 |
கட்டுரை
இது உனக்கு மட்டுமான வரிகள் பச்சியப்பன்
உச்சிக்கிளையை உடைத்துவிட்டு
எனை
ஊனமாக்கிவிட்டதாய் முடிவுக்கு வராதே
இனி
அத்தனை கணுக்களும்
ஆயிரமாய்த் தளிர்க்கும்
பொறு...
இருளின் கரிய உதடுகள் ஊதி
விடியல் அணைந்து விடாது
உன் சிறைக் கம்பிகள் உரசி
என் சிறகுகள் உதிர்ந்து விடாது
நீ அமைந்த மேடையில் நடிக்க
எம்மிடம் இருப்பது
குழுக்களல்ல - படை
திசைகளைக் கடக்கும்
தீர்க்கம் கொண்டவைகளை
இனியும்
உன் தெருவில் வேடிக்கை பார்க்குமென்ற
தீர்மானத்தில் கிடக்காதே
வைகறையைப்
பிரகடனப் படுத்திய உன்னிடம்
எஞ்சி நின்றது
வெறும் நட்சத்திரக் குப்பைகள்தான்
புதிய வரலாறு என்றுன்னைப் புரட்டினால்
அதே பஞ்சாங்கமும்
மஞ்சள் எழுத்துக்களும்தான்
வேண்டாம்-
எங்களுக்கான போரை
நாங்களே நடத்திக் கொள்கிறோம்
நீ எமக்கு
எதிரியாகவே இரு
- பச்சியப்பன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|