Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
சூல்

அரியநாச்சி


(மேடை மருத்துவமனையின் ஒரு பிரசவ வார்டைப்போல் இருக்க, அங்கே நான்கு கட்டில்கள் போடப்பட்டிருக்கிறது. இரண்டு கட்டில்கள் வலது புறத்திலும், இரண்டு இடது புறத்திலும் போடப்பட்டிருக்கிறது. வலது புறத்தில் போடப்பட்டிருக்கும் முதல் கட்டிலில் ஒரு பெண் வயிற்றைத் தடவிக்கொண்டு அமர்ந்திருக்கிறாள். மேடையில் ஒளி முழுமையாக வந்தபின் அவள் பார்வையாளர்களைப் பார்த்து)

ஆதிவள்ளி: நான் ஆதிவள்ளி. பிரசவத்திற்காக இந்த மருத்துவமனைக்கு வந்துதிருக்கிறேன். இன்றோடு எத்தனை நாட்கள் இங்கே தங்கியிருக்கிறேன் என்பதையே மறந்துபோகும் படிக்கு காத்திருக்கிறேன், (சிறிது மெளனத்திற்குப் பின்) வயிற்றிலிருப்பதை இறக்கிவைக்க. இங்கே நான் சேர்ந்தநாள் முதலாக, என்னோட தங்கியிருந்தவர்கள் எல்லாம் குழந்தைகளைப் பெற்று எடுத்துக்கொண்டு, வீடுபோய் சேர்ந்துவிட்டார்கள். நிறையபேர் வந்து வந்து போயிருக்கிறார்கள்.ஆனால் நான் மட்டும் வெகுநாட்களாக இங்கே காத்திருப்பது, என்னை மிகவும் வருத்தத்திற்குள் ஆழ்த்துகிறது. இதோ. (காலியாக இருக்கும் கட்டில்களைக் காட்டி) எப்போதும் நாலுபேர் இந்த வார்ட்டில் இருப்பார்கள். என்னையும் சேர்த்துதான். நேற்று இருவர் சென்றுவிட, ஒரே ஒருத்திதான் கூட இருந்தாள் அவளும் இன்று காலை வலி வந்துவிட சென்றுவிட்டாள். இப்போது நான் மட்டும். (அப்போது பிரசவலியால் துடிப்பவளின் அலறல் கேட்கிறது.) அவள் தான் இறுதியாக என்னோடு இருந்தவள். அழுகிறாள். (குழந்தையின் அழுகுரல் கேட்கிறது) குழந்தை பிறந்துவிட்டது. குழந்தை பிறந்துவிட்டது. (சிறிது மெளனம், பின்) என் குழந்தையின் அழுகுரலும் இப்படித்தான் இருக்குமோ! இவளைப் போல் தான் நானும் அழுது ஆர்ப்பட்டம் செய்வேனோ!

(அப்போது மூன்று கர்ப்பினிப் பெண்கள் உள்ளே வருகிறார்கள். காலியாகக் கிடந்த கட்டில்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். பின், மெளனமாக படுத்து உறங்கி விடுகின்றனர். மேடையில் ஒளி மெல்ல குறைந்து மீண்டும் கூடுவது ஒரு நாள் கடந்துவிடுவதைக் குறிப்பதாகக் காட்டுகிறது. நால்வரும் ஒன்றாக முன்மேடைக்கு வந்து பேசுவது போல் பேசிவிட்டு மீண்டும் தம் கட்டிலுக்குச் சென்று படுத்துக்கொள்கிறார்கள். மீண்டும் ஒளி குறைந்து கூடுகிறது. அது மேலும் ஒரு நாள் கடந்துவிட்டதைக் குறிக்கிறது. மீண்டும் ஒளி குறைந்தபோது, வந்த புதியவர்கள் மூவரில் ஒருத்திக்கு வலியேற்பட்டு அவள் அலற, அவளை ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் அவளது கட்டிலுக்கு வேறொருத்தி வந்து சேர்கிறாள். ஒளி மேடையில் முழுமையாக வந்தபோது ஆதிவள்ளி முன்மேடையின் விளிம்பில் சோகமாக அமர்ந்திருக்க, அவளைக் கண்டு மற்ற பெண்களாக பெண் 1, 2 மற்றும் 3 ஆகியோர் வருகின்றனர்.)

ஆதிவள்ளி: ஆழ்ந்த தூக்கத்திலிழுந்து எழுந்ததுபோல் இருக்கிறதாம். அவளின் ஒவ்வொரு நரம்புகளிலிருந்து சிறுசிறுத்துண்டுகளை நறுக்கியெடுத்துக்கொண்டு உடல் முழுதும் சிசு ஓடுவதை பார்த்திருக்கிறாள். குழந்தையின் விநோத ஓட்டம். எதை நோக்கியது? அவளால் சொல்ல முடியவில்லை. தெரிந்து, சொல்லமுடியாமல் தவிக்கவில்லை. அவளுக்குத் தெரியவில்லை. ஓடுகிறது. ஒருவேளை அவன் என்பதும் அவளாகவும் இருக்கலாம். அது ஓடுகிறது. உலகைவிட்டு மறையும் மனிதர்களைக் குறிக்கும் அந்த ‘அது’ உடலில் இருந்து வெளியேறாததால் ‘அது’ என்றே குறிப்பிடலாம்.

பெண்2: அது!

பெண்4: ஆமாம் அது.

ஆதிவள்ளி: அதன் ஆர்ப்பாட்டம் எதற்கு என்றுதான் தெரியவில்லை. அவளுக்கு ஆராயத் தோன்றியதாக வெளிப்படுத்தினாள்.

பெண்2: இதில் ஆராய என்ன இருக்கிறது?

ஆதிவள்ளி: இருக்கிறதை ஆராயத் தொடங்கலாம் இல்லையா?

பெண்3: இருக்கிறது என்று அனுமானித்த ஒன்றை சொல்லும் போது ‘அது’ என்பதை ‘அது’ என்று எப்படிச் சொல்வது.

ஆதிவள்ளி: சொல்லியாச்சு. அதற்குப்பின் எப்படிச் சொல்வதென்றால்...? சொன்னது போல் சொல்ல வேண்டியதுதான். இனி அது என்று சொன்னாலும், பிணவாடைதான் ஞாபகத்திற்கு வருகிறது.

பெண்4: இறப்பினை முதல் புள்ளியிலேயே சுமந்துவரும் ஜீவன்கள். நாம் அதனை எங்கே ஒளித்து வைத்தோம். நம்மீது பிணவாடை இல்லையே?

ஆதிவள்ளி: பழகிப்போய்விட்டது.

பெண்2: எல்லாம் இப்படித்தான் பழகிப் பழகி ஞாபகத்திலிருந்து மறைந்துவிடுகிறது. ஒன்றையும் நாம் தொடர்ந்து ஞாபகத்தில் வைத்திருப்பதில்லை. உடனே மறந்துவிடுகிறோம். அது உள்ளே இன்னும் மேலும் மேலும் நாற்றமடைந்து உலவினாலும்.

ஆதிவள்ளி: பிணங்கள் பிறந்து பிணமாக வளர்ந்து பிணமாகிறது.

பெண்4: பிணமாகிறோம்.

பெண்3: பிணம் பிறக்கிறது.

