Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
சவரக்கத்தி
தீபம் முத்து

கண்களுக்குப் புலப்படாமல் புளிய மரத்தின் நிழல் மேற்கு நோக்கி நீண்டுகொண்டிருந்தது. மரத்தின் தூரில் குவித்து வைக்கப்பட்டிருந்த முடியெல்லாம் ஒன்றோடொன்று பிணைப்பு விடுத்து காற்றால் புரட்டி பறக்கவிடப்பட்டுக் கொண்டிருந்தது. ஆள்மட்ட உயரக்கணக்கில் கையகல முகம் பார்க்கும் கண்ணாடி புளியமரத்தில் அறைந்த ஆணியில் மாட்டப்பட்டிருந்தது. அதன் ரசக்குறைவு தனது வயதைக் காட்டியது. குத்துக்கல் ஒன்று, குளக்கரையில் போடப்பட்ட துவையல்கல் நீர்வற்ற வற்ற குளத்தின் மையத்தை நோக்கி நகர்வதைப்போல் நிழலின் நகர்வுக்குத் தக்கவண்ணம் நகர்ந்தபடி இருக்கும். புளியமரத்தின் வாது பிரியும் கவனையில் மணலோடு சேர்த்து சருகுகளையும் முடிகளையும் கூட்டிக்கூட்டி பாதியாய்த் தேய்ந்து போன துடைப்பம் ஒன்று சொருகிய நிலையில் இருக்கும். இத்தனை மொத்தமும் சேர்ந்துதான் மாடசாமியின் சவரக்கடை.

Dalit மேலத்தெருவுலே சாகக்கிடக்கிற மனுஷன் மாதிரி கம்புகள் வெளியில் தெரிகிற மாதிரி காட்டிக்கிட்டிருக்கிற ஒடுங்கின ஒத்த குடிசைகளிலிருந்து ஒத்த ஓட்ட சைக்கிளை மிதிச்சுக்கிட்டு கிரிச்சு முரிச்சுன்னு சத்த பரிவாரங்களோட புளியமரம் நோக்கி நகர்த்த ஆரம்பிப்பார் மாடசாமி.

நடுத்தெருவை கடக்கங்காட்டிலும் மனுசன் மனசு பாடாபட்டுப்போகும். "பெரியய்யா வர்ற நேரமாச்சே. ஏடாகூடமா எதிர்ப்பட்டா, ஓட்டிட்டுப்போற சைக்கிளில் இருந்து இறங்கித் தொலையணுமே. அட அதோட தொலைஞ்சாலும் பரவாயில்லை, மனுசன் நம்மைத் தாண்டிப்போறவரை கம்புக்கூட்டுல துண்டைப் பிடிக்கிறதா, இல்லை அந்தக்கையாலெ சைக்கிளை புடிக்கிறதா... இந்த இழவுக்குத்தான் சைக்கிளே வேணாம்னு இருந்தது. தண்டோரா போடுறதுக்காக தெருத்தெருவா சுத்துறானே அப்படின்னே இவங்க சைக்கிளை வாங்கிக்கொடுத்தானுங்க. பெரியய்யா கூப்பிட்ட மாத்திரத்துல போய் நிக்கணும்ல அதனால்தான்னு எனக்கு நல்லா தெரியுமிலே. அட வாங்கிக் கொடுத்த சைக்கிளையாவது நிம்மதியா ஓட்ட விடுறாங்களா? பத்து அடிக்கு ஒரு ஒசந்த சாதிக்காரனா போனா பொசுக்கு பொசுக்குன்னு இறங்குறதும் தாங்கமுடியலடா சாமி" ன்னு தினந்தோறும் நடக்குதோ இல்லையோ பரிச்சையப்பட்டுப்போன தொல்லையிடமிருந்து மாடசாமி அவரின் கடையாகப்பட்ட புளியமரத்தை வந்தடைவார். அவருக்கின்னே யாராவது ஒருத்தனாவது காத்துக்கிட்டிருப்பான். அவர் ராசி அப்படி.

"அய்யய்யோ! நடுத்தெரு காசியாண்டில்லை இருக்கான். நாலணா, அரைக்கா ரூவான்னுதானே எடுப்பான். என்னவோ தொலை. இன்னைக்கு அமைஞ்சது அம்புட்டுத்தான்."

"என்னண்ணே, சவரம் பண்ணிவிடவா?"

"அது ஒண்ணுமில்ல மடையா..."

