Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureBook Review
புத்தக விமர்சனம்

ஈழத்து இலக்கிய செல்நெறியில் முற்போக்குச் சிறுகதைகளின் சுவடுகள்

லெனின் மதிவானம்

சிறுகதை இலக்கியம் என்று கூறும் போது நவீன காலத்தே எழுந்த புதுத் துறை ஒன்றினை கருத்திற் கொண்டிருக்கின்றோம் என்பதை வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. இன்றுள்ள தமிழ் இலக்கிய வடிவங்களில் காலத்தால் பிந்தியதும் அதே சமயம் நவீன காலத்தில் இலக்கியத்தில் பெரும் பகுதியை ஆக்கிரமித்து வருகின்ற வடிவமாகவும் சிறுகதை விளங்குகின்றது. இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கூறுவது போல சிறுகதை என்ற இலக்கிய வடிவம் மேனாட்டாரின் இலக்கிய தொடர்பின் மூலம் தமிழில் வந்து புகுந்ததொன்றாகும்.

நிலமானிய சமூகவமைப்பின் சிதைவுடன் தோற்றம் பெற்ற முதலாளித்துவ சமூகவமைப்பும் அதனடியாக எழுந்த சமூகத்திற்கும் தனிமனிதனுக்கும் இடையிலான புடைப்பெயர்ப்பும் சிறுகதை இலக்கியம் தோன்றுவதற்கு சாதகமான சூழலை தோற்றுவித்தது. அவ்விலக்கிய வடிவமானது மேனாட்டாரின் தொடர்பிலிருந்து தமிழுக்கு வந்ததொன்று என்ற போதினும் தமிழர் பண்பாட்டுச் சூழலில் காணப்பட்ட அகவுலகத் தொடர்பும் மற்றும் தமிழர் சமூதாயச் சூழலிலே உருவாகி வந்துள்ள சில சமூக சக்திகளும் சிந்தனைகளும் தமிழ் சிறுகதை தோன்றி வளர்வதற்குரிய உந்துதலாக அமைந்தன. அவ்வகையில் தமிழ் சிறுகதை வரலாறானது தமிழர் சமூதாயத்தின் தனித்துவங்களையும் சிறப்புகளையும் உள்வாங்கி தமிழ் சிறுகதை துறையாகவே வளர்ச்சியடைந்து வந்துள்ளது எனக் கூறின் தவறாகாது.

1930களில் தமிழகத்திலே ஏற்பட்ட சத்தியாகிரக போராட்டமும் அதனையொட்டி எழுந்த ஜனநாயக கருத்துக்களும் அங்கு சிறுகதை இலக்கியம் தோன்றுவதற்கான சூழலை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையில் டொனமூர் அரசியல் அமைப்பானது மத்திய தர வர்க்கத்தினரிடையே ஓர் சலசலப்பை ஏற்படுத்தியதோர் அரசியல் திட்டமாக காணப்படினும் அதனூடாக கொண்டு வரப்பட்ட சர்வசன வாக்குரிமையின் பிரதிப்பலிப்பாக அரசியல் அரங்கிலே மக்கள் நடமாட்டம் இடம் பெறத் தொடங்கியிருந்தன. பொது மக்களுக்கான கல்வி வாய்ப்புகள் விஸ்தரிக்கப்ப்டதன் விளைவாக மத்திய தர வர்க்கம் உருவாகியது. இந்த பின்னனியில் தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவு எடுத்துக் கூறப்பட வேண்டிய தேவை ஏற்பட்டதன் விளைவாக, சிறுகதை இலக்கிய வடிவமானது முக்கியமானதோர் இலக்கிய கூறாக போற்றப்பட்டது. அத்துடன் சிறுகதைகளை பிரசுரம் செய்வதற்கான பத்திரிகைகளும் சிறு சஞ்சிகைகளும் தோன்றி சிறுகதை வளர்ச்சிக்கு உந்துதலாக அமைந்தன.

இவ்வகையில் 1930களிலேயே ஈழத்தில் சிறுகதைகள் தோன்றின என்ற போதிலும் ஆரம்பகால சிறுகதைகள் பெரும்பாலும் அதன் இலக்கிய வடிவத்தினை அறிமுகம் செய்கின்ற முயற்சியாகவே அமைந்துக் காணப்பட்டன. இச்சிறுகதை எழுத்தாளர்கள் பெரும்பாலும் என்ன எழுதப்படுகின்றது என்பதை விட எப்படி எழுதப்படுகின்றது எனும் விடயத்தினையே பிரதானப்படுத்தியிருந்தனர்.

