Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
எலக்ட்ராவின் பிறப்பு

ஆதவா

நேற்று இரவு என் மகள் எலெக்ட்ரா பிறந்தாள். அலுவலக விடுப்பை வீடியோ கன்பெரன்ஸில் சொல்லிவிட்டு நேரே மருத்துவமனைக்குச் சென்றேன். ஜெஸி எனக்காகக் காத்திருந்தாள். எலக்ட்ரா பார்ப்பதற்கு ஜெஸியைப் போலவே இருந்தாள். அதே முல்லைக் கண்கள். குடைமிளகாயைப் போல மூக்கு. அழகான கழுத்து, செர்ரி பழத்தைப் போன்ற சிவப்பான உதடு... அடேயப்பா.. ஜெஸியைக் கூட இப்படித்தான் வருணிப்பேன். அந்த வர்ணிப்பே குழந்தையாகப் பிறந்ததில் சந்தோசம் எனக்கு...

இருவரும் மருத்துவமனையை விட்டு காரில் ஏறினோம். ஜெஸி, தனக்கு தலைவலிப்பதாகச் சொன்னாள்... இரவு கண்முழித்துக் கிடந்ததில் தலைவலியாக இருக்கும்.. மாத்திரை விழுங்கினால் சரியாகிவிடும்... நேற்றுதானே குழந்தை பிறந்தது... டாக்டர்கள் அறிவுரைப்படி ஒருநாளாவது இருக்கவேண்டும். என்னைக் கேட்டால், குழந்தை பிறந்ததும் வீட்டுக்கு வந்திடலாம். இன்னும் டாக்டர்கள் பணம் கறப்பது போனபாடில்லை.

சாலையில் ட்ராஃபிக் அதிகமில்லை. எப்போதாவது சில ரோபோட்டுகள் மட்டும் மண்டை குழம்பிப் போய் மோதிக்கொள்ளும்போது ட்ராஃபிக் நேர்வதுண்டு. சென்னையின் மத்திய சாலைகள் இப்படி ஹாயாக இருப்பதே தனி வித்தியாசம்தான். என் தாத்தா காலத்தில், ஒரே மனிதத் தலைகள் தான் தெரியுமாம். எப்போது பார்த்தாலும் அழுக்குகள், குப்பைகள் இத்யாதி இத்யாதி... ஒரே கலீஜ் என்றூ சொல்வார்.. நல்லவேளை நான் இந்த காலகட்டத்தில் பிறந்து தொலைத்தேன்...

ஜெஸி, மின் காகிதத்தை தட்டச்சிக் கொண்டிருந்தாள். அவளிடம் . " என்ன ஜெஸி, குழந்தை பிறந்திருக்கா, ட்ரீட் இல்லையா? " என்று வினவினேன்.. " டார்லிங், எனக்கு ரெஸ்ட் எடுக்கணும். ப்ளீஸ் டோண்ட் டிஸ்டர்ப் மி. மெடிக்கல் செலவு எல்லாம் இந்த பேப்பர்ல இருக்கு. செக் பண்ணுங்க.. நான் தூங்கறேன்... " என்று மடமடவென சொல்லிவிட்டு காரின் பின்புறத் தொட்டிலில் குழந்தையைப் போட்டுவிட்டு, இருக்கையை இறக்கி தூங்க முயற்சித்தாள்... நான் புன்னகைத்தவாறே வண்டியைச் செலுத்தினேன்.

எனக்கும் ஜெஸிக்கும் பெற்றோர்கள் நிச்சயித்தபடிதான் திருமணம் நடந்தது. ஜெஸி ஒரு எலக்ட்ரானிக்ஸ் அலுவலகத்தில் வரவேற்பாளினியாக இருந்தாள். பெரும்பாலும் அந்தக் கம்பனியின் க்ளைய்ண்டுகள் ரோபோக்களையோ அல்லது ப்ளேட் எனச் சொல்லப்படும் காமிரா பொருந்திய ரோபோக்களையோதான் அனுப்பி வைப்பார்கள். ஆதலால் மனித முகத்தைப் பார்ப்பதே அவளுக்கு அரிதாக இருக்கும். தற்செயலாக அவளது அலுவலகத்திற்கு நான் சென்றேன். எனது வருகையை அவள் உன்னிப்பாக கவனித்தாள். அந்த எலக்ட்ரோ கம்பனியில் ஒரு சின்ன வேலைக்காக வந்திருந்தேன். பொதுவாக நான் நானோ கம்பனிகளை மட்டுமே நாடுவது வழக்கம். எனது தொழில் அனைத்து நானோ டெக்னாலஜியை மட்டுமே சார்ந்திருந்தது. ஆனால் எனது நண்பன் ஒரு உதவிக்காக அழைத்திருந்ததால் அங்கே சென்றேன்.. அவள் என்னை வரவழைத்து இருக்கையில் அமர வைத்தாள்...