மாடசாமியின் மனதில் ஏதோ ஒன்று சுருக்கென்று தைத்தது வார்த்தைகள். ஆனாலும் பழகித்தான் போயிருந்தது. சொரணை குறைந்து போய்க்கொண்டிருக்கும் சமயம் "எப்படி பேர் வைச்சான் எங்க அப்பன் மாடசாமின்னு. இவங்க என்னடான்னா, இடம் பார்த்து சுருக்கி மடையன் மடையன்னு கத்திப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக்கிறானுங்க..."
நினைவிலிருந்த சிலிர்த்த பொழுதில் கண்களுக்குள்ளும் காதுகளுக்குள்ளும் வந்தது பேச்சின் தெளிவுறு நிலை.

"தொளி அடிச்சிக்கிட்டு இருந்தேன். கந்தன் அங்கிட்டும் இங்கிட்டும் தழை அள்ளிப் போட்டுக்கிட்டு இருந்தான். சுருக்குன்னு கடுப்பாகிப்போச்சு. கொண்டான்னு நா அள்ளி தெளிச்சேன். இலை தலைய ராட்டி போட்டதில் கிளுவ முள்ளு மாட்டி இருக்கும்போல சனியன் நறுக்குன்னு தச்சுப்புடுச்சி. ஏ! அப்பா...என்னடா இந்தக் கடுப்பு கடுக்குது. வாடா, செத்த முள் வாங்கி வச்சு எடுத்து விடுடா..." சைக்கிளை இடுப்புல சாய்ச்சுக்கிட்டு கேட்டுக்கிட்டிருந்த மாடசாமி கொஞ்சம் மெதுவா நிறுத்தினார்.

தகரப்பெட்டியின் வாயைத் திறந்தார். வழக்கம்போல் பெட்டி மூடித்திறக்கையில் ஒரு நாய்க்குட்டி கத்துவதைப்போல் ஒரு பதத்தை உதிர்த்து வைத்தது. குத்துக்கல்லில் உட்கார்ந்து இருந்தவனைப் பார்த்து, "கல்லுல உக்காந்து இருந்தா சரிப்படாது. கீழ குத்தவைங்க. "

சிம்மாசனத்தை விட்டு இறங்கி உட்காருவதைப்போல் உட்கார்ந்தான். முள்குத்திய வலதுகாலைத்தூக்கும் சமயம் பின்னோக்கி உடம்பு சாய்ந்துவிடாமல் இரு கைகளையும் பின்னோக்கி ஊன்றிக்கொண்டான்.

"எந்த இடத்துல சாமி?"

"அட, அங்கனதான் பார்டா குதிங்காலுல..."

காய்ந்த சேறு பாதம் முழுவதும் ஒன்றும் தெரியாமல் செய்திருந்தது.

"ஆய்...அந்த இடம்தான். அம்மாடியோ...கடுக்குதுடா...பாத்து எடு..."

அவனுக்கென்றே கட்டாயப்படுத்தி சொரக்க வைத்த எச்சிலை எடுத்து அவன் வலி சொன்ன இடத்தில் அப்பி அழுக்கை ஊறவைத்து உள்ளங்கையில் துடைத்தபோது தெரிந்தது, பாப்பா முகத்தில் வைத்த திருஷ்டிப்பொட்டாய் தைத்த முள்ளின் வெளி கரு நுனி.

"கொஞ்சம் ஆழமாத்தான் பாஞ்சிருக்குங்கோ."

இடத்தைக் கண்டித்து முள்வாங்கியை கையில் எடுக்கும் தருணம் கண்பார்வையில் இருந்து விலக்கிடா வண்ணம் முள்நுனியைப் பார்த்தவாறே வலது கையால் டப்பாவில் முள்வாங்கியைத் துளாவினார்.