பெண்2: பிணம் வளர்கிறது.

ஆதிவள்ளி: பிணம் இறக்கிறது. (சிறிது மெளனம், பிறகு அவளே தொடர்ந்து) இல்லை இறப்பதில்லை. மீண்டும் வேறொரு பிறவி எடுக்கிறது. காற்றில் கோடானுகோடி நுண்கிருமியாய். அங்கே வளர்ந்து பின் உருமாற்றம் பெருகிறது செடிகொடியாய்.

பெண்2: ஏன் சுவாசிக்கும் உன்னிலும், ஆடுமாடுகளிலும்.

ஆதிவள்ளி: உயிரோடு உலவும் எல்லா ஜீவராகளிகளுள்ளும் புகுந்து வளர்கிறது அந்தந்த உயிர்களாக.

பெண்4: பல்கிப் பெருகுகிறோம்.

(பின்னரங்கிலிருந்து பிரசவலியால் பெண்னொருத்தியின் அலறல். அந்த அலறலைக் கேட்டதும் நான்கு பெண்களும் எழுந்து ஒலி வந்த திசையை பயத்துடன் பார்க்கிறார்கள்.)

பெண்3: அவள்... அவள்...அவள்தானே!

ஆதிவள்ளி: ஆமாம் அவள்தான். நேற்றுவரை நம்மோடு பிணங்களைப் பற்றியான பிறப்பு வளர்ப்பு இறப்பைப் பேசியவள். இன்று...

பெண்3 அழுகிறாள். பெண்4 அலறுகிறாள்.

பெண்3: வலி அதிகமாக இருக்குமோ?

பெண்2: தாங்க முடியாது.

ஆதிவள்ளி: உனக்கு...?

பெண்2: தெரியும். நான் ஏற்கனவே ஒரு பிள்ளையைப் பெற்றவள். (சட்டென அவள் எதையோ யோசித்தவளாக இருந்து சிரித்துவிட்டு) பிணத்தைப் பெற்றவள் தான். அந்தப் பிணத்தை வளர்ப்பவள்.

ஆதிவள்ளி: உன்னால் எப்படி பிணமென்று சொல்ல முடிகிறது?

பெண்2: உங்களோடு பேசும்போது எனக்கு அப்படிச் சொல்லத் தோன்றுகிறது. இருந்தாலும் அப்படிச் சொல்வது சரிதான் என்றும் உணர்கிறேன். இறப்பைத் தொட்டு பிறக்கும் அந்தக் குழந்தையும் மரணத்தை உதறித் தள்ளிவிட்டு அந்தக் குழந்தையை ஈனும் தாயும் ....(சிறிது மெளனத்திற்குப் பின் மிகுந்த யோசனைக்குப் பின் அவளே தொடர்ந்து) இருவரும் மரணத்தின் மையப்புள்ளியிலிருந்து பிதுங்கி வெளியேறி வருபவர்கள் தாம். மரணம் அப்போது மிக சுவாரசியமாக இருக்கும். மரணம் பயத்தைத் தராது. வண்டிக்கடியில் சிக்கி மரணத்தை ஏற்கும் மரணங்களிலிருந்து மாறுபட்டது அந்த மரணஸ்பரிசம். ஒருவிதத்தில் புனிதமானதாகும். அது எந்த விதத்தில் என்று கேள்விகள் கேட்டுவிடாதீர்கள். அங்கே எந்தக் கேள்விக்கும் பதிலில்லை. அது ஒரு இயக்கப்புள்ளி. எல்லா மாற்றங்களும், வேதியியல், புவியியல், பெளதீக, லெளகீக என எல்லா படிப்பினைகளின் இயக்கமும் இயங்குகின்ற மிகச்சிறிய புள்ளி. அங்கே நான் சென்றிருக்கிறேன். அதிலிருந்து என் குழந்தை எது என இனம் கண்டு கொண்டு வந்திருக்கிறேன். அந்த இடம் மிக விநோதமானது. அதில் எந்த வண்ணமும் இல்லை. வாடையும் இல்லை. எந்த உணர்வும் இல்லை. ஒருவேளை அது சூன்யப் பிரதேசமாகவும் இருக்கலாம். அது எனக்குத் தெரிந்தது. தெரிந்தது வண்ணத்தினால் அல்ல. ஆனால் வேறெதாலோ. அந்த இடத்தை நான் உணர்ந்தேன் அது என்னவிதமான உணர்வு என்று தெரியவில்லை. சற்று முன் சொன்ன உணர்வற்ற நிலை. அந்த உணர்வற்ற நிலையென்பது இன்னது என்று இனம் காணமுடியாத ஒரு நிலை. ஆனால் உணர்வு உண்டு. இப்போது சொல்கிறேன். முன்னுக்குப்பின் முரணாக சொல்கிறேன். அங்கே உணர்வு உண்டு ஆனால் அது இன்னது என்று சொல்லமுடியாத, அனுபவத்திற்குள் இல்லாத ஒரு உணர்வு. வண்ணமுண்டு. அதுவும் அங்கே செல்வதற்கு முன் எனக்குள் சேமிக்கப்பட்டுள்ள அனுபவத்தில் இல்லாதது. ஆனால் ஒருவிநோத ஒலி மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. அது ‘ஓ......ம்’ ஆக இருக்கலாம். அல்லது ‘ஓ...........’ ஆக இருக்கலாம் அல்லது வெறும் ‘ம்..............’ ஆகவும் இருக்கலாம். அதுதான் என் மூச்சு. என் உயிர். என் குழந்தையின் உயிர். எங்களது உடல். என்னுடையதையும் என் குழந்தையையும் ஒன்றாய்க் கரைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒருவித பானை அது. அதற்குள்ளிலிருந்துதான் அந்த ஒலி வந்தது. நான் என் குழந்தையை வாரிச் சுருட்டிக்கொண்டு வெளியேறும் வரை. ஏன் குழந்தையை ஈன்ற பின்னும் வெகுநேரம் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. (மற்ற மூன்று பெண்கள் பயந்து போய் அவளை வெகு நெருக்கமாக நெருங்கி அணைத்துக்கொண்டு அவளது முகத்தையே பார்க்கிறார்கள். அவள் அவர்களை அணைத்துக்கொண்டு வாஞ்சையாகத் தடவி மேலும் தொடர்கிறாள்) இது எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய பாக்கியம். வரம். தவம். சந்தோசம். வாழ்க்கையில் இப்படியொரு நிலையை எந்த சித்தனும் அனுபவித்திருக்க முடியாது. ஏன் எந்தக் கடவுளும் கூட அனுபவித்திருக்க முடியாது. நம்போன்ற கர்ப்பினிகளைத் தவிர.

(மீண்டும் அந்த பெண்ணின் அலறல் கேட்கிறது. இப்போது இன்னும் சற்று வேகமாக)

காட்சி-2

(பெண்ணின் வலி கேட்டு அவர்கள் நால்வரும் பயத்துடன் ஒலி வந்த திசை பார்த்துக்கொண்டு இருக்க, அவ்வப்போது குறுக்கும் நெடுக்குமாக வலி வந்த பெண்களை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி சென்று, அவ்வப்பொது மேடையில் இருக்கும் இந்த நான்கு பெண்களுக்கும் மருந்து கொடுத்து, ஊசி பேட்டுவிட்டுச் சென்ற நர்சுகளும், இவர்களுக்குத் தெரியாமல் வெளியிலிருந்து இந்த நால்வரையும் கவனிக்கிறார்கள். பின் அவர்களில் ஒரு நர்சு முதலில் அவர்களை நோக்கி வருகிறாள், மிகவும் கோபமாக).

