 |
கவிதை
ஒரு மனைவியின் விடைபெறல்
மேரித் தங்கம்
போய் வருகிறேன் தோழா!
விலகல் இல்லை இது;
விடைபெறல் மட்டுமே! உனக்கான
நேசமும் காதலும் என்னுள்
நிலைத்திருக்கும் என்றென்றும்.......
நாமிருவரும்
நட்பாய் கை குலுக்கினோம்;
நதியின் பிரவாகமிருந்தது நமக்குள்......
காதலாய் நிறம் மாறியபோதும்
கனவுகள் பொங்கிற்று மனதில்!
திருமணம் என்ற உறவுக்குள் புகுந்த
மறு நிமிடமே நீ
புருஷனாய் மாறிய இரசாயனம்
புரியவேயில்லை எனக்கு!
அதிகார அஸ்திரங்களைத்
தொடுக்கத் தொடங்கினாய் அடுக்கடுக்காய்;
வாலியை மறைந்திருந்து வதம்செய்த
இராமபானங்களையும் விட
வலிமையானவை அவை....
இரணமான நாட்களின் நினைவில்
இன்னும் கூட
இரத்தம் கசிகிறது நெஞ்சில்!
எவ்வளவு முயன்றும் - உன்
புதுப்பிக்கப் படாத ஆணெனும்
புராதன மூளைக்குள் காலங்காலமாய்
பதுங்கிக் கிடக்கும்
மனைவியின் பிரதியாய்
மாறவே முடியவில்லை என்னால்
மன்னித்து விடு என் தோழா!
வேறு வழி தெரியவில்லை; அதனால்
விடை பெறுகிறேன் உன்னிடமிருந்து
கால நதியின் சுழற்சியில்
மறுபடி நாம் சந்திக்க நேர்ந்தால்
கை குலுக்குவோம் ஒரு புன்னகையுடன்
கணவன் மனைவியாய் நாமிருந்த
கசப்புகளை மறந்து..........!
தா(கா)கங்களின் கதை
அன்புத் தங்கையே! அன்புத் தங்கையே!
இன்னும் கொஞ்ச தூரம் தான்
எங்காவது சிறிதளவாவது
நீர் கிடைக்கும் நிச்சயமாய்
அள்ளிச் செல்வோம் அதுவரை
வலி பொறு என் செல்லமே!
நீர் நிரப்பும் நேரம் வரை
நீதிக்கதை ஒன்று சொல்லட்டுமா?
நம்மைப் போலவே நீர்தேடி அலைந்த
காகங்களைப் பற்றிய கதை இது!
பள்ளிக்குப் போயிருந்தால் நாமும்
பாடப் புத்தகங்களில் படித்திருப்போம்;
பாட்டியிடம் திருடிய வடையை
தன்குரல் பற்றிய பிரமைகளில்
பாட்டுப் பாடி நரியிடம்
பறிகொடுத்ததும் கூட
இதே காகமாய் இருக்கலாம்!
அத்துவானக் காட்டில் ஒருநாள்
அலைந்து கொண்டிருந்தது தாகத்துடன்!
சுற்றிச் சுற்றி அலைந்தும் கொஞ்சமும்
தண்ணீர் தட்டுப்படவில்லை தடாகமெதிலும்;
கடும் கானலைத் தவிர இன்று போலவே
கானகத்தில் நீர்ப்பசையில்லை எங்கும் ....
முன்பெல்லாம் இத்தனை
அலைச்சலும் தேடலும்
அவசியமிருந்ததில்லை காகங்களுக்கு;
ஏதாவது செடி மறைவில்
உழவனின் கஞ்சிக் கலயமிருக்கும்
உருட்டிக் குடித்து விட்டு
ஒய்யாரமாய் பறந்துவிடும் கரைந்தபடி.....
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
விவசாய நிலங்களை யெல்லாம்
விழுங்கத் தொடங்கிய பின்புதான்
காகங்களுக்கும் நமக்கும்
தாகம் நிரந்தரமாயிற்று!
தூரரத்தில் வெகுதூரத்தில்
பானை ஒன்று மின்னியது
பாலை வெயிலில்;
பசியையும் மீறி காகம்
பறந்து போனது அதனருகில்...
பெரியதோர் மண்பானை அது;
இரவுப் பனியின் ஈரம் உலராமல்
தூரில் நீராய் நின்றிருந்தது
சூரியக் கதிர்களிலிருந்து
எப்புடியோ தப்பி.........
விளிம்பிலேறி எட்டிப் பார்த்து
விசனப்பட்டது காகம் - தன்
அலகுக்கு எட்டாத
ஆழத்தில் நீரிருப்பதை அறிந்து....
இதற்கு முன்பும் ஒரு சமயம்
இதே போல் நேர்ந்ததும் - தன்
புத்தி கூர்மையால் நீரருந்தியதும்
நினைவிலாடியது காகத்திற்கு......
கொஞ்சமும் தாமதிக்காமல்
அக்கம் பக்கம் கல் பொறுக்கி
அடுக்கடுக்காய் பானையுள் போட்டது;
கற்களால் பானை நிரம்பியும்
நீரெழும்பி வாரதது கண்டு
நிர்கதியாய் நின்றது காகம்!
என்னாயிற்று தண்ணீருக்கு?
ஐயகோ -
போட்ட கற்களின் அழுத்தத்தில்
ஓட்டை விழுந்து பழம் பானையில்
ஒழுகிய கொஞ்ச நீரையும்
வறண்டிருந்த நிலம்
வாய் பிளந்து உறிஞ்சிக் கொண்டதே!
என்ன செய்யும் ஏழைக் காகம்?
தாகம் தணிக்க வழியற்று
பறந்து போய் மறுபடியும் - சிறுவர்களின்
பாடப்புத்தகத்தில் புகுந்து கொண்டு
நீதிக் கதை வெளிகளில்
நீந்தித் திரியலாயிற்று !
நமக்குத்தான் நீர் தேடும் அவலம்
தொடர்கிறது காலங்கள் தோறும்.....!
- மேரித் தங்கம் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|