"அங்கிட்டு இங்கிட்டு கால ஆட்டாதிக சாமி..." மாடசாமியின் வார்த்தை இடைவெளிகளில் காசியாண்டியின் முக்கல் நிறைந்து கொண்டிருந்தது. குதிங்கால் முள்நுனியைச் சுற்றி லாவகமாய் கிளைந்து பிடுங்கல் நிலையை நெருங்கிக் கொண்டிருந்தது. மாடசாமியின் மனதில் கருப்பு உருவம் ஒன்று ஏதோ நிழலாடியது. வெடுக்குன்னு ஒரு பிடுங்கு பிடுங்கி சுருக்குன்னு ஒரு நிமிசம் மூச்சை நிப்பாட்டின மாதிரி நிப்பாட்டிபுடுவோமா? கத்துற கத்த பாத்து நாமளும் தான் கொஞ்சம் சந்தோஷமா இருப்போமே...அந்த நிழலாடிய கருப்பு உருவத்துக்கு தீனி போட்ட மாதிரி, தோளில் கிடக்காமல் இப்போதுகூட அவன்கால் நம்மீதுபட்டு அழுக்கு படக்கூடாதுன்னு மடிமேல துண்டை மடிச்சுபோட்டு வச்சிருக்கமே என்றவாறெல்லாம் அவர் மனதின் உருவம் உசுப்பிவிட்டுக் கொண்டிருந்தது.

இடக்கை வேகமாக முள்வாங்கியின் கிளைவு நாக்கை உள்ளே தள்ளி கிளைவுகளை சுற்றி இருக்கும் சிறு சதைகளை வெட்ட எத்தனிக்கையில் மனதில் சல்லெனப்பட்டது. ஏன் வெட்டணும்? கையாலெ இங்குட்டும் அங்குட்டும் அதக்கி அதக்கி எடுத்துப்புடலாமேன்னு நினைச்சுக்கிட்டிருக்கையிலே கைக்கட்டை விரல்கள் இரண்டும் ஆனந்த நடனமாடுவதாய் சிமினி விளக்கின் திரியில் மண்ணெண்ணெய் ஏறும் லாவகத்தில் வெளியேறி வந்துகொண்டிருந்தது முள்நுனி. மனம் அடங்கிய பாடில்லை. நல்ல சந்தர்ப்பம்தான் கிடைச்சாச்சே, இம்சைபட வைச்சுருக்கலாம்ல என்ற அடங்காப்பிடாரி மனதிடம் பொறுத்திருக்கச் சொன்னார்.

"அவனுக்குத்தான் புத்தியில்லை. நமக்குமா? என்னவோ கைய வெச்ச உடனே நம்பி வந்திருக்கிறானேன்னு வஞ்சகம் பண்ண மனசு வரமாட்டேங்குது."

"சாயங்காலம் வீட்டுப்பக்கமா வா. கஞ்சி குடிச்சிபுட்டு அரிசி நெல் ஏதாச்சும் வாங்கிட்டுப் போகலாம்."

"இப்போதைக்கு ஏதாவது காசு கன்னி இருந்தா குடுங்கசாமி."

"சரி இந்தா. போகயில கலப்புக்கடையில ஏதாவது பலகாரம் சாப்புட்டு போகலாம்னு இருந்தேன். புடிடா."

கூனிக்குறுகி நெளிஞ்சபடி சிவப்பு கலர் இரண்டு ரூபாய்த்தாளை வாங்கி வேட்டிக்கட்டு தலவுல வெத்தலை பாக்கு முடிச்சுகளோட சுருட்டிக்கொண்டார்.

"அப்பாடா...உச்சிப்பொழுதுக்கெல்லாம் ரெண்டு கிளாசு ஊத்திக்கிறணும். அந்த சமயத்துலதான் நாம் மனுசனா நடமாட முடியுது."

புளியமரத்தின் நிழல், மரத்தின் கிளை விரிப்புப்பரப்பின் நேர்கீழ் வந்தது. ஒரு இலையைத்தாண்டி இன்னொரு இலையில் தடுக்கப்பட்டு, நிழல் தேமல் இல்லாத கருப்பு உடலைப்போல் படர்ந்து கிடந்தது. நிழலின் ஒழுங்கற்ற வட்ட முடிவுகள்தோறும் கடற்கரையோர ஓரங்கரை போல் அலைகளின் நெளிவாய் தெரிந்துகொண்டிருந்தது. காற்று மரத்தை அசைத்தும் மையப்பகுதியோ ஆழ்கடலைப்போல அசைவற்றுக் கிடந்தது. திணிக்கப்பட்ட இரண்டு ரூபாய் நேரம் ஆக ஆக அதன்மீது அபரீதமான கனம் ஒன்று ஏறிக்கொள்ள ஆரம்பிக்க, அவர் இருப்பு கொள்ளாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.