நர்சு 1: -ஏம்மா உனக்கு எத்தன வாட்டித்தான் சொல்றது. ஒருதடவ சொன்னாப் பத்தாது. என்ன சென்மமோ? (என அவள் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள். அவளைத் தொடர்ந்து அங்கே தரையைக் கூட்டி சுத்தம் செய்பவள் வருகிறாள்)

தரையைக் கூட்டுபவள்: தே. தே. எழுந்திரி. எழுந்திரிங்கரன்ல. நர்சம்மா சொன்னுது. காதுல உழுவுல. எழுந்திரிச்சு பெட்டுக்குப்போ. போ. போ.

(என அவள் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள். அப்போது முன் மேடையின் விளிம்பில் ஒருவன் அவர்களையே கவனித்துக் கொண்டிருக்கிறான். அப்போது மீண்டும் முன்பு திட்டிவிட்டுச் சென்ற நர்சும் அவளோடு இன்னொரு நர்சும் உள்ளே வருகிறார்கள், கோபமாக)

நர்சு 1: -இந்தம்மா சொன்னது காதுல விழல. போ. போ. போய் படு.

நர்சு 2: -என்ன வாயோ போ. தொன்ன வாயி. ஓயவே ஓயாதா.

நர்சு 1: -தோ பார் சொல்லிக்கிட்டே இருக்கன்னு பாக்காதீங்க. அப்புறம் டாக்கடர்கிட்ட சொல்லி வெளியே அனுப்பச் சொல்லிடுவேன் ஜாக்கிரதை.

(என இருவரும் மிகக் கோபமாகச் சொன்னதும் அவர்கள் நால்வரும் மெல்ல எழுந்து பின்னரங்கிற்குச் சென்று மறைகிறார்கள். நர்சு இருவரும் அவர்கள் போய் விட்டர்களா என உறுதிபடுத்திக் கொண்டபின் மேடையின் மையத்தில் வந்து அமர்ந்து கொள்கிறார்கள். அப்போது இதுவரை அங்கே நடந்தவற்றை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவன் அவர்களை நோக்கி வருகிறான், கோபமாக)

அவன்: என்னம்மா என்ன நெனச்சிக்கிட்டு இருக்கீங்க? வாயி வயிறுமா இருக்கறவங்கன்னு கூட பார்க்கமா இப்படி அநாகரிகமா நடந்துக்கறீங்களே?

நர்சு 1: நீ யாரு?

அவன்: நான் என் பொண்டாட்டிய பார்த்துவிட்டுப் போக வந்தேன்...

நர்சு 2: பார்த்துட்ட இல்ல. போ போய் சேரு.

அவன்: அது எனக்குத் தெரியும் நீங்க சொல்ல வேண்டியதில்லை.

நர்சு1: பாத்துட்டயில்ல. போ. போ. ( என சொன்ன நர்சு தன் தோழியினைப் பார்த்து கிண்டலாக ஒரு சிரிப்பை சிரிக்கிறாள். பின் அவனைப் பார்த்து) தெரியுங்கற பின்ன ஏன் நிக்கிற. போ. போ.

அவன்: போறன். அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு பதில் வேணும்.

நர்சு1: எதுக்கு பதில் வேணும்?

அவன்: வாயும் வயிறுமா இருக்கறவங்கள ஏன் வெரட்டினீங்க. அவங்க ஏற்கனவே வேதனையில இருக்காங்கயில்லியா?

நர்சு1: நீ சொல்லித்தான் எங்களுக்கே இப்பத் தெரியவருது. (தன் தோழியைப் பார்த்து) அவங்க வேதனையில இருக்காங்களாம். பொண்டாட்டிய பாக்க வந்தவரு சொல்றாரு. கேட்டுக்க என்ன.

(அவனுக்கு கோபம் தலைக்கேறுகிறது.)

அவன்: மரியாதைக் கொடுத்த பேசிக்கிட்டு இருக்கேன். கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்கீங்க. அப்புறம்...

நர்சு2: அப்புறம் என்ன அப்புறம். போயா. போ. உன் வீரமெல்லாம் எங்களுக்குத் தெரியும் போ. போ. பொண்டாட்டிய பாத்துட்டயில்ல போ. போ.

நர்சு1: போ. போ. எங்களுக்கு வேல இருக்கு. வேலய கெடுக்காத.

(அவனுக்கு கோபம் அதிகமாகிறது. தரையில் ஓங்கி உதைத்து)

அவன்: என்ன? என்ன? கேட்டா பதில் சொல்ல மாட்டீங்க? மூஞ்ச ஒடச்சிடுவேன். தனியா இருக்கேன்னு கேலி பண்றீங்களா. ஆம்பளடீ ஆம்பள. இப்ப நெனச்சாலும் பின்னு பின்னுன்னு பின்னிடுவோம். ஏங்கிட்ட வேணாம். ஆமாம். என் பொண்டாட்டி இப்படி இருக்காளேன்னு பாக்குறேன்.

(அப்போது ஒரு வயதான நர்சு (பெரிய நர்சு) உள்ளே வருகிறாள். அவள் அந்த சூழலின் நிலையைப் புரிந்துகொள்கிறாள். மெல்ல அவனருகே வந்து அவன் தோலில் கைப்போட்டு)

பெரிய நர்சு: இங்க பாருப்பா. நீ கோவப்பட்றதுல அர்த்தமிருக்க. அது உன்னப் பொருத்த வரைக்கும் சரி. ஆனா இங்க இப்படித்தான் இருக்கனும். (அப்போது பிரசவலியால் துடிக்கும் ஒரு பெண்ணின் ஓலம் கேட்க அவன் பயந்துவிடுகிறான். காதைப் பொத்திக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிடுகிறான். அவனை அவள் அணைத்து அமரச் செய்கிறாள். அவனுக்கு தண்ணீர் கொண்டு வரச்சொல்லி குடிக்க வைக்கிறாள். பின் அவனிடம்) உனக்கே பயமாயிருக்குல்ல. உன் பொண்டாட்டியும் இதப்போலத்தான் கத்துவா. இப்படிக் கத்தும்போதெல்லாம் அவளுக்கு பயம் அதிகரிக்கும். அப்படி அவளுக்கு பயம் வந்துடுச்சின்னா பின்னால அவளுக்கு வலி வரும் போது ரொம்பவும் பயந்துபோய்டுவா. அவளத் தெம்பா இருக்கவைக்க முடியாது. இது மாதிரி வரும் குலைய நடுங்க வைக்கிற சப்தத்திலிருந்து அவர்களோட எண்ணங்கள விரட்டத்தான் நாங்க அவங்கள படுக்கச்சொல்லி அனுப்பிச்சோம். ஆனா லேசுல அவங்க போகமாட்டாங்க. ஏன்னா?

அவன்: ஏன்?

