “ஏ அசட்டு எருமைக்காரா! நீ நூறு எருமை வெச்சிருந்தாலும் சரிதான். பொண்ணு பாக்க போகும் போதாவது ஒரு நாள் குளிச்சிட்டு, தலைவாரி முகறைக்கு கொஞ்சம் அலங்காரம் பண்ணிட்டுப் போ! மறக்காம பல்லை மண் போட்டு தேச்சிட்டுப் போ” என்றாள்.

அதன் பிறகுதான் ஓங்காளியப்பனுக்கு பெரிய அறிவும் வந்து பெண் அதிர்ஷ்டமும் அடித்தது. வந்து அறிவு சொன்னவள் கண்டிப்பாக கிழவி வடிவத்தில் வந்த ஓங்காளியம்மாதான் என்று எருமைச் சாணி மிதித்து சத்தியம் செய்தான். எதனால் என்றால், வாட்டசாட்டமான இளவயசுப் பையன்களுக்கெல்லாம் முற்றிய முருங்கைக்காய்கள் குச்சிலாய் கிடைக்க நம் முதிர்ந்த ஓங்காளியப்பனுக்கு சமைந்து இரண்டு மாதமே ஆன பதிமூன்று வயது பெண்ணை கல்யாணம் கட்டிக் கொடுத்தார்களே! அதற்காக ஓங்காளியப்பன் பெண்ணின் அப்பனுக்கு ஏழு எருமைகள் சீராக கொடுத்த கதையெல்லாம் தனிக் கதை.

அந்த பதிமூன்று வயதுப் பெண்னுக்கு பத்தொன்பது வயதாகும்வரை குழந்தை பிறக்கவில்லை. ஓங்காளியப்பனின் கல்யாணத்தன்று ஈன்ற எருமைக் கன்றுகள் பெரிதாகி அதுகளும் ஒரு கன்று ஈன்று பால் கறந்து கொண்டிருக்கிறது. வெந்து நொந்து போனான். கோயில் சுத்தலாமா, குளம் வெட்டலாமா, மருந்து தின்னலாமா, மாயம் பண்ணலாமா என்று பலவாறு யோசித்தானே ஒழிய ஒரு விசயமும் செய்யவில்லை. இந்த முறை எந்த கிழவி ரூபத்திலும் ஓங்காளியம்மா வந்து என்ன செய்யவேண்டும் என்று சொல்லாமலேயே ஒரு நாள் பொசுக்கென்று திம்மன் பிறந்தான். எப்படி என்றால், திம்மன் பிறப்பதற்கு ஒன்பது மாசத்திற்கு முன்புதான் எருமையை மேய்ச்சலுக்கு கொண்டு போகவே முடியாதபடி பதினைந்து நாள் விடாது மழை பெய்தது. வேறு வழியில்லாமல் வீட்டோடு தங்கிவிட்டான் ஓங்காளி. அப்படி பதினைந்து நாள் தவமிருந்த பெற்ற பிள்ளைதான் இப்பொழுது சொல் பேச்சைக் கேட்காத கிறுக்கு மகனாக இருக்கிறான்.

மகன் திம்மனை ஒரு பொறுப்பும் திறமையும் மிக்க எருமைக்காரனாக வளர்க்கத்தான் ஆசைப்பட்டான் ஓங்காளியப்பன். அவனும் சின்ன வயதில் எருமை மந்தையை ஒரு வேட்டை நாயைப்போல பாய்ந்து ஓட்டியவன் தான். மேய்ச்சல் விட்டு திரும்பும்போது பருத்த எருமை மீது உட்கார்ந்துகொண்டு ஓங்கி ஒரு பாட்டு பாடி வந்தவன்தான். இரவெல்லாம் எருமை மந்தைகளுக்கு காவலாகத் தூங்கி எருமையின் பாஷைகளை கற்றவன்தான். சொல்ல மறக்கக்கூடாது, ராத்திரித் தீவனம் போட்டுக்கொண்டிருக்கும் போதே அவளுக்கு இடுப்பு வலி கண்டு எருமை மந்தைகளுக்கு நடுவில் பிறந்தவன்தான் திம்மன். ஆக, ஓங்காளியப்பன் செய்த ஒரே தப்பு அவனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியதுதான்.

ராத்திரி பகலாக காகிதத்தில் கிறுக்கிக்கொண்டிருந்த திம்மன் ஒருநாள் வைத்தியனுக்குப் படிக்கப்போகிறேன் என்று புத்தியில்லாமல் சொன்னதும் பையனுக்கு சின்ன வயதில் குடித்த எருமைப்பாலின் மந்தம் இப்பொழுது வேலை காட்டுகிறதோ என்று சந்தேகம் வந்துவிட்டது. காரணம் வைத்தியனின் லட்சணம்தான் ஓங்காளிக்குத் தெரியுமே. இந்த ஊரிலேயே ஒரு வைத்தியன் இருக்கிறான். அரைக்கண் வெளிச்சத்தில், எப்பொழுதும் ஏதாவது ஒரு பொருளுக்காக யார் முன்பாவது நின்று பின்னந்தலையை சொறிந்தபடி இருக்கும் அந்த வைத்தியன் பிறக்கும்போதே பச்சிலையோடு பிறந்தவன் என்று ஊரில் சொல்வார்கள்.

