Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
ஆறுமுவம் பொண்டாட்டி
அருட்பெருங்கோ

பொனாசிப்பட்டி ஆறுமுவம் பொண்டாட்டின்னா தெக்க அந்தரப்பட்டியில இருந்து வடக்க மகிளிப்பட்டி வரைக்கும் கொணமான பொம்பளைனு அத்தன சனத்துக்கிட்டயும் நல்ல பேரு. அவளும் யாருக்கும் எந்தக் கெட்டதும் மனசுல கூட நெனைக்க மாட்டா. நல்லது கெட்டதுக்கு வூட்டுக்கு வார சனத்த ஒரு வேலையும் செய்யவுட்டதில்ல. ‘அடநீங்க ஒக்காருங்கத்தாச்சி. செத்த நேரத்து வேல..நான் பாத்துக்கறேன்’ னு சொல்லிட்டு அவளே செஞ்சு முடிச்சிருவா. யார் வூட்டு கண்ணாலங்காச்சினாலும் சரி, எழவுழுந்த வூடாருந்தாலும் சரி காய்கசவ அரியற எடத்துலயோ, யாணம்பாணம் வெளக்கற எடத்துலயோ அவள பாக்கலாம். ‘ஆளுக்கு அஞ்சாறா செஞ்சா செத்த நேரத்துல செஞ்சிரலாம்’னு சிரிச்சுக்கிட்டே சொந்த வூடு மாரி மளமளன்னு வேலைய பாத்துக்கிட்டு இருப்பா. ஆறுமுவம் பொண்டாட்டி இருந்தா ஏழூரு வேலையயும் என்னா சேதி?ன்னு கேட்றுவான்னு பொம்பளையாளுங்க மெச்சிக்குவாங்க.

சாமி கும்பிட்டாக்கூட ஆத்தா மகமாயி இந்த வருசமாவது ஊர்ல மழயக்கொண்டா. எல்லா சனத்தையும் காப்பாத்துன்னு வேண்டிக்கிட்டு எம்புருசனுக்கு நல்ல புத்தியக்கொடுன்னு கடசியாதான் வேண்டிக்குவா. ஆனா, போன செம்மத்துல அவ என்ன பாவம் பண்ணாளோ இப்புடி ஆறுமுவத்துக்கு வாக்கப்பட்டு சீரழியறா. கட்டிக்கொடுக்கும்போது அவங்கப்பாரோட சேந்து காடுகரய பாத்துக்கிட்டு ஆறுமுவம் ஒழுங்காதான் இருந்தான். வருசம் ஒண்ணா வரிசையா நாலு புள்ள பொறந்துச்சு. நாலும் பொட்ட. அவங்கப்பாரு போய் சேந்த பின்னாடிதான் அவனுக்கு புத்தி கெட்டுப்போச்சு.

இந்தூர்ல ஈனப்பயதாங் இருப்பான். நா அரிசி யாவாரம் பண்றேன்னு பொண்டாட்டி புள்ளய ஊர்லயே வுட்டுட்டு உடுமலைப்பேட்டைக்கு ஓடிப்போயிட்டான். நாலு வருசமா ஆளு அட்ரசே காணோம். தேடிப்போன ஆளுங்களுக்கும் ஒரு ருசுவுங் கெடைக்கல. ஆனா அவன் திரும்பி வருவான்னு அவ நம்பிகிட்டு இருந்தா. ஏதோ ஆறுமுவம்பொண்டாட்டிங்கறதால இன்னும் இந்தூர்ல இருக்கா வேற ஒருத்தியா இருந்தா இந்நேரம் பொறந்த ஊருக்கே பொட்டியக் கட்டியிருப்பா’ ன்னு ஒரக்கேணியில தண்ணியெறச்ச சனம் பேசிக்கிச்சுங்க.

