 |
கவிதை
இரவு தமிழ்ஹாசன்
இரவைக் கண்டு
அஞ்சாதீர்கள்!
இது
விடியலுக்கான நேரத்தை
வெளிச்சம் போட்டுக்
காட்டும் இடம்.
உலகம் எனும் எழுத்தில்
கடவுள் வைத்த
கடைசிப்புள்ளி
இரவு.
விடியாத வாழ்க்கையில்
விடிகின்ற இரவை
எத்தனை முறை
கடந்திருப்போம்?
கடந்த இரவையெலாம்
காலாவதியாக்குங்கள்
கடக்கின்ற இரவை
கருவாக்குங்கள்.
வாழ்க்கைக்கான
வாயிற்கதவு இங்கேதான்
திறந்திருக்கிறது!
இரவிற்கு பூட்டேது?
வாழ்க்கையே பூட்டு
ஞானமே சாவி
இரவே விடியல்.
இது
கருப்பர்கள் நடத்தும்
மாநாடு.
இது
கவிஞர்களின்
கவி எழுதும் மேடை.
காதலர்களின்
கனவு காணும் திரை .
மூத்தோரின்
முன்னெச்செரிக்கையான
இடம் .
விடிந்தால்
தற்காலிகத் தூக்கம்
இல்லையேல்
நிரந்தரத் தூக்கம்!
புதுமணத் தம்பதிகளின்
புத்தம் புது நண்பன்...
நண்பனின் துணையோடு
நாளைய உலகத்தை
உருவாக்கும் முயற்சியில்
அவர்கள்.
கணவன் மனைவியின்
கடைசி நிமிடச்
சண்டை.
இரவில்
இசையமைக்கும்
இயந்திர வாகனங்கள்.
விலைமாதர்களின்
விடாப்பிடியான
வியாபாரம் ...
இவைதானே
நாம்கண்ட
இரவுகள்?
இத்தனை நாளும்
இரவின் மீது
எச்சில் வார்த்தைகளை
அல்லவா எறிந்துள்ளோம்!
அதன் மேலுள்ள
அசிங்கங்களைத்
துடைத்தால் போதும்
விடியல் தானாய் வரும்.
இரவின் மேல்
வெள்ளையடிக்க வேண்டாம்
ஒற்றடை அடித்தால் போதும்
வாழ்க்கை அர்த்தப்படும்!
சாதனையாளர்கள்
சரித்திரம் படைக்கும்
சரியான இடம்
இரவு.
இரவை
ஓர்நாளின்
இறுதியே இன்றி...
அடுத்தநாளின்
ஆரம்பம் என்போம்.
நாம் அடைய வேண்டிய
சிகரம் வேறெங்குமில்லை
விலக்கிப்பாருங்கள்
இரவை
விடியலாய் அது
வீட்டின் முன்
விரிக்கிறது!
- தமிழ்ஹாசன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|