Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
சிறுகதை கூறும் நெடுங்கதை!!

சந்திரசேகரன்


வானம் பார்த்த மக்கள்..! எப்போது மழை வரும், வந்தால், எத்தனை நாள் வரும்? பல நாள் பொழிந்தாலும், வெள்ளம் வருமா? இதுபோன்ற கேள்விகள் மனதில் தினமும் வந்து போகும், ஏழை மக்கள் எத்தனை பேர்?

நம்மில் பலருக்கு Insecurity என்ற வார்த்தை வாழ்நாளில் வராது; வந்தாலும், தீர்வு காணாக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். ஒரு சிறிய காட்சி...

ஒரு ஊரில், பல குடிசைகள்.. கணவன் (சிவன் என்று வைத்துக் கொள்வோம்), மனைவி (அழகி என்று வைத்துக் கொள்வோம்! கற்பனை பெயரிலாவது நன்றாக இருந்துவிட்டுப் போகட்டுமே?) அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை (எல்லாருக்கும் ஆண் குழந்தைதான் வேண்டுமா என்ன?)

சிவன் வயலில் வேலை செய்துகொண்டுள்ளான்; அழகி உதவிக்கொண்டிருக்கிறாள். நிலம், அவர்களது நிலமே; ஆனால், நெல் தரகர்கள் கொள்முதல் செய்கையில், ஒரு வருட பணத்தை ஒன்றாகத் தர பல நிபந்தனைகள் விதித்துள்ளனர்:

1) மறுவருட நெல்லும், அவர்களுக்கே போகவேண்டும்,
2) கொடுத்த பணம் மறுவருட நெல்லின் விலையை விட அதிகமானால், மீந்த பணத்திற்கு 2% வட்டி தரவேண்டும்!

இதுதான் இன்றைய பெரும்பாலான விவசாயிகளின் நிலை!

ஒரு சிறிய கதை, அக்கதையின் முக்கிய அம்சமே, அவர்களது 'வீடு'.

Indian house 'வீடு' என்பதை விட, குடிசை என்ற சொல் பொருத்தமாக இருக்கும். இப்போது தமிழகத்திலுள்ளது போன்றான சூழ்நிலை! காற்று, மழை அல்லது இரண்டும் கலந்து கட்டி அடிக்கிறது! சிவன், அழகி இருவராலும், 'சிவனே' யென்று வேலை செய்ய மனம் ஒப்பவில்லை! எங்கே காற்று நம் வீட்டுக் கூரையை அடித்துக் கொண்டோடிவிடுமோ, அல்லது மழையில் பிய்ந்து ஒழுகி மூழ்கடித்துவிடுமோ என்ற கவலை. அதோடு, விளைநிலம் பாழடிக்கப்பட்டால், நெல் பாழ்; பண வரவு பாழ்; அதோடு, எமன் போல் வந்து நிற்கும் தரகன்; பிய்ந்தோடிவிட்ட கூரையை சரி செய்ய மரம் வேய செலவாகும் குறைந்த பட்சம் ரூ.5000/- இவை அனைத்தும், அவர்களது வயிற்றை பிசைந்தது! மற்றொரு பக்கம், பெண் குழந்தை தனியாக வீட்டில் இருப்பாளே? கூரை இடிந்த குடிசை! நீர் நிறைந்த குடிசை! இந்த எண்ணங்களே அவர்களது, நெற்றியில் புதிய கவலை ரேகைகளை வரையத் தொடங்கின!

அதைவிட மனதை உருக்கும் செய்தி என்ன, தெரியுமா? கூரை இழந்ததும், வீட்டுக்குச் செல்லும் வழியெங்கும், எல்லா கண்களும், இவர்களைப் பின் தொடரும்! பச்சாதாப பேச்சுகளும், கேலிப் பேச்சுகளும் காதில், விழும்! ''இதோ போறானே, இவன் வீட்டு கூரதான் இன்னிக்கி பிச்சிகிட்டுப் போச்சு! அடியாத்தி, இந்த அழகிப் பொண்ண எப்படிதான் ஆண்டவன் இப்படி சோதிக்கிறானோ..'' என்ற பேச்சுக்கள் தான், இருவரது மனதையும் தைக்கின்றது! அவமானம், இயலாமை தலைமேல் ஏறிக் கூத்தாடுகின்றன!

வீட்டுக்குச் செல்வோமா? அங்கும், காற்று, மழை மாறி மாறி அடிக்கிறது! உள்ளே இருந்த குழந்தை, உள்ளுக்கும், வெளியேயுமாய், ஓடி, ஓடி களைத்திருந்தது! முதலில், உள்ளே உட்காரும்; கூரையின் நிச்சயமற்ற தன்மை அறிந்து, மீண்டும் வெளியே ஓடும்! மழை, காற்று தாங்காமல், உள்ளே ஓடிவரும்; இப்படியாக களைத்துப் போன குழந்தை, வாசலிலேயே, அயர்ந்து, தூங்கிப் போய் விடும்!

