Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கட்டுரை

தேடிச் சோறு நிதந்தின்று
ரெஜோ

பாவம் என் வீட்டுக் கண்ணாடி.

ஏய்..

Mirror Face என்ன ?

ஒன்று சொல்ல வேண்டும்
உன்னிடம் .

என்ன சொல்லிவிடப் போகிறாய்
புதிதாக ...

இல்லை இது புதிது தான்.

உண்மையாகவேவா

ஆம்

ஏமாற்றிவிடமாட்டாயே
சென்றமுறை போல் .

மாட்டேன் .

கண்ணாடி மேல் சத்தியம் .

சரி சொல் .

தூக்கம் துரத்தும் அதிகாலை வேளையில்
எழுந்து ஓடத்துவங்குகிறேன் நான் ...

எங்கே ???

தெரியாது .

எழுந்ததும் எதற்கோ கொஞ்சம்
பல்லைக் காட்ட வேண்டும்

எதாவது செய் - சில வினாடிகளாவது
சொட்ட வேண்டும் தலையில் தண்ணீர் ..

ஏன் ???

தெரியாது .

பின் கண்ணாடியில்
கண்டுபிடிக்க வேண்டும்
என் பிம்பத்தை ...

பாவம் என் வீட்டுக் கண்ணாடி
என் பிம்பம் பார்த்தே
கண் மங்கிப் போனது ...

எத்தனை முறை சொல்வாய்
இதையே
தெரியுமெனக்கு ஏமாற்றுகிறாய்
நீயென்னை..

இனிமேல் தான் புதிது .

சரி சொல் .

பாவம் கண்ணாடி மட்டும் தானா
நடந்து போகையில்
என்னிழல் பார்த்துக் கேட்டதென்னை..

உண்மை தானே
இந்நாட்களில் நான் உற்றுப் பார்ப்பது
என் பிம்பத்தை மட்டும் தானே

அழகாயிருக்கிறேனா என்றல்ல
அகோரமாகிப்போன என்னகம்
தெரிந்துவிடுமோ என் முகத்தில்
என்ற பயத்தில் ...

என்ன செய்கிறேன்
என்றே தெரியாமல்
எதோ ஒரு வேலை பார்த்து

என்ன உண்கிறோம்
என்ற கவலையின்றி
வெறும் வயிறு வளர்க்க
எதையோ உண்டு

என் மாத நாட்காட்டியில்
தாள் தீர்ந்து போகையில் மட்டும்
சிரிப்பது போல்
என்னுதடுகளை ஏமாற்றி

கேட்கிறாயா ??

ஹ்ம்ம் ...

பின்
எங்கெங்கோ
என் பாதச் சுவடுகளைப்
பதித்து விட்டு

நாள் முடிவில்
மீண்டும் படுக்கையில் விழுந்து
தூக்கத்தை நான் துரத்த .....
....................................................
...................................................

நிற்க .

எதற்காக இதெல்லாம் ???

தெரியாது தெரியாது
தெரியாது தெரியாது

என்ன கேட்டாலும்
ஒரு பதில் மட்டும் தானா ??

ஏன் எரிச்சலாயிருக்கிறதா ??

ஆம் .

எனக்கும் தான் .

தெரியாமல் தான் கேட்கிறேன்
முழுவதுமாக விற்றுவிட்டாயா உன்னை ?

தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன்
முழுவதுமாக விற்றுவிட்டேனா என்னை ??

நீங்களே சொல்லுங்கள்
பாவம் தானே என் கண்ணாடி .

உறவுகள் தொலைத்து
எதோ ஒரு தொலை தூரத்தில்
என்னையும் தொலைத்து
பார்க்கும் எவனோ ஒருவனை
ஏதோ ஒரு உறவாக அழைத்து
வினாடிகளைக் கொல்ல ஏதேதோ செய்து
உண்மையில் வினாடிகளால் கொலை செய்யப்பட்டு

மீண்டும் நிற்க .

இதுவரை புதிதாக
ஏதும் சொல்லவில்லை
நான் போகட்டுமா ??

கொஞ்சம் பொறு நானே
வழியனுப்பி வைக்கிறேன்
பத்திரமாய்.

ஆகட்டும் சீக்கிரம் .

பூக்கள் மிகவும் பிடிக்கும் எனக்கு

ஓ தெரியுமே !

