 |
கவிதை
அமராவதி சரவணன் ராமசாமி
வறண்டுகிடக்கும் எம் அமராவதி ஆற்றின் நடுவே
உழவன் பறித்த ஊற்றொன்றில்
தூண்டில் போட்டுக் காத்திருக்கிறான் எம் சிறுவன்
கரைகள் விழுங்கிய காலமெல்லாம்
கதைகளாகிப் போனது
வெள்ளம் பாய்ந்த காலங்கள்
அன்றே மாய்ந்தது
ஓடையாய் சுருங்கி ஓடிய காலமும்
கானலாய் காய்ந்து போனது
நாரைகள் எல்லாம் போகிறபோக்கில்
குனிந்துபார்க்கும் குட்டையான காலம்கூட
மணல் அள்ளியபோது
மாட்டுவண்டி ஏறிப் போனது.
எம் ஆற்றின் தொண்டைக்குழியில்
ஆழ்துளை அமைத்துக்
குடிநீர் உறிஞ்சும் காலம் இது.
ஊரார் துணிகளை எல்லாம் வெளுத்த
பாறைகள் உறங்கிக் கிடக்க
எம் மக்களின் கோரைப் புல் கொல்லையில்
கழுவக்கூடத் தண்ணி இல்லை.
ஆற்றங்கரை கோயில் முனிகளெல்லாம்
தாகம் தீர்க்க
தேங்காய் தண்ணி பார்த்துக் கிடக்க
உழவன் மக்கள்
வட்டிக்கடை போகும் வழியில்
வற்றிப்போன கிணற்றை எட்டிப்பார்க்க நேரும்.
குத்தவைத்துக் காத்திருக்கும் எம் சிறுவன்
நம்பிக்கை இழந்து
சங்கு பொறுக்கித் திரும்பும் முன்
அவன் தூண்டிலில் சிக்கி
மேலே வரட்டும்
செத்துப் புதைந்த எம் நதி.
- சரவணன் ராமசாமி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|