Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
திரைக்குப் பின்னால்
சைதன்யா


நாட்டிய உலகில் அவள் கொற்றக்குடையும் கொடியுமாய்ப் பட்டொளி சூழ வளைய வந்தாள். ஆண்டாள். அவளை விமரிசித்தவர்கள் தம்பெயர் கெடுத்துக் கொண்டவர் ஆயினர். அரங்கத்தைக் கட்டியாள வல்லவள். பக்தியை சிருங்காரத்தை பாசத்தை, எதைத்தான் அவள் காட்டவில்லை. ஜாலக்காரி.

தொடர்ந்து அவளது நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் அவன் வந்தவாறிருந்தான். மகேஸ்வரபூபதி. அவள் கவனித்திருக்கிறாள். இப்படி நிறையப் பேரை அவள் கவனித்திருக்கிறாள்தான். ஊர்சார்ந்த ரசிகர்களை அவளுக்கு முகப்பரிச்சயம் உண்டு. பேச விரும்பி, தயங்கி சற்று தூரத்தில் இருந்து அவதானப் பார்வை பார்த்துவிட்டு விலகிப் போகையில் அந்த நட்பின் அலை அவளைத் தீண்டுவதை உணர்கிறாள். ஆயிரம் பேரை இப்படி அவள் சந்தித்துக் கொண்டிருந்தாள். கலையின் மாய வசீகரக் கயிறுகள் அவர்களை அப்படி ஈர்க்கின்றன. புன்னகை செய்து கொள்வாள். சிலசமயம் சிறு தலையசைப்பும் வணக்கமும் கூட அவள் தருவாள். பேச்செதற்கு அங்கே? சிறு சிரிப்பு. அபிநய சிரோன்மணியின் சிநேகச் சிரிப்பு. வார்த்தைகள் என்ன பயனும் இல அப்போது.

மகேஸ்வரபூபதி. பேரும் புகழும் தோள்ப்பெருமாலை எனச் சுமந்து கொண்டிருக்கிற பெரிய இயக்குநர் ஒருவரின் உதவிக்காரன் அவன். அவரது மகாவெற்றி என அறியப்பட்ட திரைப்படத்தின் கிளைமாக்ஸ் - திருப்புமுனைக் காட்சி - அவன் வடிவமைத்ததுதான் என்றான். அவள் தலையாட்டினாள். நன்றாகப் பேசினான் அவன். ''கர்ச்சீஃப் மேஜிக் பார்த்திருக்கிறேன். அதைவிட சிறப்பு உங்கள் நிகழ்ச்சி. விரல்குவித்து நீங்கள் மெல்லப் பிரிக்கிறீர்கள். அடாடா தாமரை விரிகிறாப் போலிருக்கிறதே எங்களுக்கு. வாசனை கூட எட்டுகிறதாக ஆயிரம் பேர் சாட்சி சொல்கிறார்கள்...''

''எந்தக் கோர்ட்டில்?'' எனக் கேட்டு அவள் கலகலவென நகைத்தாள் ஆண்டாள். பாராட்டு யாருக்குதான் பிடிக்காது.

Indian classic dance ''எனது முதல் திரைப்படத்தில் நீங்கள்தான் கதாநாயகி'' என்கிறான் அவன்.

''சினிமா வேணாம் எனக்கு. அது பொய் சொல்கிறது...'' என மறுத்தாள் அவள். அவன் விடவில்லை. ''நாம் நிஜங்கள் சொல்வோம்....'' என்றவன், ''நீங்கள் சம்மதித்தால்'' என முத்தாய்ப்பு வைத்தான்.

''நான் மேஜிக் செய்கிறவள். நீங்கள் என்னிடம் நான் நிஜம் செய்ய வேணுமாய்ச் சொல்வது முரணாய் இல்லையா?''

''வள்ளுவர் அறியாதவரா நீங்கள்... வாய்மையிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்க பொய்கள் சொல்கிறது கலை...''

''வசனங்களில் உதவி செய்வீர்களா உங்கள் இயக்குநருக்கு?'' என அதற்கும் ஆண்டாள் சிரித்தாள்.

பெரும் செய்தி அது. ஆண்டாள் திரைப்படத்தில் நடக்கிறார். மகேஸ்வரபூபதியின் முதல் படம் அது. நாட்டியம் சார்ந்த பாத்திரம்தானா அது, என ஜனக்கூட்டம் பரபரப்பானது. சுவாரஸ்யத் தீனி தேடி பத்திரிகைகள் திரிந்தவண்ணம் இருந்தன.