வழியில்...ஊராரின் பேச்சுக்கு செவி சாய்க்காமல், பதில் கூற முடியாமல், குழந்தை என்ன ஆயிற்றோ எனத் தெரியாமல், இரு தலை, இல்லை, இல்லை, பல தலைக் கொள்ளி எறும்பு போலத் தவிக்கும், அவ்விரு விவசாயத் தம்பதியரை சற்றே மனக்கண்ணால், பாருங்கள்!

இருள் சூழ்ந்தபடியால், குடிசை வந்து சேர்ந்த சிவன், மனைவி, மகள் சூழ, அடிக்கும் காற்றை பார்த்தவாறே, மழை, சூறாவளியின், 'ஓ' எனும் ஓலத்தைக் கேட்டவாறே, இடிபாடுகளுக்கடையே, அமர்ந்து, விடியுமா என்க் காத்திருக்கிறான்! விடியல் வருமா, மறுநாள், அவன் வாழ்விலும்??

ஒரு சிறிய செய்தி...

இப்படி, எத்தனையோ மக்கள், வாழத்தெரியாமல், வாழ வழியில்லாமல், சிக்கித் திணறி, திக்குத் தெரியாமல் நம் கிராமங்களில், நகரத்து சேரிகளில் வசிக்கின்றனர்! உடுக்க உடை, உண்ண உணவு- இவை இரண்டும், வேலை செய்தால் கிட்டக் கூடிய ஒன்று; இல்லையேல், கிடைத்த கிளிசலை கட்டிக்கொள்ளலாம்; பழையதை உண்ணலாம். ஆனால், இடம்? எல்லோராலும் ஒரு நிரந்தரமான வீடு கட்டிக் கொள்ள முடியுமா? அப்படி கட்டினாலும், கூரையில்லாத, ஓடு வேய்ந்த வீடோ, அல்லது தளம் அமைத்த கான்கிரீட் கூரையோ அமைக்க முடியுமா?

முடிந்தால்தான் நாம் இந்த மண்ணில் பிறந்ததற்கு ஒரு அர்த்தம் உள்ளது. குடிசையின் கூரை பிய்யாமலிருந்தால், பறக்காமலிருந்தால், ஒரு குடிசை வாசிக்கு அதைப் போன்ற ஒரு மகிழ்ச்சி வேறு எதிலும் இருக்க முடியாது! 'என்றும் பறக்கும் கூரை?' எனும் கேள்வியில், ஒருவனது தாழ்வு மனப்பான்மையும், ஊரின் பேச்சுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையில் அவ்மானமுமே எஞ்சி நிற்கும்! அதேபோல், அந்தப் பிஞ்சுக் குழந்தையின் நெஞ்சில், ஒரு நீங்காத ஏக்கம் தொக்கி நிற்கும். என்ன தெரியுமா? மற்ற குழந்தைகளைப் போல், 'ஒரு ஜன்னல் திறந்து இந்த உலகத்தைப் பார்க்க முடியவில்லையே?' என்ற ஏக்கம்! சுவரிருந்தால்தானே ஜன்னல் வரும்? சுவரோ, கூரையோ இன்றி, வெறும் தென்னங்கீற்றின் தடுப்புகளில் விளையாடும் பருவத்தைத் தொலைக்கும் அந்தப் பிஞ்சு நெஞ்சின் ஏக்கத்தை யார் போக்குவார்? முடியும் என்கிறார் ஒருவர்; அவர் பெயர் இளங்கோ! கீழ்க்காணும் உரலில் (URL ல்) அவரைப் பற்றியும், அவரது சாதனைகளைப் பற்றியுமான செய்திகளைக் காண்க. நான் அவரை சந்தித்த போது, சொன்ன சிந்திக்க வைக்கச் சொன்ன குட்டிக் கதைதான், மேலே சொன்னது!

கதையின் முடிவு என்ன? அது படிக்கும் ஒவ்வொருவர் கையிலும் இருக்கிறது! எப்படி? பாண்டிச்சேரியிலுள்ள அரவிந்தர் ஆசிரமத்திலுள்ள சுய சேவைக் குழுவினர் அமைத்த மண் செங்கல் செய்யும் இயந்திரத்தால் செய்யப்படும் செங்கலுக்கு, சூளைச் சூடு தேவையில்லை! புகை கக்கும் மாசு பறவாது! சிமென்ட், மணல், செம்மண் மூன்றையும், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து, நீர் தெளித்து, பிண்டமாக்கி, அச்சிலிட்டு, மேற்சொன்ன இயந்திரத்தில் 'ப்ரெஸ்' (அழுத்தினால்) செய்தால், செங்கல் பிறக்கிறது. 20 x 10 அடி உள்ள அறையும், தனியாக ஒரு சிறிய அறையும், கொண்ட ஒரு வீடு; மேலே அதேபோல் மெஷினால், செய்யப்பட்ட காற்றில் பறக்காத ஓடுகள்; தனியாக கழிப்பறை. (இதுக்கு ஒரு தனி கட்டுரையே எழுதலாம், அவ்வளவு விஷயம் உள்ளது!) - இவற்றைக் கட்ட சராசரியாக, ரூ.25,000 மட்டுமே தேவை. செங்கல் செய்யவும், மண் கொண்டுவந்து அடிக்கவும், பஞ்சாயத்திலுள்ள இளைஞருக்கே வேலை தரப்படலாம்; எப்படியும், வருடா வருடம் கூரை வேய, ரூ.5000/- செலவு செய்யும் ஒவ்வொரு வீட்டினரும், அந்த பணத்தை பஞ்சாயத்தில் வீடு கட்டும் திட்டத்துக்கு கொடுத்தால், பூகம்பத்தைத் தாங்கக் கூடிய வடிவமைப்பில் வீட்டைக் கட்ட இயலும்! என்ன, செங்கல் அச்சுகளில், ஒரு கம்பி நுழையக்கூடிய துளைகள் வருமாதிரியாக வடிவமைத்தால், இக்கம்பிகள், சுவற்றுக்கு அரணாகயிருந்து, காற்று, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றத்தைத் தாங்கக் கூடியவையாக வீட்டினை மாற்றியமைக்க முடியும்! இளங்கோவின் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரம் வீடுகள், குடிசை மாற்று வாரிய வீடுகள், மரும் சுற்றியுள்ள ஏனைய கிராமங்களிலுள்ள வீடாய் மாறிய குடிசைகள் அனைத்தும், மேற்கண்ட முறையிலேயே அமைக்கப் பெற்றுள்ளன!