ஊரில் இருக்கும் ஜனங்களுக்கு வரும் என்னவிதமான தெரிந்த தெரியாத வியாதியாக இருந்தாலும் குணப்படுத்துபவனாகவும், பறவை, கால்நடைகளுக்கும் வைத்தியம் பார்த்து வியாதியை சொஸ்தப்படுத்துபவனாகவும் இருந்தான். அதுமட்டுமில்லாமல் சோளிகளை உருட்டி நடந்த, நடக்கப்போகிற நல்லது கெட்டதுகளையும் கண்டு கணி சொல்லும் கணிக்காரனாகவும் இருந்தான். இப்படி சகலமறிந்த வைத்தியக்காரனான அவனே அடுத்தவர் தரும் தானிய, மானிய, தருமங்களில்தான் காலத்தை ஓட்டினான். ஒரு வாய் சோறு வேண்டுமென்றால் ஊரில் எவனுக்காவது பேதியாகக் கூடாதா என்று வேண்டிக் கொண்டான். கால் சொம்பு பால் வேண்டுமென்றாலும் ஓங்காளியப்பன் முன் வந்து ஒடுங்கிய அலுமினிய பாத்திரத்தை நீட்டி பல் இளித்து நின்றான்.

தன் மகன் நூறு எருமைக்குச் சொந்தக்காரன். அவன் போய் வைத்தியனுக்கு படித்துவிட்டு கால் சொம்பு பாலுக்காக அலுமினியப் பாத்திரத்தை நீட்டி பல் இளித்து நிற்பதும் இல்லாமல் ஒரு வாய் சோற்றுக்காக ஆசைப்பட்டு, எவனுக்காவது பேதியாகாதா என்று ஏக்கப்பட்டு நின்றால் அசிங்கமாக இருக்குமே என்று யோசனை செய்த ஓங்காளியப்பன் தன் மகனைக் கூப்பிட்டு, “செத்துப் பொழைக்கிறவன்கிட்ட சோத்துக்கும் சாத்துக்கும் யாசகம் கேக்கற அந்த வைத்தியனாட்டம் ஆகறதுக்குத்தான் நீஆசைப் படுறீயா?” என்று கேட்டான்.

திம்மன் இரண்டு கையிலும் தன் உச்சி முடி பிய்த்துக்கொண்டு கொஞ்சநேரம் பேசாமல் குனிந்து நின்றான். பிறகு சொன்னான், “யப்பா, உனக்கு எப்டி சொல்லி புரிய வெக்கிறதுன்னு தெரியல! நான் காட்டு பச்சிலைய அரைச்சி குடுத்து பச்சரிசிக்கு கையேந்தர வைத்தியன் படிப்பா படிக்கப்போறேன்? ஊசி போடுற வைத்தியன் படிப்பு படிக்கப்போறேன். ஊசிபோடற வைத்தியம் தான் உலகத்தில ஒசந்த வைத்தியன்றது உனக்குத் தெரியாது. நான் படிச்சி வந்ததும் பாரு, ஊரு என்னைய ஊசி போடுற டாக்டருன்னு தலையில வெச்சி ஆடும்.”

ஓங்காளியப்பன் எகத்தாளமாக சிரித்தான். “ஆ, என்னா பெரிய ஊசி? நம்ம எருமை பட்டியில போயி பாரு. ரொய்யினு ஒரே கொசு மொய்க்குது. அதுங்க எல்லாம் ஆளுக்கு ஒரு ஊசியோட தான் சுத்துது. அடித் தொடையில சுருக்குனு குத்துது. அந்த கொசுதான் உலகத்தில பெரிய வைத்தியனா? கொசுவ யாராவது தலையில தூக்கி வெச்சி ஆடுவானா?”

திம்மனுக்கு ஆத்திரமாகிவிட்டது. “யப்பா, நீ வேணுமுன்னு பேசறே. நான் படிச்சிட்டு வந்தா ஊருக்கும் நல்லது; உனக்கும் நல்லது. உன்னை என்னைக்காவது ஒரு நாள் எருமை வயித்தில குத்தி குடலை வெளிய எடுக்கப் போவுது. அப்ப அந்த பச்சிலை வைத்தியன் உன்னை காப்பாத்த மாட்டான். கைய விரிச்சி ஒதட்டைப் பிதுக்குவான். ஆனா, நான் கிழிஞ்ச வயித்த தெச்சி சரியாக்கிடுவேன், தெரிஞ்சிக்கோ”என்று சொன்னான்.

“ஆமான்டா, இத்தனை வருசமா வயித்தைக் கிழிக்காத எருமை இவன் வைத்தியனுக்கு படிச்சதும் கிழிக்கும். கிறுக்குப் பயலே. அப்பனுக்கு அடங்காம படிக்கப்போறீயே... காசுக்கு என்ன செய்வே?” ஓங்காளியப்பனுக்கு எக்கத்தாளம் எகிறிற்று. காசு என்ற ஆயுதத்தை எடுத்ததுமே பதுங்கினான் திம்மன். நைச்சியமாக பேச ஆரம்பித்தான், “யப்பா, சொன்னா கேளு. உன்னோட மகன் பெரிய வைத்தியனா இருக்கிறது உனக்கு பெருமைதானே. நீ காசு தந்தாதானே நான் படிக்க முடியும். ஒரே மகனுக்காக நீ பத்து எருமையை வித்து படிக்க காசு தரமாட்டியா?”

