Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureReview
விமர்சனம்

ஒரு கல் கவிதையான கதை
புதியமாதவி, மும்பை

Pazhamalai's book கலைப்படைப்புகளை அணுகும் போது கவிஞர் வாழ்ந்தக் காலம் மட்டுமல்ல அவருடைய வயதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது என்பதை அண்மையில் வாசித்த கவிஞர் பழமலய் அவர்களின் கவிதைகள் எனக்கு உணர்த்தின.

20 வயதில் ரசித்த சினிமாவை இன்று ரசிக்க முடிவதில்லை என்பது மட்டுமல்ல, அன்று ரசித்த எழுத்துகளை இன்று அதே கோணத்தில் ரசிக்க முடிவதில்லை. எழுத்தாளனும் வாசகனும் அவரவர் வயது அனுபவம் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப கடந்து போனவை பல. மரத்தின் வேர்கள் கூட நீர்த்தேடி மண்ணடியில் பயணம் செய்து கொண்டுதானிருக்கின்றன. இலைகளும் கிளைகளும் ஆகாயத்தைத் தொட்டுவிடும் ஆசையில் கிளைப்பரப்பிய பயணம் தொடர்கிறது.

மனிதனும் அப்படித்தான். அதிலும் எழுத்தாளனின் பயணம் அடிப்படை மதீப்பீடுகளில் வேரூன்றி கிளைப்பரப்பி தன் அனுபவத்தின் ஊடாக நடந்து வந்தப் பாதையை அதன் மதீப்பீடுகளை தத்துவார்த்தமாக, நக்கலாக, நையாண்டியாக போகிற போக்கில் காக்கையின் எச்சத்திலிருந்து மண்ணில் விழும் விதையாக உதிர்த்துச்
செல்கிறது.

வயதும் அனுபவமும் வாழ்ந்த வாழ்க்கையை மட்டுமல்ல அந்த வாழ்க்கையிலிருந்து எழுதப்படும் வரிகளையும் தீர்மானிக்கிறது என்பதுதான் இக்கவிதைகளைப் பற்றிய முதல் குறிப்பு.

A row of bottles on my shelf
Caused me to analyze myself.
One yellow pill I have to pop
Goes to my heart so it won't stop.
A little white one that I take
Goes to my hands so they won't shake.
The blue ones that I use a lot
Tell me I'm happy when I'm not.
The purple pill goes to my brain
'n tells me that I have no pain.
The capsules tell me not to wheeze
Or cough or choke or even sneeze.
The red ones, smallest of them all
Go to my blood so I won't fall.
The orange ones, very big and bright
Prevent my leg cramps in the night.

என்று முதுமையைப் பற்றி ஒருவர் (இணையத்தில் வாசித்தது) எழுதியிருக்கிறார். அவர் எழுதியிருப்பது போல முதுமை என்றவுடன் உடல் தளர்வு, வியாதி என்ற ஒரு பிம்பத்தை உடைக்கிறது இவர் கவிதைகள். மூட்டுகள் வலிக்கின்றன என்பதற்காக விசனப்படுவதில்லை இவர். அதற்கு மருந்து கொடுக்காமல் முதுமையைக் கொண்டாடுங்கள் என்று அறிவுரை கூறும் மருத்துவரையும் மற்றவர்களையும் நையாண்டி செய்கிறது. கைநடுக்கம், கண்பார்வை குறைவு என்பதால் சுயமாக அடிமயிரை மழிப்பதில் இருக்கும் சிக்கலையும் இப்படித்தான்
பார்க்கிறது.

"இது ஒரு பிரச்சனையா!"
என்று கேட்கலாம் ஓர் இளைஞர்,
எனக்குப் போல் வயதாகட்டும்!"

என்று போகிறப் போக்கில் சொல்லிச்செல்கிறது.

பலவருடங்கள் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையில் இணைய முடியாமல் இருக்கும் வர்க்கப்பிரதிநிதிகளாய் கணவனும் மனைவியும் இருப்பதை கலக்கமின்றி எடுத்துரைக்கிறது.

"வேணாண்டா! வேற மாப்ள பாரு
எங்கத்த சொன்னது சரியா போச்சி
நீங்க கொடுத்து வச்சவரு!
இல்லன்னா எங்கப்பா குடுத்திருக்க மாட்டாரு"

என்கிறாள் மனைவி.