ஆனால் இப்பொழுதெலாம்
ஜோடிப் பூக்கள் கண்டால்
ஒற்றைப்பூவை விட்டு விட்டு
கிள்ளி எறிகிறேன் மற்றதை ...

ஐயோ பாவம் பூக்கள் .

இன்னும் கேள் .

சொல் ..

எறும்புகள் எனக்கென்ன எதிரிகளா?

நியாமில்லை தான் ...

இருந்தும்
வரிசையாகச் செல்லும் எறும்புகளில்
எல்லாவற்றையும் நசுக்கி விட்டு
கடைசியில் வரும் சிற்றெறும்பின்
முன் கோடுகிழித்து
வழி தவறித் தவிப்பதைப் பார்த்து
பேரின்பம் அடைகிறேன் ...

நிச்சயம் ஏதோ
பிரச்சனை தான் உனக்கு..

புரிந்ததா இப்பொழுதாவது ?

மேலே சொல் ..

பறவைகள் செய்த பாவமென்ன
கூட்டமாகப் பறந்து சென்றதற்காக
நேற்று மட்டும்
நான் சுட்டுக் கொன்ற
புறாக்களின் எண்ணிக்கை இருபது ...

பயமாயிருக்கிறது
இங்கிருக்க எனக்கு ...

பத்திரமாய் அனுப்பிவைப்பதாய்
வாக்களித்திருக்கிறேன்
நினைவிருக்கட்டும் .

நம்புகிறேன் .
பறவைகளோடு நிறுத்தி விட்டாய் தானே

இருபதுடன் நிறுத்திவிடலாம்
என்று தான்
ஓடிவந்தேன் வீட்டுக்குள்
ஆனால் சிலந்திகள் சேர்ந்திருந்த
பின்னல்கள் கண்டதும்
எனக்குள் மின்னல்கள் ..

பாவி
என்ன செய்தாய் அவைகளை ...!

ஒன்றுமில்லை
வலை பின்னும் கால்களை
ஒடித்து விட்டு
வலையைக் கொளுத்தி விட்டேன்.

நம்பிக்கை இல்லை இனிமேல்
நான் செல்கிறேன் .

கொஞ்சம் பொறு .
நான் சொல்லவந்தது
இவைகளல்ல.

பின் ?

விளக்கம் வேண்டும்

யார் சொன்னதற்கு ??

சாலையோரத்தில் ஆடிக்கொண்டே
பாடிச் சென்ற
ஒரு திமிர் பிடித்த பிச்சைகாரன்
சொன்னதற்கு ..

என்ன சொன்னான் ?

அதுதான் புரியவில்லையே ..

விளக்கிச் சொல் .
விளங்கச் செய்கிறேன் .

நேற்றிரவு
குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த
நாய் பார்த்து
நகைத்துக் கொண்டிருந்தேன்
வழக்கம் போல ..
திடீரென்று எனக்குள் ஒரு விசை
நரம்பறுத்தால் விரல் நனைக்கும்
குருதியின் வேகம் காண ...

சென்றேன் நாயருகே .

நாயே நாயே
சின்னதொரு வேண்டுகோள்
என்னைப் பிடிக்கவில்லையாம்
எனதுதிரத்திற்கு
பிடிக்காத ஏதும்
இருக்கத் தேவையில்லை என்னிடம்
மேலும் உன் பற்களின் ருசி அறிய
என் தசை நார்களுக்கு அவா
உன் அவா அறிய ஆவல்

பிடிக்காதது
என் வேண்டுகோளா
இல்லையது விரதமா
பிடிபடவில்லை ஏதுமேனக்கு
பிடரியில் பட்டது அதன் பின்னங்கால்கள்.

எனதவசரத்திற்கு
புதிதாக உயர மலைகள் முளைக்க
அவகாசமில்லை என்னிடம் .

ரயில் வண்டிச் சத்தமே
பிடிக்காது எனக்கு .

சாலை ஊர்ந்து செல்லும்
வாகனங்களிடம்
கெஞ்சிக் கொண்டிருந்தேன்
ஏற்றிச் செல்லும்படி அல்ல
என் மேல் ஏறிச்செல்லும்படி ...

அப்பொழுதுதான் சந்தித்தேன்
அவனை .