பத்து எருமைகளை விற்பதா? ஓங்காளியப்பனுக்கு எருமை நிறத்தில் உலகம் இருண்டது. திம்மனின் வார்த்தை மலை மீதிருந்து பாறாங்கல்லாய் புரண்டு வந்து எருமை மந்தையை நசுக்கி கூழாக்கியது. என்ன வார்த்தை சொல்லிவிட்டான். ஒவ்வொரு எருமையையும் உருப்படியாக்கி ஒரு மந்தையாக்க ஓங்காளியப்பன் என்ன பாடுபட்டிருப்பான். எத்தனை சுளுவாக சொல்லிவிட்டான். பத்து எருமையை விற்று காசு குடு நான் அதை பாழாக்கி படிக்கப் போறேன்னு.

ஓங்காளியப்பன் ஒன்றும் பரம்பரை எருமைக்காரன் கிடையாது. சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஒற்றை எருமைகூட இல்லாதவனாகத்தான் இருந்தான் ஓங்காளியப்பனின் அப்பன். அவனொரு ஓடுகாலியப்பன். நாலு வயசில் விட்டு ஓடிய அப்பனுக்கு பிறகு ஒன்பது வயசுவரை அம்மா வளர்த்தாள். பிறகு வாய்ச் சோற்றுக்குக் கஷ்டம் வந்ததால் ஒரு பண்ணையக்காரனிடம் ஆள்காரனாக விட்டுவிட்டு எட்டுப்படி சோளம் வாங்கிக்கொண்டு போனவள் இன்றுவரை திரும்பவில்லை.

பண்ணயக்காரனிடம் ஏழு உருப்படி எருமைகள் இருந்தது. அந்த எருமைகளைத்தான் இருபது வயசாகும்வரை ஓங்காளியப்பன் திறமையாக மேய்த்தான்; நல்ல பெயரும் எடுத்தான். ஒருமுறை காரணம் சொல்லாமலே ஒரு எருமை நுரை தள்ளி செத்துப்போனது. பண்ணையக்காரனுக்கு வரக்கூடாத வேகத்தில் கோபம் வந்து ஓங்காளியப்பனை அடிக்கக்கூடாத இடத்தில் எல்லாம் அடித்து துரத்திவிட்டான்.

எருமை மேயும் கரட்டில் தன்னந்தனியாய் அதிர்ந்து போய் இருட்டில் உட்கார்ந்திருந்த ஓங்காளியப்பன் சூன்ய பயத்தில் விரக்தியாய் அழுதான். அவனுக்கு எருமைகளைத் தவிர வேறு சொந்தமோ பந்தமோ தெரியாது. ஒன்பது வயசில் ஏழு எருமைகளாய் ஆரம்பித்த சொந்தம் பிறகு எத்தனையோ எருமைகளாய் பிறந்து வளர்ந்திருக்கிறது; விற்கப்பட்டிருக்கிறது. வெட்டப்பட்டிருக்கிறது. இப்பொழுது தனியாக தவிக்கிறான்.

எருமை இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற எண்ணம் எருமை மேயும் கரட்டில் அன்று இரவுதான் பிறந்தது ஓங்காளிக்கு. அன்றைக்கே தைர்யமாக அந்த பண்ணையக்காரனின் மந்தையில் இருந்து நல்ல திடமான ஏழு எருமைகளை சத்தமின்றி திருடிக்கொண்டு இந்த கண் காணாத இடத்திற்கு வந்து சேர்ந்தான். அந்த ஏழு உருப்படிகள்தான் இன்று எருமை மந்தையாக இருக்கிறது.

பத்து எருமைகளை விற்று காசு தரச்சொல்லி கேட்ட திம்மனுக்கு ஆயிரத்தி முப்பதாவது முறையாக மேற்கண்ட மந்தை வளர்ந்த கதையை கண்ணில் தண்ணீர் வர சொல்லி முடித்த ஓங்காளியப்பன், மிகுந்த இரக்கம் ஏற்படும்படியான குரலில் அவனிடம் கேட்டான், “நீ வைத்தியனுக்கு படிச்சி வைத்தியனாயிட்டா இந்த எருமை மந்தையை யாரு பாத்துக்குவாங்க, சொல்லு?”

தன் அப்பனின் வேதனை எதனால் என்று தெரிந்ததும் மன நிம்மதி ஆகிவிட்டது திம்மனுக்கு. “ஏ யப்பா, இதுதானா யப்பா உன் கவலை? எருமைய யாரு பாத்துப்பாங்கன்ற கவலையிலதான் படிக்க போகாதேன்னு சொன்னியா? நான் வைத்தியனாகி வந்தா அந்த எருமை மந்தைய யாரு பாத்துப்பாங்கன்ற கவலையே நமக்கு இருக்காது” என்றான்.

