 |
கட்டுரை
குமுறி எழடா! காசி ஆனந்தன்
உன்னை எடுத்தெறி தமிழா!
ஒதிய மரம்போல் நின்றனை பேடி!
அன்னை துடித்திடல் அழகா?
அவள் படுந்துயர் எத்தனை கோடி!
தன்னை மறந்தொரு வாழ்வா?
தமிழ்மண் அன்றோ நம்முயிர் நாடி?
முன்னைக் கதைகள் அளப்பாய்....
முண்டம்! எங்கடா மூவேந்தர் பாடி?
மேடையில் தமிழ்விழா வைப்பாய்!
மேனிசிலிர்க்க வெறும்வாய் பிளப்பாய்!
ஓடைத் தவளைபோல் கத்தி
உலகில் என்னதான் பண்ணிக் கிழிப்பாய்?
பாடை உடன்கொண்டு வாடா!
பகைவன் களத்தே விழப்பாய்! அழிப்பாய்!
பீடை தொலைவதெந்நாளோ?
பிள்ளாய் விழிப்பாய்! பிள்ளாய் விழிப்பாய்!
எட்டி உலகினை நீ பார்!
எங்கும் விடுதலை வாழ்வே இருக்கும்!
கட்டி உனைமட்டும் போட்டார்!
கைவிலங்கென்று நொறுங்கிப் பறக்கும்?
தட்டி எழுக உன் தோளை!
தாவுக போரில்! இத்தாய்மண் சிரிக்கும்
கொட்டி நிறைத்திடு குருதி!
குமுறி எழடா.... விடுதலை பிறக்கும்.
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|