Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
கடலைக்காடு

புவனேஸ்வரன்.


அக்கா யார் காட்டுக்கு கடலை எடுக்க போறீங்க. செட்டியார் காட்டுக்கா? நா அதுக்கு பக்கத்துக்காட்டுக்கு போனபோது பாத்தேன். செட்டியார் காட்ல செடிக்கு, படி கடலை இருக்கும் போல. பழைய காலத்தில கொளமா இருந்திருக்கு. உரம்போட்ட நிலம் போல. செடியில கடலை சரம்சரமா பிடிச்சிருக்கு. அங்க போனா நம்மளுக்கு அவிச்சு திங்கவாவது கடலை கிடக்கும். நல்லா முத்தியிருக்கு. பச்சையா இருக்கும்போது அவிச்சிட்டு, மிச்சமிருக்கறதை காயப்போட்டு வச்சிருந்தா மழைக் காலத்தில பிள்ளைகளுக்கு வறுத்துக்குடுக்கலாமக்கா. என்னா சொல்றீங்க.

காலையில நா வந்து எழுப்றேன். நா மூத்தவளையும், இளையவளையும் கூப்பிட்டுக்கிட்டு வாரேன். இப்பதான் பள்ளிக்கூடமில்லையில்லை.

அக்கா காலையில 5 மணிக்கெல்லாம் காட்ல இருக்கணும்

கேப்பைக் களி கிண்டப்போறேன். பருப்புக்கடைஞ்சு தாளிச்சிருக்கேன். குச்சிக்கருவாடு வறுத்தாச்சு. மாமா பக்கத்தில போயிருக்கு வந்தவுடன் சாப்பிட்டுட்டு, கொஞ்சம் கண்ணசந்திட்டு, மொதக்கோழி கூப்பிட்டவுடன் கௌம்பிப்போனா சரியாயிருக்கும்.

நீங்க என்ன செஞ்சிருக்கீங்க?

நானா? எனக்கு வாயில என்னமோன்னு வருது. எம்மாமனும் சரியில்லை. ரண்டு ஆம்பளைபிள்ளைகளும் எடுவட்ட பசங்களா இருக்கானுங்க. சினிமாவுக்கு காசு எங்கிட்ட இருந்து பிடுங்கிகிட்டு போறானுங்க. ஒத்தக் காசு சம்பாரிக்க துப்பில்லாத பசங்க. என்னா செய்றது? என் தலையெழுத்து. கட்டுன ஆளும் சரியில்லை, பிள்ளைகளும் அடங்காம அலையுதுங்க. நா சோளக்களி கிண்டி நெத்தலிக்கருவாடும், மொச்சையும் போட்டு கொளம்பு வச்சிருக்கேன். மிச்சமிருக்கிறதை தண்ணி ஊத்தி வச்சிருந்தா, தூக்குச் சட்டியில போட்டுக்கிட்டு, நாலஞ்சு ஈராங்காயத்தை துணியில கட்டிக்கிட்டா போதும், ஒரு நாப்பொழுது ஓட்டிராம்ல.

ஈஸ்வரி மதினி எந்தக்காட்டுக்கு போகுதுண்ணு கேட்டிங்களாக்கா?

எஞ்சின்னப்பொண்ணை அனுப்பி கூப்பிட்டுட்டு வரச்சொல்றேன். சரிதானே. நீ போயி ஒன் மாமனுக்கும், பொம்பளைப்பிள்ளைகளுக்கும் களியை கிண்டிப்போடு. மாமா இல்லைங்கிற, பொட்டப்பிள்ளைக தனியா இருக்கும் , நீ போ.

ஏய் கருப்பாயி! ஒங்கப்பன் எங்க போயிருக்கு?

போயி அந்த பொட்டிக்கடையில பாரு. வெத்திலை பாக்கு வாங்கிக்கிட்டு வர்ரேன்னுட்டு போச்சு. ஆளைக்காணலை.

கருப்பாயிக்கு ஏழு வயசிருக்கும். இன்னும் தாவணி போடவில்லை. கிழிந்து தைத்த பாவாடை கணுக்காலுக்கு மேலே ஏறி இருந்தது.