“எப்படிடா மவனே?”

திம்மன் பொறுப்பாக, “நான் படிக்க போறதுக்காக நீ பத்து எருமைய விக்கப்போறே. பிறகு மாசம் மாசம் செலவுக்கு ரெண்டு ரெண்டு எருமை விக்க வேண்டி வரும். நான் படிச்சி முடிச்சிட்டு வரும்போது மந்தையில ஒரு எருமைகூட இருக்காது. அப்புறம் மந்தைய யாரு பாத்துப்பாங்கன்ற கவலை எப்படி வரும்? என்று கேட்டான்.

ஓங்காளியப்பனுக்கு மொத்த எருமையும் அப்பொழுதே செத்துப்போனது போலாகிவிட்டது. கோபம் வந்து கெட்ட கெட்ட வார்த்தைகளில் முதல் முறையாக மகனை திட்ட ஆரம்பித்தான். சத்தம் கேட்டு திம்மனின் அம்மா ஓடி வந்தாள். கல்யாணம் பண்ணிக்கொண்டு வரும்போது பதிமூன்று வயசுக்காரியாகத்தான் வந்தாள், ஒரே மகன்தான் பெற்றாள், ஆனாலும் திம்மனைவிட கிழவியாகத் தெரிந்தாள். அவள் அப்பனுக்கும் மகனுக்கும் நடுவில் விழுந்து புரண்டு சமாதானம் செய்தாள். அதற்குள் திம்மனின் சட்டை கொஞ்சம் கிழிந்து போய், கழுத்துப்பக்கம் ஒரு நீண்ட நகக் கீறலும் துளி ரத்தமும் வந்திருந்தது.

ஆத்தாளுக்கு மகன் கழுத்தில் நகப் பிராண்டல் ரத்தத்தைப் பார்த்ததும் ஆவேசம் வந்துவிட்டது. அதுவரை தன் மகனிடம் படிக்கப்போகாதே என்று ஓதி வந்தவள் ரத்தத்தை பார்த்து ரத்தம் கொதித்து, “எப்ப எம் மகன் கழுத்தை நீ அறுத்து சாகடிக்க துணிஞ்சியோ அப்பவே நீ அவனுக்கு அப்பனில்ல. அவன் வைத்தியனுக்கு படிக்கப்போவான். நீ தடுத்துப் பாரு தெரியும்!” என்று ஓங்காளி முகத்தை குத்தாத குறையாக கை நீட்டி கத்தி சபதமிட்டாள்.

கை தவறி நகம் பட்டதற்கே கத்தி எடுத்து கழுத்தறுத்ததாக சொல்கிறாள். கொலைகாரன்னு பட்டம் வேற. இன்று தகிறியமாய் எகிறிப் பேசும். இந்த பதிமூணு வயசுப் பொண்டாட்டியை அந்தக்காலத்தில் எகிறி எகிறி அடித்து அடக்கி வைத்திருந்தவன் தான் ஓங்காளியப்பன். இப்பொழுது அப்படி முடியாது. காரணம் வயசாகிப் போனது மட்டுமில்லை. சமீபகாலமாக எங்கே உதைத்தால் கையில் பிடித்து உட்கார்ந்துவிடுவான் ஓங்காளி என்பதை அவள் கண்டுபிடித்திருந்தாள். இனி என்ன செய்தாலும் மகன் படிக்கப் போவதை தடுக்க முடியாது என்பதால்தான் குலதெய்வத்தை நம்பி வேண்டிக்கொண்டு இரவுகூட சாப்பிடாமலேயே படுத்துக்கொண்டான் ஓங்காளியப்பன்.

மறுநாள் விடியலுக்கு முன்பே ரெயிலுக்கு அப்பனிடம் சொல்லாமல் கிளம்பிவிட்டான் திம்மன். வழியனுப்ப பொண்டாட்டியும் போயிருக்கிறாள். கட்டினதும் சரியில்லை, பெற்றதும் சரியில்லை என்று அலுத்துக்கொண்டு பட்டிக்கு போனால் அங்கே பத்து எருமைகள் குறைவாக இருக்கிறது. ஆடிப்போனான் ஆடி. எருமைகளை லவட்டிக்கொண்டு சொல் பேச்சு கேளாமல் படிக்கப்போன மகனையும் துணைபோன பொண்டாட்டியையும் உதைக்க வெறி வந்துவிட்டது. அவர்கள் பக்கத்தில் இல்லாததால் தூரத்தில் நின்ற தென்னை மரத்தை எட்டி எட்டி உதைத்து ஆத்திரமாய் கத்தினான். மந்தை எருமைகளும் ஓங்காளி கத்துவதை ஒருதினுசாகப் பார்த்தன.

