 |
கட்டுரை
கோடை பச்சியப்பன்
ஊரெங்கும்
தளும்பத் தளும்ப
நிரம்பியிருக்கிறது
சித்திரை வெயில்
களைத்துப் போனால் தலைசாய்க்கவும்
அடாவடித்தனம் வாய்த்தால்
தாயம் ஆடவும்
தாத்தா காலத்திய திண்ணைகளுண்டு
வரப்பெலி கிடைத்தால்
சுட்டுத் திண்ணவும்
தண்ணீர் வற்றினால்
உளுவை பிடிக்கவும்
ராசா வெட்டிய
மடுக்களுண்டு
ஏரியில் விழுந்து கிடக்கும்
எருமைகளும்
தோப்பினில் இரைப்பு வாங்கும்
செம்மறிகளும்
பஜனைகோயில் வராண்டாவில்
சித்தெறும்புக் கடிப்பையும் சட்டை செய்யாது
கட்டையைக் கிடத்தும் பெருசுகளும்
அசைபோடுகையில் நுரை வழியும்
புத்தகக் குப்பையை
அட்டத்தில் எறிந்த சிறுசுகளுக்குக்
கொடுக்காப்புளி மரம் கண்டால்
அணில்களின் கால் முளைக்கும்
புங்கை மரமெனில்
வால் துளிர்க்கும்
கிணறுகள் தென்பட்டால்
உள்ளாங்குருவிகளின் சிறகுகள் கிடைத்துவிடும்.
வரைபாய்ந்த ‘கைக்கிளை’க்காரனைப் போல
விழுந்து சிதறும் பனங்குலைகள்
தோண்டித்தரவும் விடாமல்
தனக்கும் தோண்ட அமையாமல்
பனங்காயை வைத்தபடி அல்லாடுவாள்
குட்டி திலிபா
ஊரே கிறங்கிக் கிடக்க
செவிட்டு ஐஸ்காரன் மட்டும்
சுறுசுறுப்பாயிருப்பான்
கால்கடுக்க நடந்துவரும்
விறகுக்காரி விட்ட சாபத்தால்
மலையில் மோதி
ரத்தம் தெறிக்கப் போய் விழுவான்
அன்றைய சூரியன்
- பச்சியப்பன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|