அந்த வருசம் மாரியாயி நோம்பியப்ப வந்திருந்தான். பொண்டாட்டி, புள்ளைங்களுக்கு இந்தான்னு ஒரு சீலத்துணி, சட்டத்துணி வாங்கியாரல. அப்பானு போயி கட்டிகிட்ட புள்ளைங்க ஏமாந்து போச்சுங்க. ஊர்ல இருந்த நாள்ல ஒரு நாக்கூட அவன் வூடு தங்கல. இச்சி மரத்தடில சீட்டாடுனான், மொட்டயன் காட்டுல சேத்தாளிங்க கூட மொடாமுழுங்கி மாரி கள்ளுக் குடிச்சான். குளித்தல போயி சினிமா பாத்தான். ஆனா கொண்டாந்த காசுல ஒத்த பைசா வூட்டுக்குனு குடுக்கல. நோம்பிக்கு மக்யா நாளு ராத்திரி கரகாட்டம்னு சொல்லி ரெக்கார்ட் டான்சு நடக்க மத்திப்பட்டிக்காரன் கொழா செட்டுல ஊரு முழுக்க பாட்டு சத்தம் மொழங்குச்சு. புள்ளைங்கள தூங்க வச்சிட்டு படுத்திருந்த ஆறுமுவம்பொண்டாட்டி அழுதுகிட்டே அவன திட்டிட்டு இருந்தா.

நம்முடைய நடனத்தைப் பாராட்டி, இப்பொழுது உடுமலைப்பேட்டை அரிசி வியாபாரி திரு. ஆறுமுகம்பிள்ளை அவர்கள் ரூபாய் இரண்டாயிரத்தை அன்பளிப்பாக அளித்துள்ளார்கள். அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டு அடுத்த பாடலாக காதுல அதக்கேட்டதும் ஆங்காரம் வந்தவாளாட்டம் எந்திரிச்சுப் போனா ரெக்கார்டு டான்சு நடந்த நாடகக்கொட்டாய்க்கு. அங்க தண்ணியப்போட்டுட்டு தள்ளாட்டத்துலதான் இருந்தான் ஆறுமுவம். அங்கன ரெண்டு பேருக்கும் நடந்த சண்டைல ரெக்கார்டு டான்சு நின்னு எல்லாரும் இவங்க சண்டய வேடிக்க பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. கடசில ‘நீயெனக்கு பொண்டாட்டியுமில்ல நா ஒனக்கு புருசனும்மில்ல’ னு சொல்லிட்டு அப்பவே உடுமலப்பேட்டைக்கு போயிட்டான். அன்னைக்கு வூடு வர்றவரைக்கும் எல்லா சாமிக்கும் சாபம் குடுத்துக்கிட்டே வந்தா. நாலு பொட்டப்புள்ளைய வச்சிருக்காளே, அந்த மாரியாயி, ஆறுமுவம் பொண்டாட்டிய இப்படி சோதிக்குதேன்னு ஊரு சனம் வெசனப்பட்டுக்குச்சு.

அப்பறம் அவன் அங்கயே இன்னொருத்திய சேத்துக்கிட்டான்னு தெரிஞ்சதும், அவன் திரும்பி வருவான் புள்ளைங்கள கர சேப்பாங்கற நெனப்பெல்லாம் அவளுக்கு அத்துப்போச்சு. தனியா வெள்ளாம வைக்க அவளால முடியாதுன்னு, இருந்த நெலத்தையும் குத்தைக்கு வுட்டுட்டு அவ கொத்து வேலைக்கு போவ ஆரம்பிச்சுட்டா. அப்பறம் ஊர்லயும் மழயில்லாம என்னப்பண்றதுன்னு தெரியாம கரும்பு வெட்ற வேலைக்குப் போவ ஆரம்பிச்சா. மில்லு தொறந்திருக்கற மாசத்துல சத்தியமங்கலத்துக்கோ, பெருகமணிக்கோ புள்ளைங்கள இழுத்துக்கிட்டுப் போயிருவா. மூணு மாசம், நாலு மாசம்னு வேலையிருக்கும். மில்லு மூடிட்டா ஊருக்கு வந்துரணும். ரெண்டு வருசம் இப்படியேப்போச்சு.