பெரிய நர்சு-அப்படிக் கேள். ஏன்னா? நேத்தி வரைக்கும், அவங்களோட இருந்த ஒருத்திக்குத்தான் இப்ப பிரசவவலி ஏற்பட்டிருக்கு. அவ குரல் அவங்களுக்குத் தெரியும். அவளோடு, அவங்க நெறையா பேசியிருப்பாங்க. பழகியிருப்பாங்க. இப்ப இப்படி அவ அழும் போது அவங்களுக்கு எல்லாம் விட்டுப்போயிடும். நம்பிக்கை வலுவிழந்திடும். வெலவெலத்துப் போயிடுவாங்க. இது வேணுமா உன் பொண்டாட்டிக்கு.

அவன்: ஐயோ. வேணாம். வேணாம். இத நீங்க முன்னமே சொல்லியிருந்தீங்கன்னா நானே அவங்கள விரட்டியிருப்பேன்.

பெரிய நர்சு: நல்ல விரட்டுவ போ.

அவன்: ஏன்? என் பொண்டாட்டி நல்லயிருக்கனும்னு நான் அப்படி செய்யமாட்டேனா?

பெரிய நர்சு: அதான் சொன்னேனே நல்ல செய்வ நீன்னு.
(சட்டென மற்ற இளைய நர்சுகள் இருவரும் குனிந்து சிரித்துவிட, அவனும் வெட்கத்தால் தலைகுனிந்து சிரித்தபடி வெளியேறிவிடுகிறான். அப்போது அந்த பெரிய நர்சு இருவரையும் பார்த்து சிரித்தபடி)

பெரிய நர்சு: கடைசியா கெடா போட்டவளுக்கு ஊசி போட்டுட்டியா.

நர்சு1: போட்டுட்டேன்.

நர்சு 2: -நாங்க அப்படி நடந்துக்கணும் நீங்க அடிக்கடி சொன்னதுக்கு, இதுக்கு முன்ன எனக்கு அர்த்தம் தெரியாது. இப்பத்தான்...

பெரிய நர்சு: சில விசயங்கள மறைமுகமா செய்ய வேண்டியிருக்கும். அப்படி நாம நிறைய விசயங்கள செய்யறோம். (சிறிது நேரம் மெளனமாக அவன் சென்று மறைந்த திசையை இன்னொரு முறை பார்த்துவிட்டு) பாவம் அவனுக்கு இன்னைக்கு தூக்கம் வராது. பயந்து போயிட்டான்.

நர்சு 1: பின்ன ஏன் அவன்கிட்ட அப்படி சொன்னீங்க.

பெரிய நர்சு: சொல்லித்தான் ஆகணும்ங்கற மாதிரி அவன் சூழல ஏற்படுத்திட்டான். பாவம். என்ன யோசிச்சுக்கிட்டு இருப்பானோ.

நர்சு2: சொல்றதையும் சொல்லிட்டு அவனுக்காக பரிதாபமும் படுறீங்களே.

பெரிய நர்சு: அவனுக்கு இதப்பத்தித் தெரியாது. தெரியப்படுத்தவும் இல்ல. நம்ம ஆம்பளைங்கள அப்படித்தான் வளர்க்கிறோம். ஆனா. இப்படியொரு நெலம வரும்போது ஆடிப்போயிட்றானுங்க. நேத்தி ஒரு சம்பவம்.

நர்சு2:அந்த குண்டுப்பொண்ணு வீட்டுக்காரன்தான.

பெரிய நர்சு: ஆமா. என்ன பாடுபடுத்தினான் பாத்தீங்களா.

நர்சு2: ஐயோ! படாது பாடுபடுத்திட்டானே. சன்னல ஒடச்சான். ஸ்ட்ரெச்சர தள்ளிப்புட்டான். கொஞ்சம் விட்டிருந்தா கதவ உடைச்சிட்டு அவளுக்கு பிரசவம் பாக்கவே விட்டிருக்கமாட்டானே....

நர்சு1: ஏன் இப்படி அநாகரிகமா நடந்துக்கிறானுங்க?

பெரிய நர்சு: அநாகரிகம்னு சொல்லாத. இந்த மாதிரியான கட்டத்துல அவங்கள கட்டுப்படுத்த முடியாது. பாவம் அவங்க. அவ்வளவு அப்பிராணியா வளர்த்துட்டோம். (சிறிது மெளனம், பின் அவளே தொடர்ந்து) எனக்குப் பிரசவம் ஆனபோது என் வீட்டுக்காரு யாராரையோ ரெக்கமண்டேசன் புடிக்க அலைஞ்சிருக்காரு. பிரசவத்தின்போது எனக்கு வலியேற்படாம இருக்கணும்னுட்டு எவ்வளவோ கோயில் கொளமெல்லாம் போயி வந்திருக்காரு. நடக்குமா. வலி வராத பெத்துடமுடியுமா. பாவம் அவரு. புள்ள பெத்துட்டு நான் வீட்டுக்கு வந்தபின் அவரோட பார்வையில நான் மிகப்பெரிய உருவமா தெரிஞ்சேனோ என்னவோ... ஆய் ஊய்ன்னு மிரட்டிக்கிட்டு இருக்கறவரு. என்னம்மா வேணும். ஏதுமா வேணும்னு என்ன கவனிச்சிக்கிட்டாரு. இந்த மாற்றம் ஏன்னு எனக்கு அப்பத்தோணல. அப்புறமா பல பிரசவம் பாத்த பின்னாடி ஒவ்வொரு ஆணும் பட்ட அவஸ்தைகள கவனிச்சப்போ புரிஞ்சிக்கிட்டேன். வலி நாம மட்டும் அனுபவிக்கல அவங்களுந்தான். நாம் வயித்துல புள்ளய வச்சிக்கிட்டு அனுபவிக்கிறோம். அவங்க மனசுல சுமந்துக்கிட்டு வேதனைப்பட்றாங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். பாவமில்ல ஆண்கள்? நமக்கு இன்னதுன்னு தெரியும். அவங்களுக்கு என்னதுன்னு தெரியாமலேயே வருத்தப்பட்றோம்னு வருந்துறாங்க. அதனால தான் இந்த மாதிரி நடந்துகிட்றது. அவங்களுக்கு உண்மையை சொல்லாம மறைச்சி வெரட்டி விட்றது. விரட்றது, வாயும் வயிறுமா இருக்கறவளுங்களுக்குள்ள ஏற்படப்போற பயத்த மட்டுமல்ல இந்த ஆண்களோட மனசுல அழுத்திகிட்டிருக்கிற பயத்தையும் தான்.

(அப்போது ஒருத்தி ஸ்ட்ரெச்சரில் பிரசவலியோடு இருக்கிற பெண்ணை கிடத்தி தள்ளிக்கொண்டு வருகிறாள். வண்டியை நோக்கி மூவரும் செல்கின்றனர். அவர்கள் ஸ்ட்ரெச்சரை நோக்கி ஓடுவது பல மைகள் கடப்பது போன்று இருக்கிறது. ஸ்ட்ரெச்சரை அவர்கள் அடைந்ததும் அவர்களது மூச்சிரைப்பு பிரசவலியால் துடிப்பவளின் அலறலைவிட படுபயங்கரமாகக் கேட்கிறது. சிறிது நேரத்திற்கெல்லாம் மூச்சிரைப்பின் ஒலி குறைந்து பிரசவ வலியின் ஒலி அதிகரிக்கிறது. பிரசவ வலியின் ஒலிமட்டும் கேட்கிறது. அவளது அலறலானது வார்த்தைகளற்ற சப்தமாக, ஆனால் வார்த்தைகள் கரைந்த வாக்கியமாக, வலியோடு அவள் எதையோ மற்றவர்க்கு சொல்லும் விதமாக இருக்கிறது. அப்போது பெரிய நர்சானவள் அவள் சொன்னதையெல்லாம் புரிந்துகொள்பவளாக)

பெரிய நர்சு: சொல்லுமா! சொல்லு!