திருட்டு மந்தையின் எருமைக் கிடா வேண்டாம் என்பதாலோ, இல்லை தன் சக்திக்கு மீறிய எடையோடு ரெயில் பெட்டிகள் இருந்ததாலோ, என்ன காரணத்தாலோ தெரியவில்லை, அந்த ஓங்காளியம்மா ரெயில் பெட்டிகளை புரட்டிப்போடவில்லை. வேண்டுதலில்தான் காலை வாரிற்று அந்த குலதெய்வம் என்றால் இப்பொழுது மரத்தை உதைத்த ஓங்காளியப்பன் காலையும் வாரிவிட்டது. தடுமாறி பொத்தென்று சுருண்டு கீழே விழுந்து எழுந்து நொண்டி நடந்தான் ஓங்காளி. ரெயில் பெட்டி கவிழ்ந்து நொண்டி அடிப்பான் என்று எதிர்பார்க்கப்பட்ட திம்மன் நொண்டி அடிக்காமல் டவுனுக்குப் போய் வைத்தியன் படிப்பு படிக்க ஆரம்பித்தான்.

பத்து எருமை வித்தா ஆச்சா? மாசமானா பணத்துக்கு என்ன செய்வே? ஏன்று எங்கேயோ இருக்கிற மகனிடம் மனசோடு கருவியபடி வீராப்பாய் இருந்த ஓங்காளியப்பன் தன் எருமைப்பட்டியில் எத்தனை காவல் இருந்தும் மாசம் இரண்டு எருமைகள் களவு போவதை கவனித்து அதிர்ந்தான். மாசம் ஒருமுறை வயிற்றுப் பொக்கு வருவதும், அந்த நாளில் சரியாக எருமைகள் களவு போவதும் அதிசயமாக இருந்தது. பொண்டாட்டியிடம் கேட்கவில்லை. வாய்ப்பேச்சு கிடையாது. எருமைக் களவாணி மகனா? பொண்டாட்டியா புதிராக இருந்தது.

ஒருநாள், கெட்டித் தயிரும், டேக்சா நிறைய சீம்பாலும் வாங்கிய பச்சிலை வைத்தியன் உளறித் தொலைத்ததும்தான் உண்மை தெரிந்தது. “உன்னோட பொண்டாட்டிதான் உனக்கு சாப்பாட்டுல வயித்துப்போக்கு பச்சிலைய கலந்து தந்துட்டு நீ கொள்ளையில இருக்கும்போது எருமைகளை களவாடி விக்கிறா.” என்றான்.

“மகன் படிக்கப்போனதில இருந்து அவ எருமை பட்டி பக்கமே வரதில்லையே... அவ எப்படி களவாடுவா? களவாடினாளும் அவ எங்க போயி எப்படி விப்பா?” என்று ஓங்காளி கேட்டான்.

“என்ன நம்பு. அந்த வயித்துப் போக்கு பச்சிலைய காசுக்கு அரைச்சி அவகிட்ட தந்ததே நான்தான்.” என்றான் வைத்தியன்.

அதன்பிறகு மாசம் முழுசும் அவள் தந்த சாப்பாட்டை சாப்பிடாமல் எருமைப் பாலை மட்டுமே குடித்து வந்தான். எருமைகள் கழிசல் கண்ட ஒரு நாள் இரவில் மனைவி பதுங்கிப் பதுங்கி தரகனோடு வந்தாள். எங்கிருந்துதான் அந்த கோபம் வந்ததோ ஓங்காளியப்பனுக்கு. தரகனையும் அவளையும் போட்டு உதை உதை என்று உதைத்தான். பொண்டாட்டி அம்மா வீட்டிற்கு ஓடிப்போனாள். இது நடப்பதற்குள் மந்தையில் ஐம்பது எருமைகள் குறைந்து போயிருந்தது.

எருமை களவாடி மகன வளக்கிறவ ஆத்தா வீட்டுல கிடக்கிறது தபில்லேன்னு வீம்பா கொஞ்சநாள் இருந்தவனுக்கு மகனுமில்லாமல் அவளும் இல்லாமல் ஒரு தினுசாகிப் போனது. மாசக்கணக்காகியும் மகன் வராமல் இருந்ததால் மகன் நினைப்பு வந்துவிட்டது. ‘எத்தனை சண்டை போட்டாலும் சரிதான், செத்தா கொள்ளி வைக்க மகன் வேணுமே, நூறு உருப்படி எருமைகள் இருந்தாலும் செத்தவனுக்கு ஒரு எருமை கொள்ளி வைக்காதே, கருமம் செய்து கொள்ளாதே. வைத்தியனுக்கு படிச்சாலும் பெத்தது மகன் இல்லாம போவுமா?’ இப்படி ராத்திரி முழுதும் தூங்காமல் யோசிக்க ஆரம்பித்தான்.

மறுநாளே இரண்டு எருமைகளை விற்று காசு எடுத்துக்கொண்டு மகனைப் பார்க்க கிளம்பிவிட்டான். மறக்காமல் குலதெய்வத்திடம் ‘நான் போற ரெயில் பொட்டிகள உருட்டி விட்டுடாதே, சாமி’ என்று வேண்டிக்கொண்டான்.