நிஜத்தை மிகைபடக் கூறுகிறது திரைப்படம். கலைகளின் சங்கமம் அது. கலைக்கலவையின் உற்சாகக் குலவைச் சத்தம். ஆனால் கவர்ச்சியம்சத்தில் அது மகாஜன சமுத்திர வசீகர உத்வேகத்தில் விற்பனைக் கேந்திரமாகத் திரிந்துபோகிறது. பரதக்கலை அப்படியல்ல. தனக்கென எல்லைகள் கொண்டது அது. அது ஒருபோதும் தன்வயமிழப்பதேயில்லை. தன்சிகரத் தரத்தை விட்டுக் கொடுக்கிறதேயில்லை. - ''சரி, மிகச் சரி'' என்றான் அவன். ''உங்களைப் போன்றவர்கள் இப்படி ஒதுங்கிப் போனால் பிறகு இந்தத் திரையுலகத்தை மீட்பதுதான் எப்படி?'' என்றான். ''உங்களால் முடியும்...'' என்றவன் அகலப் புன்னகைத்து ''நம்மால் சாத்தியப் படக்கூடும் அது'' என்றான்.

விவரம் தெரிந்தவனாய்த்தான் இருப்பான் போலிருந்தது. திரைப்படம் வேறு முகவெடுப்பு. வேறு வியூகம் அது. அவளால் முடியுமா? ''உங்களால் அன்றி யாராலும் முடியாது'' என்கிறான் அதற்கும். சிறு புன்னகை. ஆ அவனுக்கு என்மேல் நம்பிக்கை இருக்கிறது. தன்மேல் நம்பிக்கை இருக்கிறது... என மனம் இளக்கங் கண்ட கணம் அது. ஆண்டாள் அவனைப் பார்த்தாள் யோசனையுடன். ''சம்மதிக்க வேண்டும் நீங்கள்'' என்றான் சொல்லழுத்தத்துடன். ''உங்கள் வெற்றியின் பின்னணியில் என் எதிர்காலமே இருக்கிறது... காத்திருக்கிறது'' என்றான். ''காத்திருக்கிறேன்'' என்றான்.

''நீங்கள் திறமையானவர். என்னால்தான் வெற்றி பெறுவீர்கள் எனச் சொல்வது வேடிக்கை'' என்றாள் அவனை ஆழம் பார்க்கும் விதமாக. அவள் சம்மதிக்கிற கட்டத்துக்கு வந்துவிட்டாள் என அவன் யூகிக்க முடிந்தது. ''எனது முதல்படம் இது. கதாநாயகி நீங்கள்... எனது கனவு இது. நெடுநாட்கனவு. உங்களது நாட்டியக் கச்சேரியை முதன் முதலில் ரசிகனாய்க் கீழேயமர்ந்து பார்த்த மாத்திரம் என் மனதில் உருவான கதை இது...''

''இதுவே கதை'' என்றாள் நகைத்து.

''நிஜம்'' என்கிறான் அவன்.

இயக்குநரே அயர்ந்து போனார் அவன் முடிவைக் கேட்டு. திருப்புமுனைக் காட்சிகள் அமைப்பதில் விற்பன்னன். எப்படியும் தனியே படம் பண்ணப் போய்விடுவான் என்பதும் எதிர்பாராத விஷயம் அல்ல. ஆனால் ஆகா, புது நாயகி, என ஆண்டாளை எப்படி வசியம் பண்ணினான் தெரியவில்லை. நிறைய இயக்குநர்களுக்கு அவள், திரைத்துறைக்கு வருவதாக இல்லை, என்கிற பதிலையே தந்து வந்திருக்கிறாள்.

நாட்டிய முத்திரைக்கு வாயசைப்பே கூடாது. வசனம் பேசி பாவனைகள் செய்வது புது அனுபவமாய் இருந்தது. உற்சாகமாய் இருந்தது. ஏற்கனவே புகழ்-ஏணியில் பாதிவரை ஏறி நிற்கிறவள்தானே. திரைப்படத் துறை அவளுக்கு மரியாதை வழங்கியது. வேலைநேரம் படு கண்டிப்பாய் இருந்தான் பூபதி. அது அவளுக்குப் பிடித்திருந்தது. அவனே அவளுக்கு நடித்துக் காட்டினான் சில சமயம். வித்தியாசமான அனுபவம். அழுகையில் இத்தனை விதம். சிரிப்பில் இத்தனை வகை. வசன உச்சரிப்பின் அழுத்த மாறுபாடுகள். சினிமாவில் எத்தனை விஷயங்களை கவனங் கொள்ள வேணுமாய் இருக்கிறது.