கணவனோ -

'விவசாயி மகன்
வேலையில் இருக்கக் கூடாதா?

கிராமத்தானுக்கு
நகர உறவு பேராசையா?

எழுத்து புத்தகம் எல்லாம்
ஏதோ ஒருசிலர் பரம்பரை உரிமையா?"

என்று யோசிக்கிறது. அப்போதுதான் இருவரும் இருக்கிறோம் இருவேறு வர்க்கத்தின் பிரதிநிதிகளாய்! என்று ஒரு மார்க்கிய தத்துவத்தை அலட்டிக்கொள்ளாமல் வெளிப்படுத்துகிறது.

இதைப் போலவெ தான் பெண்ணியத்தைப் பேசும் கவிதையும். புதிய மருமகளுக்குத் தீர்ப்பு சொல்லியதை தானும் வாழ்வில் அனுபவிக்கும் போது ..! இக்கவிதையும் கவிதையின் தலைப்பு 'டார்ச்சர்/சித்திரவதை " என்பதும் பல்வேறு கோணத்தில் கவிதையை வாசிக்கும் அனுபவத்தைத் தருகிறது.

இதில் ‘சித்திரவதை' யாருக்கு? ஆணுக்கா? அவன் இதுவரை அனுபவித்து வந்த ஆண்மைக்கா? ஆண் என்ற பாலியல் அடையாளத்தால் மட்டுமே அவன் அனுபவிக்கும் ராஜ உபசாரங்கள் பறிபோவதால் ஏற்படும் டார்ச்சரா? இல்லை இவைகளைச் சட்டமாக்கி ஓரளவு பெண்ணிய உரிமைகளைப் பாதுகாக்க நினைக்கும் மகளிர் காவல் நிலையம் என்பதே ஆணுக்கு டார்ச்சராகிறதா?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனவிலங்குகள் பாதுகாப்பு என்பதெல்லாம் வார்த்தையளவில் அயல்நாட்டிலிருந்து நாம் அறிந்து கொண்ட அறிவியல் துறைகளாக நினைக்கிறொம். அது தவறு. வாசலில் ஊர்ந்து செல்லும் எறும்புகளுக்கு உணவிடுவதற்கே அரிசி மாவில் புள்ளிகள் வைத்து கோலமிட்டு வாழ்ந்தவன் தமிழன். மண்ணுயிருக்கெல்லாம் மண்ணில் இருக்கும் உரிமையை மதித்தவன் தமிழன். ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் புன்செய் காடுகளில் குளம் வெட்டி தண்ணீர்த்தாகம் தீர்த்தவன் தமிழன். அந்த உணர்வின் எச்சமாகத்தான் 'ஒங்க குழுமூரு எங்களுக்குக் குருவித்தொட்டி வச்ச ஊரு" ஒரு குருவி பேசியதாக கனவு காணுகிறது.

காக்கையை "ஓர் அழகான பறவை" என்றும் சுற்றுச்சூழல் கெடுவதாக காரணம் சொல்லி காக்கை கூட்டத்தை அடியோடு அழிக்க நினைக்கும் மனிதர்களின் எதிர்காலத்தை கற்பனை செய்து பார்க்கிறது.

'மனித மைய உலகில்
மனிதன் மட்டுமே எஞ்சுவானோ?
இவன் மட்டுமே எஞ்சி
எதைப் பார்த்துக் கொண்டிருப்பான்?"

காக்கைகளுக்காக மட்டுமல்ல காக்கைகளை நம்பி முட்டையிடும் குயிலினமும் அழிந்துவிடுமோ என்று அச்சப்படுகிறது.

கொனாரக் சிற்பங்களைப் பற்றி கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் "மனிதனின் மொழியை வெற்றிக்கொண்ட உளியின் ஓசை" (The poet Rabindranath Tagore wrote of Konark: "here the language of stone surpasses the language of man.") என்கிறார். பல்வேறு கவிஞர்களையும் கலைஞர்களையும் கவர்ந்த கொனாரக் சிற்பங்களை 2000 ஆண்டு இலக்கிய தொனமத்தில் வந்தக் கவிஞர் பழமலய் அந்த தொன்மங்களை ஏற்றி பார்க்கிறார். கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல் மதுரையை எரித்த கண்ணகியின் ஒற்றைச்சிலம்பாய் ஆட்சி அதிகாரங்களை கேள்வி கேட்ட அவ்வையின் குரலாய்.. தொன்மங்களில் வழிவந்த ஆதித்தாயின் காலடியாய் காட்சியளிக்கிறது. கவிதை இத்துடன் முடிந்துவிடவில்லை.

