 |
கவிதை
ஷேக் அப்துல்லா கவிதைகள்
என்னைச் சுற்றி இயங்கும் நோயாளி கூட்டம்
என்னைச் சுற்றி ஒரு நோயாளிக்
கூட்டம் இயங்குகிறது
என்னை
அதன் கூட்டத்தில் நோயாளியாக்கி
இயங்கச் செய்கிறது.
தன் மதிப்பீடுகளால் அளவற்று
தோற்றுப் போகிறது.
அளவுகோல்களை என் மீது
பொருத்திப் பார்த்து தோற்றுப்
போகிறது.
அவ்வப்போது,
மயக்கமுற்று சரியும் போதெல்லாம்
ஆலோசனை மாத்திரைகளை
அள்ளி வழங்குகிறது.
என் மீது பரிவுகாட்டி
நெருக்கடி சூழலுக்குள்
உட்பட செய்து
இருப்பை கலைத்து போடுகிறது
சக மனிதர்களை
சாய்யத் செய்து
தாக்குதல்களிலும், ஏமாற்றுதலும்
கைதேர்ந்த வித்தைக்காரனாய்
பயிற்றுவிக்கிறது.
எனது முடிவுகளை
தீர்மானித்து
செயல்களை தீவிரப்படுத்தி
முடிவற்ற இடம் நோக்கி
நகரச் செய்கிறது.
இப்படியாய்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
நம்மை சுற்றி
ஒரு நோயாளிக் கூட்டம்
இயங்குகிறது.
******
குழந்தைகள் ஊடான உங்கள் விளையாட்டு
இனிவரும் காலங்களில்
உங்கள் குழந்தையோடு
அதிக நேரம்
செலவிட நேரிடலாம்.
உங்களது வேலைகள்
அலுவல்கள், சற்று நேரம்
ஒத்திப் போடலாம்
தேடுதலின் தீவிரம் குறித்து
இயங்கையில்
சற்று பின்னடைவு ஏற்படலாம்.
இனிமேல் ஒரு பொழுதும்
கனத்த மௌனத்துடன்
முகத்துடன்
இறுகிய மௌனத்துடன்
வீரிய வார்த்தைகளை
உபயோகிக்க இயலாது.
உங்களுக்கான உலகத்தில்
குழந்தை நுழையப் போராடலாம்
அல்லது
குழந்தைகளின் உலகிலிருந்து
வெகுவாக பின்னுக்குத்
தள்ளப்படலாம்.
மதிப்பீட்டை சரித்து
கீழிறக்கும் செயல்களில்
ஈடுபட்டு
செய்வதறியாது திகைத்து
முன் எப்பொழுதும் விட
உங்களை தாழ்த்திக்
கொள்ளலாம்.
இவை எல்லாம்
மறுக்கும் பட்சத்தில்
இதனை ஒரு கணம் நினைத்து
நீங்களும்
குழந்தையாகிப் போகலாம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|