ஆனால் கதை. வெறும் அசட்டுத்தனமான அந்தக்கால மோஸ்தரிலேயே அது சுற்றி வருகிறது... நம் பெண்களை அப்படியேதானே கிராமங்களில் நாம் பார்க்கிறோம், என்றான் அவன். சரி, ஆனால் அவர்களை மேம்படுத்த, சிந்திக்க வைக்க வேணாவா?... என்றால், அதற்கு முதல்படம் எடுக்கிற நான் எப்படி முயல முடியும்?- என்கிறான் அவன். என் குருநாதர், பெருவெற்றி இயக்குநர்தான். அவரே புரட்சிக்காரர் அல்ல... என்கிறான்.

என்னை இப்பக்கம், திரைப்பக்கம் இழுக்கையில் அவன் சொன்னதும் இப்போது பேசுவதும் ஒட்டாமல் இருக்கிறதே என நினைத்துக் கொண்டாள். ஆனால் கதை அவனுடையது. பாத்திர வார்ப்புகள் அவனுடையவை. நான் நடிகை இப்போது. அவன் கேட்கிறதை எதிர்பார்க்கிறதைச் செய்துகொடுக்க வந்திருக்கிறேன். சினிமா பொய்கள் மாத்திரமே சொல்லக் கூடுமோ? சினிமாவுக்கு மாதவிகள் பிடிக்கிறது. மாதவிகளைச் சிறப்பு செய்ய கண்ணகிகள் உருவாகிறார்கள். திரையிருட்டில் ஸ்திரீ மகாஜனங்கள் அழுது உகுத்தபடி ரசிக்கிறார்கள் திரைப்படங்களை.

வன்முறை தவறாமல் சினிமாவில் வலியுறுத்தப் படுகிறது. வித்தியாசமான வன்முறைக்காரனாக வில்லன் அறிமுகம் ஆகிறதும், அவனைக் கதாநாயகன் அடித்து வீழ்த்தி அவனைவிட வன்முறையாளனாக ஜனங்களின் அங்கீகாரமும் பாராட்டும் பெற்று விடுகிறான்...

திரைக்கதை என பூபதி வைக்கும் திருப்புமுனைகள் வேடிக்கையாய் இருந்தன. சூட்டிகையான கிராமத்துப் பெண் என்றால் அவன் சொல்கிற இலக்கணங்கள்... படித்துறைப் பக்கம் ஒளிந்திருந்து அவள் ஆண்கள் குளிக்கிறதைப் பார்க்கிறாள். அவர்கள் அயர்ந்தநேரம் கரையில் அவிழ்த்துக் கிடக்கிற அவர்கள் வேட்டியை எடுத்துக் கொண்டு ஓடுகிறாள். ராத்திரி தெருவில் கயிற்றுக் கட்டில் போட்டுப் படுத்திருக்கும் தாத்தாவுக்கு மீசை வரைகிறாள். கோவில் சந்நிதியில் எதிர்ச்சாரியில் நின்றபடி சாமி கும்பிடும் வயசான மாமாவைப் பார்த்துக் கண்ணடிக்கிறாள்.

இதுதான் உங்கள் லட்சியப் படமா? - என்றாள் ஆண்டாள் அவனைப் பார்த்து. பூபதி சிரித்தான். நான் திரைத்துறையில் காலூன்றிய பின்புதான் எனது லட்சியப் படம் பற்றியே சிந்திக்க முடியும், என்கிறான். உங்கள் இயக்குநரே போல, நீங்களும் முயல மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்... என்றாள் ஆண்டாள் பெருமூச்சுடன்.