1950 களுக்குப் பின்னர் தான் ஈழத்துச் சிறுகதை துறையில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருந்தன. இக்கால சூழலில் ஆசியா - ஐரோப்பா மற்றும் உலகலாவிய ரீதியிலே தொழிலாளர் வர்க்கம் சார்ந்த உணர்வுகளும் போராட்டங்களும் வலிமை பெறத் தொடங்கின. பாஸிசத்திற்கு எதிராக பலமான மக்கள் இயக்கங்கள் தோற்றம் பெற்று வளர்ச்சி பெற்றிருந்தன. 1930 களில் ஸ்பானியர்கள் உள்நாட்டு யுத்தத்திற்கு எதிராக போராடியதுடன் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாகி ஆயிரக் கணக்கான மக்கள் சமத்துவமான சமூதாய அமைப்பை உருவாக்குவதற்காக போராடிக் கொண்டிருந்தார்கள். இக்காலப்பின்னனியில் ஆஸ்திரியா, பிரான்ஸ் முதலிய நாடுகளிலும் பல விடுலை இயக்கங்கள் தோற்றம் பெற்றிருந்தன. இவ்வாறே ஆசியாவிலும் குறிப்பாக சீனா இந்தோNசியா முதலிய நாடுகளில் ஜப்பானிய பாஸியத்தை எதிர்த்து வீறு கொண்ட போராட்டங்கள் தோன்றி மக்களிடையே அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. பல்லாயிரக் கணக்கான மக்கள் விடுதலை இயக்கங்களில் தம்மை இணைந்துச் செயற்பட்டனர். இலட்சிய பிடிப்பும் முற்போக்கு உணர்வும் மிக்க எழுத்தாளர் பலர் தோன்றிக் கொண்டிருந்தார்கள். சிலர் பாஸிச வெறியாளர்களாரல் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டார்கள். தன் மரண வாயிலில் நின்றுக் கொண்டும் மனித குலத்தின் நாகரிகத்தை நம்பிக்கையுடன் மட்டுமல்ல கூடவே கர்வத்துடனும் தன் எழுத்துக்களின் ஊடாக பதிவு செய்த ஜுலியஸ் ப+சிக்கின் பின்வரும் வாசகம் இக்காலத்தே எழுந்த மக்கள் இலக்கிய கர்த்தாக்களின் உணர்வுகளை அழகுற எடுத்துக் காட்டுகின்றது. “இன்பத்திற்காகவே பிறந்தோம். இன்பத்திற்காகவே வாழ்நகிறாம். இன்பத்திற்காகவே போராடினோம். அதற்காகவே சாகின்றோம். துன்பத்தின் சாயலானது இறுதி வரை எம்மை அணுகாதிருக்கட்டும்” இவ்வகையான இலட்சிய பீடிப்பும் இலக்கிய தாகமும் கொண்ட எழுத்தாளர்கள் உலக இலக்கியத்தில் தோன்றிக் கொண்டிருந்தார்கள். இதன் பிரதிபலிப்பை நாம் ஈழத்து தமிழ் இலக்கிய செல்நெறியிலும் (குறிப்பாக சிறுகதைகளில்) காணக் கூடியதாக உள்ளன.

1950 களுக்கு பின்னர் ஈழத்துச் சிறுகதைகளில் புதியதோர் பரிமாணத்தை தரிசிக்க கூடியதாக அமைந்திருந்தது. ஈழத்தில் தேசிய இலக்கியம் எனும் குரல் எழுந்தது. தேசியம், தேசிய கோட்பாடு என்பன தத்துவார்த்த போராட்டங்களாக முனனெடுக்கப்பட்டன. அதன் விளைவாக ஈழ மண்ணுக்கே உரித்தான பிரச்சனைகள் சிறுகதைகளில் இடம் பெறத் தொடங்கின. இது குறித்து பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“தேசியப் பின்னணியில் வளரும் சமுதாயத்தின் போக்கை அனுசரித்து வாழ்க்கைக்கு கலைவடிவம் கொடுக்கவும் சரித்திரத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஈடுகொடுக்கவும் திறமையிருந்தால் சிறந்த - உலக இலக்கியத்தில் இடம்பெறத்தக்க உயர்ந்த சிறுகதைகளைப் படைக்க எமது எழுத்தாளாரால் முடியும் என்றே நம்புகிறேன். பொழுதுபோக்கிற்காக எழுதுவதா அல்லது பொது நலத்திற்காக எழுதுவதா என்னும் முக்கியமான கேள்வி இன்றைய எழுத்தாளர் பலரையும் எதிர்நோக்கி நிற்கிறது. இது புதிய கேள்வியன்று. வெவ்வேறு வடிவத்திலும் உருவத்திலும் இலக்கிய சிருஷ்டி கர்த்தாக்களை விழித்துப் பார்த்த கேள்விதான். ஆனால் இன்று மிக நெருக்கடியான நிலையிலே இக்கேள்வி எழுத்தாளரை நோக்கிக் கேட்கப்படுகிறது. ஈழத்துச் சிறுகதையாசிரியர்கள் தமது கலாசாரப் பாரம்பரியத்தையுணர்ந்து நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலையெய்தவும் மூட்டும் அன்புக் கனலோடு எழுத முடியுமா முடியாதா என்பதைப் பொறுத்திருக்கிறது எதிர்கால இலக்கிய வாழ்வும் தாழ்வும்”

ஒரு நாட்டின் பூலோக பண்பாடு, பொருளாதாரம், அரசியல் முதலிய அம்சங்கள் சமூக வாழ்க்கையை உருவாக்குவதில் முக்கிய தாக்கம் செலுத்துகின்றன. அவ்வகையில் பிரதேசம், மண்வாசனை என்ற அடிப்படையில் எழுகின்ற இலக்கியங்களை மேலோட்டமாக அர்த்தப்படுத்திப் பாரக்கின்ற போது குறுகியபாதகமாக படலாம். சற்று ஆழமாக நோக்கினால் தான் அதன் பின்னனியில் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தம் சாதனங்களாகவும் அவை அமைத்துக் காணப்படுகின்றன. மறுப்புறமாக அவை தேசிய எல்லைகளை கடந்து சென்று சர்வதேச இலக்கியமாகவும் திகழ்கின்றன. இவ்வாறுதான் ரசிய புரட்சியின் முன்னோடியாக திகழ்ந்த மாக்ஸிம் கோக்கியும் , இந்திய தேசியவிடுதலைப் போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்த பாரதியும் இன்னும் இத்தகையோரும் எமக்கும் அரசியல் இலக்கிய முன்னோடிகளாக திகழ்கின்றனர்.