ஜெஸியை கொஞ்ச நேரம் ரசித்துவிட்டு, நேரே நண்பன் ராமின் அலுவலகத்திற்குச் சென்றேன்.. என்னை வரவேற்று அமர வைத்தான். அவன் கேட்டது சிறு உதவிதான்.. மாரடைப்பில் இறந்து போனவர்களுக்கு தற்காலிக, அல்லது நிரந்தரமாக உயிர்கொடுக்கும் ஒரு சிறு எலக்ட்ரானிக் சம்பந்தமான முயற்சியில் இறங்கியிருந்தான். " அது ஒண்ணும் பெரிய விசயமில்லை ராம். ஜின்கில் நானோ கார்பன் கோட்டிங் கொடுத்து அதை முழுசா கவர்பண்ணி ஏர் ஹோல்ஸ் விட்டு, அந்த நானோ கார்பனை ஷேக் பண்ணா சார்ஜ் ஆகும்... அது ஜிங்க் மேல பட்டு டிஸ்சார்ஜ் ஆகி அதிலிருந்து ஒரு வயர் மூலமா கரண்ட் பாஸ் பண்ணலாம்.. ஜின்கிலிருந்து ஒரு கனெக்ஸன், கார்பனிலிருந்து ஒரு கனெக்ஸன், ரெண்டையும் மார்புல குத்தி சார்ஜ் ஏத்தினா உயிர் பிழைக்க வைக்கலாம்.... எல்லாம் பயோ பிஸிக்ஸ், பயோ டெக்னாலஜி... தட்ஸ் ஆல். " என்று சொல்லி முடித்தேன்...

எனக்குப் பின்னே ஜெஸி வந்து நின்றாள். உங்க கார் மேல ஹெக்ஸ் கம்பனியோட ரோபோகார் மோதிட்டு குழம்பி நிக்குது. . நீங்க உடனே கான்ஃபிகர் பண்ணா, அந்த ரோபோவை நம்ம கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரலாம்" என்றாள்..... எனக்கு அது ஏழாவது தடவை.. ஏதாவது ஒரு கார் வழுக்கிட்டு வந்திடும்.. நம்ம கார்ல மோதும்.. ஜெஸியைத் தொடர்ந்த வாறு எழுந்து செல்கையில், ராம் மீண்டும் கேட்டான்.. " கதிர், இது ஒத்துவருமா? "

"ராம் நீ ரொம்ப லேட்பா.. இந்த டெக்னாலஜிதான் இப்போ சீப்.. இதுக்குப் பின்னாடி பல மேட்டர் வந்தாச்சி... ஏதோ உன் பட்ஜெட்ல அடங்கட்டுமேன்னு சொன்னேன்.. கவலை விடு, எல்லாம் நாம பார்த்துக்கலாம் "என்று சொல்லிவிட்டு ஜெஸியை நோக்கினேன்...

ஜெஸிக்கு என்னைப் பற்றிக் கேட்கவேண்டுமென்ற ஆவல் பிறந்த தருணம் அது... " உண்மையிலேயே இப்படி பிழைக்கவைக்க முடியுமா சார் ?" என்று கேட்டாள்.. ஜெஸியின் குரல் அவ்வளவு இனிப்பாக இருந்தது.. எப்படி இந்த மாதிரி? ஒரு பொருளை நாக்கு சுவைத்தால் தானே இனிக்கும்?? இங்கே குரலைச் சுவைத்தாலே இனிக்கிறதே!!

" ஹலோ மிஸ்.......?? '

" ஐ ஆம் ஜெஸிகா "

" ஜெஸிகா, இது பழைய மெதட். நீங்க கவலைப்படாதீங்க... இப்ப ஃபைபர் வெச்சு ஹார்ட்ட சார்ஜ் பண்றாங்க.. இன்னும் ஆராய்ச்சி நடக்குது. ஸ்பென்ஸர்ஸ் ஹாஸ்பி போனீங்கன்னா, மலிவு விலைக்கு இதயத்த விக்கிறாங்க... எல்லாம் ஏழைங்களுக்கு........ "

" சார், எங்கப்பாக்கு ரெண்டுதடவ ஹார்ட் அட்டாக் வந்திட்டுது.. அவரை எப்படியாச்சும் நல்லபடியா கொண்டுவரமுடியுமா ?

" வெரி சிம்பிள் ஜெஸி. ஆ.. ஐ ம் சாரி,. உங்களை ஜெஸின்னு கூப்பிட்டுட்டேன்.

" இட்ஸ் ஓகே "

" நீங்க அப்பாவைக் கூட்டிட்டு நேரா நான் சொல்ற ஆஸ்பிடல் போங்க, க்ளீன் செக்கப் பண்ணுவாங்க.. அதிக நேரம் ஆகாது. அப்பவே என்ன ஸ்பேர்ஸ் மாத்தணும்னு ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுப்பாங்க. நீங்க அதை எடுத்துட்டு என்னோட செல்லுக்குக் கூப்பிடுங்க... நான் மீதியை அப்பறமா பாத்துக்கீறென்.. " சொல்லிவிட்டு செல் நம்பரைக் கொடுத்தேன்....