பெண்ணின் ஆசை மச்சான் மேல் மஞ்சள்த் தண்ணீர் ஊத்துவது. தன்னைக் கெடுக்க வந்தவனை மச்சான் மொத்து மொத்து என்று மொத்தும்போது மனம் மகிழ அதைப் பார்ப்பது. அவள் சுட்டிப் பெண் - விசிலடித்து ரசித்தாள் அந்தக் காட்சியை. வில்லன் பாத்திரத்தின் காதலி வந்திருந்தாள் எனில் வில்லன் அடிக்கிற கணங்களில் அவளும் இத்தனை ஆனந்தங் கொண்டிருப்பாள் என்று தோணியது. என்னென்னவோ இலக்கணங்கள் சொல்கிறார்கள் காட்சியமைப்புகளுக்கு.

அவளை ஒருவன் காதலிக்கிறான். அவள் எழுதப் படிக்கத் தெரியாதவள். கிராமத்தில் கதாநாயகனோ நாயகியோ என்றிருந்தால் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாவே இருக்கிறார்கள். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அயோக்கியர்களாகி இவர்களைத் துன்புறுத்துகிறார்கள். அதைப் பார்க்கவந்த ஸ்திரீ மகாஜனங்கள் கண்ணீர் உகுக்கிறார்கள். மச்சானிடமிருந்து வந்த கடிதத்தை அவளைக் காதலிக்கிற தபால்காரன் வாசித்துக் காட்டுகிறான், எனக் காட்சியமைப்புகள். திருப்புமுனையாக அவள் அவனைக் காதலிக்காமல் உதாசீனம் செய்கிறாள். இதற்கிடையே அடுத்த திருப்பம் - வில்லன் அவளைக் கற்பழித்து விடுகிறான். காதலன் /திருப்பம் மூணாமே/ பரவாயில்லை நான் உன்னை ஏற்றுக் கொள்கிறேன் என்கிறான். அடுத்தாற்போல அடிச்சான்யா பூபதி - அதான் சிக்ஸர்- அவள் காதலனை மறுத்து, வில்லனையே கணவனாக வரித்து விடுகிறாள்...

''அடுத்த திருப்பம் என்னன்னா?'' என்றான் பூபதி உற்சாகமாய். ''இதுவே தாங்க முடியல. அது வரும்போது வரட்டும். இந்தத் திருப்பங்களே எனக்குத் தலை சுத்துது'' என்றாள் ஆண்டாள். நாட்டிய தாரகை. ஆனால் வெளியே அவள் புகழ் ஜுரம்போல் ஏறி வருகிறதை உணர்ந்தாள். அவள் சார்ந்த புகைப்படங்கள் பத்திரிகைகளில் இடம் பெற்றன. அவள் வலதிருந்து இடமாக ஓடுகிறாள் - தாவணி பறக்கிறது... என்பதாகப் படமாக்கப் பட்ட பாடல்காட்சிப் புகைப்படம் ஒரு இதழில் அட்டைப்படமாக வெளியானது. நகரச் சாயல் சிறிதும் தெரியாத அளவில் ஒப்பனையில் அப்படியே கிராமத்து வார்ப்பாக அவளைக் காட்டியிருந்தார்கள்.

ஆனால் ஒளிப்படக் கருவிக்குப் பின்னால் என்ன அழகாக இலக்கிய மேற்கோள்களை எடுத்துவீசி சரளமாய் அவன் பேசினான். கிராமத்து வசன உச்சரிப்புகள் அவளுக்கு அவன் சொல்லித் தந்தவன் என நினைக்கவே முடியாதிருந்தது. உண்மையில் சினிமாவுக்கென்றே கிராமத்தின் சாயல்போல தனி வசன உச்சரிப்புகள் கண்டிருந்தனர் அவர்கள். எந்த கிராமத்திலும் இபபடிப் பேசி அவள் கேட்டதேயில்லை. மச்சான் பிறந்தநாள் என்று கொண்டாடும் நாயகி. எழுதப் படிக்கத் தெரியாதவள் எப்படித்தான் பிறந்தநாளை ஞாபகம் வைத்திருந்து கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்தாளோ? வரும் வழியில் வில்லன் கண்பட்டு கற்பழிக்கப் பட்டாளோ? மச்சான்தான் கடைசியில் அவளைக் கல்யாணம் செய்து கொள்வானா, அல்லது அவளைக் கெடுத்தவனைப் பழிவாங்குவானா, அல்லது அவன் அரிவாளை வீசுகையில் மச்சானிடம் அலன் மாங்கல்யப் பிச்சை கோருவாளா தெரியாது. கேட்டால் அதற்குமுன் இன்னும் நாலு திருப்பம் வெச்சிருக்கிறேன்... என உற்சாகமாய் அவன் ஆரம்பித்து விடுவான் போலிருந்தது.