இலங்கை அரசியல் வரலாற்றினை பொறுத்தமட்டில் நாற்பதுகளின் இறுதியிலும் 50களிலும் பொதுவுடமை இயக்கமானது வீரியத்துடன் செயற்படத் தொடங்கியது. அவ்வியக்கம் ஏற்படுத்திய கலாசார பண்பாட்டுச் சூழலில் தோற்றம் பெற்றதே முற்போக்கு எழுத்தாளர் சங்கம். முற்போக்கு கலை இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளையும் கொள்கைகளையும் முன்னெடுப்பதில் இவ்வணியினருக்கு முக்கிய பங்குண்டு. இந்த வரலாற்றையும் ஈழத்து இலக்கிய வரலாற்றில் அது பதித்த தடத்தினையும் வெளிக்கொணரும் வகையில் “ஈழத்து முற்போக்குச் சிறுகதைகள்” என்ற சிறுகதை தொகுப்பினை இலங்கை முற்போக்கு கலை இலக்கிய பேரவை பூபாலசிங்கம் பதிப்பகத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளது. இ.மு.எ.ச வின் நோக்கம் குறித்து இந்நூலின் முன்னுரையில் பிரஸ்தாபிக்கும் நீர்வை பொன்னையன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“முற்போக்கு எண்ணம் கொண்ட சகல எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் ஓர் அணியில் திரட்டி தொழிலாளர்கள், விவசாயிகள், புரட்சிகர புத்திஜீவிகள் பரந்துபட்ட உழைக்கும் வெகுஜனங்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு மக்கள் கலாசாரத்தை உருவாக்குவதும், உன்னத மனித வர்க்கத்திற்கான கலை இலக்கியம் படைப்பதும், சமத்துவ அடிப்படையில் சகல தேசிய இனங்களினதும் மொழி கலாசார முன்னேற்றத்திற்காக உழைப்பதும், எழுத்தாளர்களது நலன்களுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பாடுபடுவதுதான் இ.மு.எ.ச தின் நோக்கம்”

இவ்வகையில் செயற்பட்டுவந்த இ.மு.எ.ச மானது 1960 களின் ஆரம்பத்திலேயே அது சித்தாந்த ரீதியாகவும் இயக்க ரீதியாகவும் சிதைய தொடங்கியது என்பதனையும் கவனத்திலெடுத்தல் வேண்டும். இலங்கையின் பொதுவுடமை இயக்கத்தில் அறுபதுகளின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகளும் பொதுவுடமை இயக்கத்தை பிளவுக்குள்ளாக்கியது. மேற்படி பிளவும் அணி பிரிதலும் இ.மு.போ.எ.ச.த்தையும் பாதித்தது. அதன் ததலைமை பொறுப்பினை ஏற்றிருந்தவர்களின் போக்கு இவ்வியக்கத்தை சித்தார்த்த ரீதியாக சிதைத்து பின் இயக்க ரீதியான சிதைவுககு வழிவகுத்தது.

மனுக்குல விடுதலைக்கான பரந்துப்பட்ட ஐக்கிய முன்னனிப் போராட்டத்தில் இவ்வியக்கத்தின் பலம் பல்வீனம் குறித்து ஆழமான ஆய்வொன்றினை காய்தல் உவத்தலின்றி செய்தல் காலத்தின் தேவையாகும்.

இ. மு. போ. எ. ச வீறுகொண்டெழுந்த காலத்திலும், பின்னர் அதன் தளர்வுற்றக் காலத்திலும் இவ்வியக்க செயற்பாடுகளில் பங்கெடுத்த எழுத்தாளர்கள் படைப்புகளே இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன. இச் சிறுகதைகள் யாவும் 1940 - 1970 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்டவையாகும். சில சிறுகதைகள் இறுதியில் அக் கதை பரவலாக கொண்ட ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. துரதிஸ்டவசமாக சில சிறுகதைகள் எழுதிய காலம் குறிப்பிடப்படவில்லை. இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் யாவும் வெவ்வேறு அளவில் மனிதாபிமானம், இனவிடுதலை போன்ற விடயங்கள் குறித்து சித்தரிக்கின்றன. அவை அவ்வவ் பிரதேசத்திற்குரித்தான மண்வாசனையுடன் வெளிப்படப்பட்டுள்ளமை அதன் தனித்துவமான பண்புகளில் ஒன்று.பொதுவாக இலக்கியத்தின் உள்ளடக்கம், அது வெளிப்படுத்தி நிற்கின்ற அழகியல் அம்சங்கள் என்ற வகையில் நோக்குகின்ற போது அதனை பின்வரும் வகைப்பட்டினுள் அடக்க கூடியதாக உள்ளன.