அப்பா என்ன இங்க ஒக்காந்திருக்க? ஆத்தா தேடுது. வெத்திலை பாக்கு வாங்கிட்டு சுண்ணாம்பும் எடுத்திட்டு வா.

இந்தா இதைக்கொண்டி ஆத்தாகிட்டக்கொடு. நா ராசு கிட்டப்போயி மம்பிட்டி வாங்கிட்டு வந்திறேன்.

ஆத்தா ஒன்னை களியை தின்னுட்டு போகச்சொல்லுது. இல்லாட்டி சூடு ஆறிப்போகும்ல.

சரி ஆத்தாளை வட்டியில போடச்சொல்லு. வந்திர்ரேன்.

நா ஆத்தா கூட கடலைக்காட்டுக்கு போறேன். மதியக்கஞ்சிக்கு அச்சு வெல்லம் வாங்கிக்கொடு.

சரி நா வாங்கிட்டு வர்ரேன். நீ போ.

பெட்டிக்கடையில் ஒரு பீடி கட்டும், அச்சு வெல்லமும் வாங்கிக்கொண்டு நகர்ந்தார்.

என்னடி கருப்பாயி ஓங்கப்பன் எங்க? ஒங்கண்ணன்க ரண்டுபேரும் சினிமாப் பாக்க போய்ட்டான்க போலிருக்கு. பள்ளிக்கூடந்தான் இல்லையில்லை. கடலைக்காட்டுக்கு வந்தா என்ன? போக்கிரிநாய்க.

அம்மா வட்டியில களியைப் போடு! அப்பன் இப்ப வந்துரும்.

ஆத்தா, நா கடலைப் பொறுக்க தெனமும் வந்து, துட்டு சேத்து ரிப்பன் வாங்கணும். இப்ப இருக்கிறது மாரியம்மன் பொங்கலுக்கு வாங்குனது. கிழிஞ்சு போச்சு.

சரி, சரி வாங்கிக்க. ரண்டு வட்டிய எடுத்து கழுவிட்டு வா, களியை போட்டு கொளம்பை ஊத்துறேன்.

மாமா நீ எங்க போன. ராசுகிட்ட மம்பிட்டி வாங்கலையா?

நா ரண்டு தடவை போனேன். ஆளில்லை. கடலைக்காட்டுக்கு எதுக்கு மம்பிட்டி வேணுங்ற, கொத்து போதும்ல.

அவருக்கு இடுப்பில வேட்டி மட்டும்தான். ஒரு துண்டு தோள்ல. ஒட்டிய வயிறு. கொஞ்சம் கூன் விழுந்திருந்தது.

பசங்க எங்க? அவிங்க சாப்பிடலியா? எனக்கு கொஞ்சம் கொளம்பை ஊத்து.

கருப்பாயி! இந்தா உனக்கு அச்சு வெல்லம்.

அடியேய் நல்லா சாப்பிட்றி. அச்சு வெல்லம், மிட்டாய், குச்சி ஐஸ் வாங்கி திண்ணு தேஞ்சிக்கிட்டே போற. வளர்ர பிள்ளை. சாப்பிட்டிட்டு, ஈஸ்வரி மதினி நாளக்கி எந்தக்காட்டுக்கு போகுதுண்ணு கேளு. நாமெல்லாம் செட்டியார் காட்டுக்கு போறோம். அவுங்களையும் வரச்சொல்லு.

ஆத்தா அங்க நாய் இருக்கு, இருட்டாயிருச்சு, எனக்கு பயமாயிருக்கு, அப்பனையும் வரச்சொல்லு.

சரி போடி அப்பன் எதுக்கு? களியை ரண்டு வாய் பிச்சுப்போட்டுக்கிட்டு நா வர்ரேன்.

ஏ மாமோய், சாப்பிட்டாச்சா. வட்டியக் கொடு. அடியே அந்த தம்ளர்ல தண்ணி மோரு. அப்படியே சட்டியில தொளாவி கருவாடு இருந்தா எடுத்துப்போடு.

நானும் வந்து கூப்பிட்டிட்டு, அப்படியே ஈஸ்வரி மக, பெரிய பிள்ளை, சடங்காயிட்டா. அதை விசாரிச்சிர்றேன். எப்ப குச்சுக்கட்ட போறாங்கன்னு தெரியலியே!