அவன் அறிவுசார்ந்து குறைப்பட ஏதும் இல்லை. நன்றாகவே தெளிவாகவே திரைக்குவெளியே பேசுகிறான். திரையில் அத்தனை அசட்டுத்தனங்கள் செய்கிறது ஏன் தெரியவில்லை. கிராமத்து மண்ணில் மச்சான் கால்வைத்ததும் ஒரு இசையதிர்ச்சி. சரி முள்ளு கிள்ளு குத்திட்டதாக்கும்னு பார்த்தால், நாலுதெரு தள்ளி அவர்கள் வீட்டில் சாகக் கிடக்கிற தாத்தா மார்பு தூக்கிப் போடுகிறது. தாத்தா நெஞ்சில் அவன் கால்வைத்து இறங்கினாப்போல...

அவள் பேசும் அத்தனை வேடிக்கைகளையும் அவன் ரசித்தான். திரைக்கு வெளியே அவன் அவளிடம் பேசிய வசனங்கள் அட்சர லட்சம் பெறும். கலைநுட்பந் தெரிந்தவன்தான். சிரிக்கச் சிரிக்கப் பேசினான். குறும்புகள் செய்தான். கதாநாயகனை வேட்டி கட்டி அலைய விட்டாலும் மேற்கத்தியபாணி உடைகளில் அவன் விருப்பம் செலுத்தினான். கதாநாயகனுக்கு தனி அடையாளமான காளைகள் மாட்டுவண்டி என இருந்தன படத்தில். காரில் கால்டாக்சியில் போய் வந்தான் அவன் - தயாரிப்பாளர் செலவில்.

பெரு நிகழ்ச்சிகளோ, வேறு திரைப்படத் துவக்க விழாக்களோ போனால் அவளையும் கட்டாயம் கூட அழைத்துப் போகிறான் அவன். தயாரிப்பாளர் சொந்தக்காரை அப்போது மனமுவக்கிறார். அவளை சிறப்பு ஒப்பனைகளுடன் அந்தஸ்துடன் அழைத்துப் போக ஏற்பாடுகள் நடக்கின்றன. புகைப்படமோ ஒலிஒளி நாடாப் பதிவுகளோ அவர்களைப் பதிவு செய்தால் அவன் அவளுடன் காதில் என்னவாச்சும் அப்போது சொல்கிறதாக இருந்தது. அவள் சற்று அலங்காரமாய் அப்போது சிரிக்க வேண்டியிருந்தது. வெளியேயும் நடிக்கச் சொன்னார்கள். புதிய அனுபவங்கள் நிறைய நிறைய அமைந்தன அவளுக்கு. தன்னையே புது மனுஷியாக வேடிக்கை பார்க்க வேண்டியிருந்தது.

/மகேஸ்வரபூபதி - ஆண்டாள் காதல்!/ - என ஒரு பத்திரிகை சேதி வெளியிட்டது. அவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. உடனடியாக பூபதிக்கு தொலைபேசியில் பேசினாள் அவள். ''நல்ல சேதிதான் அது'' - என்றான் பூபதி. ''நம் படம் நிச்சயம் நூறுநாள் ஓடும்...'' என்றான்.

அவளுக்கு அலுப்பாய் இருந்தது. என் வாழ்க்கைக்கே திருப்புமுனைக் காட்சி அமைத்து விடுவான் இவன் என்றிருந்தது. கையில் அபிநயித்த பாவனைத்தாமரை... கடைசியில் எனக்கு மிஞ்சியதும் அதுதான் போலும். அழுகை வந்தது அவளுக்கு. அவள் துவங்கிய இடத்துக்கே கௌரவமாய்த் திரும்பப் போய்விடலாமா என்றுகூடப் பட்டது. அது இனி சாத்தியமா என்றே தெரியவில்லை. அநேகத் தாள்களில் வரிசையாய் அவள் இட்ட கையொப்பங்கள் நினைவுக்கு வந்தன.

ஆ தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூட ஒரு விநாடி அசட்டுசிந்தனை வந்தது அவளுக்கு. அதைச் சொன்னால் பூபதி ''செய்துகொள், படம் இருநூறு நாள்!'' என்று மகிழ்வான் என்றுதான் அடுத்த எண்ணம் வந்தது.

- சைதன்யா([email protected])நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com