தொன்மங்களில் தோய்ந்து எழுந்து நின்று ஒரு கலகக்காரனாய் கொனாராக் பாட்டியின் ஊன்றுகோலை

"ஏதோ ஒரு சுள்ளி அல்ல
கோயில் தெய்வங்களுக்கு எல்லாம்
ஒருத்தி வைக்கும் கொள்ளி!"
என்று கலகம் செய்கிறது.

சான்றோரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல்
தெய்வமும் உண்டுகொல்
தெய்வமும் உண்டுகொல்

என்று மதுரையில் ஒலித்த ஒரு பெண்ணின் குரல்..
கைவிடப்பட்ட ஒருத்தியின் குரல்..

*

கவிதை என்றால் வெறும் சமூக கருத்துகளும் அதைச் சொல்ல வருவதும் மட்டும்தானா என்றால் நிச்சயமாக இல்லை. உரைநடைகள், உரையாடல்கள் கவிதையாகிவிட முடியுமா என்றால் அதுவுமில்லை. ஆனால் சமூகக் கருத்துகளை ஆணித்தரமாக சொல்லவும் உரையாடல் உத்தியைப் பயன்படுத்தி கவிதையை சனங்களின் வெளியாக்கும் திறனும் பழமலய் கவிதைகளின் தனிச்சிறப்பு என்று சொல்லலாம். எ.கா. "பிரச்சனை" என்ற கவிதையில் இத்திறன் பளிச்சிடுவதைக் காணலாம்.

"மழை" கவிதையில் மழையால் ஏற்படும் எதிர்வினைகளை அடுக்கி " மழை.. மழை... அது பெய்யட்டும்" என்று வாழ்த்து வரவேற்பது கவிதையின் மழைவாழ்த்தை கேள்விக்குரியதாக்குகிறது. அதுபோலவே 'புறமுதுகு ' கவிதையும் பெண்ணியப் பார்வையில் புருவம் சுளிக்க வைக்கிறது. ("சொள்ளுவிடுவதைக் கவிதையில் கூடவா பதிவு செய்து தம்பட்டம் அடித்துக்கொள்ள வேண்டும்.. இதெல்லாம் முதுமை வழங்கியிருக்கும் லைசன்ஸ் என்று சொல்லலாம்..! )

*

சிலவரிகளில் நிமிர்ந்து நிற்கும் கொனாரக் பாட்டி

> எதை முன்னிட்டும் நான்
இருக்க விரும்பியது இல்லை
உங்கள் நன்செய் நிலத்தில்
ஒரு 'நெல்மருட்டி' யாக.

> மனித மைய உலகில்
மனிதன் மட்டுமே எஞ்சுவானோ?
இவன் மட்டுமே எஞ்சி
எதைப் பார்த்துக் கொண்டிருப்பான்?
இவன் மட்டுமே எஞ்சி
எதைக் கேட்டுக் கொண்டிருப்பான்?
இவனுக்கே இவன் சலிக்கையில்
எதனால் ஈடு செய்வான்?

> காக்கைகள்..
அஃது ஓர் அழகான பறவை
இருட்டைப் போலவும்
இருட்டு வெளுத்து வருவது போலவும்
இருக்கும் அவற்றின் நிறங்கள்.

> உடைமையாக இருக்கும்வரைச்
சீதை
இராம இராவண யுத்தத்திற்கு
ஒரு மீட்புப் பொருள்தான்.
நானாக இருப்பதுதான்
என்னுடைய விடுதலை.
நீ மனுசன் என்றால்
நான் 'மனுசி'
உன் கையில் வாள்-
என் கைக்கு வேண்டும்.

வெளியீடு: பெருமிதம் வெளியீடு,
விழுப்புரம். தமிழ்நாடு.
தொலைபேசி: 04146 - 259448

விலை: ரூ 70

- புதிய மாதவி, மும்பை ([email protected]

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com