 |
கட்டுரை
எழுச்சி காசி ஆனந்தன்
பொறிகக்கும் விழியோடு புறப்பட்டு விட்டோம்!
போராட நாள் குறித்தோம்!
எறிகுண்டு பாய்ந்தாலும் இருகைகொண்டேற்போம்!
எதற்கும் நாம் துணிந்துவிட்டோம்!
நெறிகெட்ட பகைவரின் முறைகெட்ட வாழ்வால்
நெருப்பாக மாறிவிட்டோம்!
வெறிகொண்டு தாவினோம்! வீரத்தின் மடியில்
விளையாடத் தொடங்கிவிட்டோம்!
திசையெட்டும் அதிரயாம் பறைகொட்டி நின்றோம்!
தெய்வத்தை வணங்கி வந்தோம்!
தசையெலாம் முறுக்கேறி நின்றோம்! எழுந்தோம்!
தாயின் மேல் ஆணையிட்டோம்!
வசைகெட்டு வாழாத வரலாறு கொண்டோம்!
வல்லமை நூறு கொண்டோம்!
இசை பெற்ற மிளிர்கின்ற எதிர்காலம் ஒன்றை
இப்போதே செய்து வைப்போம்!
கடல் பொங்கினாற்போல் உடல்பொங்கி வந்தோம்
களத்திலே ஆட வந்தோம்!
படைகொண்டு மானத்தின் நடைகொண்டு வந்தோம்
பழி தீர்க்க ஓடி வந்தோம்!
திடல் பள்ளமாகத் திசைகள் நடுங்கத்
திடுதிடுமென்ன வந்தோம்!
தடைகளை வெல்வோம்! விடுதலை கொள்வோம்!
தமிழர் யாம் ஓயமாட்டோம்!
மறங்கொண்டு விளையாடும் திறங்கொண்ட தமிழர்
மலைகொண்ட தோள்கள் கொண்டோம்!
முறங்கொண்டு பலியோடு மோதினோம் அந்த
மூச்சோடு போராடுவோம்!
புறம்கொண்டு வாழ்வெலாம் புகழ்கொண்டு நின்றோம்!
புதியதோர் ஏடு செய்வோம்!
அறங்கொண்டு நின்றவர் அனல்கொண்டெழுந்தோம்!
அன்னையை வாழ வைப்போம்!
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|