போற பாதை ஒரே இருட்டாகவும், கல்லும், முள்ளுமாக, மேடும் பள்ளமாக இருந்தது. கையில சிம்னி விளக்கை எடுத்துக்கிட்டு, காத்துல அணைஞ்சு போகாம மாராப்பு துணியாலும், கையாலும் மூடிக்கிட்டு தட்டுத் தடு மாறி, இடிந்து கிடந்த குட்டிச்சுவர் இடுக்கில நுழைந்து வீட்டுக்குப் பக்கத்தில் செல்லும்போது திருகில் மாவு அரைக்கும் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது. அப்பொழுது இரவு 9 மணி.

மதினி மதினி ஈஸ்வரி மதினி இருக்கீங்களா.

என்ன மாரியம்மாவா. இந்நேரத்தில இங்க வந்திருக்க.

என்னா இந்நேரத்தில கேப்பையை அரைச்சிகிட்டு இருக்கீங்க.

நாட்டாமைக்காரரு காட்டுக்குப் போய் இருந்தோம். கரட்டுக்காட்டிலிருந்து வர ஏழு மணி ஆச்சு. கடலைதான் போட்டாங்க. இங்க வந்து பாத்தா கேப்பை மாவு இல்லை, ஒண்ணுமில்லை. பக்கத்திலிருக்கிற கொத்தனார் கடையில கடலையப் போட்டு கேப்பை வாங்கி கல்லுல நானும், மகளும் அரைச்சிக்கிட்டு இருக்கோம்.

சாணி மொழுகின தரையில் 6 மாதமுள்ள பெண் குழந்தை கிழிந்த சேலை மேலே படுத்துக்கிடந்தது. நான்கு வயது பையன் பசி மயக்கத்தில் சுருண்டு கிடந்தான். இருக்கும் ஒரு மண்ணெண்ணெய் விளக்கும் மாவு அரைக்கும் இடத்தில் இருந்தது. மற்ற எல்லா இடங்களும் இருட்டாக இருந்தன.

மதினி அண்ண எங்க ஆளக்காணோம்?

கடலைக்காட்ல காவலுக்கு படுத்துக்கிருச்சு. சாப்பாடு கொடுத்து அனுப்பணும். இப்ப ஆளுங்க வந்திருவாங்க.

உங்க மக சடங்காயிருச்சின்னு கேள்விப்பட்டேன். எப்ப விசேசம் வக்கப்போறீங்க.

நா என்ன அப்படி பணங்காசோடா இருக்கேன்? அன்றாட பொழுதை ஓட்ட சுடுகஞ்சி கெடைக்கிறதே பெரும் பாடா இருக்கு. நா மாத்து சேலை இல்லாம அலையிரேன். சரி. கருப்பசாமி விட்ட வழி. பாக்கலாம். என்னா எதுக்கு வந்தீங்க.

நாளக்கி செட்டியார் காட்ல கடலை செடி பிடுங்குறாங்க. அங்க போறதுக்கு கூப்பிட வந்தேன்.

நாட்டாமக்கார காட்ல குறை விழுந்து போச்சு. நாளைக்குத்தான் தீரும். நாளைன்னைக்கு வாரேன்.

இவளுக்கு அவர்களுடைய ஏழ்மையைப் பார்த்து கண் கலங்கியது. உடனே வீட்டிற்கு அவசரமாக வந்து சினிமாவிற்கு சென்ற இரண்டு மகன்களுக்கு வைத்துதிருந்த சோளக்களியை எடுத்து வட்டியில போட்டு சட்டியிலிருந்த கொளம்பை எல்லாம் ஊற்றி ஈஸ்வரி மதினியிடம் பசியால் சுருண்டு கிடக்கும் பிள்ளைகளுக்கு கொடுக்கச்சொல்லி விட்டு வந்தாள்.

காலையில காட்டுக்கு கொண்டு போக சுடு கஞ்சி காச்சிக்கலாம். என்ன செய்யிறது. ஈஸ்வரி அக்காவைப் பார்க்க பாவமா இருக்கு.