"என்னத்த நேத்து கூட்ன தரைமீது ஒத்தமசுரு எதுவும் விழுகல" தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டு சைக்கிளை ஒரு மிதிமிதித்து ஏறிக்கொண்டார்... கம்மாய் வாரிப்பக்கம் சாராயம் குடிக்க. வாரி ஊரின் கடைசி முடிவின் முகத்துவாரத்தில். காட்டுத்தண்ணீர் கண்மாய்க்குள் நுழையும் இடத்திலுள்ள ஒண்டையிலேயே அவருக்கானது கிடைக்கும்.

வாரி ஒண்டையில் சரக்கு ஓட்டுறவன் தோதுபண்ணிப்பான். போதை கீதை சரியா ஏறாட்டி ஒரு கிளாஸ் கூட வாங்கி குடிச்சுபுட்டு, நாளைக்கு தர்றேன்னா விக்கிறவன் பொறுத்துப் போய்க்கிடுவான். அதனாலேயே அவன்கிட்ட போய் குடிப்பார். மடியைப் பிரித்தபடி பிரண்டுவரும் இரண்டு ரூபா நோட்டை எடுத்து நீட்டியவரின் கையில் தரப்பட்டது ஒரு பாக்கெட் சாராயம்.

"என்னது டம்ளர்ல இல்லை. இத எப்படி குடிக்கிறது? குடிச்சாப்ளே இருக்காதே..."

"அட...மடையா, ஒளிவு மறைவா பெரிய மனுசங்களும் வந்துபோறாங்க. ஒரே டம்ளர்னா ஏத்தம் தாத்தியா பாக்கிறாங்க அதுதான் இப்படி மாத்தியாச்சு."

அடப்பாவிகளா... அசிங்கத்திலேயும் ஏத்தம் எறக்கமா? மனதுக்குள் முனங்கிக்கொண்டே பாக்கெட்டின் ஒரு முனையை கடித்து வயித்துக்குள் விட குமட்டிக்கொண்டு வந்தது.

"அண்ணே..."

"என்னடா?"

"அந்த ஊறுகா ஒரு நக்கு நக்கிக்கிறேன்னே..."

விரலுக்கு வந்த ஊறுகாயைச் சப்பிக்கொண்டே நகர்ந்தார். நிழல் அவரைவிட கொஞ்சம் நீளமாய் இருந்தது. சைக்கிளை நகர்த்திக்கொண்டே ஒரு பாட்டுப்பாடணும் போல தோன்ற அவர் வாயிலிருந்து ஒரு பாட்டு அவிழ்ந்தது. எதிரில் உருமா கட்டிய உருவமாய் வந்து கொண்டிருந்தார் காசியாண்டியின் மாமா.

"ஏண்டா மடையா, என்ன போட்டுட்டியா?"

"என்ன பெரிய போட்டுட்டாங்களாம். என்னவோ வாங்கிக்குடுத்தாப்புல, சுண்டக்கா."

"டோய் யார்கிட்ட பேசுற தெரியுதா?"

பிடித்திருந்த சைக்கிளை அப்படியே விட்டார் மாடசாமி. கீழே விழும் சத்தத்தில் தொலைவில் போய்க்கொண்டிருந்த காசியாண்டி திரும்பிப் பார்த்தான்.

"டேய் என்னல அது?"

மாடசாமி காசியாண்டியை நோக்கி திரும்பிக்கொண்டார்.

"வம்புக்கு இழுக்கிறியா வா...வா...ஒத்தைக்கு ஒத்தை வா," இன்னும் நிறைய கேக்கக்கூடாத வார்த்தைகளை மாடசாமியிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொண்டிருந்தான் காசியாண்டி.

"மாமா...என்ன மாமா..."

"மடையன் தண்ணி போட்டானா இனி ஒருத்தரும் தெருவுல நடக்க முடியாதே. எழவெடுக்க, மலிக்க, வெட்ட ஒத்தபயல வச்சுருக்கேமேன்னு பார்த்தா இந்தப்பாடுபடுத்துறானே."

"யாருடா இது எழவு எட்டுன்னு. நா ஒரு ராஜாதிராஜா வந்திருக்கேன்."

மாடசாமியின் பேச்சு அவமரியாதை உண்டுபண்ணும் என்பதால் மாமாவை கூட்டிக்கொண்டு நகர ஆரம்பித்தான் ஆண்டி. தள்ளி போயிட்டாங்கன்னு தெரிஞ்சதும் விழுந்த சைக்கிளை எடுத்துக்கிட்டார்.