1. முற்போக்கு நோக்கிலான சிறுகதைகள்
2. மார்க்ஸிய நோக்கிளான சிறுகதைகள்
3. பிற்போக்கு நோக்கிலான சிறுகதைகள்

சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்ட ஒருவர் கோயிலுக்குள் செல்வதை அனுமதித்தல் முற்போக்கான பார்வையாகும். தாழ்த்தப்பட்ட ஒருவர் கோயிலுக்குள் செல்ல முடியாத நிலையில் உள்ள ஒடுக்கு முறையை இனங்கண்டு அதற்கான மக்கள் போராட்டத்தை வர்க்க போராட்ட நோக்கில் அணுகுவது மார்க்ஸிய நிலைப்பட்ட பார்வையாகும். தாழ்த்தப்பட்ட ஒருவர் கோயிலுக்குள் செல்லும் உரிமையை மறுப்பது பிற்போக்கான பார்வையாகும். இத்தகைய போக்குகள் இத் தொகுதியில் அடங்கியுள்ள சிறுகதைகளில் எவ்வாறு வெளியீட்டு நிற்கின்றன என்பது பற்றி நோக்குவோம்.

இத்தொகுப்பில், முற்போக்கு நோக்கிலான சிறுகதைகளாக இரத்த உறவு (அ. ந. கந்தசாமி), ஒரு புதிய ஆயுதம் (சி. வி. வேலுப்பிள்ளை), தண்ணீர் (மொஹிதீன்), வாய்க்கரிசி (டொமினிக் ஜீவா), பிரசாதம் (எஸ். அகஸ்தியர்), மண்பூனைகளும் எலி பிடிக்கும் (மருதூர்க்கனி), 47 வருடங்கள் (கே. விஜயன்), தேவ கிருபையை முன்னிட்டு வாழும்…. (காவலூர் ராசதுரை), ஊர் நம்புமா? (நந்தி), ஒரு கிராமத்து பையன் கல்லூரிக்கு செல்கின்றான் (செ. கதிர்காமநாதன்), பெருமூச்சு (ஏ. இக்பால்), எப்படியம் பெரியவன் தான் (தெணியான்), மாறுசாதி (திக்குவல்லை கமால்), நிலவோநெருப்போ?(என்.சோமகாந்தன்),என் நண்பன் பெயர் நாணயக்கார……(சாந்தன்), அந்தக் கிழவன் (அ.ஸ. அப்துஸ் ஸமது), பகவானின் பாதங்களில் (மு. கனகராசன்) ஆகியன காணப்படுகின்றன.

மார்க்ஸிய நோக்கிலான சிறுகதைகளாக தண்ணீர்,(கே டானியல்), போர்வை(என். கே ரகுநாதன), சங்கமம்(நீர்வை பொன்னையன), நேற்றைய அடிமைகள்(செ.யோகநாதன்)ஆகியன காணப்படுகின்றன. இதற்கு மாறாக சாயம் (செ. கணேசலிங்கம்), இங்கெவர் வாழவோ (யோ. பெனடிக் பாலன்) முதலானோரின் கதைகளில் கோட்பாட்டு தளம் வலிந்து புகுத்தப்பட்ட அளவிற்கு அழகியல் அம்சம் பேணப்படவில்லை.

டொமினிக் ஜீவின் சிறு கதைகள் பெரும்பாலும் வர்க்கம் கடந்த மனிதத்துவத்தை வலியுறுத்துவதாகவே அமைந்துக் காணப்படுகின்றன. இத் தொகுப்பில் இடம்பெறுகின்ற “வாய்க்கரிசி” என்ற சிறுகதையிலும் இப் பண்பு முனைப்புற்றிருந்ததை காணலாம். செ. கணேசலிங்கத்தின் “சாயம்” யோ. பெணடிக்பாலனின் இங்கெவர் வாழவோ, கே விஜயனின் 47 வருஷங்கள் முதலான கதைகள் மலையக சமூகம் தொடர்பானவையாகும். 47 வருஷங்கள் என்ற சிறுகதை மலையக பெருந்தோட்ட உற்பத்தியுடன் இணைந்த முதியோர் (தொழிலாளி) ஒருவரின் வாழ்க்கை அனுபவத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. இக்கதைகளில் மலையக வாழ்வியலையும் அதனடியாக எழுகின்ற மனித உணர்வுகளையும் காணமுடியாதுள்ளது. மலையக சமூகத்தின் உற்பத்தி முறை உற்பத்தி உறவு என்பவற்றை சமூக பின்னணியோடு இணைந்து பார்ப்பதிலே இவ்வெழுத்தாளர்கள் இடருகின்றனர். எனவே இக்கதைகளில் கோட்பாட்டு தளம் வலிந்து புகுத்தப்பட்ட அளவிற்கு அதனை சமூகத்துடன் பொருத்திப் பார்க்க தவறிவிடுகின்றனர்.