(பெண் அலறுகிறாள்)

பெரிய நர்சு: நான் இருக்கேன். கவலப்படாதம்மா.

(பெண் அலறுகிறாள்)

பெரிய நர்சு: ஒண்ணும் ஆயிடாது. பார்க்கத்தானப் போற.

(பெண்ணின் அலறல் வாக்கியத்துடன் ஒன்றிரண்டு சொற்கள் தெளிவாகக் கேட்கிறது.)

பெண்: அங்கே!.... ஐயோ!....

பெரிய நர்சு: ஆண்டவன் இருக்கான்.

பெண்: ஆண்டவா!

பெரிய நர்சு: கூப்பிடு. வாய்விட்டுக் கூப்பிடு!

பெண்: கடவுளே! . . . வலிக்குதே!

நர்சு1: வீட்டுக்காரற பார்க்கணுமா?

பெரிய நர்சு: அடீ....(என நர்சு1யை மிரட்டுகிறாள். அப்போது அந்தப் பெண்)

பெண்: (ஆத்திரத்தோடு) வேண்டாம்.

(என கதற, ஸ்ட்ரெச்சர் பின்னரங்கிற்குள் சென்று மறைகிறது. சிறிது நேரத்திற்குள் குழந்தை அழும் ஒரு புதிய உயிரின் முதல் ஒலி கேட்கிறது. மேடையில் மெல்ல ஒளி குறைகிறது)

காட்சி-3

மேடையில் மெல்ல ஒளி கூடுகிறது. அங்கே அந்த நான்கு கர்ப்பிணிகளும் மெல்ல உள்ளே வருகிறார்கள். வந்து பிரசவம் பார்க்க வலியேற்பட்ட பெண்களைக் கொண்டு, செல்லப்படும் திசையைப் பார்க்கிறார்கள். அப்போது குழந்தையின் அழுகுரல் மெல்ல கேட்கிறது. சந்தோசமாக அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொள்வது அவர்கள் அந்தக் குழந்தைக்கான வாழ்த்தைச் சொல்வதுபோல் அமைகிறது.

“அவளது வலியும்
குழந்தையின் முதலொலியும்
பிறந்த நாளை நினைபடுத்திக்கொள்ளும்
சுற்றமும் சூழலும்
கொண்டாட்டக் களிப்பில்
குதூகலிக்கும் அனைத்துக்குமான ஒரு சேதி
இவள் இன்னபிள்ளையைப் பெற்றிருக்கிறாள்.
இவள் இன்னபிள்ளையை வார்த்திருக்கிறாள்.
இவள் இன்னபிள்ளையை உருசேர்த்துத் தந்திருக்கிறாள்.
இவள் இன்னபிள்ளையை இன்ன உலகிற்குக் கொடுத்திருக்கிறாள்.
இவள் இன்னபிள்ளையை ....”

என அவர்கள் அனைவரும் மேடையைச் சுற்றிச் சுற்றி ஒருவித விநோதமான அசைவுகளில் சந்தோசமாகவும் சோகத்தோடும், ஒரு சமயம் இரண்டு உணர்வும் கலந்து, தனித்தனியாகவும் குழுவாகவும், ஆடி முடிக்கின்றனர். பின், நால்வரும் மெல்ல முன் மேடை மையத்திற்கு வந்து அமர்கிறார்கள். அவர்களில் பெண்3 மெல்ல மற்றவர்களைப் பார்த்து)

பெண் 3: எனக்கு நேத்து ஒரு கனவு. (மற்ற மூவரும் அவளது கனவைக் கேட்கும் ஆவலில் அவள் பக்கம் பார்த்து திரும்பி அமர்ந்து கொள்கிறார்கள், பின் அவள் தொடர்ந்து) நேத்து பிள்ளைய பெத்தாளே அவ கனவுல வந்தா. ஆனா கறுத்துப் போயிருந்தா. சாமி சிலையாட்டும், கருகருன்னு. இருட்டோட இருட்டா. ஆனா கொஞ்ச வெளிச்சம் எங்கேயிருந்து வந்ததுன்னு தெரியல. அந்த வெளிச்சத்துல அவ சன்னமா தெரிஞ்சா. சிரிச்ச முகத்தோட. அதுவும் என்னப் பாத்து சிரிக்கிற மாதிரி. இப்படி நம்மல பாத்து சிரிக்கிற மாதிரி ரொம்ப நேரம் இருந்தா என்னவாவோம்? பயந்துட்டேன். சடக்குன்னு எழுந்து என் பான வயித்த துருத்திக்கிட்டு அவளப் பார்த்து எச்சரிச்சேன். “அடியே! வெவரமில்லாம மேலும் சிரிச்சன்னா பல்லப் புடுங்கிடுவேன்.” சொன்னதுதான் தாமதம். சட்டுன்னு அவ பளபளன்னு பல்ல இளிச்சிக்காட்டி ஒவ்வொண்ணா புடுங்கி என் கையில திணிச்சிப்புட்டா. என்ன வாகும். சொல்லுங்க. அதான். நடுங்கிப்புட்டேன். இப்ப நெனச்சாலும் வெலவெலக்குது உடம்பு.

(என சொல்லிக்கொண்டே இருந்தவளது முகம் மாறியது. நெளிந்தாள். வளைந்தாள். உட்கார்ந்தாள். எழுந்தாள். முறுக்கினாள். முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு)

அம்மா.........!

(என அலறியதும் மற்ற மூவரும் அவளை இன்னும் மிக நெருக்கமாக நெருங்கிக்கொள்ள, ஆதிவள்ளி அவளை அணைத்துக்கொண்டு)

ஆதிவள்ளி- என்னம்மா வலி வந்துடிச்சா!

பெண்3: வலிக்குதுடீ..... டாக்டர்.... நர்சே..... வலிக்குதே..... கூட்டிட்டுப் போங்கடீ......நாய்ங்களா.....