இந்த அன்புத்தாயிடம் கொட்டிக்கிடப்பது அன்பும், பாசமும் தான். இவளும் அன்றாட வேலைக்கு சென்றால்தான் அவளுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் ஒரு வாய்க்கஞ்சி. கொடுக்கும் மனதை ஆண்டவன் நிறையவே கொடுத்திருக்கின்றான்.

ஈஸ்வரியும், மகளும் கேழ்வரகை அரைத்து, பிய்ந்து போன சல்லடையில் சலித்தார்கள். மண்சட்டியில் தண்ணீர் ஊற்றி, விறகு அடுப்பில் வைத்து காய்ச்சி, வெந்நீரில் மாவை கொஞ்சம், கொஞ்சமாக போட்டு அடுப்பு வைத்துக் கிண்டினாள். மாவு வெந்து நிறம் மாறியது. கெட்டியானது. துடுப்பு வைத்து நன்கு, கட்டுக்கட்டாமல் கிளறி, பெரிய மர அகப்பையில் எடுத்து உருண்டை செய்து அம்மிக்கல்லில் வரிசையாக வைத்தாள்.

இதை ஈஸ்வரி கிண்டிக்கொண்டு இருக்கும்போது, பெரிய மகள் தன் தம்பியை எழுப்பி கொஞ்சம் கொஞ்சமாக மாரியம்மா கொடுத்த களியை வாயில் வைத்து அவனை சாப்பிட வைத்து வாயைக்கழுவி விட்டாள். அவன் அப்படியே தூங்கி விட்டான்.

ஈஸ்வரி ஈஸ்வரி என்னா, ஒரே இருட்டா இருக்கு. வோன்மாமனுக்கு கஞ்சி தயாரா இருக்கா

என்று கேட்டு வாசலில் இருந்து சத்தம் வந்தது. ஈஸ்வரி இருந்த ஒரு விளக்கையும் எடுத்து வந்து யார் என்று பார்த்தாள். நாட்டாமைக்காரர் காட்டுக்குப் போகும் காவல்காரர் நின்று கொண்டு இருந்தார். அவள் உள்ளே சென்று நெளிந்து போய் இருந்த அலுமினிய தூக்குச் சட்டியில் இரண்டு களி உருண்டையைப் போட்டு, மாரியம்மா கொடுத்த கொளம்பை ஊற்றினாள். கருவாட்டுக் கொளம்பு, அதனால் இரண்டு கரித்துண்டுகளைப் போட்டு மூடி காவல்காரரிடம் கொடுத்து அனுப்பினாள். இல்லாவிட்டால் பேய் அல்லது முனி வந்து சோறு கேக்குமாம்.

களியை சாப்பிட தொட்டுக்க ஒண்ணுமே இல்லையே. என்ன செய்வது. பத்தரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. கடைகளும் மூடிவிட்டார்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் இவர்களைப் போல்தான். எந்த வீடுகளிலும் வெளிச்சம் இல்லை. காலையில் எல்லோரும் வேலலக்குச் செல்ல கூட்டுக்குள் அடைஞ்ச காக்காய்களைப் போலானார்கள்.

கடலைக் காட்டில் ஒரு பெரிய புளிய மரம் இருந்தது. அதற்கடியில் தான் நிழலுக்காக கஞ்சி குடிக்கும் போது இருந்தார்கள். அப்பொழு ஈஸ்வரி அங்கு விழுந்திருந்த புளியங்காய்களை முந்தானையில் கட்டிக்கொண்டு வந்து இருந்தாள். அவைகளை எடுத்து அம்மிக்கல்லில் வைத்தாள். வேலைக்குச் செல்லும்போது பொறுக்கி வீட்டிற்கு கொண்டு வந்து வைத்தது. மிளகாய்களையும் கல்லில் வைத்து அரைத்தாள். அரைத்ததை எடுத்து சிறு மண் சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்தாள். உப்பையும் போட்டுக்கலக்கி பெரிய மகளை சாப்பிட அழைத்தாள். கிழிந்த சேலையில் படுத்க்கிடந்த மகளை எடுத்து மடியில் போட்டு பால் கொடுத்துக்கொண்டே, புளி கரைசலில் தொட்டுக்கொண்டே இரண்டு உருண்டை களியை சாப்பிட்டாள். மகளும் சாப்பிட்டவுடன் மீதமிருந்த களியை தண்ணீரில் போட்டாள். நாளைக்கு கடலைக்காட்டில் பச்சைக்கடலைய வெஞ்சனமாக வைத்துக்கொண்டு களியை கரைத்துக் குடித்துக்கொள்ளலாமே. மடியில் இருந்த மகளை இறக்கி பழையபடி கிழிந்த சேலையில் போட்டு விட்டு தானும் கையைத் தலையணையாக வைத்துக்கொண்டு சிம்னி விளக்கு திரியை இறக்கிவிட்டு மகளைக் கதவை சாத்தச் சொல்லிவிட்டு தலை சாய்ந்தாள்.