கே. கணேஷின் ‘சத்திய போதிமரம்’ என்ற சிறுகதை மனித தார்மிகம் தொடர்பான கதையாக அமைந்துள்ளது. கடவுள் சன்னிதானத்தில் செய்யப்படுகின்ற சத்தியமும் பின்னர் அது உண்மையாக பலிக்கின்ற நிகழ்வையும் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள கதையாகும். இச் சிறுகதையை வாசித்தபோது அண்மைக்காலத்தில் கே. கணேஷ் தொடர்பாக வெளிவந்துள்ள கருத்துக்களையும் இங்கொருமுறை குறித்துக்காட்ட வேண்டியது அவசியமானதாகின்றது. திரு.கே. கணேஷின் அந்திம காலத்தில் அவரது இலக்கிய சிந்தனைகள் குறித்த நேர்காணலை மேற்கொண்ட பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் மதம் தொடர்பான அவரது கருத்துக்களை துருவி துருவி ஆராய்ந்து வெளிக் கொணர்வதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார். இந்நேர்கானலின் ஊடாக மார்க்ஸிய சிந்தனையாளர்கள் அனைவரும் இறுதியில் மதத்திலே சங்கமிக்கின்றார்கள் என்ற கருத்தை வெளிக் கொணர்ந்துள்ளனர். இதற்கு மாறாக நந்லாலா சஞ்சிகை குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட கே. கணேஷ் தொடர்பான நேர்காணலானது அவரது மதம் சார்ந்த நம்பிக்கைகளும் கருத்துக்களும் அந்திம காலத்தில் தோன்றியதொன்றல்ல.ஆரம்ப கால முதலே அவரிடத்தே இருந்து வந்துள்ள நம்பிக்கையாகும் என்ற விடயத்திற்கான வெளிக் கொணர்ந்துள்ளனர். கே. கணேஷ் எழுதிய ‘சத்திய போதிமரம்’ என்ற கதையும் அவரது மதம் நம்பிக்கையானது ஆரம்ப கால முதலே இருந்து வந்துள்ளதை எடத்துக் காட்டுகின்றது. இதற்கு அப்பால் இத்தகைய மத சிந்தனைகளை வெளிப்படுத்திய கே. கணேஷ}லும் எத்தகைய பங்களிப்பளிப்பினை சமூகமாற்ற தளத்தில் வழங்க முடியும் என்பதை அவர் பொறுத்த ஆய்வுகளினூடாக வெளிக்கொணர வேண்டியது சமூகவியலாளர்களின் கடமையாகும்.

சி.வி. வேலுப்பிள்ளையின் ஒரு புதிய ஆயுதம் என்ற மொழி பெயர்ப்பு கதை இடம்பெறுகின்றது. இக்கதையில் சிறுகதைக்கான பண்பினை விட விவரனத்தன்மையே மேலோங்கியிருக்கின்றது. தோட்டத துரைக்கு எதிரான போர்க்குணத்தை காட்டுவதற்காக சங்கத் தலைவர் தாடி வளர்ப்பதாக இக்கதை அமைந்துள்ளது. இந்த செயல் துரையை ஆத்திரம் ஊட்டச் செய்வதுடன் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் அவன் ஈடுபடுவதையும் காட்டுகின்றது.

துரை, பெரியாங்கங்கானி, மற்றும் தோட்டப்புற உத்தியோகத்தர்களுக்கான எதிர்ப்பை காட்டுவதற்காக இளைஞர்கள் சில தாடிவளர்த்தல், இட்லர் மீசை வைத்தல் முதலிய செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காக இவர்கள் அவ்வப்போது தண்டிக்கப்பட்டதுடன் சிலர் வேலையிலிருந்தும் நீக்கப்பட்டனர். இருப்பினும் தமது எதிர்புணர்வை இத்தகைய செயல்களின் மூலமாகவும் காட்டி வந்துள்ளனர். மலையக தோட்டப்புற வாழ்க்கையை சிறப்பாக உணர்ந்த ஒருவருக்கு இக்கதை அந்நியப்பட்டிருக்காது. ஆனால் சி வியின் ஆங்கில படைப்பை வாசித்த ஏற்பட்ட உணர்வு மொழிப்பெயர்ப்பை வாசித்த போது ஏற்படவில்லை என்ற போதிலும் மொழிப் பெயர்ப்பு உள்ளடக்கம்- வடிவம் சிதையாதவகையில் அமைந்துள்ளது.

இவ்வாறிருக்க, சி.வி. வேலுப்பிள்ளை இக்கதையை எழுதிய காலத்தில் மலையகத்தில் இடது சாரி இயக்கம் முனைப்பு பெற்று வீறுகொண்ட போராட்டங்களை நடாத்திக் கொண்டிருந்தது. சமூக ஒடுக்குமுறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரான மக்கள் போராட்டங்கள் உருப்பெற்று அவை வீறுகொண்ட போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டன. மக்களுக்கு எதிராக செயற்பட்ட பல தோட்ட துரைமார்கள் தாக்கப்பட்டார்கள், சில கணக்கப்பிள்ளைகளின் கைகள் வெட்டப்பட்டன. இவ்வாறனதோர் சூழலில் இத்தகைய போக்குகளை சி. வியின் எழுத்துக்கள் வெளிக் கொணரத் தவறிவிடுகின்றது. மலையகத்தில் தோன்றிய இடது சாரி இயக்கத்தின் எழுச்சி இன்னும் இலக்கியமாக்கப்படவில்லை. இனிமேல் தான் அவை இலக்கியமாக்கப்பட வேண்டும்.