(என அவள் ஆக்ரோசமாக திட்டத் தொடங்கினாள். மற்றவர்கள் எழுந்து அவளை கைத்தாங்கலாக தூக்க தயாராவதற்குள், அவள் தவழ்ந்து தவழ்ந்தே சிறிது தூரம் சென்றுவிட்டிருந்தாள். அதற்குள் வெளியிலிருந்து ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு உதவியாளர்கள் ஓடி வருகிறார்கள். அவர்களை நோக்கி மற்ற மூவரும் சப்தமாக அழைக்க வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தவர்களுக்கு யாருக்கு வலி ஏற்பட்டிருக்கிறது என்பதில் குழம்பிப்போய் அங்கிங்குமாக அலைகிறார்கள். வலி ஏற்பட்டப் பெண்ணே அவர்களைக் கவனிக்காமல் அலறிக்கொண்டே தவழ்ந்து தவழ்ந்து போய்க்கொண்டிருக்கிறாள். இறுதியாக அவளைக் கண்டதும் வண்டிக்காரர்கள் அவளை நோக்கி வருகிறார்கள். வண்டி அவளை நெறுங்கியதும் அவர்கள் அவளைத் தூக்குவதற்கு முன் அவள் விறுவிறென வண்டியில் ஏறி படுத்துக் கொள்கிறாள். படுத்ததும் அலறத் தொடங்குகிறாள். அவளைப் பயத்தோடு பார்த்துக்கொண்டு உறைந்துபோய் நிற்கிறார்கள் மற்ற மூன்றுப் பெண்களும் தத்தம் வயிற்றைத் தடவிக்கொண்டு. அப்போது பெண்2 மெல்ல நெளிகிறாள். வளைகிறாள். உடலை முறுக்குகிறாள். வண்டி இன்னும் பாதி மேடையைத் தாண்டவில்லை. பெண் 2க்கு வலியேற்படுகிறது. அவள் வண்டியை நோக்கி ஒடுகிறாள். அலறிக்கொண்டே வண்டியில் ஏறுகிறாள். பெண் 3 படுத்தபடியே அலறிக்கொண்டிருக்கிறாள். பெண் 2க்கு இடம் கிடைக்காமல் வண்டியின் காலைப் பிடித்துக்கொண்டு சப்தம் போடுகிறாள். உதவியாளர்கள் பெண்3யை மிரட்டி காலை மடக்கச் செய்து, இருவரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் வெளியேறவும் பெண்6 மற்றும் பெண்7 எனும் புதிய இரண்டு கர்ப்பிணிகள் மேடைக்குள் நுழைகிறார்கள். அவர்கள் உள்ளே பாதி மேடையை அடைந்ததும் அவர்களை நோக்கி பழைய கர்ப்பிணிகள் வருகிறார்கள். அவர்கள் பெண்6 மற்றும் பெண்7யை நெருங்கவும் பெண்6 திடீரென ஓவென அலறவும் சரியாக இருக்க அனைவரும் பயந்து போய் ஆளுக்கொரு திசையில் ஓடி ஒளிந்துகொள்கிறார்கள். அவளுக்கு வலியெடுக்கிறது. அலறுகிறாள். உள்ளே சென்ற ஸ்ட்ரெச்சர் மீண்டும் வருகிறது. அவளை ஏற்றிக்கொண்டு மறைகிறது. சிறிது நேரம் மேடையில் அமைதி நிலவுகிறது. ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர். அடுத்து யார் என்பது போலவும் ஒருகட்டத்தில் ஒவ்வொருவரும் தம்மையே சோதித்துப் பார்த்துக் கொள்கிறார்கள் தமக்கும் வலி வருமா என்பது போல. சிறிது நேரத்திற்குப்பின் ஆதிவள்ளி, பெண்4, 5 மற்றும் 7 ஆகியோர் பயம் தெளிந்து மெல்ல மைய மேடைக்கு வருகிறார்கள். பயத்தின் அயர்வு அவர்களது முகத்தில் தெரிகிறது.)

ஆதிவள்ளி: எல்லோருக்கும் வலி வருகிறது. எல்லோரும் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். நானும் பிள்ளை பெறுவதற்காக வந்தவள் தானே எனக்கு ஏன் வலி வரமாட்டேன் என்கிறது. வலி வராவிட்டால் என்ன நேரே குழந்தை வெளியேற வேண்டியதுதானே. என்ன நினைத்து உள்ளே சுழல்கிறதோ!

(அப்போது பெண்4க்கு வலி ஏற்படுகிறது. மீண்டும் ஸ்ட்ரெச்சர் வர அதில் அவள் ஏறி படுத்துக் கொள்கிறாள். வண்டி வெளியேறினதும் அதே வேகத்தில் பெண்4 மீண்டும் மேடைக்குள் வருகிறாள். அவளைப் பார்த்ததும் மற்றவர்கள்)

பெண்5: என்ன ஆச்சு?

பெண் 4: ஒண்ணும் ஆவுல.

பெண் 7: கேட்கிறோமில்ல. சொல்லேன் என்ன ஆச்சு?

பெண் 4: ஆங். பொய் வலியாம். ஓடு ஓடுன்னு விரட்டிட்டாங்க.

(நால்வரும் வாய்விட்டு சிரிக்கிறார்கள்.)

ஆதிவள்ளி: பொய் வலின்னு போனியே அங்க எப்படி இருந்துச்சு?

பெண் 4: எது?

ஆதிவள்ளி: அதான் அந்த இடம். அங்கதான் நம்மல விடமாட்றாங்கலே.

பெண்4: சும்மா விடுவாங்களா? வலி வந்தாத்தான் அங்கப் போக முடியும்.

ஆதிவள்ளி: (அலுப்பாக) வலி தான் வரமாட்டேங்குதே.

பெண் 4: அதுக்காக.

ஆதிவள்ளி: அதுக்காக என்ன அதுக்காக. பொய் வலி வந்து நீ போன இல்ல. பாத்திருப்பே இல்ல. அத நான் கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்னுதான். ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறியே.

பெண்4: அதுவா. நல்லா பளபளன்னு வெள்ளை வெளேர்னு இருக்கு.

பெண்7: எது.

பெண்4: அந்த அறைதான். சுத்தமா இருந்துச்சு. குளிராவும் இருந்துச்சு.

ஆதிவள்ளி: யார்லாம் இருந்தாங்க.

பெண்4: இங்க வருவாங்களே அந்த மூணு நர்சும் ஒரு டாக்டர் அம்மாவும் தான்.

பெண்7: நம்ல பரிசோதிக்க வருவாங்களே...

பெண்4: அவங்களேதான்.

ஆதிவள்ளி: என்ன சொன்னாங்க.

பெண்4: வயித்தத் தடவிப்பார்த்துட்டு. போ. போ. உனக்கு இன்னும் வலி வரல போன்னு.

ஆதிவள்ளி: வலிக்குதேன்னு சொன்னியா?.

