 |
கவிதை
மூன்று கவிதைகள்
1
விறகுடைக்க வந்த
வெட்டியானின்
பசிஅறியாமல்
பழைய கஞ்சியை
ஊற்றினாள்
ஆண்டைவீட்டு அம்மா .
மூச்சிரைக்க
பிளந்து போட்டவனின்
முன்னால்
விறகுகள் கிடக்கிறது
அடித்து எரிய வைக்க இருக்கும்
ஆண்டைகளின்
மண்டை ஓட்டு கபாலமொத்து.
2
அரைகுறை ஆடையுடன்
வரும் பெண்களை
வேடிக்கை பார்த்தபடி
"காஃபி டே"யில் குடித்த
காஃபியின் விலை
முப்பது ரூபாய்...
கருக்கலில் சென்று
கரும்புக்குகளை வெட்டி
உச்சி வெய்யிலில் வீடுதிரும்பும்
அம்மாவுக்கு கூலி
இருபைத்தைந்து ரூபாய்.
3
துளி நுனி கொழுந்து
இல்லாமல்
பட்டுப்போய் நிற்கிறது
வேம்பு ,துளசி,நொச்சி,.....
3டி மூவ்மென்டில்
டீ.வீ. பெட்டிக்குள்
உலா வருகிறது
வேம்பு,புதினா, துளசியை
கொண்டு தயாரான
சோப்பு விளம்பரம்.
- வீரமணி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|