 |
கட்டுரை
நெருப்பாய் எரிகிறதே நெஞ்சு காசி ஆனந்தன்

செந்தமிழர் மாவீரர் வன்னியசிங் கத்தை நாம்
வெந்தழலில் வைத்தோம்... விடுதலையே
சிந்தனையாய்
நின்றார் அறவீரர்! அன்னார் உயிர் நீஏன்
கொன்றாய்? கொடுஞ்சாவே கூறு!
அஞ்சிப் பகைவர் அதிர்ந்து நிலைகுலைய
நெஞ்சில் கனல்தாங்கி நின்றானை
வெஞ்சிறையில்
பொன்னாய்ப் பழுத்த புகழுக் குரியானை
எந்நாள்யாம் காண்போம் இனி?
பாரில் தமிழர் படைவெல்லப் போராடி
போரில் கொடுமை பொழுதெல்லாம்
நேரில்
விருப்பாய் மகிழ்ந்தேற்ற வீரர் மறைந்தார்!
நெருப்பாய் எரிகிறதே நெஞ்சு!
ஆற்றல் மிகுபேச்சால் ஈழத்திலே சூறைக்
காற்றை எழுப்பியவன் கண்துயின்றான்!
நாற்றிசையும்
பொங்கு தமிழ்முழக்கம் செய்த களத்தின்போர்ச்
சங்கை நொறுக்கியதோ சாவு?
கண்ணின் மணித்தலைவர் செல்வா வழிகாட்ட
மண்ணில்அவர் கொள்கை மணிவிழியாய்
எண்ணி
இனம்வாழ வாழ்ந்தார் இலையே எவ்வண்ணம்
மனம்தேறும் எங்கள்தாய் மண்?
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|