புள்ளைங்க பள்ளியோடம் படிக்க ஒரே ஊர்ல இருந்தாதா சொகப்படும்னு ஊர்லயே இருக்கனும்னு மூணாவது வருசம் கரும்பு வெட்ற வேலைக்கும் போவல. பொழப்புக்கு என்னப்பண்றதுன்னு தெரியாம முழிச்சவளுக்கு ஒரு கரும்பின்ஸ்பெக்டர் சொன்னது சரியாப்பட்டுச்சு. ஏதோ மகளிர் சுய உதவிக்குழுவுன்னு பொம்பளைங்களுக்கு தொழில் செய்ய கவர்மெண்டு லோன் குடுக்குதுன்னு சொல்லவும், யார் யாரையோ புடிச்சு பட்டுப்புழு வளக்கறதுக்கு லோன் வாங்கிட்டா. குளித்தலைல இருந்து அதுக்கு கூடெல்லாம் வந்து எறக்கிட்டுப் போயிட்டாங்க. ஒரே வருசத்துல நல்லா பெருக்க ஆரம்பிச்சிருச்சு. அவளப்பாத்து ஊருப்பொம்பளைங்க கொஞ்சம் பேரும் சேர அடுத்த வருசம் குளித்தல தாலுக்காவுல அவங்க குழுதான் நெறய லாபம் பாத்துதுன்னு அதிகாரிங்க எல்லாம் பாராட்டுனாங்க. புருசன் வுட்டுட்டு ஓடுனாலும் ஒத்தப் பொம்பளையாவே ஆறுமுவம் பொண்டாட்டி நாலு புள்ளைங்களையும் கர சேத்துடுவான்னு ஊருக்குள்ள ஆம்பளைங்களும் பேசிக்கிட்டாங்க.

அந்த வருசம் தேர்தல்ல பிள்ளாபாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவி பொம்பளைங்களக்குனு ஒதுக்கியிருந்தாங்க. பொனாசிப்பட்டில இருந்து அந்த பஞ்சாயத்துக்கு மூனு மெம்பருங்க. மகிளிப்பட்டியில ரெண்டு, தெக்கியூர்ல மூனு. மொத்தம் பதனஞ்சு மெம்பருங்க பஞ்சாயத்துல இந்த மூனூருக்காரங்க மெஜாரிட்டி வந்தா அதுல யாரோ ஒருத்தர் தலைவராயிடலாம். மீதி ரெண்டு ஊர்க்காரங்க சம்மதம் வாங்கி போட்டியில்லாம யார அனுப்புறதுன்னு முடிவு பேச இச்சி மரத்தடியில கூட்டம் போட்டிருந்தாங்க. ஆறுமுவம்பொண்டாட்டி தான் சரியான ஆளுன்னு பள்ளியோட வாத்தியார் சொன்னதுக்கப்பறம் ஊரே அதுக்கு தலையாட்டுச்சு.

மொதல்ல இதுக்கு அவ ஒத்துக்கலன்னாலும், நம்மூரு ஆளு தலைவராயிட்டா, நம்ம கம்மாய தூருவாரலாம், நம்மூருக்கு பெரிய பள்ளியோடம் கட்டலாம்னு சொல்லி அவள சம்மதிக்க வச்சிட்டாங்க. மூனூரு சனமும் ஒத்துமையா இருந்ததுல அவளே செயிச்சு தலைவராயிட்டா. முடிவு தெரிஞ்சன்னைக்கு பொனாசிப்பட்டியில வேட்டு வெடிச்சுக் கொண்டாடி, சாயுங்காலம் கூட்டம் போட்டிருந்தாங்க. பள்ளியோட வாத்தியாரு எல்லாருக்கும் முட்டாய்க் கொடுத்துக்கிட்டே சந்தோசமா சொல்லிக்கிட்டு இருந்தாரு ‘நம்ம ஆறுமுவம் பொண்டாட்டிதான் இனிமே பிள்ளபாளையத்துக்கே பஞ்சாயத்துத் தலைவர்!’

அப்பறமா அவ பேச ஆரம்பிச்சா... ‘ம்பேரு ஆறுமுவம் பொண்டாட்டியில்ல லெச்சுமி. நம்மூருக்கு ...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com