" சார் நீங்க எப்படி வீட்டுக்குப் போவீங்க? "

" கவலை வேண்டாம் ஜெஸி.. இதோ பாருங்க ஸ்பெக்ட்ரம். இது வழியா என் வீட்டுக்குள்ள இருக்கிற என் காருக்கு சிக்னல் கொடுத்திடுவேன்.. அது நேரே நான் இருக்கிற இடத்திற்கு வந்திடும்.. அப்படியும் இல்லைன்னா நடராஜாதான்.. எனக்கு நடக்கறதுன்னா ரொம்ப பிடிக்கும்... " சொல்லிவிட்டு சிரித்தேன்..

" சார், நீங்க வேணும்னா என்னோட ஸ்கூட்டரை எடுத்துட்டு போங்களேன்... அப்பறம் நான் எப்படியும் சமாளிச்சுக்குவேன்... "

அவளது இந்தக் கோரிக்கை எனக்குப் பிடித்திருந்தது.. மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பை அவளே வழங்குகிறாள் அல்லவா...

எனக்கும் ஜெஸீக்குமான முதல் சந்திப்பு இப்படித்தான் நிகழ்ந்தது. அவளது அப்பாவுக்கு இருதயக் குழாய்களில் மட்டும் சின்ன அடைப்பாக இருந்தது... அதாவது அது வளரும் சூழ்நிலையில் இருந்தது. அரதப்பழசான ஆஞ்சியோவை விட்டுத்தான் பார்த்தார்கள்... சில டாப்லெட்ஸ், சில செக்கப்புகள், சில ஆலோசனைகள்.... அவ்வளவுதான், ஜெஸியின் அப்பாவுக்கு நல்ல ஆயுள் என்று முத்திரை குத்தி அனுப்பிவிட்டார்கள்.. எனது இந்த உதவிக்குக் கிடைத்த பலன்தான் ஜெஸி.... அம்மாவிடம் கலியாணம் செய்வதாகச் சொன்னேன். ஒத்துக் கொண்டார்கள். இருவரது வீட்டிலும் சம்மதத்திற்குப் பின்னர் ஒரு நல்ல நாளில் நால்வர் புடைசூழ கலியாணம் செய்துகொண்டோம்..

எனது நினைவை கொஞ்சம் அதிக நேரம் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம்தான்... ஜெஸிக்கு எலக்ட்ரா முதல் குழந்தை... ஆஃப் கோர்ஸ், எனக்கும்தான். :D . சில மாதங்களுக்கு முன் இரண்டு பேருக்கும் பயங்கர போட்டி, எந்த பெயரைக் குழந்தைக்கு வைப்பது என்று.. நான் சொன்னது 'ப்ரோட்டினி' என்பது.. ஆனால் அவளுக்கோ எலக்ட்ரா என்ற பெயர் மீது காதல்.. சரி போனால் போகிறது என்று அவளுக்காக விட்டுக் கொடுத்துவிட்டேன்... என்னதான் சொல்லுங்கள் எலக்ட்ரானைவிட ப்ரோட்டானுக்குத்தானே இன்று அதிக மவுசு...

எனது வீட்டை அடைந்ததும் ஜெஸியை எழுப்பி விட்டேன். குழந்தை இன்னும் தூக்கத்தில்தான் இருந்தது. வீட்டுக்கதவு என் கண்கள் பட்டதும் திறந்துகொண்டது, கதவில் ரெடார் போன்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும். அதனோடு ஐடெண்டிஃபை என்று ஒரு கருவியும் பொருத்தப்பட்டிருக்கும்.. என் மற்றும் ஜெஸியின் கண்களை இது தானாக ஸ்கேன் செய்து திறக்கும்.. அப்படியும் அதில் கோளாறு ஏற்பட்டால், இரண்டாம் வழியான சாவி உள்ளது...

ஜெஸி நேரே குழந்தையைத் தூக்கிக் கொண்டுபோய் படுக்கையறையில் வாங்கப்பட்டிருந்த தொட்டிலில் கிடத்தினாள்.. அவளைப் பார்த்தவாறே நானும் எனது சட்டைகளைக் கழற்றிப் போட்டு படுத்துத் தூங்கினேன்.... என் வாழ்நாளில் எனக்கு இப்படி ஒரு குழந்தை கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எத்தனையோ டெக்னாலஜிகள் வந்து விட்டாலும் குழந்தை என்ற ஒரு பாசம் நம் மடியில் கிடந்தால்தானே நமக்கு நிம்மதி... அதற்கு முதலில் இந்த டெக்னாலஜிகளுக்கு நன்றி சொல்லவேண்டும்..பின்னே! மிகச் சிறு வயதிலேயே இடுப்புக்குக் கீழே கால் வரையிலும் ஒரு விபத்தில் பறிகொடுத்துவிட்டு இன்று செயற்கையாகவே எல்லாவற்றையும் பொறுத்தி வாழும் எனக்கு ஒரு குழந்தை, கிடைக்கிறது என்றால் சும்மாவா?

- ஆதவா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com