திரு. எச்.எம்.பி மொஹிதீன் எழுதிய ‘தண்ணீர்’ என்ற சிறுகதை சேரியில் வாழ்கின்ற நகர்நிலை தொழிலாளர்களின் வாழ்க்கையை அழகியல் சிதையாதவகையில் உண்மையின் பக்கம் நின்று எழுதப்பட்டுள்ளமை இதன் சிறப்பான அம்சமாகும். நகர் நிலை தொழிலாளர்கள் வர்க்கத்தினரிடையே தொழிலாளவர்க்க அல்லது உதிரி தொழிலாளவர்க்க பண்புகள் எவ்வகையில் அம்மக்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தியுள்ளன எனும்விடயம் கோட்பாடாக அல்லாமல் பாத்திர வார்ப்பின் அடிப்படையில் சிறுகதையாக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக டானியலின் சிறுகதைகளை பொறுத்தமட்டில் வர்க்க உணர்வு முதன்மைப்படுத்தப்பட்டிருப்பதுடன் வர்க்க போர்குணத்தை படைப்பாக்கி தந்ததில் முதன்மையான பங்களிப்பினை நல்கியுள்ளார். இத்தொகுதியில் இடம்பெறுகின்ற “தண்ணீர்” என்ற சிறுகதை தலித் மக்களின் வாழ்வியலையும் உணர்வையும் வெளிக் கொணர்கின்றது. ஆனால் கதையின் இறுதியில் கதையின் முக்கிய பாத்திரமான முப்பன் சின்னான் தண்ணீரில் நஞ்சி கலந்திருப்பதனை அறிந்த பின்னர் தமது மக்கள் தண்ணீரை குடித்து இறக்காமல் இருப்பதற்காகவும் அவர்களுக்கு அறிவிப்பதற்காகவும் தனது விரலை கடித்து குருதியால் நஞ்சு எழுதி வைத்து விட்டு இறப்பது செயற்கைதனமாக உள்ளது. இவ்வம்சம் கதையின் யதார்த்த ஓட்டத்தை பாதிப்பதாக உள்ளது. இத்தகைய நிகழ்வு உண்மை சம்பவமாக இருப்பினும் அவை வகைமாதிரியான பாத்திரப்படைப்பாக அமையவில்லை.

இத்தொகுப்பில் அடங்கியுள்ள மிக சிறந்த கதைகளிலொன்றாக நீர்வை பொன்ணயனின் “சங்கம்” சிறுகதை அமைந்துள்ளது. 1960 களில் சகல இடதுசாரி ஜனநாயக சக்திகளும் இணைந்து 21 அம்ச கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை நடாத்தியமை இடதுசாரி இயக்க வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. அப்போராட்டம் குறித்து அதனடியாக எழுந்த உணர்வுகளையும் கருத்தோட்டங்களையும் கலைத்துவம் குன்றாத வகையில் நீர்வை பொன்னையன் படைப்பாக்கி தந்துள்ளார். தத்துவ தெளிவும் சிருஷ்டிகர திறனும் ஒருங்கமைந்துள்ளமையே இதற்கான அடிப்படையாகும்.

இச் சிறுகதை கட்சி இலக்கியத்திற்கான அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. கட்சி இலக்கியம் என்பது பாட்டாளி வர்க்க கட்சியை முதன்மைபடுத்தியே படைப்பாக்கப்பட வேண்டும் என்பது அதன் நியதியாகும். கட்சியின் போராட்டங்களை சரியான திசை மார்க்கத்தில் முன்னெடுத்து செல்வதற்கான தளம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இத்தகைய மக்கள் எழுச்சிக்காகவும் புரட்சிகர பணிக்காகவும் பரந்துப்பட்ட மக்களை விழிப்பு கொள்ளச் செய்வதும் அணிதிரட்டுவதும் கட்சி இலக்கியத்தின் பிரதான இலட்சியமாகும். மாறாக கட்சியை மிகைப்படுத்தி, கட்சி உறுப்பினர்களை புனிதர்களா காட்ட முனைவது கட்சி இலக்கியமாகாது. அதே சமயம் கட்சியில் உள்ள சிறு சிறு முரண்பாடுகளை பிரதானமாக்கி அதனை வெகுசன தளத்திற்கு கொணர்ந்து கட்சியை சிதைப்பது எதிர் புரட்சிகரமான செயலாகும். மாக்ஸின் கோர்க்கியின் தாய், யங்கமோவின் “இளமையின் கீதம்” முதலிய படைப்புகள் கட்சி இலக்கியத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