பெண்4: கிள்ளினாலும் வலிக்கும். அதெல்லாம் பிரசவ வலியில்ல. உண்மையிலே வலிவந்தா இப்படி நீ எங்கிட்ட பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்னு சொன்னாங்க. (மிகவும் யோசித்தவளாக இருந்துவிட்டு, மீண்டும்) என்னமோ எமனோட அறைக்குள்ள போயிட்ட வந்த மாதிரி இருக்கு. அவ்ளோ பயமா இருந்துச்சு அந்த சுத்தமும் சில்லுப்பும். பளபளன்னு எவர்சில்வர் கட்டில், பளீர் பளீர்னு வெளிச்சம். என்னமோ ஒரு மாயலோகத்துல பூந்து வெளியேறின மாதிரியா இருக்கு. (அவள் தன்னை மறந்த நிலையில் மாறுகிறாள். மெல்ல எழுந்து கைகளை நன்கு அசைந்து ஆட்டி) எமலோகம். ஆஹ்ஹஹ்ஹா....செத்ததாத்தான் சுடுகாட்டுக்குப் போற வழி தெரியும்னு சொன்னது ஞாபகம் வருது. (சட்டென அவளது குரல் மாறுகிறது. அவளது அசைவுகள் விநோதமாகிறது. திடீரென எழுந்து ஒரு சுற்று சுற்றி ஆக்ரோசமாக) மரணத்தை அறிந்தேன். மயானத்தைக் கண்டேன். எமனோடு சில கணம் சம்பாஷித்தேன். நீ பிறந்ததின் அர்த்தம் உனக்குத் தெரியாது. உன் பிள்ளையும் அறியமாட்டான் என்று சொல்லி சிரித்துக்கொண்டிருந்த எமனின் சிவந்த கண்களின் ஊடாக உலகில் நான் கடந்து வந்த வாழ்க்கையை, அதன் ஒவ்வொரு நிகழ்வையும் ஒரு மீள்பார்வை பார்த்தேன். அசந்து போனது மனம். அதனால் உலர்ந்து போனது உடல். இறப்பின் வாசலில் கேட்ட அந்த பாடலை விழுங்கிவிட்டு திரும்பி வந்திருக்கிறேன். என்னைப் பாருங்கள். என்னைக் கேளுங்கள். உங்களது அனைத்துக் கேள்விகளுக்கும் என்னால் மட்டுமே விடையளிக்க முடியும். கூப்பிடு அனைத்து உயிர்களையும். என் முன் வரிசையாய் அமரச் செய்து கேட்க நினைத்தக் கேள்விகளை மனதில் நினைத்துக் கொள்ளச் சொல். பதில் அவர்களுக்கு மட்டும் கேட்கும் ஒலியில் போய் சேரும். தயாராகுங்கள். குறிப்பாக அனைத்து கணவன்மார்களையும் முதல் வரிசையில் அமரச் செய்யுங்கள். அவர்களுக்குத்தான் முதல் உரிமை. அவர்களால் ஆன காரியத்திற்கு அவர்களை கூப்பிடுங்கள் முதலில். அவர்கள் என்ன கேட்பார்கள் என்று ஊகிக்க முடியாது. என்ன வித பதில்கள் அவர்களை சமாதானப்படுத்தும் என்று தெரியாது. இருந்தாலும் நம்பிக்கையிருக்கிறது. எமனைக் கண்டு வந்தவள். எதற்கும் தீர்வு தரவல்லவள். ம். ம். (என அவள் ஆக்ரோசமாக பேசி சாமி வந்து ஆடிவந்து ஓய்ந்தவளாக அயர்ந்து விழுகிறாள். மற்றவர்கள் அவளைக் கைத்தாங்கலாகப் படுக்க வைக்க, ஆதிவள்ளியை மற்றவர்கள் நெருங்கியமர்ந்து கொண்டு இப்படிப் பேசி ஓய்ந்தவளையே பயங்கலந்த பார்வையால் பார்த்தவண்ணம். இருக்க, ஆதிவள்ளி வானை நோக்கி)

ஆதிவள்ளி: அந்த எமன் என் கண்ணில் அகப்பட மாட்டேன் என்கிறானே. (சிறிது மெளனம் பின், மேலே பார்த்து) என் பிள்ளையை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய். வயிற்றில் இருக்கிறானா அல்லது இருப்பது போலொரு ஒரு பாவனையை ஏற்படுத்தி என்னைச் சித்திரவதைச் செய்கிறானா! கேட்பேன். (கைகளால் முகத்தை மூடிஅழுகிறாள். அப்போது பெண்7)

பெண்7: கவலைப்படாதேம்மா. உனக்கு நல்லவிதமா பிள்ளை பிறக்கும்.

பெண்5: பொறுமை மிகவும் அவசியம். காத்திருந்து பெறும் பிள்ளை உலகிற்கொரு வரமாக வரும். பொறு.

(மேடையில் ஒளி மெல்லக் குறைகிறது.)

காட்சி-4

(மேடையில் ஒளி மீண்டும் வருகிறது. மெல்ல கூடிக்கொண்டிருக்கும் ஒளியில் ஆதிவள்ளி முன்மேடை மையத்தில் தலைகவிழ்ந்து அசையாமல் அமர்ந்திருப்பது, அவள் தூங்குவதுபோன்ற ஒரு பாவனையை வெளிப்படுத்துகிறது. பின்னரங்கிலிருந்து மெல்லிய இசை வருவது அவளது துன்பத்தை அதிகரிக்கும் விதமாக இருக்க, அவள் மெல்ல தலையைத் தூக்கி பார்வையாளர்களைப் பார்த்து)

ஆதிவள்ளி: கடுந்துயர் சுமந்து கணமேறிக் காத்திருக்கிறேன். காடுகொள்ளாத் துயரம். மலையதிரும் மனவேதனை. என்னை வெகுதூரத்தில் நிற்கவைத்து வேடிக்கைப் பார்க்கும் பலர். அவர்களில் ஒருத்தியாய் நானே நிற்கிறேன், எதுவும் செய்ய இயலாமல். இந்த ஒரு நிலையை நான் அனுபவிக்க இந்த பிரசவக் காத்திருப்பின் முடிவில் என் பிள்ளை என்னை காணுமென்ற கனவில். (அப்போது ஒரு விநோத உருவம் அவளை நோக்கி வந்து அவளை அணைத்துக்கொண்டு பாடுகிறது)

“எல்லையில் நின்று
ஒரு கனவினை விரித்துப்பாடும் பாடலில்
ஏதுமற்ற நிலப்பரப்பு
விரிந்து விரிந்து இடத்தை அடைக்கிறதே, பெண்ணே!
அதில் குறுக்கும் நெடுக்குமாக
முளைவிட முயற்சிக்கும்
புள்ளினங்களின் அசைவில்
யார் யார் நிழலோ தோன்றித் தோன்றி மறைகிறது, பெண்ணே!
யார் யார் நிழலது? யார் யார் நிழலது?
யார் யார் நிழலது? யார் யார் நிழலது?
அப்பனை ஒத்த நிழல்
ஆயாலை ஒத்த நிழல்
ஆம்படையானை ஒத்த நிழலுமாக,
நிழல் நிழலாகத் தோன்றித் தோன்றி மறைகிறது, பெண்ணே!
அடையாளம் காண விழைகிறது மனம்.
அலைத்து களைத்து
மீண்டும் மீண்டும் பிறப்பிக்கிறது நிழல்களை.
செய்வது யார்?
தெரியாதிருந்தாலும் செயல்விழுவது உன் மீதே பெண்ணே!
ஆதிப் பெண் ஈன்ற முதல் பிள்ளை
மீதிப்பெண்களையும் ஈனச் செய்த ஊழ்வினை, பெண்ணே!
தொடரும் இச்சமையல்
யாருக்குப் படைக்கப்படுகிறது?
தொடரும் இச்சமையல்
யாருக்காகப் படைக்கப்படுகிறது?
அடுக்களை ஓயவில்லை.
கணங்குகிறது அடுப்பு இன்னும்.
சமைத்துக்கொண்டே இருக்கிறாயே, பெண்ணே!
சளிப்பில்லையோ?
சகித்துக்கொள்ளக் காரணம் யாதோ!
(ஆதிவள்ளி அழுகிறாள், அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டு)
சேயின் முதல்பிடி நீ கொடுத்து நூலின் முதல் நுணி
நடக்கட்டும் அந்த உயிர்.
கடக்கட்டும் தோற்றவாயிலை.
எட்டிப்பார்க்கும் உலகில்
அதுசமைக்கும் உணவில்
என்ன ருசி!
என்ன ருசியென காண்பாயோ மகளே!
தோன்றித் தோன்றி மறையும் உயிர்
தோன்றத் தோன்ற சளிக்காமல் அழும் உயிர்
தோற்றத்திற்கென
உன் வயிற்றில் தோன்றிய
முடிவற்ற நீளம் கொண்ட நூல்
எடுத்துவிடு.
வெளியேறட்டும் பிள்ளை.
போகவிடு மகளே.”