இந்த முறை எங்கிருந்துதான் ஓங்காளியம்மாவுக்கு அந்த சக்தி வந்ததோ தெரியவில்லை. அவன் போன ரெயிலில் ஆறேழு பொட்டிகளை நாற்பதடி தூரத்திற்கு புரட்டிப்போட்டுவிட்டாள். உடம்பெல்லாம் சின்னச் சின்ன காயத்தோடு வீடு திரும்பியவனிடம் எருமை விற்ற காசைக் காணவில்லை. அது பெரிய துக்கமில்லை. மந்தையில் இருந்த இருபத்தி ஐந்து உருப்படி எருமைகளையும் காணவில்லை. அதுதான் பெரிய துக்கம்.

ஓங்காளி வீடு வீடாகப் போய் கெட்ட கெட்ட வார்த்தையில் ஊரையே திட்டிக்கொண்டு வந்தான். ஊரில் சொன்னார்கள், “நீ ரெயில் ஏறினதும் உன் மகன்தான் வந்து மொத்த எருமைகளையும் வித்துட்டுப் போனான்” என்று.

மனசுடைந்து போன ஓங்காளி அதன் பிறகு அந்த மகன் செத்துத் தொலைந்தால் என்ன என்று கொஞ்சநாள் எரிச்சலோடும், ஒரே மகனாச்சே அவனே செத்தா நான் எதுக்கு உயிரோட வாழனும் என்று கொஞ்சநாள் பாசத்தோடும் மாறி மாறி பிதற்றிக்கொண்டிருந்தான். மகன் எருமை விற்ற வேகத்தைப் பார்த்தால் இனி அவன் ஊருக்கு வரமாட்டான் என்றுதான் தோன்றியது. அவன் வராவிட்டால் சுடுகாட்டுக் கொள்ளி சத்தியமாய் இல்லை. கொள்ளி வைக்காத தன் செத்த உடம்பை நாய் நரிகள் வெட்ட வெளியில் பிய்த்துத் தின்பது போன்ற கனவுகள் வந்து பதறியடித்து எழ ஆரம்பித்தான் ஓங்காளி. எப்படியாவது பெண்டு பிள்ளைகளோடு சமாதானமாக வேண்டுமென்று தீர்மானித்தான்.

ஆனால் இந்த முறை கவனமாக இருந்தான். போன முறை மகனைப் பார்க்கப் போய்த்தான் இருபத்தி ஐந்து எருமைகளை அவன் களவாடினான். இப்பொழுதும் அவனைப் பார்க்கப் போனால் மீதி இருக்கும் இருபத்தி ஐந்தும் களவு போகும். அதனால் முதலில் பொண்டாட்டி ஊருக்குப் போய் அவளை சமாதானப்படுத்தி கூட்டிவந்து பிறகு மகனை அவள் மூலமாக சமாதானம் செய்ய நினைத்து அவள் ஊருக்கு பொட்டி கட்டினான்.

தாய் வீட்டில் அவளைப் பார்த்ததும் கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது. பதிமூன்று வயதுக்காரியாக வீட்டுக்கு வந்தவள் எந்தக் காரணத்திற்காகவும் இந்த எருமைக்காரனை இதுநாள் வரை பிரிந்ததே கிடையாது. கண் தண்ணீரோடு அவளிடம் குமுறினான். “வீட்டுக்காரன் மேலதான் உனக்கு பாசமில்ல, பெத்த மகனையும் பாக்காம எப்படி இருக்கே நீ? அவன் காசு பணம் இல்லாம எத்தனை கஷ்டப்படறானோ. உனக்கு அவனை நெனைச்சா வருத்தமே இல்லயா?”

அவள் சொம்பு நிறைய தண்ணீரை குடிக்க கொடுத்துவிட்டு, “அவன் என்ன வார வாரம் வந்து பாத்துகிட்டுதான் இருக்கான். அவன்கிட்ட காசு பணம் இல்லாம இல்ல. இருபத்தி ஐந்து எருமை வித்த காசு இப்பத்தான் செலவாகி முடிஞ்சதாம். நீ எனக்குத் தந்த நகை நட்டெல்லாம் வித்துத் தந்த காசும் இருக்கு. வெச்சி செலவு செய்வான். வீட்டு, நிலபுலத்து மேல நானே கையெழுத்து போட்டு கடன் வாங்கித் தந்திருக்கேன். அதுவும் செலவாகிப் போச்சின்னு போன வாரம் தான் சொன்னான். இப்ப இன்னும் கொஞ்சம் காசு தேவைப்படுதாம். அதுக்காக மீதி எருமைய விக்கத்தான் அவன் அங்க போயிருக்கான். நீ இங்க வந்திருக்கே” என்றாள்.

இதைக் கேட்டதும் ஓங்காளியப்பன் பொத்தென்று வெறும் தரையில் மயக்கமாகி விழுந்தான். விழுந்த வேகத்திலேயே பதைத்து எழுந்தான். “என் ரத்தத்தை உருக்கி, வேர்வையா சிந்தி, உசிரை விட்டு அந்த மந்தைய உருப்படியாக்கியிருக்கேன். இத்தனை நாள் வாழ்ந்து கடைசிக் காலத்தில ஒத்தை எருமையும் இல்லாத போனா நான் என்ன எருமைக்காரன்? அப்படி ஆயிட்டா எருமை பட்டி நடுவில நான் தூக்குப் போட்டுகிட்டு சாவேன்” என்று சொல்லியபடி தூக்கு மாட்டிக்கொள்ள வசதியாக ஒரு தாம்புக் கயிற்றையும் எடுத்துக்கொண்டு ஊருக்கு ஓடினான்.