இதற்கு மாறாக கட்சி இலக்கியம் என்பது மார்க்ஸியத்தை கற்காமல் அதன் உச்சாடனங்கள் கோசங்கள் முதலியவற்றால் கவரப்பட்டு, புரட்சியின் தளத்தில் மக்களையும் அதன் நேச சக்திகளையும் நிராகரித்து விட்டு தன்னை மாத்திரம் புரட்சியாளராக காட்டும் கோமாளி தனத்திற்கு எதிரானதாகும். புரட்சிகர சக்திகளை பிளவுப்படுத்த முனைவது எதிர் புரட்சிகரமானது. மக்கள் மத்தியில் முரண்பாடுகளை கையாளவது தொடர்பாகவும் கட்சி அமைப்பு தொடர்பாகவும் மாவோ தெளிவானோர் நிலைப்பாட்டினை முன் வைத்திருக்கின்றார். அந்த வகையில் பரந்துப்பட்ட ஐக்கிய முன்னனியைக் கட்டியெழுப்புவதை நோக்காக கொண்டே கட்சி இலக்கியம் படைக்கப்படுகின்றது. நீர்வை பொன்னையன் கட்சி இலக்கியம் குறித்து பல கதைகளை எழுதியுள்ளார்கள். அவற்றில் முக்கியமானதொரு கதையாக சங்கமம் சிறுகதை அமைந்துள்ளது.

என். கே. ரகுநாதன் எழுதிய போர்வை என்ற சிறுகதை கடினமான சிறுகதை வடிவத்திற்கு பெருமளவில் சவாலாக அமையக் கூடிய உரையாடல்கள் உறுத்தும் பாத்திர படைப்புகள் மூலமாக சிறுகதையாக்கித் தந்துள்ளமை சிறப்பானதாகும். இச்சிறுகதை சமுதாய முரண்பாடுகளையும் பிரச்சனைகளையும் சமுதாய சூழலில் காணப்படும் குறியீடு, படிமம், இதிகாச புராண கதைகளின் துணைக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளது. உள்ளடக்கமான உருவமா என்ற வீன்வாதத்தில் இறங்hகமல் வரலாற்றுப் பார்வை,வர்க்கச் சார்பு, அழகியல் அக்கறை என்ற தத்துவ பின்புலத்தில் நின்று படைப்பாக்கியுள்ளார். இக் கதையின் ஊடாக என். கே. ரகுநாதன் வாழ்க்கை அனுபவத்தையும் கோட்டபாட்டு அணுகுமுறையும் இணைந்து வெளிப்படுத்தியிருக்கின்றார். தத்துவ தெளிவும் படைப்பாக்கத் திறனும் இதற்கான அடிப்பாக அமைந்துள்ளமையை இனங்காண முடிகின்றது.

தேசிய இலக்கியம், கோட்பாடு, என்பதன் அடுத்த கட்ட பரிணாமமான இலங்கையில் பண்ணையடிமைத் தனத்தின் ஒடுக்கு முறையை எதிர்க்கும் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப்போராட்டம் சாதியத்தையும் தீண்டாமையையும் தகர்க்கும் தேசியமாக பரிணமித்தது. இக் காலச் சூழலின், எழுச்சியையும் அதனடியாக எழும் போர்குணத்தையும் செ. யோகநாதனின் நேற்றை அடிமைகள் என்ற சிறுகதை சித்திரிக்கின்றது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் நடந்த அறுபதுகளின் காலக்கட்டத்தில் எழுதப்பட்ட இக்கதை சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளங்களில் எப்படி சாதிய சமூகம் தனது ஒடுக்குமுறையை செலுத்துகின்றது என்பதை காட்டுகின்ற அதேசமயம் காலப்போக்கில் அடக்கியொடுக்கப்பட்ட மக்களிடையே ஏற்பட்டு வருகின்ற எழுச்சிகளையும், தாங்களும் மனிதப்பிறவிகள் என்ற அடிப்படையில் போராட முனைகின்ற போக்குணத்தையும் வெளிப்படுத்திக் காட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையில் முக்கிய பாத்திரமான தங்மணியின் வளர்ச்சி, தமது ஓடுக்கு முறைகளுக்கு எதிராக போராடுவதற்காக உருவாகியுள்ள மக்கள் இயக்கம் மற்றும் அக்காலக் கட்டத்தில் அவ்வியக்கத்தின் சுவாச காற்றாக விளங்கிய இலட்சிய பிரகடனமான “அடிமை குடிமை முறை ஒழியட்டும், ஆலயக் கதவுகள் திறக்கட்டும்” ஆலமரத்தின் நெஞ்சியிலே ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் என்பன இதற்கு தக்க எடுத்துக்காட்டாகும். இக்கதை கட்சி இலக்கியத்திற்கான முனைப்பை காட்டி நிற்கின்றது என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை.

இத்தொகுப்பினை முழுமையாக வாசித்த போது இத்தொகுதியில் அடங்கியுள்ள கதைகள் யாவும் முற்போக்கானவைகளாகவும், அதன் தர்க்க ரீதியான வளர்ச்சியான மார்க்ஸிய நிலைப்பட்டவையாகவும் காணப்படுகின்றன. மக்களின் விடுதலையை நோக்கிய சமூக மாற்ற போராட்டத்தை எதிர்க்கும் பழைமைவாதப் பார்வை இக்கதைகளில் இல்லாதிருப்பது இத் தொகுப்பின் சிறப்பான பண்பாகும். இச்சிறுகதைகள் யாவும் வெவ்வேறு வகையில் சமூகத்தில் அடித்தட்டில் வாழும் மக்களின் வாழ்க்கையையும் அதனடியாக எழுகின்ற உணர்வுகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றன.

