 |
கவிதை
இப்படியாய் சில ரூபாய்கள் இராகவன்
அம்மா ஆசையாய்க் கொடுத்ததோ?
அப்பா ஆசிர்வதித்துக் கொடுத்ததோ?
பிரிவுநாளின் நினைவாய்ப்
பிரியமாய்த் தோழன் விட்டுச்சென்றதோ?
"எதுவேண்டுமானாலும் வாங்கிக்கோ" என்று
தாத்தா பாட்டி சேர்ந்து கொடுத்ததோ?
பிறந்தநாள் பரிசு வாங்க மறந்ததற்காய்
"என் நினைவாய் எப்பொழுதுமே வைத்திரு" என்று
தோழியொருத்தி அவசரமாய்த் திணித்ததோ?
எல்லோர் பெயரும் இருக்கவேண்டும் என்று
எல்லோரும் ஒன்றாய் இருந்த வேளையில்
நட்பு வட்டாரங்கள் கூடிக் கையொப்பமிட்டதோ?
முதல் மாச சம்பளத்தின் அடையாள மிச்சமோ?
அவசரத்தேவைக்கு உதவும் என்று
பத்திரப்படுத்தி வைத்ததோ?
எது எப்படியிருந்தாலும்
கண்ணெதிரே அடிபட்டுக் கிடக்கும்
முகந்தெரியா நண்பருக்காகவோ,
தாளாத பசியில் தளர்ந்திருக்கும் முதியவரின்
யானைப்பசிக்கு சோளப்பொறியாகவோ,
பள்ளிசெல்லும் குழந்தையின்
கட்டணத்தொகையில் ஒரு பகுதியாகவோ
முழுமனத்தோடு செலவழிக்கையில்
முன்னைக்கிப்போது புனிதமடைகிறது
பணப்பையில் பத்திரப்படுத்தப் பட்டதாய்
எண்ணிப் பக்குவமாய்ச் சிரிக்கும்
ஒரு நூறு ரூபாய்த் தாள்!
ஒவ்வொரு உறவுகளுடனான
சந்திப்பும் புதுப்பிக்கப்படட்டும்
புது ரூபாய்த் தாளுடன்...
இப்படியாய் சில ரூபாய்கள் எப்பொழுதும்
இருக்கட்டும் நம்மிடையே....
- இராகவன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|