அங்கே, சொல்லி வைத்தது போல மொத்த எருமையும் களவாடிக்கொண்டு போயிருந்தான் திம்மன். அதேசமயம், அப்பன் சாகக்கூடாது என்று நினைத்தோ என்னவோ ஒத்தை எருமையை மட்டும் விட்டுவிட்டுப் போயிருந்தான். அதைப் பார்த்ததும் ஓங்காளியப்பனுக்கு ஒரே சந்தோசமாகப் போய்விட்டது. அப்பன் சாகக்கூடாது என்ற மகனின் பாசத்தில் உருகிப்போய்விட்டான். சரி ஆனது ஆச்சி, அவன் படிச்சி முடிச்சி உருப்படாத வைத்தியனா ஊருக்கு திரும்பட்டும். அவனுக்கு இந்த ஒத்தை எருமைய திரும்ப ஒரு மந்தையா மாத்தி அவனுக்கு நான் தரப்போறேன். அதை மேய்ச்சி அவன் பொழைக்கட்டும் என்று ஒரு வைராக்கியத்தோடு உயிர்வாழ ஆரம்பித்தான்.

திம்மன் வைத்தியன் படிப்பு முடிந்து ஒரு ஊசி போடும் வைத்தியனாக ஊருக்கு திரும்பிவந்தான். அவன் வந்ததும் பொண்டாட்டியும் வந்து சேர்ந்தாள். திம்மன் அதுவரை ஊரில் இருந்த சொறி, சிரங்கு, கக்குவான் இருமல், நாள்பட்ட புண் எல்லாவற்றையும் சரிசெய்து கைராசி வைத்தியனாக ஆரம்பித்தான். பழைய பச்சிலை வைத்தியன் செய்ய தொழில் இல்லாமல் நிரந்தரமாக கையேந்தும் நிலமைக்கு வந்துவிட்டான். எல்லா வியாதிக்கும் ஜனங்கள் தன் மகனிடம் ஓடுவதில் ஒரே சந்தோசம்தான் ஓங்காளியப்பனுக்கு. ஆனாலும் ஒரு பெரிய எருமைக்காரனுக்கு பிறந்தவன் கேவலம் ஒரு உருப்படாத வைத்தியனாகப் போய்விட்டானே என்று உள்ளுக்குள் வருத்தமும் இருந்தது.

ஓங்காளியப்பனுக்கும் வயதாகிவிட்டதால் உடம்பு சொன்ன பேச்சை கேட்கவில்லை. ஒற்றை எருமைக்கு பிரசவம் பார்த்து இரட்டை எருமை ஆக்குவதற்குள் மொத்த நாடியும் அடங்கிப் போயிற்று. பிறந்த எருமைக் கன்றும் இறந்து போயிற்று. எருமைக்காரனுக்கும் வயசாகிவிட்டது. செரிமானம் சரியாக இல்லை, எலும்புகள் தேய்ந்து நடக்க சக்கதியில்;லாமல் ஆயிற்று. வைத்தியம் பார்க்க அரைக்கண் வைத்தியனும் தொழிலில் இல்லை.

தன் மந்தையைக் களவாடி வைத்தியனான தன் மகனிடம் வைத்தியத்திற்கு போவதற்கும் அவமானமாக இருந்தது. அடிக்கவோ திட்டவோ முடியாத இயலாமையில் வன்மமும் ஆத்திரமும் அதிகமாகியது. அதனால் உடல் சோர்வு அதிகமாகியது. வேறு வழியில்லாமல் ஊருக்கு நடுவில் மகன் வைத்திருந்த ஆஸ்பத்திரிக்கு ஒருநாள் ஓங்காளியப்பன் போனான்.

அப்பாவை முதல்முறையாக அங்கே பார்த்த திம்மன் ஆச்சரியமாக “வாங்கப்பா” என்றான். ‘வா, யப்பா’ன்னு கூப்பிட்ட மவன் இப்ப ‘வாங்க அப்பா’ன்னு அசிங்கமா கூப்பிடறானே என்ற வருத்தம் ஓங்காளிக்கு வந்தாலும் மகன் தோற்றத்தைப் பார்த்து சந்தோசமாக இருந்தது. வெள்ளை உடுப்பைப் போட்டுக்கொண்டு கண்ணுக்கு தங்க நிற கண்ணாடியும் கையில் கடிகாரம், கழுத்தில் இதயத் துடிப்பு பார்க்கிறதும், ஜெப்பியில் பேனாவும் வைத்துக்கொண்டு ஜோராக இருந்தான். ஓங்காளி நினைத்துப் பார்த்தான், தன் வாழ்க்கையில் ஒருமுறைகூட சொக்காய் போட்டதே கிடையாது. கல்யாணத்தன்றுகூட.