பாரதியின் சாயல் கொஞ்சம் .
தலைப்பாகை தப்பியிருந்தது
தாடி அதிகமாக ஒட்டிக் கொண்டிருந்தது
கண்களில் மட்டும் அதே ரௌத்திரம் .

என்னைப் பார்த்துச்
சிரித்துக் கொண்டிருந்தான் .

பிடிக்கவில்லை அது எனக்கு .

ஆடத் துவங்கினான்
ஒற்றைக்காலில் .

எனக்கு சிரிப்பு வந்தது
இப்பொழுது.

எவ்வளவோ பிடித்திருந்தும்
அது எவ்வளவு பிடித்திருந்தும்
அதைச் செய்யமுடியாமல்
பேச லட்சம் வார்த்தைகள்
வரிசையில் இருந்தும்
நானே கேட்காத தூரத்தில்
அவைகளைத் துரத்தி
உதட்டில் பூக்கக் கோடிப் புன்னகைகள்
தயார் எனினும்
நானே பார்க்காத நேரத்தில்
அவைகளை விரட்டி
அழுதும் பார்க்க
கண்ணோரம் தேங்கியிருக்கும்
கண்ணீர்த் துளிகளை
கவிதையில் குழைத்து
எப்பொழுதும் என்னுடனிருக்கும்
தனிமையை இசையினில் புதைத்து
அவிழ்கமுடியாத முடிச்சுகள்
பின்னிப் பின்னி
பிரித்தெடுக்க உள்ளிறங்கி
நானே சிக்கலாகி
இச்சைகள் விடுத்து
லஜ்ஜைகள் தொலைத்து
பூச்சியாய் புழுவாய்
உண்டு உறங்கி
உயிர் வாழ ஓடி
என்னை நானே துரத்தி
இறுதியாய் வந்து சேர்வேன் உன்னிடமே
சேர்ந்தாடுவோம் ஆனந்தத் தாண்டவம்
அப்பொழுது நீயும் ஆவாய் என்போல
காத்திருப்பாய் என் புதிய நண்பா..

ஆட்டம் அடங்கி
சிரிப்பு ஒடுங்கி
கண்களில் ரௌத்திரம் தெறிக்க
கர்ஜித்தான் .

உன்னிடத்தில் நானா??
ஒருகாலும் நடவாது.

உன் போல பலருண்டு இவ்வூரில்
வாழ்கையை வாழாமல்
வாழவேண்டுமே என வழுகிக் கொண்டு
கனவு கண்டு
கனவு மட்டுமே கண்டு
காட்சிகளைத் தொலைத்து விட்டு
பூட்டிய பூட்டுகளை உடைக்கத்தெரிந்தும்
சாவியை ஒளித்து வைத்துக் கொண்டு
காதல் மறந்து அன்பு இறந்து
பிறந்து விட்டோம்
இறக்கும் வரை
இருந்து தொலைப்போம் என
இயந்திரமாய்
சாவி திருகிய பொம்மையாய்
உன் போல பலருண்டு இவ்வூரில்

இன்னும் கேள் வேடிக்கை மனிதா
நினைத்தாயோ வீழ்வேனென்று
நானும் உன் போல ...

காணாமல் போய்விட்டான் .

கடைசியாகச் சொன்னதற்கு தான்
அர்த்தம் வேண்டுமெனக்கு .

ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா

சிரிக்காதே
எனக்குமுன் எனைப்பர்த்து
எவர் சிரித்தாலும்
பிடிக்காது எனக்கு ...

...................................
...................................

என்ன இது
உன் கன்னங்களை மூடுகின்றன
ரோமங்கள் .

...........................................
..........................................

அதே சிரிப்பு
அதே ஆட்டம்
கண்களில் ரௌத்திரம் .

...........................................
..........................................

துரோகி நீதானா
ஒழிந்து போ .

கையிலிருந்த
பாரதி கவிதைகளை
ஜன்னல் வழி வீசிவிட்டுக்
கத்தினேன்

உடைந்து போ.

உடைந்த என் பிம்பத்தின்
முகமெங்கும் ரத்தம் .

இறுதியாய் ஒருமுறை
நிற்க .

ஆரம்பத்திலேயே
நான் சொன்னேனே

பாவம் என் வீட்டுக் கண்ணாடி.

- ரெஜோ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com