 |
கட்டுரை
கரும்புக் கூலி பச்சியப்பன்
கருவேல முள்ளில் தைத்த
கிழிசல் துணிகள்தாம்
கரும்பு வெட்டும் போருக்குக்
கவச சட்டை
அந்தப் பாலைக் கத்தியை
அணைக்க மறுத்து
நேற்றைய துயர் சொல்லி
அடம்பிடிக்கும் விரல்கள்
சோகை கிழித்த
சின்னப் பிளவில்
வியர்வை தேங்கித்
தகிக்கும் உயிர்
உச்சி வெயில் ஏற ஏற
மயிர்க்காலில் நரநரக்கும்
சுண்டிய ரத்தம்
பனங்கறுக்காய்
விரைத்த சோகை இழுத்து
கிழிந்த கண் இமையில்
பார்வை ஒழுகும்
குருத்துச் சொனைபொத்திக்
கன்னத்தில் திரளும் சீழ்
வெளிச்சம் மங்கும் வரை
கத்தைகட்டி நிமிர்கையில்
ரெண்டாய்ப் பிளந்ததாய்
கதறும் இடுப்பு
அரை வயிற்றோடு
அசந்து தூங்கையில்
உசுப்பி எழுப்பும்
உட்சூடு
நெருப்புக் கரைசலாய்
தகித்துச் சொட்டும்
சிறுநீர்
அடிவரை எரியும் அந்தரங்கம்
ஈச்ச ஓலையை மென்று விழுங்கி
ஒருக்களித்து
அழுத்திப் படுக்கையில்
செவுளில் அறையும்
‘லாரி ஹார்ன்’
கத்தை தூக்கி
உச்சிக்கு வீசுகையில்
பீய்ந்து சரியும்
கச்சட்டு
கயிறிழுத்து கட்டிவிட்டு
அயர்ந்து உட்கார்கையில்
சிதறிய கரும்பை
எடுத்துக் கடித்தால்
சத்தியமாய்
அப்படிக் கசக்கும்
வெற்றுக்குடல்
விழுங்கச் சொல்லும்
- பச்சியப்பன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|