(ஆதிவள்ளி அழுகிறாள். பெண்4, 5 மற்றும் 7ம் அவளை நோக்கி வருகிறார்கள். அவளைத் தேற்றுகிறார்கள். அவர்களது பார்வைக்கு அந்த விநோத உருவம் தென்படவில்லை. அது மெல்ல ஆதிவள்ளியை அவர்கள் கையில் ஒப்படைத்துவிட்டு மறைந்துவிடுகிறது. ஆதிவள்ளி மூவரையும் காண்கிறாள். அவர்களைக் கண்டதும் கண்களைத் துடைத்துக்கொண்டு)

ஆதிவள்ளி: நான் இனி பயப்படப்போவதில்லை. என் பிள்ளை இப்போது பிறந்துவிடுவான். இல்லை வேறெப்போதாவது பிறப்பான். எப்போது எனக்கு வேண்டுமோ அப்போது நான் என் விருப்பப்படி பெற்றுக் கொள்வேன். எனக்கு பயமில்லை. அறவேயில்லை. என் பிள்ளை. எனக்குள் குடிகொண்டதுமே என்னைப் பொருத்தவரை பிறந்துவிட்டது. உலகிற்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கு ஆணா பெண்ணா என்றுதான் தெரியவேண்டும். பிள்ளையை ஈனும் எனக்கு ஆணும் பெண்ணும் ஒண்று. இரண்டில் எதுவாக இருந்தாலும் என்பிள்ளை. பிள்ளை அவ்வளவுதான். அதை எப்போது வேண்டுமானாலும் ....

(என சொல்லிக்கொண்டே இருந்தவள் சற்றே நெளிகிறாள். வளைகிறாள். அதனைக் கண்டதும் மற்றவர்களை அவளை நெருங்கி சேர்த்து அணைத்துக் கொள்கிறார்கள். அவள் அவர்களைப் பார்த்து பற்களைக் கடித்துக்கொண்டு)

எனக்கு ஒன்றுமில்லை. பிள்ளையை வெளியேற்றப் போகிறேன். அதனால் எந்த வலியும் இல்லை. நான் சப்தம் போட்டு ஊரைக் கூட்டப் போவதில்லை. யாரையும் பழிசுமத்தப் போவதிலலை. என் பிள்ளையை நல்லபடியாக உலகிற்கு அறிமுகப்படுத்துவேன். அந்தப் பிள்ளையால் உலகின் துயரங்களையெல்லாம் களைப்பேன். அதனால் நான் அழப்போவதில்லை. பிள்ளையையும் அழவிடுவதில்லை. யார் யார் அழுகிறார்களோ அவர்களை வேடிக்கைப் பார்ப்பேன். என் பிள்ளைக்கும் வேடிக்கைக் காட்டுவேன். அழுகையென்றால் என்ன என்று சொல்லிக் காண்பிப்பேன். அழுது மற்றவர் அழுகையை அறியாமல் மேலும் மேலும் எல்லோரையும் வருத்தத்திற்குள் சொருகும் அசிங்கமானவர்கள் போலில்லாமல் என் பிள்ளையை எல்லோரது துயரையும் துடைக்க மெல்ல என் கதவினைத் திறந்து காட்டுவேன். மெல்ல மெல்ல. அதிசயித்துப்போகும் என் பிள்ளை. ஆச்சர்யப்படும் என் பிள்ளை.

(என சொல்லிக்கொண்டே இருந்தவள் வலியை அதிகம் அனுபவிப்பவளாகக் காணப்படுகிறாள். பல்லைக் கடித்துக்கொண்டு மேலும் மேலும் அழுத்தமாகக் காணப்படுகிறாள். மற்றப் பெண்கள் அவளை கைத்தாங்கலாக பிடித்துக் கொள்ள, அவர்களில் ஒருத்தி ஓடிச் சென்று ஸ்ட்ரெச்சரை கொண்டு வருகிறாள். மூன்று நர்சுகளும் மிக சந்தோசமாக அவளை நோக்கி ஓடி வருகிறார்கள். பெரிய நர்சு ஆதிவள்ளியைப் பார்த்து)

பெரிய நர்சு: (சந்தோசமாக) ஆ....! ஆதிவள்ளிக்கு வலி வந்துடிச்சு. வலி வந்துடிச்சு.

(என சொல்லிக்கொண்டே அவளை எல்லோருமாக வண்டியில் ஏற்றுகிறார்கள். அப்போது ஆதிவள்ளி)

ஆதிவள்ளி: நான் பிள்ளையை பெற்றெடுக்கப் போறேன். மக்களே பொறுத்திருங்கள். கொண்டு வந்து காட்டுகிறேன். என் மரிக்கொழுந்தை.

பெரிய நர்சு: ஆதிவள்ளியின் குழந்தை நாமெல்லாம் எதிர்பார்க்கும் பிள்ளை.

நர்சு 1: நாமெல்லாம் எதிர்பார்க்கும் ஆதிவள்ளியின் குழந்தையை உலகமே எதிர்பார்க்கிறது.

(ஆதிவள்ளிக்கு வலி அதிகரிக்கிறது. கைக்கால்களை உதறிக்கொண்டு சப்தமாக)

இதோ! இதோ! ஐயோ!...(சமாளித்துக்கொண்டு) இதோ பிறந்திடும். இதோ!

(வண்டி மேடையின் மையப்பகுதியைத் தாண்டி வெளியே சிறிது தூரம் இருக்கும் போது அவளுக்கு வலி அதிகமாகிறது. அவள் சப்தமாக)

ஆண்டவா!....அம்மா.! ஐயோ....(அலறுகிறாள். வண்டி பின்னரங்கிற்குள் சென்று மறைகிறது. குழந்தையின் அழுகை கேட்க, வெளியே மேடையிலிருந்த வண்ணம் கவனித்துக்கொண்டிருந்த மற்றப் பெண்கள் சந்தோசமாக ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொள்கின்றனர். சிறிது நேரத்திற்குள் குழந்தையும் தாயுமாக ஆதிவள்ளி மேடைக்குள் வருகிறாள். அப்போது பெண்4வுக்கு வலியேற்பட அவள் அலறுகிறாள். ஆதிவள்ளி அவளைப் பார்த்து) ஏய்! புள்ளதான பெத்துக்கப்போற... சும்மா போ. கத்தி ஊரக்கூட்ற. போனியா பெத்தியா வந்தியான்னு இருக்கணும். சும்மா ஐயோ அம்மா குய்யோ கும்மான்னு கத்திக்கிட்டு.

(மேடையில் ஒளி குறைகிறது.)

முற்றும்.

- அரியநாச்சி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com