 |
கட்டுரை
எங்கு சென்று நாம் அழுவதோ! (ஓர் இந்தியத் தமிழனின் மனக்குறை) தொ. சூசைமிக்கேல்
தென்னிலங்கை ஒரு போர்க்களம்! - பிணத்
தீனி கேட்கிறது சிங்களம்!
கண்ணிழந்ததோ பாரதம்? - இனி
கருணை வேண்டுவது யாரிடம்?..
தமிழன் வாழுகிற இந்தியா - ஒரு
சலனமற்ற வெறும் நந்தியா?
தமிழ்ப் பகைவரொடு பந்தியா? - இது
தர்ம தேசத்து நீதியா?
குண்டு மழைபொழிந்து தீர்க்கிறான் - தமிழ்க்
குழந்தைகளின் உயிரை மாய்க்கிறான்..
கண்டுகொண்டும் இவர் இருப்பதேன்? - அந்தக்
காடையனை விட்டு வைப்பதேன்?
ஊடகங்களிடம் முறைக்கிறான் - தன(து)
உயிர்க் கொலைகள்தமை மறைக்கிறான்..
கேடறிந்தும் இவர் பொறுப்பதேன்? - அந்தக்
கிறுக்கனை நொறுக்க மறுப்பதேன்?
சாதி மதவெறியின் தாண்டவம் - இதைச்
சகிக்குமா உலக மானுடம்?
போதி மரத்தடியின் புத்தனும் - இதைப்
பொறுத்திருப்பனோ, ஒருகணம்?
அகதிதான் ஈழத் தமிழனோ? - அதை
அனுமதிக்கிறவன் மனிதனோ?
தகுதியொன்று பறிபோகுமோ? - அதைத்
தட்டிக் கேட்பதொரு பாவமோ?
எதிரி நாடுகளில் யாசகம் - இனி
இலங்கை வாங்குவது ஆயுதம்
புதியதான சதி நாடகம் - இதைப்
புரிந்து கொண்டதா, பாரதம்?
வங்க தேசம் நினைவிருக்குமா? - அது
வடிவெடுத்த கதை மறக்குமா?
எங்களுக்கும் அது இல்லையா? - அட!
என்ன நியாயமிது? சொல்லய்யா!..
ஈழம் தமிழர் நிலம் அல்லவா? - அதை
இழந்திடல் அவலம் அல்லவா?
தோளில் சுமந்த குலம் அல்லவா? - எங்கள்
தொப்பூழ்க் கொடி உறவு அல்லவா?
அமைதி என்பதொரு மாய்கையோ - பெரும்
அழிவின் மீதுதான் வேட்கையோ?
எமது தமிழர் இனம் அழிவதோ? - இனி
எங்கு சென்று நாம் அழுவதோ?...
- தொ.சூசைமிக்கேல் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|