"டே மடையா பெரியய்யா கூப்பிட்டாரு போ. அய்யா மகளுக்கு நிச்சயம் பண்ண வர்றாங்களாம். மொகத்தை மழிச்சுவிடணுமாம். ஜல்தியா உன்னை வரச்சொன்னாரு."

அடித்த போதை பெரியய்யா என்றதும் சர்ரென்று இறங்கிக்கொண்டிருந்தது. புளியமரத்தை நோக்கி சைக்கிள் பயணப்பட்டது. புளியமரத்தின் வாதிலிருந்து சவரட்டனை டப்பாவோடு பெரியய்யா வீட்டை நோக்கி சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்தது. சைக்கிளின் பெடலை வேகமாய் மிதித்துக் கொண்டிருந்தவர், வயிற்றை ஏதோ ஒன்று நமநம என்று வலிப்பதை உணர்ந்தவராய் சைக்கிளை கீழக்கண்மாய் வாரிப்பக்கம் ஓடவிட்டார். வெளிய போனமா, அங்கின வாரியில அலம்பிட்டு பெரிய வீட்டை நோக்கி ஓடிப்போய்விடுவோம் என்று நினைத்தவருக்கு ஆதரவு தருவதாய் புதர் அமைந்தது.

"அப்பாடா" ஒரு நிம்மதி பெருமூச்சுடன் எழுந்தார்.

"என்னடா, போதை ஏறலயா திரும்ப வந்துட்டே" ஏதோ எதிர்பார்த்த கேள்வியை கேட்டதுபோல தலையை சொரிந்தபடி சரக்கு விற்பவனின் கையைப் பார்த்தபடி நின்றார்.

"சரி சரி தலையைச் சொரியாத...இந்தா புடி. நாளைக்கு மரத்துப்பக்கம் வர்றேன். கத்தியை நல்லா சுத்தம் பண்ணிவை..."

"சரி" யென்றபடி தலையசைத்தவர் இன்னொரு பாக்கெட்டையும் உள்ளே ஊத்திக்கொண்டு முடித்த மாத்திரத்தில் சைக்கிளை எடுத்துக்கொண்டிருந்தபோது எதிர்ப்பட்ட ஒருவன் கத்திப்போனான்.

"டேய் மடையா!... பெரியவர் ரொம்ப கோபமா இருக்கார் போடா." எத்திப்பிடித்து சைக்கிளை மிதிக்கத் துவங்கினார். பெரியவர் வீட்டுக்கும் அவருக்கும் பத்தடிதூரம்தான் இருக்கும். மறுபடியும் வயித்தைக் கலக்கத் துவங்கியது. தாங்க முடியாதவராகவும் தவிக்க ஆரம்பித்தார். வீட்டு வாசலிலேயே சைக்கிளை நிறுத்திவிட்டு பெரியவரிடம் ஓடிநின்றவர், "இந்தா வந்தர்றேன் சாமி வயித்தைக்கலக்குது."

"டேய். பையன் வீட்டுல எல்லாம் வந்துடுவாங்கடா. வந்து பண்ணிட்டுப்போ."

"தாங்க முடியல சாமி இந்தா வந்தர்றேன்."

சொல்லியவாறே மீண்டும் வாரி போய் திரும்பி வந்து சேர்கையில் பையன் வீட்டார் நிரம்பி வழிந்துகொண்டிருந்தனர் பெரியவர் வீட்டில்.

"ஏண்டா நாயே! என் சவுரியத்துக்கு நீ இல்லை. இப்ப எதுக்கடா வந்திருக்கே. தொலைடா சனியனே. நாளைக்கு நல்லது கெட்டதுல பாத்துக்கிறேன்," என்றார் பெரியவர்.

"இல்ல...வலி தாங்கமுடியல சாமி."

"இந்தக் கதையெல்லாம் எங்கிட்ட சொல்லாதடா பரதேசி. உங்களை எல்லாம் நடுவீட்டுக்குள்ள விட்டா, இன்னும் செய்வ இதுக்கு மேலயும் செய்வ. ஓடிப்போ நாயே..."

வாசக்கதவு வரை முன்னேறி வந்தவர், கையை ஓங்கினார்.

அவரைத் தொட்டுப் பழக்கமில்லாமையால், வெடுக்கென்று அப்படியே நிறுத்திக்கொண்டார். எடுத்துச் சென்ற தகர டப்பாவோடு வெளியேறிக்கொண்டார் மாடசாமி.

நன்றி: தினமணி கதிர்/ 03.08.2008

***************
- தீபம் முத்து([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com