யோசித்துப் பாருங்கள்! சிவனும், அழகியும், இனி தலை குனிந்து நடக்கத் தேவையில்லை! ஜன்னல் வைத்த சுவற்றின் அருகே அமர்ந்திருக்கும், அந்தக் குழந்தை (அட, பெயரே வைக்கவில்லையே! சரி, பொம்மி என்று வைத்துக்கொள்வோம்!) ஆவலாக ஓடிவந்து, ஜன்னலருகே நிற்கிறது! மெதுவாக தன் பிஞ்சுக் கைகளால் ஜன்னல் கதவுகளைத் திறக்கிறது! ஆஹா! என்ன, ஒரு காட்சி! தெள்ளத் தெளிவான வானம்; ஜன்னல் வழியே, பீச்சிட்டு வரும், கதிரவனின் கிரணங்கலிலிருந்து ஒளிப்ரவாகம்! பொம்மியின் முகத்தைப் பாருங்கள்! எத்தனை மகிழ்ச்சி! எத்தனை முக ஜாலங்கள், உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள்! முகத்தில் விழும் காலைத் தென்றல், அவளது, முன் முடியை மெதுவாக வருதி, முகத்தில், தனிக் களை சேர்க்கிறது! தனது, வீடு, இந்த ஜன்னல், இந்த ஜன்னலோரப் பார்வை இவை அனைத்தும் காணாதது கண்ட உவகையை அவள் மனதில் ஏற்படுத்தியுள்ளது!! இந்த உணர்ச்சி, மனநிம்மதி, இவற்றை வார்த்தையால் கூற இயலாது! இதே, வசதியுள்ளவர்களை நினைத்துப் பாருங்கள்? எங்கே, வெளிச்சம் அதிகமாகப் பாயுமோ என்று, திரைசீலைகளை போட்டு, ஜன்னலை மூடி வைப்பர்; சிலர்,மேலும் ஒரு படி மேலே! வெளிகாற்றோ, வெளிச்சமோ, மேனியில் படாதவாறு, வீடெங்கும் (A.C) குளிரூட்டம் செய்து கொள்வர்! ஜன்னலையே திறக்க மாட்டார்கள்!

பசிக்கிறவனுக்குத் தானே தெரியும் போஜனத்து அருமை!

நாம் எல்லோரும், இப்படி எத்தனையோ, சிவனையும், அழகியையும், பொம்மியையும் நம் வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நாம் வீடு கட்டும் போது, இப்படி, ஒரு சில குடிசைகளை மாற்றியமைக்க பொருளுதவியோ, இல்லை நேரடியாக, சிறுமனைகள் கட்டிக் கொடுத்தால், எத்தனை ஏழைகள் வளம் பெறுவர்? 'இல்லாதானை இல்லாளும் வேண்டாள்', எனும் சொல்லை மாற்றி, இருப்பதை இல்லாதவற்குக் கொடுத்து வாழ்வோம்! பொருளாளர்கள், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், இளைஞர்கள் இத்தகைய வீடுகட்டும் பணியை ஆரம்பித்தால், விரைவில், நாட்டில் குடிசைகள் மறையும்!

இதனால், பல தலை குனிவுகள் தவிர்க்கப்படும்; விடியாத விடியல்கள் விடியும்; முயலுவோம்!!
இளங்கோ பற்றிய உரல் (URL) : http://www.goodnewsindia.com/Pages/content/transitions/elango.php

இந்த goodnewsindia வில், இந்தியாவிலுள்ள பல பெயர்தெரியாத சாதனையாளர்கள், புரட்சியாளர்கள் பற்றிய செய்திகள் காணும்போது, நம்முள்ளும் நம்பிக்கை வளர்கிறது! வருங்காலத்தில் நாடு மிளிரும் நாளைக் காண மனம் தாவி ஓடுகிறது!

- சந்திரசேகரன்([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com