 |
கவிதை
ஸ்ருதி ரமணி கவிதைகள்
அறிக...!
----------------
தூசி படிந்த மனதில்
மிதக்கும் பட்டாம் பூச்சிகள்
இரையைக் கவ்விப் பிடிக்க
எதிர் நீச்சலிடும்
மனித மிருகங்கள்
தத்திச் சென்று சண்டையிடும்
கோவேறு கழுதைகள்
யாருக்கு யார் பூட்டு?
எந்தச் சாவியைக் கொண்டு
எதைத் திறப்பது?
இதயச் செதில்களுக்குள்
இயக்கங்கள் பலப்பல
கண்டுபிடித்துச்
சொல்ல நினைப்பவர்
கவிழ்ந்துவிழும்
படுகுழிகள்
யாம் அறிந்ததே!
எல்லாமும் ஒன்றுதான்
ஒரே வகை,
ஒரே நிறை!
எடுத்துச் சொன்னால்
எத்தனையோ வசைகள்!
அத்தனையும் காண்
ஆய்ந்திடுவீர் நீவிர்...!
----------------
முடியும்
-------------
காலக் கணக்கனின்
கட்டுடைத்த நீள்வெளிகள்
மோனத் தவமிருக்கும்
முற்றுப் புள்ளிகள்
ககனப் பெருவெளியின்
கலையாத மௌனத்தில்
காணக் கிடைத்திடும்
கடைசி அரூபம்
உன்னைத் தின்று
உலகத்தின் சாரமெலாம்
மெல்ல விழுங்கி
மேலெழும் பிம்பங்கள்
கோட்பாடுகள் உடைபடுகின்றன
கோலோச்சுகின்றன நடைமுறைகள்
விடையின்றித் தவிக்கும்
அழிந்துபட்ட விழுமியங்கள்
வீழும் முன்னுரைகள்
மீண்டு எழும் ஓர் நாள்! - அன்றோ
அழிந்து படும் இந்த
ஆழ்நிலை மௌனங்கள்!!
- ஸ்ருதி ரமணி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|