சாய்ந்தவுடன் உறங்கிப் போய்விட்டாள். முதல் கோழி கூவும் சத்தம் கேட்டது. கண்ணெல்லாம் எரிந்தது. மகளையும் எழுப்பி தானும் எழுந்து எண்ணெய் காணாத சிக்கு விழுந்த தலைமுடியை எடுத்துக் கட்டினாள். வளர்ந்த காது மட்டும் இருந்தது, தண்டட்டி இல்லை. எதுவுமே இல்லாமல் மூளியாக இருந்தாள். கதவைத் திறந்து வெளியே வந்து அங்கிருந்த வெளக்குமாரை எடுத்து வாசலைக் கூட்டினாள். வெளித்திண்ணயில் வைத்திருந்த சாணி சட்டியை எடுத்து கரைத்து வாசல் தெளித்தாள்.

சேலையில் ஒட்டிக்கொண்டு இருந்த சாணித் தூசிகளைத் தட்டிவிட்டு இருக்கி கட்டிக்கொண்டாள். சிம்னி விளக்கைப் பற்ற வைத்து பெரிய மகளைக் கிளம்பு, கிளம்பு என்றாள். அப்படியே அடுப்புக்குச் சென்று சாம்பலை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு பல் தேய்த்தாள். வாயைக் கொப்பளித்துக்கொண்டே, கிணற்றிலிருந்து தண்ணி எடுத்து வந்து சாயங்காலம் காய்ச்சி மேலுக்காவது ஊற்ற வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

பெரிய மகளை கிளப்பிக்கொண்டு கைக்குழந்தையை கையில் எடுத்துக்கொண்டாள். மகள் மிச்சமிருந்த களி உருண்டைகளைத் தூக்கு வாளியில் போட்டு எடுத்துக்கொண்டு தம்பி உள்ளே படுத்துக் கொண்டு இருப்பதால், கதவை சாத்திவிட்டு அம்மாவைப் பின் தொடர்ந்தாள். போகும்போது பல் இல்லாத கிழவி காலை நீட்டிக்கொண்டு அந்த நேரத்தில் வெற்றிலை பாக்கு இடித்துக் கொண்டு இருந்தது. ஈஸ்வரி கிழவியைப் பார்த்து,

பெரிய ஆத்தா! முருக உள்ள படுத்திருக்கா. கொஞ்சம் பாத்துக்க ஆத்தா. எங்கையாவது போயிறப்போ
றான். பசின்னு அழுதா கொஞ்சம் கஞ்சி இருந்தாக் கொடு. என் வீட்ல எதுவுமில்லை.

என்று சொல்லிக்கொண்டே பதிலுக்குக்கூட காத்திருக்காமல் கைக்குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு வேகமாக நடந்தாள். பெரிய மகள் தன்னை ஒத்த கூட்டுக்காரிகளுடன் சேர்ந்து நடந்து போய்க்கொண்டு இருந்தாள். அவளிடம் போய் சேர்ந்து கொண்டாள். இன்றைக்கு சாயங்காலமாவது நேரத்தில் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். இன்றைக்கும் அவள் ஏழு மணிக்குத்தான் வந்தாள். மாரியம்மா வந்து பார்க்கும்போது ஈஸ்வரியும் மகளும் கேழ்வரகை அரைத்துக் கொண்டு இருந்தார்கள்.

- புவனேஸ்வரன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com