சுற்றிலும் நோட்டம் விட்டுக்கொண்டே மகன் முகத்தை சரியாக பார்க்காமல் மகனிடம் கேட்டான்,

“வெளிய தகரத்தில என்னமோ எழுதி வெச்சிருக்கியே, அது என்ன?”

“டாக்டர் திம்மன். எம்.பி.பி.எஸ்” என்று மகன் மிதப்பாகச் சொன்னான்.

“ஒரு எருமை மந்தையை முழுசாக் களவாடி வித்தது இப்படி தகரத்தில எழுதி வெக்கிறதுக்குத்தானா? கூறு கெட்ட வைத்தியன்கிட்ட வர்றது வயசாளிக்கு தலைவிதி. யம்மாடி சாமி...” அலுத்தபடி உட்கார்ந்தான் ஓங்காளியப்பன்.

கண்கள் உள்ளுக்குள் சுருண்டு, வாய் வறண்டு, பெருமூச்சும் வியர்வையுமாக இருந்தான். அப்பொழுதுதான் அப்பாவின் வயோதிகம் சட்டென உறைத்தது திம்மனுக்கு. பரிதாபமாகப் போய், முதல் முறையாக மன்னிப்பு கேட்கும் தொனியில் “அப்பனோட எருமைய மகன் வித்தா களவாடினது ஆகுமா? நான் மந்தைய வித்து காசை கரியாக்கலப்பா. பொறுப்பா படிச்சிருக்கேன். உங்களுக்கும் ஓய்வு வேணுமில்லையா. அதனால எருமைய வித்ததா வெச்சிக்கோங்க, தப்பா நினைக்காதீங்க.” என்றான்.

மகனின் பேச்சைக்கேட்டு துன்பத்தோடு ஒரு பெரும் சிரிப்பு சிரித்த ஓங்காளியப்பன் “சரி சரி, அது போவட்டும். நீ படிச்ச லச்சணம் எப்படின்னு பாக்கலாம். என் ஒடம்புக்கு முடியல அதுக்கு வைத்தியம் பாரு” என்றான்.

“என்னப்பா ஒடம்புக்கு?” என்று அக்கறையாக கேட்டான் திம்மன்.

“ஒண்ணும் இல்ல... மூத்திரம் போனா வெறும் பச்சைத் தண்ணியா போகுது அதுக்கு என்ன செய்யலாம், சொல்லு!” பரிதாபமாக கேட்டுவிட்டு மகனுக்கு கோபம் பொங்குவதைக்கண்டு கடகடகடவென சிரித்தான் ஓங்காளியப்பன்.

“எருமைப் பால் திமிர் இன்னும் உனக்கு அடங்கல இல்ல. நான் அடக்கிக் காட்டறேன் பாரு.” என்று சத்தம் போட்டான் திம்மன்.

பையனிடம் இருந்த கோபத்தை, வன்மத்தை ஒரே ஒரு இடக்குப் பேச்சின் மூலம் தீர்த்துக்கொண்ட திருப்தியில் மிதந்து நடந்த ஓங்காளியப்பன் வீடு வீடாகப் போய் “எம் மகன் ஒரு ஊசி போடற பெரிய வைத்தியன் தெரியுமா? நீ ஊசி போட்டுகிட்டியா?”என்று கேட்டுவிட்டு எருமைப் படிட்டிக்கு திரும்பினான்.

அங்கே... பட்டியில் இருந்த கடைசி ஒற்றை எருமையும் கடைசியில் களவு போயிருந்தது. “பையனை இடக்கா பேசினியா? அவன் கோவமா வந்து இருந்த ஒரு எருமையையும் பாதி வெலைக்கு வித்துட்டான்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, எருமைக்காரனை கல்யாணம் செய்து பிள்ளை பெற்ற அந்த பதிமூன்று வயசுக்காரி பற்கள் உதிர உதிர கிழவியாகிக் கொண்டிருந்தாள்.

பலப்பல கன்றுகள் பிரசவமாகி விழுந்த அந்தத் தொழுவத்தில், சாணமும் கோமியமும் தன் வாழ்வும் சந்தோசமும் ஊறிக்கிடந்த அந்தத் தொழுவத்தில் நட்ட நடு மத்தியில் தன் மந்தையின் கடைசி எருமையாக சிரித்துக்கொண்டே சரிந்து விழுந்தான் ஓங்காளியப்பன். பிறகு கடைசிவரை அவன் எழவேயில்லை.

டவுனுக்கு புலம் பெயர்ந்த டாக்டர் திம்மனின் மகள் பாட்டியிடம் கேட்டாள் “எருமைக்கு எத்தனை கொம்பு பாட்டி?”

எருமைக்காரனோடும் எருமைகளோடும் அத்தனை வருசம் வாழ்ந்திருந்தாலும் மனுசருக்கு இருப்பதுபோல எந்த எருமைக்கும் மேல் முன்னம் பற்கள் கிடையாது என்ற உண்மையே கடைசிவரை தெரிந்துகொள்ளாத எருமைக்காரனின் பெண்டாட்டி “இதுகூட தெரியலையா? இரண்டு” என்றாள், எருமைகளைப் பற்றி தனக்கு எல்லாமே தெரியும் என்ற நினைப்பில்.

- எழில் வரதன்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com