இ. மு. எ. ச தேசிய இலக்கியம், இலக்கிய கோட்பாடு தொடர்பான போராட்டத்தில் ஏகாதிபத்திய நவ காலனித்துவத்திற்கு எதிராகவும் இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிராவும் தமது பார்வையை முன்னிறுத்தி செயற்பட்டது. இதன் வெளிப்பாடாகவே இவர்கள் தமிழர், முஸ்லிமகள், மலையக மக்கள், சிங்கள மக்கள் என ஐக்கியப்பட்டு தமது இருப்பையும் தேசிய அடையாளங்களையும் நிலைநிறுத்துவதற்கான தத்துவார்த்த போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் பினன்ணியிலே மண்வாசனை மிக்க படைப்புகள் தோன்றம் பெற்றன. இந்த போக்கை இத்தொகுதியில் அடங்கியுள்ள சிறுகதைகளில் காணக் கூடியதாக உள்ளது. அதே சமயம் இடதுசாரி இயக்கத்தில் ஏற்பட்ட தத்தவார்த்த முரண்பாடுகள் இ.மு.எ.சங்கத்தை பாதித்தது. இந்த பின்னனியில் இ.மு.எ.ச செயலற்றதாக மாறியது. இதன் தாக்கத்தினையும் இப்படைப்புகளில் இனங்காணக் கூடியதாக உள்ளது. இந்தவகையில் மு. போ. எ. ச குறித்த ஆழமான-நுட்பமான ஆய்வுகளை மேற்கொள்வது அறிஞர் கடன். மனுக்குல விடுதலைக்கான பரந்துப்பட்ட ஐக்கிய முன்னணி போராட்டத்தற்கு இவ்வாய்வு அவசியமானதாகும்.

இந்த இருபத்தைந்து கதைகளும் எழுதப்பட்ட காலத்தில் பிரசுரிக்கப்பட்ட எழுத்தாளர்களின் புகைப்படங்களும் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எழுத்தாளர்கள் குறித்த தகவல்கள் அவர்களது இலக்கிய பங்களிப்புகள் குறித்த தகவல்கள் இத் தொகுப்பிற்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இக்கால சூழலில் மலையக மண்வாசனையுடன் சிறப்பான சிறுகதைகளை எழுதியவர் என். எஸ். எம் இராமையா. அவ்வாறே எழுபதுகளில் கட்சி இலக்கியம் தொடர்பில் சிறுகதை உலகில் தனித்துவமான ஆளுமை சுவடுகளை பதித்தவர் க. தணிகாசலம் அவர்கள். தாயகம் சஞ்சிகையில் இவரது பெரும்பாலான கதைகள் பிரசுரமாகியிருந்தன. மேலும் இக்காலப்பகுதியில் முக்கிய படைப்பாளியாக வேர்கொண்டு கிளைபரப்பியவர் நந்தினி சேவியர், ஈழத்து சிறுகதை இலக்கியத்திற்கு நம்பிக்கை ஒளியை பாய்ச்சியவர். இவர்களது படைபுகள் இத்தொகுப்பில் அடங்காமை துரதிஷ்டவசமான ஒன்றே. இவ்விடத்தில் பிரிதொரு விடயம் குறித்து நோக்கவும் வேண்டியுள்ளது. க. தணிகாசலம், நந்தினி சேவியர் ஆகியோர் மார்க்ஸி நோக்குடன் முற்போக்கு இலக்கியங்களைப் படைத்தவர். என். எஸ். எம் இராமையா மார்க்ஸியத்தை ஏற்காததுடன் முற்போக்கு இலக்கிய இயக்கத்தையும் பெரிதாக ஆதரிக்கவில்லை. இருப்பினும் மலையக மக்களின் வாழ்வனுபவங்களை யதார்த்தம் சிதையாமல் உயிர்ப்புடன் அவர் படைப்பாக்கம் செய்யும்போது இயல்பாகவே முற்போக்கு குணாம்சம் வந்தமைந்து விடுகின்றது. அவரது கோட்பாடுகள் படைப்பாக்கத்தில் பிற்போக்கு நிலைப்பாட்டை ஏற்படுத்த ஏதுவாக அமையவில்லை என்றவகையில் இத்தகைய முற்போக்குப் படைப்புகள் தொகுப்பு ஒன்றில் இடம்பெற ஏற்றனவே.

அவ்வாறே தொகுப்பில் ஆங்காங்கே காணப்படும் எழுத்துப் பிழைகள் கருத்துப் பிழைகளாக காணப்படுகின்றன. அடுத்த பதிப்பில் அவை திருத்தப்பட வேண்டியவையாகும்.

காலத்தின் தேவையை நன்கறிந்து முற்போக்கு கலை இலக்கிய பேரவை பூபாலசிங்கம் பதிப்பகத்துடன் இணைந்து அழகான முறையில் இத்தொகுப்பினை வெளியிட்டுள்ளனர். விலை. 375 ரூபா (இலங்கை விலை).

- லெனின் மதிவானம்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

பதிப்பாளர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தில் தங்களது புத்தகங்கள் பற்றிய அறிமுகம் இடம்பெற விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com